Published:Updated:

சிறிய துளை பெரிய சிகிச்சை!

சிறிய துளை பெரிய சிகிச்சை!

"ஆனந்த் ஞானராஜ்"
அப்போலோ மருத்துவமனை, இன்ட்ரவென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்

சிறிய துளை பெரிய சிகிச்சை!

தய அறுவை சிகிச்சை என்றால் குடும்பமே பதறியபடி ஐ.சி.யூ முன்பு காத்து நிற்பார்கள். ‘‘ஆபரேஷன் சக்ஸஸ்’’ என்று டாக்டர் வெளியே வந்து சொன்னால்தான், உயிர் வரும். நெஞ்சுக்கூட்டைத் திறந்து செய்யப்படும் இதய அறுவை சிகிச்சைகள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், சிறுதுளை வழியே செய்யப்படும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ரத்தக் குழாய் வழியாக கருவியைச் செலுத்தி, அடைப்பு அகற்றப்படும் ஆஞ்சியோபிளாஸ்டியிலும் அபார முன்னேற்றம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“இதயத்துக்கு மூன்று ரத்தக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில்  அடைப்பு என்றால், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யும்போதே அகற்றப்படும். அதுவே, மூன்று குழாய்களிலும் அடைப்பு என்றால், பெரும்பாலும் பைபாஸ் செய்ய பரிந்துரைக்கப்படும். ஆனால், தற்போது, மூன்று ரத்தக் குழாய்களிலும் முற்றிலும் அடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டைச் சேர்ந்த 52 வயதான முகம்மதுவுக்கு (பெயர்மாற்றப்பட்டுள்ளது) ஒரு வருடமாக  நெஞ்சுவலி இருந்தது. ஐந்து நிமிடங்கள் நடந்தால், படி ஏறினால்கூட நெஞ்சுவலி அதிகரித்தது. ஒரு கட்டத்தில், உட்கார்ந்தாலும் படுத்தாலும்கூட நெஞ்சு வலித்தது. பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது இதயத்துக்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தது. 

சிறிய துளை பெரிய சிகிச்சை!

முதல் ரத்தக் குழாயில் 100 சதவிகிதமும் இரண்டாவது மற்றும் மூன்றாவது ரத்தக் குழாயில் 99 சதவிகிதமும் அடைப்பு இருந்தது. அறுவை சிகிச்சையின்றி ஆஞ்ஜியோபிளாஸ்டி முறையில் ஸ்டென்ட் வைத்து சரிசெய்யலாம் என்று பரிந்துரைத்தோம். பொதுவாக, ஆஞ்சியோபிளாஸ்டி தொடைப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் வழியாகச் செய்யப்படும். ஆனால், இவருக்கு வலது கையில் உள்ள ரத்தக் குழாய் வழியாக ‘கத்தீடர்’ பொருத்தப்பட்டு, அதன் வழியாக 0.01 மி.மீ தடிமன் உள்ள கம்பி இதய ரத்தக்குழாய் வரை செலுத்தப்பட்டது. அந்தக் கம்பியின் உதவியுடன் மற்ற கருவிகள் கொண்டு செல்லப்பட்டன. அடைப்பு உள்ள இடத்தை அடைந்து அந்த இடத்தில் பலூன் விரிக்கப்பட்டு அடைப்பு நீக்கப்பட்டது. பலூன் விரியும்போது அதன்மேல் இருந்த ஸ்டென்ட் விரிக்கப்பட்டு அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இதேபோல மற்ற இரண்டு ரத்தக் குழாய்களிலும் அடைப்பு நீக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.  இந்த ஸ்டென்ட் தானாக மறையக்கூடியது.

இந்தச் சிகிச்சை முடிந்து ஒன்றரை மணி நேரத்தில் அவர் தானாகவே நடந்து தன்னுடைய படுக்கைக்குச் சென்றார். ஒன்று இரண்டு நாட்களுக்கு ஸ்டென்ட் செயல்பாடு குறித்து பரிசோதிக்கப்பட்டது. பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பொதுவாக உலோக ஸ்டென்ட் வைக்கப்படும்.  இந்த ஸ்டென்டின் தேவை என்பது ஒரு வருடத்துக்குத்தான். அதற்குப் பிறகும் இதய ரத்தக் குழாய் இயல்பாகச் செயல்பட முடியாமல் போய்விடும். ஆனால், தானாக மறையக்கூடிய ஸ்டென்ட் பொருத்தும்போது, அது ஒரு வருடத்துக்குப் பிறகு மறைய ஆரம்பித்துவிடும். இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக மறைந்துவிடும். இதனால், இதயத்தின் ரத்தக் குழாய் தானாகச் சுருங்கி விரியும் செயல்பாடு பாதுகாக்கப்படும். இதயத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

சிறிய துளை பெரிய சிகிச்சை!

பைபாஸ் அறுவை சிகிச்சையில் ஸ்டென்ட் பொருத்தப்படுவது இல்லை. நம்முடைய ரத்தக் குழாயே பயன்படுத்தப்படும். ஆனால், அந்தச் சிகிச்சை முறையில் நெஞ்சுப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்து ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீக்கப்படும்.  ஆனால், ஆஞ்சியோபிளாஸ்டி முறையில் சிறு துளை மட்டுமே செய்வதால் அடைப்பை அகற்ற ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது.  ஸ்டென்டின் விலை சற்று அதிகம். அதிலும்  தானாக மறையக்கூடிய ஸ்டென்டின் விலை சற்று அதிகம்தான். ஆனால், அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் ரத்த இழப்பு, நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு, வலி, சிகிச்சை முடிந்து குணமடைதல் திறன் போன்ற பிரச்னைகள் இதில் இல்லை” என்றார்.

- பா.பிரவீன் குமார்

சர்க்கரையை கண்காணிக்கலாம்

சிறிய துளை பெரிய சிகிச்சை!

சர்க்கரை நோயாளிகளுக்குத் திடீரென சர்க்கரை அளவு அதிகரித்தல் மட்டுமல்ல; சர்க்கரை அளவு குறைந்துவிடுவதும் பிரச்னைதான். சர்க்கரை அளவு அதிகரிக்கும்போதும் குறையும்போதும் தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், சுயநினைவு இழத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஒரு கட்டத்தில் இது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரித்து உயிருக்கே ஆபத்தாகிவிடலாம். இது பற்றி, சென்னை அப்போலோ மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் ஜெயஶ்ரீ கோபால்,“ஒருவருக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை கண்டறிய எச்1ஏபிசி பரிசோதனை செய்யப்படுகிறது. இது கடந்த மூன்று மாதங்களில் சர்க்கரை அளவு எப்படி என்று தெரிந்துகொள்ள உதவும். ஆனால், இதைக்கொண்டு தினசரி எப்போது சர்க்கரை அளவு ஏறி இறங்குகிறது என்பதைக் கண்டறிய முடியாது. சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துள்ள இரண்டு நபர்களுக்குக்கூட தினசரி சர்க்கரை அளவில் வித்தியாசம் இருக்கும். இதைத் தெரிந்துகொள்ள காலையில் எழுந்தவுடன், சாப்பிட்ட பிறகு என்று ஒரு நாளைக்கு பலமுறை ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால்தான் ஓரளவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிய முடியும். இதற்காக கையில் ஊசி குத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

சிறிய துளை பெரிய சிகிச்சை!

இப்போது, புதிதாக ‘ஃபிளாஷ் குளுக்கோஸ் மானிட்டரிங் சிஸ்டம்’ என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயம் அளவுக்கு உள்ள இந்தக் கருவியை கையில் பொருத்திவிட்டால் போதும். அதில் உள்ள ‘சிப்’, 14 நாட்களுக்கு அந்த நபரின் தினசரி சர்க்கரை அளவைக் குறித்துக்கொள்ளும். 14 நாட்கள் கழித்து கையில் பொருத்தப்பட்ட அந்த சிப்-ல் இருந்து தகவலை நாங்கள் கம்ப்யூட்டரில் பெற்று ஒரு நாளைக்கு எப்போது எல்லாம் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, குறைகிறது என்பதை கண்டறிவோம். அதன் அடிப்படையில், அவருக்கு வாழ்க்கை முறை மாற்றம், மருந்து பரிந்துரைப்பதன் மூலம் சர்க்கரை அதிகரிப்பு, குறைவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கலாம்” என்றார்.