Published:Updated:

`லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஸ்ட்ரெஸ் குறைக்க எங்கே போவார் தெரியுமா? #LetsRelieveStress

`லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஸ்ட்ரெஸ் குறைக்க எங்கே போவார் தெரியுமா? #LetsRelieveStress
News
`லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஸ்ட்ரெஸ் குறைக்க எங்கே போவார் தெரியுமா? #LetsRelieveStress

`லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஸ்ட்ரெஸ் குறைக்க எங்கே போவார் தெரியுமா? #LetsRelieveStress

'லொள்ளு சபா' சுவாமிநாதனுக்கு அறிமுகம் தேவையில்லை. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் கலகலப்பாக்கிவிடுவார். சினிமாவிலும், டி.வி-யிலும் அனுபவம் மிக்கவர். எதற்கும் கவலைப்படாமல் தன் இயல்பான சுபாவத்தை மாற்றிக்கொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து பழகியவர். நகைச்சுவை கொஞ்சமும் குன்றாமல் நம்பிக்கையோடு வலம் வந்துகொண்டிருப்பவர். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருடைய ஸ்ட்ரெஸ் ரிலிஃப் டெக்னிக்கைப் பற்றிக் கேட்டதுமே, இயல்பாகப் பேச ஆரம்பிக்கிறார்.

``எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். அப்பா கிடையாது. அம்மாவோட அரவணைப்புலதான் வளர்ந்தேன். எங்க பெரிய அண்ணன்தான் வீட்டுக்கு லீடர். நான் பசங்களோட சேர்ந்து சினிமா, டிராமா, பாட்டுக் கச்சேரி, ஆர்க்கெஸ்ட்ரானு ஊர் சுத்திக்கிட்டு இருப்பேன். போதாக்குறைக்கு அந்த வருஷம் பி.யூ.சி எக்ஸாம்ல ஃபெயிலாயிட்டேன். ஏற்கெனவே எங்க அண்ணன் என்னை, `தண்டச்சோறு’, `ஊர்சுத்தி’னு சொல்லிக்கிட்டே இருப்பான். இது தெரிஞ்சதும் சாமியாட ஆரம்பிச்சிட்டான். எனக்கு ஒரே அவமானமாப் போயிடுச்சு.
செத்துப்போயிடலாமானு தோணுச்சு. ஒரு கணம்தான்... ஒரு வாரத்துக்கு முன்னதான் எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையன் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்து போயிருந்தான். அப்போ அவன் அம்மா, அப்பா உறவுக்காரங்க எல்லாரும் அழுததைப் பார்த்திருந்தேன். 

`ச்சே... நாம போயிட்டா, பிரச்னை நம்மளோட போயிடறதில்லை. நம்மைச் சேர்ந்தவங்களுக்கும் அது எவ்வளவு கஷ்டம்னு தோணிச்சு. அதனால, அந்த ப்ளானைக் கைவிட்டுட்டேன். ஆனாலும், வீட்டுக்குப் போகக் கூடாதுனு முடிவு பண்ணி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துட்டேன். அங்கே இருந்த ஒரு ட்ரெயின்ல ஏறி படுத்துத் தூங்கிட்டேன்.
ட்ரெயின் வேகமெடுத்துப் போக ஆரம்பிச்சுடுச்சு. மெட்ராஸ் வந்து இறங்குறேன். எங்கே போயித் தங்குறதுனு தெரியலை. பாக்கெட்டைத் தடவிப் பார்த்து, இருக்குற காசுக்கு டிபன் சாப்பிட்டேன். ஃப்ரெண்டைப் பார்க்கலாம்னு தேடிப் போனேன். ஆனா, அவன் ரூம் பூட்டியிருந்துச்சு. எங்க தூங்குறதுனு தெரியலை. அலைஞ்சு திரிஞ்சு பார்த்துட்டு, எங்கேயோ ஒரு பஸ் ஸ்டாப்புல இருந்த பயணிகள் உட்கார்ற பலகையில படுத்துத் தூங்கிட்டேன். அங்கே வந்து போலீஸ் எழுப்பி, என்னை ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க.  அங்கே விசாரிக்கிறேங்கிற பேர்ல போலீஸ் மிரட்டுனதுல ரொம்பவே பயந்து போய் கத்திட்டேன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கண்ணைத் திறந்து பார்த்தா, இத்தனை நேரமா நான் கனவு கண்டுக்கிட்டு இருந்திருக்கேன்னு புரிஞ்சுது. இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா, அந்த ட்ரெயின் கும்பகோணத்துலயேதான் நின்னுக்கிட்டு இருக்கு. இத்தனை நேரமா, ஸ்டேஷன்ல வந்து நின்னுட்டுப் போன ட்ரெயின்ங்களோட சப்தம்தான் எனக்கு ட்ரெயின் போற எஃபெக்ட்டைக் கொடுத்திருக்கு. ஒருவழியா எழுந்துபோனா, டி.டி.ஆர், 'பிடிடா... பிடிடா'னு கத்த ஆரம்பிச்சிட்டார்.  அப்புறம் என்னைப் பிடிச்சு உண்மையிலேயே விசாரிச்சு அனுப்பிவெச்சாங்க. வீட்டுக்குப் போனேன். அவங்க எல்லாரும் ஒரு பிடி பிடிப்பாங்கனு எதிர்பார்த்தேன். நல்லவேளையா அவங்க எதுவும் சொல்லலை'' என்று சிரிக்கிற சுவாமிநாதன் தொடர்கிறார்...
``மூவாயிரம் பேர் அப்ளை பண்ணினாலும் பத்து பேருக்குத்தான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கிற வாய்ப்புக் கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்புக் கிடைச்சுது. அதுக்கு அப்புறம் வாய்ப்பு கேட்டு, தாம்பரத்துல இருந்து பெரியார் நகர் வரைக்கும் பல சினிமா கம்பெனிகள்ல ஏறி, இறங்கி வாய்ப்புக் கேட்டேன். 'இன்னைக்கு வா,  நாளைக்கு வா, அடுத்த வாரம் வா'னு சொல்லுவாங்க.  அப்புறம் கொஞ்ச நாள் ஆட்டோமொபைல் கம்பெனியில வேலை பார்த்தேன். ஏன் நம்ம ஆனந்த விகடன்லயும் வேலை பார்த்தேன்.  
மெரினாவோட டிராமா குழுவுல தொடர்ந்து வாய்ப்புக் கிடைச்சுது. சினிமா, டிராமானு ரெட்டை குதிரை சவாரியாத்தான் இருந்துச்சு. ஒரு கட்டத்துல ஊர்ல நிலம் இருந்ததுனால விவசாயம் பண்ணப் போயிடலாம்னுகூட நெனைச்சேன். அப்போதான் ராபர்ட் ராஜசேகர், `சின்னப்பூவே மெல்லப் பேசு...’ படத்துல வாய்ப்புக் கொடுத்தாங்க. இன்ஸ்டிட்யூட்ல படிக்கும்போதே அவர் எனக்கு நல்ல பழக்கம். 
அதுக்கு முன்னாடி வெளி வந்த `பாலைவனச்சோலை’ படத்துல அந்த நாலு பேர்ல ஒருத்தரா நான் நடிக்க வேண்டியது. என்னமோ நடிக்க முடியாமப் போயிடுச்சு. ஒரு தடவை வேந்தன்பட்டி அழகப்பன் சார், `நீதான் இந்தப் படத்தோட ஹீரோ. இங்க இருக்குற போட்டோக்கள்ல யாரை ஹீரோயினாகப் போடலாம்?’னு கேட்டார். நான் செலக்ட் பண்ணினதும் அவங்க செலக்ட் பண்ணி வெச்சிருந்ததும் ஒரே நபர். அவங்க நடிகை மேனகா. இப்போ ஹீரோயினா இருக்கிற கீர்த்தி சுரேஷோட அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. 

`மலையூர் மம்பட்டியான்’ல செந்தில் கேரக்டர் நான் நடிச்சிருக்கவேண்டியது.என்னைத் தேடி யூனிட் ஆளுங்க ரூமுக்கு வந்தப்ப, நான் வெளியே எங்கேயோ போயிட்டேன். அப்போ செல்போன் கிடையாது. ஏன் பேஜர்கூட கிடையாது. 'கிழக்கு வாசல்' படத்துல சின்னி ஜெயந்த் கேரக்டருக்கு என்னைத்தான் முதல்ல புக் பண்ணாங்க. அதுலயும் நடிக்க முடியாமப் போச்சு. இப்படி நிறைய ஏமாற்றங்கள். ஆனாலும், வாழ்க்கை ஓடிக்கிட்டுதான் இருக்கு. ஏன்னா, எதிர்பாராதவற்றின் தொகுப்பாகத்தான் இருக்கு வாழ்க்கை. அதுக்காக கவலைப்பட்டுக்கிட்டு இருக்க முடியுமா? ஆறு போற போக்குல போய் கரையேற வேண்டியதுதான்’’ என்பவர், தன்னை அதிரவைத்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறார்... 
`` `மனசுக்குள் மத்தாப்பூ’ ஷூட்டிங் முடிஞ்சதும் யூனிட்ல இருக்கிறவங்க எல்லாரும் பழனிக்கு மாலை போட்டுட்டுப் போனாங்க. நான் திருப்பதிக்கு மாலை போட்டுட்டுப் போனேன். நடந்தே பாத யாத்திரையா வர்றதா வேண்டியிருந்தேன். 
பெரம்பூர்ல இருந்து திருப்பதிக்கு நடந்தே போனேன். திருப்பதி பஸ் ஸ்டாண்டுல இருந்து மலை அடிவாரத்துக்குப் போய்க்கிட்டு இருந்தேன் நட்ட நடுராத்திரி... தெருவுல யாரும் இல்லை. திடீர்னு பதினைஞ்சு அல்சேஷன் நாய்கள் பாய்ஞ்சு வந்து, உறுமல் சத்தத்தோட என்னைச் சுத்தி வர ஆரம்பிச்சுடுச்சுங்க. சரி, இன்னையோட அவ்வளவுதான்னு பெருமாளை வேண்டிக்கிட்டு நின்னுட்டேன். ஒரு கூர்கா வந்து நின்னார். அந்தப் பெருமாளே கூர்காவா வந்த மாதிரி இருந்தது. இந்தியில `கவுன் கை?’னு கேட்டார். அதற்கு நானும் இந்தியில, `தர்சன் கர்னே கே லியே மதராஸ் சே ஆத்தா ஹை!’னு சொன்னேன். 

கூர்கா ஒரு விசிலடிச்சாரு. அந்த பதினைஞ்சு நாய்களும் வரிசையாக ஒரு வீட்டுக்குள்ள போயிடுச்சுங்க. அந்த ராத்திரியில ஏற்பட்ட அதிர்ச்சியை என்னால எப்பவும் மறக்க முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் கூர்காவாக வந்தது பெருமாள்தான்’’ என்கிறார் சுவாமிநாதன் உருக்கத்தோடு. சரி... ஸ்ட்ரெஸ்ஸை எப்படி எதிர்கொள்கிறார்?    
``ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சுனா யார்கிட்டயும் எதுவும் பேச மாட்டேன். லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணிட்டு, இருட்டான அறையில போய் உட்கார்ந்துடுவேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ரெஸ் குறைஞ்சுடும். 
ரொம்பப் பெரிய அளவுல மனஅழுத்தமா இருந்தா, சொந்த ஊரான கும்பகோணம் பக்கத்துல இருக்குற தென்னூருக்குப் போயிடுவேன். அங்கே போய் என் அம்மாவைப் பார்த்துட்டு வந்தேன்னா, மனசு ரிலாக்ஸாகிடும். அம்மா கொடுக்கிற தைரியம் எந்தப் பிரச்னையையும் கடந்துபோகவெச்சுடும்.
அங்கே போக முடியலைன்னா கோயிலுக்கு சாமி கும்பிடக் கெளம்பிடுவேன். கும்பகோணத்துல இருக்கிற கும்பேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில், ராமசாமி கோயில்னு போயிடுவேன். முக்கியமா, ராமசாமி கோயில்ல  இருக்குற ராமாயண படக்கதையைப் படிக்க ஆரம்பிச்சிடுவேன். அதைப் படிச்சு முடிச்சதும் நம்ம கோபம், ஸ்ட்ரெஸ் எல்லாம் போயிடும். கோயில்ல இருக்குற பிரமாண்டம், வீசும் குளிர்ந்த காற்று, அதன் பரிசுத்தம் இதெல்லாம் மனசை லேசாக ஆக்கிடும்.  இங்கே சென்னையில் இருந்தா சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்குப் போவேன். இல்லைனா சிறுவாபுரி முருகன் கோயிலுக்குப்போவேன்.’’