Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

குழந்தை பிறந்தது முதல் அதைத் தூக்குவது, பால் ஊட்டுவது, மருந்து கொடுப்பது, குளிப்பாட்டுவது எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருக்கும். இவற்றைப் பற்றி விரிவாகப் பேசுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தி விஸ்வநாதன்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“குழந்தை பிறந்ததும் தாய்க்குச் சுரக்கும் பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்போம். இது, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்தப் பாலைப் புகட்டுவதில் இருந்து சந்தேகம் தொடங்குகிறது. குழந்தை பிறந்ததும் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. கொலஸ்ட்ரம்-ல் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எனவே, கட்டாயம் இந்தப் பாலைக் கொடுக்க வேண்டும். சிசேரியன் செய்து கொண்டவர்களைத் தவிர, மற்றவர்கள் உட்கார்ந்தே தாய்ப்பால் புகட்ட வேண்டும். பால் கொடுத்ததும், குழந்தையின் முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டும். தாய்ப்பாலிலேயே எல்லா சத்துக்களும் உள்ளதால், ஆறு மாதங்கள் வரை, வேறு எதுவும் கொடுக்க வேண்டாம். தண்ணீர்கூட தேவை இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு, திட உணவை மசித்துக் கொடுக்கலாம். அதற்காக உணவை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொடுப்பது கூடாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறந்த குழந்தைக்கு, தோலில் கொழுப்பு இருக்காது. இதனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப குழந்தையின் உடல் வெப்பநிலை மாறிவிடும். இது கோடை காலமாக இருப்பதால், பருத்தியால் ஆன ஆடைகள், கை-கால் உறைகள் அணிவிக்க வேண்டும். ஏ.சி உள்ள வீடுகளில், அறை வெப்பநிலை 26-27 டிகிரிக்கு மேல் இருக்கலாம்.

காய்ச்சல் வந்தால், நள்ளிரவில்கூட குழந்தையைத் தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் வருவார்கள். இது தேவை இல்லாதது. மிகச் சமீபத்தில் டாக்டரிடம் ஆலோசனை பெற்ற அளவுக்கு, பாராசிட்டமால் கொடுத்தால் போதும். வெதுவெதுப்பான நீரில் பருத்தி துணியை நனைத்து, குழந்தையின் உடலைத் துடைத்துவிடலாம். ஆனால், வெந்நீர், குளிர்ந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது. இவை செய்தும் காய்ச்சல் சரியாகவில்லை எனில், மருத்துவரை அணுக வேண்டும்” என்கிறார் டாக்டர்.

• பச்சிளம் குழந்தைகளைப் பராமரிக்கும் முறை என்ன?

• ஒரு வயது வரை ஏன் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும்?

• குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா பாதிப்புக்கு என்ன சிகிச்சை?

• காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

• குழந்தைகளுக்கு ஏற்படும் தலைக் காயங்களைக் கையாள்வது எப்படி?

• ஊட்டச்சத்து பானம் கொடுத்தால், குழந்தையின் உயரம் அதிகரிக்குமா?

அன்பு வாசகர்களே, மே 1 முதல் 8 வரை, தினமும் 044-66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஏற்படும் சந்தேகங்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தி விஸ்வநாதன்

“சாதாரண பிரச்னைகளைக் கவனிக்காமல் விடும்போது, அது மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேரும் அளவுக்குப் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது. அதில், முக்கியமானது சர்க்கரை அளவு குறைதல் அல்லது அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை”என்கிறார், அவசர சிகிச்சைப் பிரிவு சிறப்பு மருத்துவர் பாலு.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது பற்றி பேசுகையில், “சர்க்கரை அளவு குறைந்துவிட்டால், படபடப்பு அதிகரிக்கும், வியர்வை வரும், தலைச்
சுற்றல் ஏற்படும், சோர்வாகத் தோன்றும். இந்த அறிகுறிகளைப் புரிந்துகொண்டு ஆரம்ப நிலையிலேயே குளுக்கோஸ், பிஸ்கட், சாக்லெட் எடுத்துக்கொண்டால், சர்க்கரை அளவு அதிகரித்து விடும். ஆனால், இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று இருந்தால், சர்க்கரை அளவு மிகவும் குறைந்து, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் அதிகரிக்கும். சமயத்தில், நினைவு இழத்தல் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை அளவை அதிகரிக்கவும் விடாமல், குறையவும்விடாமல் சமச்சீராக வைத்துக்கொண்டால், பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

மூளைக்குச்  செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டாலோ, ரத்தம் உறைந்துபோனாலோ, பக்கவாதம் ஏற்படும். பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்ட நான்கு மணி நேரத்துக்குள், சிகிச்சை அளித்துவிட்டால், பக்கவாதப் பாதிப்பில் இருந்து மீள முடியும். பேச்சில் குழறல், முகத் தசைகள் பாதிப்பு, ஒரு பக்க கை - கால் தூக்க முடியாத நிலை, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாகப் பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், பக்கவாதமா என்று முதலில் டாக்டர்கள் உறுதிப்படுத்துவார்கள். பக்கவாதம் எனில், ரத்தம் உறைவால் ஏற்பட்ட அடைப்பை நீக்க மருந்து செலுத்தப்படும். இதனால், மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, பாதிப்புகளை முற்றிலுமாகக் குணமாக்க முடியும்.” என்கிறார்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதன் அறிகுறிகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பிரச்னை என்ன?

பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால், செய்ய வேண்டியவை என்னென்ன?

மாரடைப்பு நேரத்தில் செய்ய வேண்டியவை என்னென்ன?

விபத்துக்களைத் தவிர்க்க, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

மே 9 முதல் 15 வரை, தினமும் 044-66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், அவசர கால மருத்துவ உதவி தேவைப்படும் பிரச்னைகள், தவிர்க்கும் வழிகள், செய்ய வேண்டியவை பற்றி விரிவாகப் பேசுகிறார் அவசர சிகிச்சைப் பிரிவு சிறப்பு மருத்துவர் பாலு.

- பா.பிரவீன் குமார்,
படங்கள்: எம்.உசேன்,  ஜெ.வேங்கடராஜ்