ஹெல்த்
Published:Updated:

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

உஷா ஶ்ரீராம்
நாளமில்லா சுரப்பி நிபுணர்

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

ர்க்கரை நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. இன்சுலின், தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ செயல்திறன் குறைவாக இருந்தாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இந்த நிலையை சர்க்கரை நோய் என்கிறோம். இந்த இன்சுலின் எங்கிருந்து வருகிறது தெரியுமா? கணையசுரப்பியில் இருந்துதான்.

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

நமது உடலில் வயிற்றுப்பகுதியில் சற்று பெரிய அளவில் கணையம் இருக்கிறது. சுரப்பிகளில் நாளமுள்ள சுரப்பி, நாளமில்லா சுரப்பி என்று இரண்டு வகை உள்ளது. பிட்யூட்டரி, தைராய்டு போன்ற சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன், ரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் செல்லும். இவற்றை நாளமில்லா சுரப்பிகள் (Endocrine Gland) என்போம். வியர்வை, எச்சில் சுரப்பிகளில் அதன் இலக்கை அடைய நாளங்கள் இருக்கும். இதை நாளமுள்ள சுரப்பிகள் (Exocrine Gland) என்போம். கணையம் மற்றும் கல்லீரலில் மட்டும்தான் இத்தகைய இரண்டு வகை சுரப்பிகளும் உள்ளன.

நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்குத் தேவையான சில என்சைம்கள், கணையத்தில் சுரக்கின்றன. இவை, இரைப்பைக்கு நாளங்கள் வழியாகச் செல்கின்றன. கணையத்தின் லாங்கர்ஹேன்ஸ் திட்டுக்கள் என்ற பகுதியில் இருந்து இன்சுலின் சுரக்கிறது. கணைய சுரப்பியில் ஆல்பா, பீட்டா என்று இரண்டு வகை செல்கள் உள்ளன. ஆல்பா செல்கள் குளுக்ககான் (Glucagon)ஹார்மோனையும், பீட்டா செல்கள் ப்ரோஇன்சுலின் (Proinsulin) ஹார்மோனையும் சுரக்கின்றன. ப்ரோஇன்சுலின்  ஹார்மோன் இன்சுலின், சி-பெப்டைடு என இரண்டாக  உடலில் பிரியும்.

நாம் உண்ணும் உணவைச் செரிமானமண்டலம் குளுக்கோஸாக மாற்றி, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்வது குளுக்ககான் ஹார்மோன்தான். குளுக்கோஸ் தேவை ஏற்படும்போது, கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஜெனை குளுக்கோஸாக மாற்றவும் குளுக்ககான் அவசியம்.
இதற்கு நேர்மாறாக  இன்சுலின் செயல்படும். ரத்தத்தில்  குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவது  இன்சுலினின் பணி. குளுக்கோஸை உடல் செல்கள் உணவாகப் பயன்படுத்திக்கொள்ள, திறவுகோலாக இருப்பதும் இன்சுலின்தான். குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அதை சேமித்துவைக்கும்படி, கல்லீரலுக்கு சிக்னல் அனுப்பும். இந்த இரண்டு ஹார்மோன்களும் இணைந்துதான் நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமலும் குறையாமலும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றன.

இன்சுலினின் அவசியம்

சர்க்கரை நோயில், டைப் 1, டைப் 2 என இரண்டு வகை உள்ளன. தன் எதிர்ப்பு சக்தியே  (Auto immune) இன்சுலின் சுரக்கும் செல்களைத் தாக்கி, இன்சுலின் சுரப்பை முற்றிலுமாக நிறுத்துவதை, டைப் 1 சர்க்கரை நோய் என்கிறோம். பொதுவாக, இது குழந்தைகளுக்கு ஏற்படும். இவர்கள் திடீரென எடை குறைவார்கள், அதிகமாக சிறுநீர் கழிப்பார்கள். இவர்களுக்குச் செயற்கை இன்சுலினை வாழ்நாள் முழுக்க செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

டைப் 2 என்பது, வாழ்க்கை முறை மாற்றம், வயது, மரபியல் காரணமாக இன்சுலின் சுரத்தல் அளவில் ஏற்படும் மாறுபாட்டால் வருவது. சிலருக்கு இன்சுலின் செயல்
திறன் குறைவாக இருக்கும். இதனால், குளுக்கோஸ் முழுவதையும் உடல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். உலகில் 95 சதவிகிதம் சர்க்கரை நோயாளிகள் இந்த வகையினர்தான்.

இவர்களுக்கு இன்சுலினை சுரக்கவைக்க, மாத்திரைகள் கொடுக்கப்படும். இன்சுலின் தேவைக்குச் சற்று குறைவாக இருக்கிறது எனில், தினமும் இன்சுலின் ஊசி  செலுத்த
வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால் டைப்-2 சர்க்கரை நோயில் இருந்து எளிதாக மீள முடியும்.

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

செயற்கை இன்சுலின்

விலங்குகளிடமிருந்து செயற்கை இன்சுலின் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஆர்.டி.ஏ (Recombinant  DNA technonology)  எனப்படும்  உயர் தொழில்நுட்பம் மூலம் பாக்டீரியாவில் மனித டி.என்.ஏ உருவாக்கி, அதில் இருந்து இன்சுலின் எடுக்கப்படுகிறது. இது மிகவும் திறன் வாய்ந்தது. இன்சுலின் ஊசிகளில் தற்போது பல வகைகள் இருக்கின்றன. குறைந்த காலம் செயல்படும்  இன்சுலின்  ஊசிகள் முதல், நீண்ட காலம் செயல்படும் இன்சுலின் ஊசிகள் வரை இப்போது  கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் இன்சுலின் ஊசி செலுத்தலாம், ஒரு நாளில் காலை, இரவு மட்டும் இன்சுலின் ஊசி செலுத்தலாம், ஒரே நாளைக்கு ஒரு முறை மட்டும் இன்சுலின் ஊசி செலுத்தினால் போதுமானது, தற்போது, டெக்லூடெக் (Degludec) தொழில்நுட்பம் மூலம்  36 - 48 மணி நேரத்துக்கு ஒரு முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்ற அளவுக்கு சிகிச்சை முறை வளர்ந்துள்ளது.

இன்சுலின் அதிகமாகச் சுரந்தால் ?

கணைய சுரப்பியில் ஏதேனும் கட்டிகள் இருக்கும் பட்சத்தில், சில நேரம் அதிக அளவு இன்சுலின் சுரக்கலாம். இன்சுலின் அதிகமாகச் சுரந்து உடலில் சேர்ந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தவிடும். இந்நிலையில், படபடப்பு ஏற்பட்டு, உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டி மயக்கம்கூட வரும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது எனில், சிலர் அதைச் சட்டைசெய்யாமல் தொடர்ந்து சர்க்கரை அளவு குறையும் நேரங்களில் இனிப்பான பொருட்களைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு அடிக்கடி பசி எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனால், உடல் எடை அதிகரிக்கும். உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்
பட்டால், சி.டி ஸ்கேன் மூலம், கணைய சுரப்பியில் ஏதேனும் கட்டிகள் இருக்கிறதா என சோதனை செய்து, அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்படும். ஒரு வேளை கணைய சுரப்பியில் இருப்பது, புற்றுநோய் கட்டி எனில், புற்றுநோய்க்கான சிகிச்சை கொடுக்கப்படும்.

- பு.விவேக் ஆனந்த்

இன்சுலின் பம்ப்

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

ன்சுலின் பம்ப் என்பது, தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த முறையில் கையடக்க செல்போன் போன்ற கருவி ஒன்றை இடுப்புப் பகுதியில் பொருத்திவிட்டால், அதில் இருந்து மெல்லிய ஊசி மூலம் இன்சுலின் உடலுக்குத் தேவையானபோது செலுத்தப்பட்டுவிடும். மருத்துவர் பரிந்துரையின் பேரில்,  டைப்-1 டயாபட்டீஸ் பிரச்னை இருப்பவர்கள்,  இந்த இன்சுலின் பம்பைப் பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு சியர்ரா சான்டிசன் இந்த இன்சுலின் பம்ப் அணிந்து அழகி போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சி. உமா தேவி, திருப்பத்தூர்.

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

“என் மகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. வலியைப் போக்கும் வழியும், அந்த நேரங்களில் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்றும் கூறுங்கள்?”

டாக்டர் பானுமதி,
மகப்பேறு மருத்துவர், கோவை.

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

 “28 நாட்களுக்கு ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு போன்ற பிரச்னைகள் வரும். இதற்கு, வலி நிவாரணி மாத்திரைகளைதான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. சரியான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே வலி குறைந்த மாதவிலக்கை எதிர்கொள்ளலாம்.

ஹார்மோன் கெமிஸ்ட்ரி - கணையம்

மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, ஆயத்த, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த பருப்பு வகைகள், கால்சியம் சத்துள்ள கேழ்வரகு, மீன், முட்டை, கீரை, புரோகோலி, வைட்டமின் சி சத்துள்ள காய்கறி மற்றும் பழங்கள், சோர்வைப் போக்க இரும்புச் சத்துள்ள உணவுகள், உடல்சூட்டைக் குறைக்க இளநீர், நீர்மோர், வெந்தயம், வெள்ளரி, தேவையான தண்ணீர், வெண்ணெய், மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம். மேலும், இந்த நாட்களில் எடை குறையும் என்பதால், அதை ஈடுகட்ட புரதம் நிறைந்த பருப்பு வகைகளும், சர்க்கரைக்குப் பதிலாகத் தேனையும் சாப்பிடலாம்.

மாதந்தோறும் வலி அதிகரித்துக்கொண்டே சென்றால், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் பிரச்னையாகவும் இருக்கலாம். தொடர்ந்து, வலி குறையாத மாதவிலக்கை எதிர்கொண்டால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.”