ஹெல்த்
Published:Updated:

“கவலைப்பட நேரமில்லை” டவுண் சிண்ட்ரோம் நாயகன் கரண்

“கவலைப்பட நேரமில்லை” டவுண் சிண்ட்ரோம் நாயகன் கரண்

ளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘இனம்’ படத்தின் கதாநாயகன் கரணை நினைவுள்ளதா? இவர் டவுண் சிண்ட்ரோம் எனப்படும் மரபியல் குறைபாடால் பாதிக்கப்பட்டவர். குரோமோசோம் குறைபாடு காரணமாக, இவர்களுக்கு மூளை வளர்ச்சி, தாமதமாக இருக்கும். உடல் வளர்ச்சிக் குறைவு, புரிந்துகொள்ளும் திறனில் குறைபாடு எனப் பல்வேறு உடல், மனப் பிரச்னை இருப்பதால், முடங்கிப்போய்விடுபவர்கள் தான் அதிகம். ஆனால், உள்ளத்தில் உள்ள உறுதியும், உறவுகள் தரும் ஊக்கமும் இருந்தால், உலகமே நம்மை திரும்பிப் பார்க்கும் என்பதற்கு உதாரணம், கரண். சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் கூடைப் பந்து நட்சத்திரம். சதுரங்கத்திலும் சாம்பியன், சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகள் என, கரணின் சாதனைப்பட்டியல் நீளமானது. லயோலா கல்லூரியில் மல்டி மீடியா இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கிறார் இவர்.

“கவலைப்பட நேரமில்லை” டவுண் சிண்ட்ரோம் நாயகன் கரண்

“டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கு, காலை எழுந்ததும் கழிவறை செல்வதில் துவங்கி, இரவு உறங்கச் செல்லும் வரை, எந்த ஒரு செயலுமே எளிதானது இல்லை. இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி, கரண் தன் கனவுகளை எட்டிப் பிடித்ததற்கு பின் உள்ள உழைப்பு சாதாரணமானது இல்லை” என்கிறார் அவரது அம்மா கீதா.

“கவலைப்பட நேரமில்லை” டவுண் சிண்ட்ரோம் நாயகன் கரண்

“இந்த மாதிரி குழந்தைகளுக்கு அன்பும் ஆதரவும்தான் சிறந்த மருந்து. கரண் பிறந்ததுமே, அவனுக்கு இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்து, உடனே நாங்க  டிரீட்மென்ட் ஆரம்பித்தோம். இவனுக்குப் பேச்சு வராததால், ஸ்கூல்லயும் இவனைச் சேர்த்துக்க மிகவும் தயங்கினாங்க. ரொம்ப சிரமப்பட்டுதான் ஸ்கூல் ஸீட் வாங்கினோம். எல்லாக் குழந்தைகளும் ஒன்றரை வயதுக்குள் பேச ஆரம்பிப்பாங்க. கரண் பேசவே பன்னிரண்டு வருடங்கள் ஆனது. ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்து இயங்கவே இவங்களுக்குப் பயிற்சி தேவை. பேசறதுக்குத் தொடர்ந்து பத்து வருடங்கள் ஸ்பீச் தெரப்பி கொடுத்தோம். தசை இயக்கப் பிரச்னை (Fine Motor muscle) இருந்ததால், ஸ்கூலில் பரீட்சை எழுத முடியாது. தசைகள் இயங்காததால், கத்திரிக்கோலால் பேப்பர் வெட்டுவது குண்டூசி எடுப்பது, பக்கங்களைத் திருப்புவது என, சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட இவங்களுக்குத் தனியாகப் பயிற்சி தேவை. சிறப்புக் குழந்தைன்னு வீட்டுக்குள் அடைத்துவைக்காமல் எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போவோம். பத்து வயதுக்குப் பிறகு, கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தவுடன், பல விளையாட்டுகள் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம்.

“கவலைப்பட நேரமில்லை” டவுண் சிண்ட்ரோம் நாயகன் கரண்

முதலில், ஒருமுகப்படுத்தும் சக்தி அதிகரிக்க, செஸ் விளையாட பயிற்சி கொடுத்தோம். அங்கும், சாதாரண குழந்தைகள் இவனோட போட்டிபோட யோசிச்சாங்க. இப்ப, சாதாரண குழந்தைகளுடன் சரிக்குச் சரியாக விளையாடுகிறான். 2009 முதல், அனைவருக்குமான செஸ் போட்டிகளில் பல பரிசுகளை வாங்கியுள்ளான். பத்தாம் வகுப்புத் தேர்வுகளை தனியாகவும், 12-ம் தேர்வை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஒபன் ஸ்கூலிங் (National Institute of Open Schooling) மூலமாகவும் எழுதி, வெற்றிபெற்று உள்ளான். டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள், எடை அதிகமாக இருப்பார்கள். பலருக்கும் தைராய்டு பிரச்னை இருக்கும். ஆனால், கரண் சராசரி எடையுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என, பேஸ்கட்பால் கற்றுக் கொண்டான். ஆரோக்கியத்துக்காக கற்றுக்கொள்ள ஆரம்பித்து, இன்றைக்குப் பல விருதுகளைப் பெறும் அளவுக்்கு அதில் ஆர்வமாக இருக்கிறான். 2013 நவம்பர் மாதம் நடந்த ஆசிய பசிபிக் கூடைப் பந்து போட்டியில், தங்கப் பதக்கம் வென்றுள்ளான்.  2015 ஆம் ஆண்டு டாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், இந்தியாவின் கூடைப் பந்து அணியின் நட்சத்திர வீரர் கரண்தான்’’ பெருமையும் சிலிர்ப்புமாகக் கூறுகிறார் கீதா.

‘‘பேஸ்கட் பால் எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும், ரெண்டு வேளையும் விளையாடுவேன். என்னைப் போல இருக்கிற மற்ற குழந்தைகளுக்கு வீட்டில் மருந்து கொடுத்து தூங்கவைப்பாங்க. நான் விளையாடி, டயர்டாகி நானே தூங்கணும்னு உறுதியா இருந்தேன். அந்த விளையாட்டுதான் இன்னைக்கு சாம்பியனா மாத்தியிருக்கு. முகத்தில் எக்ஸ்பிரஷன் வருவதற்காக டான்ஸ் கிளாஸ் போனேன். அங்கேதான் சந்தோஷ் சிவன் சார் பார்த்துட்டு ‘இனம்’ படத்தில் நடிக்கவைத்தார். டான்ஸ் ஆடுவதும், நாடகங்கள் போடுவதும் என்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கின்றன. இப்படி, பிஸியாவே இருக்கிறதால, நான் மற்றவர்கள் மாதிரி இல்லைங்கிற குறையே எனக்குத் தெரியலை.  இன்னும் சொல்லப்போனால், என் குறைய நினைச்சு கவலைப்பட நேரமே இல்லை’’ சிரிக்கிறார் கரண்.

- ஜோ. நவீன்ராஜ் படங்கள்: ர.சதானந்த்

டவுண் சிண்ட்ரோம் என்றால் என்ன?

“கவலைப்பட நேரமில்லை” டவுண் சிண்ட்ரோம் நாயகன் கரண்

‘’கரு உருவாகும்போது, அவற்றில் இருக்கின்ற குரோமோசோம்கள் இரண்டாகப் பிரியும். இந்த நிகழ்வில் 23 குரோமோசோம்கள் இரண்டு இரண்டாகப் பிரிந்து 46 குரோமோசோம்களாக (23 ஜோடிகள்) மாறும். ஆனால், அப்படி மாறும்போது சில சமயம் சிக்கல் ஏற்பட்டு, 21-வது ஜோடி குரோமோசோமில் மட்டும் மூன்று குரோமோசோம்கள் இருக்கும். இதைத்தான் டவுண் சிண்ட்ரோம் என்கிறோம். இந்தக் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி சரியாக இருக்காது, குப்புறப்படுப்பது, தவழ்வது, உட்காருவது என குழந்தைப் பருவத்தின் ஒவ்வொரு கட்டங்களும் மிகத்தாமதம் ஆகும். பின்னந்தலை, நெற்றி, முகம் தட்டையாகத் தோற்றம் அளிக்கும். கண்களின் அமைப்பு இயல்பாக இல்லாமல் சற்று மேல்நோக்கிக் காணப்படும்.

“கவலைப்பட நேரமில்லை” டவுண் சிண்ட்ரோம் நாயகன் கரண்

வுண் சிண்ட்ரோம் இன்டர்நேஷனல் (Down Syndrome International) என்ற அமைப்பு, ஒவ்வொரு வருடமும் சர்வதேச டவுண் சிண்ட்ரோம் தினமான மார்ச் 21 ஆம் தேதி, உலக டவுண் சிண்ட்ரோம் விருதுகள் அறிவிக்கும். 2015-ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஐவருள் கரண்் மட்டுமே இந்தியர். சென்னையில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள 12-வது உலக டவுண் சிண்ட்ரோம் காங்கிரசில் (World Down Syndrome Congress), இந்த விருது  அளிக்கப்பட உள்ளது.