ஹெல்த்
Published:Updated:

நலம் வாழ 4 வழிகள் - ரமணி சந்திரன்

நலம் வாழ 4 வழிகள் - ரமணி சந்திரன்

வீட்டில் நம் தேவைகளை, பார்த்து பார்த்துச் செய்யும் பாசமான அம்மாவைப் போல் எளிமையாக இருக்கிறார், பெண்களின் ஃபேவரைட் எழுத்தாளர் ரமணி சந்திரன். ``நாலு வழிகள் என்று கச்சிதமாகச் சொல்ல முடியாவிட்டாலும், என்னை எப்பவும் உற்சாகமாக, ஆரோக்கியமாக வைக்கின்ற சில விஷயங்களைச் சொல்லலாம். உணவையோ மற்ற பழக்கங்களையோ இதுதான்... இன்னதுதான் என்று குறிப்பிட்டுப் பண்ணுவதில்லை. அதுவேகூட ஒரு காரணமாக இருக்கலாம்’’ என்று புன்னகைக்கிறார்.

நலம் வாழ 4 வழிகள் - ரமணி சந்திரன்

வேலை செய்தால் நோயை விரட்டலாம்

எல்லா டாக்டர்களும் `வாக்கிங் போங்க, வாக்கிங் போங்க’ என்பார்கள். அது எந்த அளவுக்கு நல்லது என்பது, தினசரி போக ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது. ஸ்கூல் படிக்கும் காலத்தில், விளையாட்டு வகுப்பில் சொல்லிக்கொடுத்த பயிற்சிகளும், சூரிய நமஸ்காரமும் இன்றும் என் நினைவில் உள்ளன. அவை தவிர, வீட்டுவேலைகளும் செய்வோம். படிக்கும் வயதில் சோம்பி இருக்கவே விடமாட்டார் என் அம்மா. கோடை விடுமுறை வரும்போது, எங்கள் வீட்டில் வேலை செய்கிற அம்மாவுக்கு இரண்டு மாத சம்பளத்துடன், லீவையும் சேர்த்து கொடுத்து அனுப்பிடுவார். வீட்டை சுத்தம் செய்வதில் இருந்து தோசைக்கு மாவு ஆட்டுவது வரை எல்லா வேலைகளையும் நாங்கள்தான் செய்வோம். வேலையும் பழகிக்கலாம்; உடலுக்கும் நல்ல பயிற்சி. சென்னைக்கு வந்தபிறகு, அதுபோன்ற கடினமான வேலைகள் எல்லாம் குறைந்துவிட்டது. 67 வயதில் சர்க்கரை நோய் வந்தது. அப்போது முதல்,  இந்த ஒன்பது ஆண்டுகளாக, நானும் என் கணவரும் தினமும் இரண்டு கிலோ மீட்டர் தூரம் கட்டாயம் நடப்போம். காலையில் பால் குடித்துவிட்டு, வாக்கிங் போய்விட்டு வந்தால், அந்த நாளின் தொடக்கமே ஆரோக்கியமானதாக இருக்கும்.

எளிமையான உணவு

அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு எல்லாம் அளவோடு தான் சேர்த்துக் கொள்கிறேன். காலையில் டிபன், மதியம் சாப்பாடு என ஊர்ப்பக்க வழக்கம்தான் என் வீட்டிலும். என் அம்மா என்ன சமைத்தாலும் அது தேவாமிர்தமாக இருக்கும். வெறும் மிளகைத் தாளி்த்து, வெங்காய சாம்பார் வைப்பார்். அப்படி ஒரு வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். சமைப்பதில் அது, இது என்று பிரம்மாண்டம் இல்லாமல், எதைச் செய்தாலும் எளிமையாக, சுவையாக, ஆரோக்கியமாக செய்ய வேண்டும் என்பதுதான் என் அம்மாவிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.

வேண்டாததை தவிர்க்கலாம்!

எனக்கு சர்க்கரை நோய் வந்தபோது, ‘வெள்ளை சர்க்கரை, வெல்லம் தவிர்க்கிறது நல்லது’ என்றார் டாக்டர்். அந்த நாளில் இருந்து  இந்த இரண்டையும் விட்டுவிட்டேன். என் அப்பா பயங்கர செயின் ஸ்மோக்கர். ஒருநாள் இரவு, அவரது டின்னில் (அந்தக் காலத்தில் சிகரெட் டின்னில் வரும்) சிகரெட் இல்லாமல், அவர் பட்ட அவஸ்தையையும், அந்த மூன்று இன்ச் எமனால் அவர் பட்ட பாட்டையும் இன்று நினைத்தாலும் நடுங்குகிறது. அடுத்த நாள் காலையில், ‘இத்தணூண்டு சிகரெட் நம்மை இந்த அளவுக்கு ஆட்டிப்படைப்பதா?’ என்று நினைத்து, அந்த நிமிடத்தில் இருந்து அதை அவர் தொடவே இல்லை. அந்த மன வைராக்கியம் இருந்தால், எந்தத் தீய பழக்கத்தையும் உதறித் தள்ளிவிடலாம்.

உறவுகள் தரும் உற்சாகம்

என் உடன்பிறந்தவர்கள் ஏழு பேர். பெரியப்பா வீட்டில் எட்டு பிள்ளைகள். அதனால், அக்கா, அண்ணன், தம்பி, தங்கைகள், பேரக் குழந்தைகள் என்று எனக்கு நிறைய சொந்தங்கள் உண்டு. சென்னையிலேயே பல குடும்பங்கள் இருப்பதால், அடிக்கடி ஏதாவது விழாக்களைச் சாக்காக வைத்து சந்திப்போம். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஏதாவது செய்து கொண்டு வந்து, எல்லோரும் சேர்ந்து உக்கார்ந்து, பரிமாறி, சாப்பிட்டுக் கொண்டே நினைவுகளை அசைபோடுவோம். வருடம் ஒருமுறை, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் என எங்கள் ஊர்க் கோயில்களுக்குப் போய்விட்டு வருவோம். இதுவே, தனி தெம்பைத் தந்துவிடும். ஊரில் ஏதாவது கல்யாணம், விசேஷம் என்றால், தூரம், செலவு, அலைச்சல் எல்லாம் பார்க்காமல், கிளம்பிப் போயிட்டு வந்துவிடுவோம். உறவுகளும் அம்மா, அப்பா புழங்கிய வீடுகளும் தரும் உணர்வுகள் வார்த்தையில் வர்ணிக்க முடியாத உற்சாகத்தைத் தரும். இந்த ஆனந்தம் தான் ஆனந்தம், என் ஆரோக்கியத்துக்கான அடித்தளம்!

- பிரேமா நாராயணன் படம்: ஆ.முத்துக்குமார்