ஹெல்த்
Published:Updated:

உண்மை எது? பொய் எது? கர்ப்ப கால நம்பிக்கைகள்

உண்மை எது? பொய் எது? கர்ப்ப கால நம்பிக்கைகள்

கவிதா கெளதம்
மகப்பேறு மருத்துவர்

உண்மை எது? பொய் எது? கர்ப்ப கால நம்பிக்கைகள்

ர்ப்ப காலத்தில், வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, தொடர்ந்து வாந்தி வந்தால், குழந்தைக்குத் தலை முடி அதிகமாக இருக்கும் என்று பல்வேறு நம்பிக்கைகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளன. இந்த நம்பிக்கைகளில் எந்த அளவுக்கு உண்மை?

உண்மை எது? பொய் எது? கர்ப்ப கால நம்பிக்கைகள்

வயிறு பெரிதானால்  பெண்குழந்தை?

வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்றும், சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் கூறுவார்கள். வயிறு பெரிதாக தெரிவதற்கு, உடல் பருமன், குழந்தையின் எடை, அதன் அளவு, பனிக்குட நீரின் அளவு என, பல காரணங்கள் உள்ளன. கருவின் சருமத்தைப் பாதுகாக்கும் தன்மைகள் பனிக்குட நீரில் உள்ளன.இதனுடன் கருவின் சிறுநீரும் கலந்திருக்கும். சர்க்கரை நோய் இருக்கும் தாயின் வயிற்றில், பனிக்குட நீர் சற்று அதிகமாகவே இருக்கும். இதனால், வயிறும் பெரியதாகத் தெரியும். பெண், ஆண் என்ற பாலினத்தைவைத்து, வயிற்றின் அமைப்பு மாற வாய்ப்பு இல்லை. குழந்தையின் எடை இரண்டரை முதல் மூன்று கிலோ வரை இருக்கலாம். இதற்கு மேல் எடை இருந்தால், வயிறு நிச்சயம் பெரியதாகவே தெரியும். 

பிரசவ வலி எடுத்து சீக்கிரம் பிறந்தால் ஆண் குழந்தையா?

எனது அனுபவத்தில் 80 சதவிகித பிரசவங்களில் வலி வந்த பிறகு தாமதிக்காமல் சீக்கிரம் பிறக்கும் குழந்தைகள் ஆண் பிள்ளையாகவே இருந்தன. பிரசவ வலி எடுத்தும் நீண்ட நேரம் கழித்துப் பிறக்கும் குழந்தைகள், பெண் குழந்தைகளாகவே இருந்தன. அனைவருக்கும் இந்தக் கருத்து பொருந்தும் என்று சொல்ல முடியாது. இதற்கானக் காரணங்கள் சரியாகத் தெரியவில்லை.

தாய் சுகபிரசவம் ஆகியிருந்தால்மகளுக்கும் சுகபிரசவம்தான் நடக்குமா?

அந்தக் காலத்தில் சுகப்பிரசவம் ஆகியிருந்த தாயின் உடல்நிலை, உணவுமுறை, வாழ்வியல் முறை வேறு. இன்று இருக்கும் பெண்களின் வாழ்வியல் முறை வேறு. மரபு ரீதியாக சுகபிரசவத்தைப் பொருத்திப்பார்க்க முடியாது. இன்றைக்கு சிசேரியன் செய்யப்படும் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான்.

கர்ப்ப காலத்தில் இடது பக்கம்தான் படுக்கவேண்டும்

கர்ப்ப காலங்களில் இடது பக்கம் படுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார். இடது பக்கம் படுக்கும்போது, சீரான ரத்த ஓட்டம் குழந்தைக்குச் செல்லும். ஒரே பக்கம் படுத்து, கஷ்டமாக உணரும் சமயத்தில், கொஞ்சம் நேரத்துக்கு மாறி வலது பக்கம் படுக்கலாம். குப்புறப் படுத்தாலோ, மல்லாக்கப் படுத்தாலோ குழந்தைக்குச் செல்லும் ரத்த ஒட்டம் குறைந்து, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தாயின் உடலில் உள்ள ரத்த நாளங்களின் மேல் குழந்தையின் எடை விழுந்து, தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படும். இடது பக்கம் படுப்பதே குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பு. இடது பக்கம் படுக்கச் சொல்வது மூட நம்பிக்கை அல்ல. அறிவியல்பூர்வமான உண்மை.

தாயின் முகம் பொலிவாக இருந்தால், பெண் குழந்தையா?

முகத்தின் பொலிவுக்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் சம்மந்தம் இல்லை. கர்ப்ப காலத்தில் தாயின் மகிழ்ச்சியான உணர்வே, முகம் பிரகாசிக்கக் காரணம். கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் முகம் மலர்ச்சியுடன்தான் இருக்கும்.

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

குங்குமப்பூ சாப்பிடலாமா என்று 10-ல் எட்டு பெண்கள் கேட்கின்றனர். அதில், இரும்பு சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும். சிவப்பு நிறத்தில் அம்மா, அப்பா இருந்தால் குழந்தையும் அதே நிறத்தில் பிறக்க வாய்ப்புகள் உண்டு. நிறத்தை நிர்ணயிப்பது பெற்றோர்களின் ஜீன்களே. சருமத்தின் நிறத்துக்குக் காரணம் மெலனின் என்ற நிறமி மட்டுமே. குங்கமப்பூ இல்லை.

பப்பாளி, அன்னாசி பழத்தைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?

ஒரு முழு பப்பாளியையும், அன்னாசியையும் யாரும் சாப்பிடப் போவது இல்லை. ஒரு துண்டு என்ற கணக்கில் பழங்களைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. கருவைப் பாதிக்காது. அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம். ஆனால், அளவுடன் சாப்பிடுவது முக்கியம்.

அடிக்கடி வாந்தி எடுத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிக முடி இருக்குமா?

கருவுற்றதன் விளைவை எதிரொலிக்கும் வகையில் சிலருக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்கும். ஒவ்வொருவரின் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் அளவைப் பொறுத்து இது மாறுபடும்எனச் சொல்லலாம். குழந்தையின் முடிக்கும் வாந்தி வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 - ப்ரீத்தி