ஹெல்த்
Published:Updated:

தவிர்க்க முடியும் அல்சைமரை!

தவிர்க்க முடியும் அல்சைமரை!

ஜி.எஸ்.சாந்தி
முதியோர்நல சிறப்பு மருத்துவர் மற்றும் பேராசிரியர்

தவிர்க்க முடியும் அல்சைமரை!

மீபத்தில் மணிரத்னம் இயக்கி வெளிவந்த ‘ஓ காதல் கண்மணி’ படத்தில், அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்படும் கதாபத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார் லீலா சாம்சன். தற்போது, இந்தியாவிலும் மனிதர்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்து வருவதால், அல்சைமர்  நோயும் தற்போது பெருகிக்கொண்டே வருகிறது. அல்சைமர் நோய் ஏன் வருகிறது, அதைத் தவிர்க்க முடியுமா?

தவிர்க்க முடியும் அல்சைமரை!

“அல்சைமர் என்றால் என்ன?”

“நம்முடைய நினைவாற்றல் மற்றும் மூளை செயல்படுதிறன் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருவது டிமென்ஷியா என்ற நிலை. அதற்கு முக்கியக் காரணம் அல்சைமர் நோய். சிக்கலான விஷயங்களைப் பார்க்கும்போதோ பேசும்போதோ குழம்புவது, வார்த்தைகளை மறந்துவிடுவது போன்றவை ‘டிமென்ஷியா’ என்ற நிலையின் அறிகுறி. வயது அதிகரிக்கும்போது, மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளையில் உள்ள சில நியூரான்களின் செயல் இழப்பு போன்றவையே அல்சைமருக்குக் காரணம். அல்சைமரில் பல நிலைகள் இருக்கின்றன. ஆரம்ப நிலையில், அன்றாட வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் மறந்துவிடும். உதாரணமாக காலையில் சாப்பிட்ட உணவு, காலையில் சந்தித்த நபர், சென்ற நிகழ்ச்சி போன்றவை மறந்து விடும். அடிக்கடி கோபம் வரும். குணங்கள் மாற ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், தன் துணையை, மகன், மகள், உறவினர்கள், நண்பர்களைக்கூட மறந்துவிடுவார்கள்.”

“யாருக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது?”

“வயது அதிகமாக, அதிகமாக அல்சைமர் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது. தற்போது, 75 வயதானவர்களில் நான்கில் ஒருவருக்கு இந்த நோய் வருகிறது. பெரும்பாலும், மரபியல் ரீதியாகத்தான் அல்சைமர் வருகிறது. மேலும், ரத்தக்குழாயில் கொழுப்புகள் படியக்கூடிய நோயான ‘அத்ரோஸ்க்லீரோசிஸிஸ்’ (Atherosclerosis) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு, நரம்பு மண்டலத்தில் கோளாறுகள் இருப்பவர்களுக்கு அல்சைமர் வரலாம். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு அல்சைமர் நோய் வரும் வாய்ப்பு உள்ளது.”

“அல்சைமர் நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?”

“நினைவாற்றல் குறைவது மட்டுமின்றி தொடர்ச்சியாக அன்றாட செயல்களில் மாறுதல்கள் இருக்கும். காலையில் எழுந்ததும், பல் தேய்க்க, குளிக்க, உடை உடுத்த என, அன்றாட செயல்களைக்கூட வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி நினைவு படுத்தவேண்டிய நிலை உண்டாகும். அல்சைமர் முற்றிய நிலையில் மகன், மகள், நெருங்கிய நண்பர்களைகூட மறந்துவிடுவார்கள், சிலருக்குப் பழைய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும். ஆனால், காலையில் சாப்பிட்டதை மறந்துவிடுவார்கள், என்ன உடை உடுத்தி இருக்கிறோம், எங்கே இருக்கிறோம் என்பதுகூட தெரியாமல் போகும். சிலர் ஒரு குழந்தையைப் போன்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். வீடு, அலுவலகம் செல்வதற்கான வழிகள் திடீரென மறந்துவிடும். மலம், சிறுநீர் கழித்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகள்கூட மறந்துபோகும். கட்டுப்பாடற்றுப் போகும்.”

 “அல்சைமர் பிரச்னையை எப்படிக் கண்டறிவது?”

“60 வயதைக் கடந்தவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் மூளை செயல் திறனில் மாறுதல் இருந்தால் கவனிக்க வேண்டும். உதாரணமாக வங்கி பரிமாற்றங்
களில் தடுமாற்றங்கள், கடையில் சரியாக கணக்கு பார்த்து பணம் வாங்கத் தடுமாறுதல், பெண்கள் அன்றாடம் செய்யும் சமையலை செய்யத் திணறுவது, கார் ஓட்டுவது, சாலை விதிகளில் குழப்பம் வருவது, சாதாரணப் பிரச்னையை அணுகக் கூட மிகவும் கஷ்டப்படுவது போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

மூளை செயல் திறனை அறிய தனிப்பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகளை வைத்தே, டிமென்ஷியா இருக்கிறதா, இல்லையா, பாதிக்கப்பட்டவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அறிய ‘மினி மெண்டல் ஸ்டேட்டஸ் தேர்வு’ (MMSC),  ‘மினி காக் சோதனை’ (MCT), கிளாக் டிராயிங் டெஸ்ட், போன்ற சில பரிசோதனைகள் செய்யப்படும்.  இந்தப் பரிசோதனையில் நினைவு மற்றும் புதிர் பரிசோதனை, சொன்னதைச் சரியாக உள்வாங்க முடிகிறதா, எப்படி எதிர்வினையாற்றுகிறார் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு உறுதி செய்யப்படும். டிமென்ஷியா உறுதியானால் அவர் ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மூலம், வைட்டமின் பி12, ரத்தசோகை, ஹைப்போதைராய்டு போன்ற பிரச்னைகள் உள்ளதா எனக் கண்டறியப்படும். முடிவைப் பொறுத்து டிமென்ஷியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மூளையில் கட்டி, மூளையில் நீர்க்கோத்தல், மூளையில் ரத்தக்கட்டி போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என அறிய எம்.ஆர்.ஐ, சி.டிஸ்கேன் போன்ற சோதனைகள் செய்யப்படும். ஏதேனும் பிரச்னை இருந்தால், நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படும். டிமென்ஷியா நிலையை குணப்படுத்த சிகிச்சை உள்ளது. ஆனால் அல்சைமர் நோயை முழுமையாக குணப்படுத்த சிகிச்சை கிடையாது. சில பயிற்சிகள் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும்.

அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் சுரக்கும் ‘அசிட்டைல்கோலின்( Acetylcholin) அளவு குறைவாக இருந்தால், மருந்துகள் மூலமாக சிகிச்சை கொடுக்கப்படும்.  இதன் மூலம் அல்சைமர் நோய் முற்றிய நிலைக்குச் செல்வதைத் தாமதப்படுத்த முடியும். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவரை கண்காணிக்க, ஒருவர் கூடவே இருப்பது அவசியம். ஆரம்பநிலையில் இருப்பதையும் தங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படுவதையும் முதியவர்கள் அறிந்துகொண்டு, அல்சைமர் நோய் வராமல் தடுப்பதே சிறந்தது.”

- பு.விவேக் ஆனந்த்

அல்சைமர் நோய் வராமல் தடுக்க

•  55 - 60 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற்றாலும் வீட்டிலேயே முடங்கி விடக்கூடாது. தினமும், அன்றாட வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.

• தினமும் செய்திதாள்கள் படிப்பது அவசியம். குறுக்கெழுத்துப் புதிர்கள் முதலான, போட்டிகளில் கலந்துகொள்ளுங்கள். சிக்கலான  கணக்குப் புதிர்களை விடுவிக்க முயற்சிசெய்யுங்கள். எப்போதும், மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

• சக நண்பர்களிடம் மட்டும் பேசாமல், மகன், மகள், பேரக்குழந்தைகளுடன் எப்போதும் பேசுங்கள். அவர்களுக்குப் படிப்பில் சந்தேகம் இருந்தால், சொல்லிகொடுங்கள். வயதில் சிறியவர்களிடம் பேசும்போது, நிறைய தெரிந்துகொள்ள முடியும்.

• உங்கள் வயது, அனுபவம், சீனியர் என்பதால் நீங்கள் சொல்வதை மட்டுமே குழந்தைகள் கேட்கவேண்டும் என எண்ணாமல், அவர்கள் சொல்வதையும் கேளுங்கள். தனித்து இருப்பதோ, எல்லோர் மீதும் வெறுப்பு கொள்வதோ, விரக்தி அடைவதோ வேண்டாம்.

• சமூகத்தின் நிலை என்ன என்று, நாட்டு நடப்பு பற்றி அப்டேட் செய்துகொண்டே இருங்கள். சமூக வளைதளங்களில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

• ஆண்டுக்கு ஒரு முறையேனும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

• ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் - ஏ, சி, இ நிறைந்த நிறைந்த, பழங்கள், காய்கறிகள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். கொலஸ்டிரால் குறைந்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்துத் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

• நேரத்துக்குத் தூங்கப் பழகுங்கள். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரமாவது நன்றாகத் தூங்குங்கள்.

“மறதிக்கும் அல்சைமருக்கும் என்ன வித்தியாசம்?”

“எல்லா வயதினருக்குமே மறதி வரும். உதாரணமாக, வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றவுடன், வீட்டை பூட்டினோமா, விளக்குகளை அனைத்துவிட்டோமா என சந்தேகம் வரும். பைக், கார் சாவியை எங்கே வைத்தோம் என, திடீரென மறந்துவிடும். இவை எல்லாம் எப்போதாவது வரும். மறதி என்பது கவனக்குறைவு தான். அல்சைமர் என்பது வயதானவர்களில் சிலருக்கு மட்டுமே வரும். எனவே, எப்போதாவது வரும் மறதியை அல்சைமர் நோயோ எனப் பயப்படவேண்டாம். வீட்டில் உள்ள வயோதிகர்களுக்கு, தொடர்ச்சியாக அல்சைமர் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம்.”

தவிர்க்க முடியும் அல்சைமரை!

என்.சரண், வடலூர்.

“மதிய உணவு சாப்பிட்டவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அலுவலகத்தில் வேலை செய்வோர் எப்படித் தூக்கத்தைச் சமாளிப்பது? வீட்டில் இருக்கும்போது, மதிய வேளையில் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்? தூக்கம் வந்தும் தூங்காமல் வேலை செய்தால், உடல்நலம் பாதிக்குமா?”

டாக்டர் ராமசாமி,
பொது மருத்துவர், கோவை.

தவிர்க்க முடியும் அல்சைமரை!

“பெரும்பாலானவர்களுக்கு, மதிய உணவு உண்டதும் தூக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும். மதிய உணவின் அளவு அதிகரிக்கும்போது, அவற்றைச் செரிக்க, செரிமான மண்டலத்துக்கு ரத்த ஒட்டம் அதிகமாகச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், மூளை சோர்வடையத் தொடங்கி, அதிக அளவில் கொட்டாவி வந்து, தூக்க உணர்வைத் தருகிறது. மதியம் 10-15 நிமிடங்கள் தூங்கலாம். இதனால் பாதிப்பு இல்லை. ஆனால், அதிக நேரம் தூங்கினால், உடல் எடை கூடும். செரிமானப் பிரச்னை உருவாகும். அலுவலகத்தில் வேலை செய்யும்போது தூக்க உணர்வு மேலிட்டால், முகம் கழுவுதல், சேரில் ரிலாக்சாக 10 நிமிடங்கள் உட்காருதல் போன்றவற்றின் மூலம் தூக்க உணர்வைப் போக்கலாம்.

தவிர்க்க முடியும் அல்சைமரை!

மதியம் குறைந்த அளவில், சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன், சீரான இடைவெளி இருக்குமாறு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரவில், குறைந்தது ஏழெட்டு மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதேபோல், தினமும் சூரியஒளி படுமாறு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது இரவில் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும், பகல் நேரத் தூக்கத்தையும் தவிர்க்கும்.”