ஹெல்த்
Published:Updated:

டவுட் கார்னர்

டவுட் கார்னர்

சைத்ரா
காஸ்மெடிக் மற்றும் தோல் சிகிச்சை நிபுணர்

டவுட் கார்னர்

“எனக்கு வெயில் காலங்களில் வியர்க்குரு பிரச்னை அதிகமாக இருக்கிறது. பல பவுடர்கள் பயன்படுத்தியும் பலன் இல்லை. இதற்கு என்ன தீர்வு?”

டவுட் கார்னர்

“வியர்க்குரு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும் சிறுவர்களும்தான். வெயில் காலத்தில், உடலின் உள் வெப்பத்தைவிட, புற வெப்பம் அதிகமாக இருக்கும். இதைச் சமன்படுத்த, வியர்வை சுரப்பிகள், வேகமாகச் செயல்பட்டு வியர்வையை வெளியேற்றும். இப்படி, அதிக அளவு வியர்வை வெளியேறும்போது,  வியர்வையுடன் தூசு கலந்து தோலின்மீது படிந்து, வியர்வை வெளியேறும் துளைகள் அடைத்துக்கொள்ளும். இதனால், வியர்வை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குரு வரும்.

வியர்க்குருவை போக்க பல்வேறு நறுமணங்களில் பவுடர்கள் கிடைக்கின்றன. இந்த வகை பவுடர்கள், வியர்க்குரு வந்த இடத்தைக் குளிரவைக்கும். வியர்க்குருவால் உடலில் ஏற்படும் எரிச்சல் நீங்கவும், வியர்வை நாற்றத்தைக் கட்டுக்படுத்தவும் மட்டுமே உதவும். வியர்க்குரு நீங்க,  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம். உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட் மிகவும் குறைவாக இருந்தால், உடனடித் தீர்வுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

மருந்துக் கடைகளில், கேலமைன் லோஷன் வாங்கி, வியர்க்குரு உள்ள இடங்களில் தடவுவதும், அடிக்கடி குளிப்பதும், வியர்க்குரு நீங்க உதவும். அதிக அளவு முடி இருப்பதனால் வியர்க்குரு வரும்பட்சத்தில், மேற்கண்ட சிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனில், வியர்க்குரு இருக்கும் இடங்களில் அல்லது உடல் முழுவதும் முடியை லேசர் மூலம் எடுத்துவிடலாம். மிகவும் அதிகமாக வியர்வை வழிந்துகொண்டே இருக்கிறது எனில், பிரத்யேக ஊசி மூலம் வியர்வையைக் கட்டுபடுத்துவதன் மூலம், வியர்க்குருவையும் கட்டுப்படுத்த முடியும்.

வியர்க்குரு வராமல் தடுக்க எளிய டிப்ஸ்:

தினமும் இரண்டு வேளை தேய்த்துக் குளிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வருகிறது எனில், மூன்று நான்கு முறைகூட குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

வெயிலில் வெளியே செல்லும்போது, மருத்துவ ஆலோசனைப்படி, சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர், சன் ஸ்க்ரீன் போட்டுக்கொள்ள வேண்டும்.

தினமும், காலையில் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் ஒன்றை, நன்றாகக் கழுவிச் சாப்பிட வேண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஆரஞ்சு, வெள்ளரி, தர்பூசணி பழங்களைச் சாப்பிடலாம்.தினமும், ஏதாவது ஒரு பழச்சாறு அருந்தலாம்.

வியர்க்குரு பவுடரை பயன்படுத்துபவர்கள், குளித்ததும் சில நிமிடங்கள், நன்றாக உடலைத் துவட்டிய பிறகு, ஒரு ஸ்பாஞ்சில் சிறிய அளவு பவுடர் கொட்டி, வியர்க்குரு வரும் இடங்களான நெற்றி, முதுகு, மார்பு, அக்குள் பகுதிகளில் தடவுங்கள். வியர்க்குரு பவுடரை உடலில் அப்படியே கொட்டித் தடவுவதால், அவை வியர்வைத் துளைகளை அடைத்துவிடும். எனவே கவனம் தேவை.

ஆன்டி பெர்சிப்ரென்ட் பவுடர்களைப் பயன்படுத்துங்கள், பெர்ஃபியூம் பயன்படுத்த வேண்டாம். டியோடரன்ட் ஸ்ப்ரே மட்டும், அளவாகப் பயன்படுத்துவது நல்லது. இது வியர்வை நாற்றத்தைக் கட்டுபடுத்தும்.

- விவேக் ஆனந்த்