ஹெல்த்
Published:Updated:

நான் வளர்ந்துவிட்டேன் அம்மா...

பூப்பெய்துதல்

ஶ்ரீகலா பிரசாத்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்

நான் வளர்ந்துவிட்டேன் அம்மா...

முகப்பரு, உடலில் முடி வளர்தல், மார்பக வளர்ச்சி, திடீர் திடீர் மனமாற்றம் போன்ற அறிகுறிகள் உங்கள் செல்ல மகளிடம் தென்பட்டால், அவள் பூப்பெய்துதலை நோக்கிப் பயணிக்கிறாள் என்று அர்த்தம். பெண்ணோ ஆணோ, அவர்களது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகும் நிலை பூப்பெய்துதல் (Puberty) எனப்படுகிறது. போன தலைமுறை வரை, பெண்கள் பூப்பெய்தும் வயது, 14-15 ஆக இருந்தது. வாழ்க்கைமுறை மாற்றத்தினால், இன்றைக்கு 10-12 வயதுக்குள்ளாகவே பூப்பெய்துகின்றனர். அந்த நேரத்தில், அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்வார்கள். பூப்பெய்துதல் என்றால் என்ன, அது எப்படி நிகழ்கிறது, அதற்கு எப்படித் தயாராவது, இயல்பாக எதிர்கொள்வது எப்படி என்பதைப் பெற்றோர் தங்கள் மகளுக்குச் சொல்லித்தருவது மிக அவசியம். 

நான் வளர்ந்துவிட்டேன் அம்மா...

பூப்பெய்துவதற்கு முன்பு ஏற்படும் உடல் மாற்றங்கள்:

பூப்பெய்துவதற்கு முன் (Pre-pubertal period) குறைந்தது ஓர் ஆண்டு காலமாகவே உடலில் ஏற்படும் மாற்றங்களை பெண்களால் உணர முடியும். இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான் காரணம். ஈஸ்ட்ரோஜென் சுரந்து, குழந்தையின் உயரம் அதிகரிக்கும். மொட்டு போல ஒரு பக்கம் மட்டும் மார்பகம் வளர ஆரம்பிக்கும். பிறகு, இன்னொரு பக்க மார்பு  வளரத் தொடங்கும். முலைக்காம்பும் அதைச் சுற்றிய இடமும் கருப்பாக மாறும். அக்குள் மற்றும் அந்தரங்க உறுப்புப் பகுதியில் முடிவளரத் தொடங்கும். இதே நேரத்தில், உடலின் உள்ளும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்.  கர்ப்பப்பை மற்றும் சினைப்பை வளர்ச்சி அடையும். இரண்டு சினைப்பை இருந்தாலும், மாதத்துக்கு ஒரு முட்டை மட்டும் முதிர்ச்சியடைந்து வெளிப்படும்.  (இந்த முட்டையுடன், விந்தணு இணையும்போது கரு உருவாகும்.) கரு வளர்ச்சியடைய கர்ப்பப்பையில் சில மாறுதல்கள் ஏற்படும். முட்டையும் விந்தணுவும் சேரும் சந்திப்பு நிகழாமல், கரு உருவாகவில்லை எனில், கர்ப்பப்பையில் இருந்து முட்டையும் கர்ப்பப்பையில் கருவை வரவேற்க செய்யப்பட்ட மாறுபாடுகளும் வெளியேற்றப்படும். இப்படி, முதன்முறை வெளியேற்றப்படுவதைத்தான் பூப்பெய்துதல் என்கிறோம்.

மிக இளம் வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு வரும்போது, அதிர்ச்சிக்கு உள்ளாகிவிடுகின்றனர். வயிற்று வலியுடனோ வலி இல்லாமலோ அந்தரங்க உறுப்பிலிருந்து, ரத்தம் வழிந்தால், பயப்பட வேண்டாம் எனப் பெற்றோர் சொல்லித்தர வேண்டும். இது நோயோ, பிரச்னையோ இல்லை. இது மாதாந்திர சுழற்சி. வளர்ந்த பெண்களுக்கு, மாதந்தோறும் வரும் இயற்கைக் கழிவு எனப் புரியவைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில்  பூப்பெய்திவிட்டால், ஆசிரியரிடம் சொல்லி உதவி கேட்க சிறுமிகளைத் தயார்ப்படுத்த வேண்டும்.

மாதந்தோறும் ரத்தப்போக்கு சரியாக வருகிறதா, எத்தனை நாட்கள் ரத்தப்போக்கு இருக்கிறது, ஒருநாளைக்கு எத்தனை சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர் போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். மாதவிலக்கின்போது வலி இருக்கிறதா, வயிற்று வலியுடன் வேறெந்த இடங்கள் வலிக்கின்றன என்பதையும் கவனிப்பது நல்லது.
 
மனதில் ஏற்படும் மாற்றங்கள்

மனரீதியான வளர்ச்சியில் ‘நான் குழந்தை இல்லை. பெண். நான் பெரியவள் ஆகிவிட்டேன்’ என்ற எண்ணம் தோன்றும். சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கும் மனநிலை உருவாகும். பெற்றோர், சிறிய பெண்ணாக நடத்துவதை நினைத்துக் கோபம் தோன்றும். இந்த வளர் இளம் பருவத்தில் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும். ஒரு ஆண் “நீ அழகாக இருக்கே” என்று சொன்னால் ஈர்ப்பும் கிளர்ச்சியும் தோன்றுவது இயல்பு. இந்த  வயதில் தோன்றும் கிளர்ச்சியான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாதுகாப்பற்ற உடலுறவினால் நிறைய பெண்கள் கர்ப்பம் அடைகின்றனர். பால்வினை நோய்களுக்கும் ஆளாகின்றனர். இதைத் தடுக்க, பிள்ளைகளிடம் பெற்றோர் பேசுவது அவசியம். படிக்கும் வயதில் இதுபோன்ற எண்ணங்களுக்கு மதிப்பு அளித்தால், எதிர்காலம் என்னவாகும் என்பதைப் புரியும் வகையில் விளக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் இதைச் சொல்லிக் கொடுக்கும் செக்ஸ் கல்விக்கு முக்கியத்துவம் தந்தால், தேவையற்ற பிரச்னைகளிலிருந்து பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க முடியும்.

நான் வளர்ந்துவிட்டேன் அம்மா...

வெள்ளைப்படுதல் ஏன்?

அந்தரங்க உறுப்பில் இருந்து வெள்ளையாகத் திரவம் கசிவதே வெள்ளைப்படுதல். மாதவிடாய் சமயங்களில், சில பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கலாம். இது இயல்புதான். சாதாரண நாட்களிலும் வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால், மலத்தின் மூலம் குடற்புழு அந்தரங்க உறுப்பில் பட்டு, தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படுதல் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். வெள்ளைப்படுதலால் உடல் பலவீனமாகிறது என்று சொல்லும் கருத்து தவறு. வெளியாகும் திரவம் நாற்றத்துடனோ, நிறம் மாறியோ, அரிப்புடனோ இருந்தால், அதற்கு நிச்சயம் சிகிச்சை தேவை. 

மாதவிலக்கு வலி ஏன்?

மாதவிலக்கு சமயத்தில் கருமுட்டை வெளியேறுவதால், வயிற்று வலி ஏற்படுகிறது. இதனுடன் ஹார்மோன் மாற்றங்கள் பிரச்னை இருந்தால் வலி அதிகரிக்கும். குழந்தை பெறாத பெண்களுக்கு வயிறு வலித்து, மாதவிலக்கு வருவது நல்ல அறிகுறிதான். இதற்குப் பயம் தேவை இல்லை. குழந்தை பிறந்த பெண்களுக்குக் கர்ப்பப்பையின் வாய் பெரிதாகிவிடுவதால் மாதவிலக்கு நேரத்தில் வலி இருக்காது. ஆனால், குழந்தை பெறாத பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய் (Pin hole) மிகவும் சிறியதாக இருப்பதால், ரத்தப்போக்கை வெளியேற்ற, கர்ப்பப்பை சுருங்கி விரியும்போது வலி உண்டாகிறது.

அதிகமான வலி இருந்தால், வலி அறிகுறிகள் தெரிந்ததுமே, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இளஞ்சூடான நீரில் குளித்தால், வயிறு, கால், முதுகுவலிகள் குறையும். தாங்க முடியாத வலி வந்து, அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால், நிச்சயம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும்.

சீரற்ற மாதவிலக்கு?

தற்போது பல பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிலக்கு வருவது இல்லை. இதற்கு முக்கியக் காரணம், வாழ்க்கைமுறை மாற்றங்கள். பெரும்பாலானோர், ‘பிசிஒடி’ எனும் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால், சரியான மாதவிலக்கு ஏற்படுவது இல்லை. இதற்கு, மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரையை சாப்பிட்டுவர, முன்னேற்றம் தெரியும். தைராய்டு பிரச்னையாலும் சீரற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, கொழுப்பு நிறைந்த, துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.

- ப்ரீத்தி,  படங்கள்: நா.வசந்தகுமார்