ஹெல்த்
Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“வீடு, அலுவலகம் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழலில், நிறைவான தூக்கமோ ஓய்வோ இல்லாமல், அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகித் தவிப்பது பெண்கள்தான். சரியான நேரத்துக்கு சத்தான, உணவுகளைச் சாப்பிடாமல், உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். இடுப்புப் பகுதிக்கு வலு சேர்க்கும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என எந்தவிதமான பயிற்சிகளும் செய்யாததால், பெரும்பாலான பெண்களுக்கு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. திருமணத்தைத் தள்ளிப்போடுவது, சரியான வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது போன்றவையும் பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

வாழ்க்கைமுறை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவு விஷமாதல் போன்ற காரணங்களால் 2050-ம் ஆண்டில், ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியும் பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியும், பெருமளவு குறைந்துவிட வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது” என்கிறார் மகளிர் - மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் சாமுண்டி சங்கரி.

“ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகி, ஒரு ஆண்டுக்குள் கருவுறவில்லை எனில், அதை ‘கருவுறாமை’ என்கிறோம். பெண்ணுக்கு மாதவிலக்கு வந்து, 10-ல் இருந்து 14வது நாட்களுக்குள் முட்டை வெளிப்படும். அந்த நேரத்தில் கணவனுடன் இணைந்தால், கருத்தரிப்பு நிகழும். என்னிடம் ஆலோசனைக்கு வரும் சில பெண்கள், “கணவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுகிறார், அல்லது இரவுப் பணிக்குச் சென்றுவிடுகிறார். அதனால், அடிக்கடி தாம்பத்திய உறவுகொள்வது இல்லை” என்பார்கள். இதுபோன்று சின்ன சின்னக் காரணங்களைக் கண்டறிந்தாலே, அவர்களுக்குக் கருத்தரிக்க வாய்ப்புகள் உள்ளன. சில பெண்களுக்கு, தைராய்டு பிரச்னை இருக்கலாம். ரத்தப் பரிசோதனையில் கண்டறிந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம், கருத்தரிக்க முடியும். சிலருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை காரணமாகக் கருத்தரிக்காமல் போகலாம்.  இதை ஸ்கேன், ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து, வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருத்தரிக்க முடியும்” என்கிறார்.

கருத்தரிக்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை?

குழந்தையின்மைக்கான காரணங்கள் யாவை?

பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையைக் கண்டறிவது எப்படி?

ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்பட காரணங்கள்?

செயற்கை முறைக் கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் என்னென்ன?

அன்பு வாசகர்களே, மே 16 முதல் 23-ம் தேதி வரை தினமும், 044-66802904« என்ற எண்ணுக்கு போன் செய்தால், கருத்தரிக்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள், குழந்தையின்மை குறைபாட்டுக்கான காரணங்கள், தவிர்க்கும் வழிகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் மகளிர் - மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு நிபுணர் சாமுண்டி சங்கரி

“இந்தியாவில் ஆறு சதவிகித மக்களுக்கு, அதாவது கிட்டத்தட்ட எட்டு கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது.  சர்க்கரை நோயில், டைப் 1, டைப் 2, கர்ப்பகால சர்க்கரை நோய் என மூன்று வகைகள் உள்ளன. நான்காவதாக ‘ப்ரீ டயாபடீஸ்’ என்று ஒரு நிலை உள்ளது. அதாவது, இவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது என்ற நிலை. எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் செய்வதன் மூலம், சர்க்கரை நோயை வராமல் தவிர்க்க முடியும்” என்கிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஜி.விஜயகுமார்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“நம் இலக்கு சர்க்கரை நோய் வராமல் தடுப்பது. அப்படியும் வந்துவிட்டால், அதைப்பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். உரிய மாத்திரைகளை எடுத்துக்கொள்வதுடன், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். உணவுக் கட்டுப்பாடு எனில், நம்முடைய பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும்.  வாழைக்காயைத் தவிர்த்து பூமிக்கு மேல் விளையும் காய்கறிகள் அனைத்தையும், அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம். பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை, வாரத்துக்கு ஒருமுறை மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.  இதில், முள்ளங்கியை மட்டும் தினமும் எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த தர்பூசணி, பப்பாளி, சாத்துக்குடி, கொய்யா போன்ற பழங்களைத் தினமும் சாப்பிடலாம்.  ஆனால், மாம்பழம், பலாப்பழம், சீதாப்பழம் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

சர்க்கரை நோயாளிகளுக்குச் சாப்பிடுவதற்கு என்று நிறைய காய்கறி, பழங்கள் உள்ளன. சாப்பிடக்கூடாது என்று பரிந்துரைப்பது மிகமிகக் குறைவுதான். சாதம், இட்லி, தோசை போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். கோதுமை சாப்பிட்டால் சர்க்கரை குறையும், அரிசி சாப்பிட்டால் சர்க்கரை கூடும் என்பது தவறு. அளவோடு அரிசி சாதம் சாப்பிட்டால் தவறு இல்லை. ஆனால், எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள், சர்க்கரை, இனிப்புகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது நல்லது. இதனுடன், தினமும் அரை மணி நேரம் வாக்கிங் செய்தால், சர்க்கரை நோயால் வரக்கூடிய பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்” என்கிறார்.

சர்க்கரை நோய் பரம்பரை நோயா?

சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியுமா?

சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு பழக்கம் என்ன?

இன்சுலின் ஊசி ஏன் அவசியம்?

அன்பு வாசகர்களே, மே 24 முதல் 31-ம் தேதி வரை தினமும் 044-66802904« என்ற எண்ணுக்கு போன் செய்தால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிகள், வந்தபிறகு செய்ய வேண்டிய வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ஜி.விஜயகுமார்

- பா.பிரவீன் குமார், படங்கள்: தி.குமரகுருபரன், தி.ஹரிஹரன்