ஹெல்த்
Published:Updated:

பல் காயங்கள்... தடுக்கலாம்... தவிர்க்கலாம்!

பல் காயங்கள்... தடுக்கலாம்... தவிர்க்கலாம்!

எம்.எஸ்.ரவிவர்மா
பல் மருத்துவர்

பல் காயங்கள்... தடுக்கலாம்... தவிர்க்கலாம்!

தாவது சண்டை, சச்சரவு வந்தால்,  “பல்லை உடைத்து விடுவேன்” என்ற வார்த்தையை நிச்சயம் கேட்க முடியும். முகத்துக்கு அழகு மட்டும் அல்ல, உணவுகளை நன்றாக மென்று சாப்பிடவும் பற்கள் அவசியம். சொத்தைப் பற்களால் அவதிப்படுவர்களின் எண்ணிக்கையைப் போலவே, பற்களை உடைத்துக்கொண்டு அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பற்கள் உடைந்தால் பலரும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்வது இல்லை, அப்படியே கண்டுகொள்ளாமல் விடுவதால், உடைந்த பற்கள் மூலமாகக் கிருமித்தொற்று பரவி, அருகில் உள்ள பற்களையும் பாதிக்கும்.  பற்கள் உடைந்தால் உடனடியாக என்ன செய்யவேண்டும்?

பல் காயங்கள்... தடுக்கலாம்... தவிர்க்கலாம்!

பற்களைப் பொறுத்தவரையில் மூன்று அடுக்குகள் உண்டு. பல்லின் மேல் இருக்கும் வெள்ளை நிறப் பகுதி எனாமல் (Enamel) எனப்படும். எனாமலின் உட்பகுதி டென்டின்(Dentine),  டென்டினின் உட்பகுதி பல்ப் (Pulp). பற்களில் அடிபடும்போது, எந்த அளவுக்கு அடி விழுந்திருக்கிறது என்பதை, இந்த மூன்று அடுக்குகளையும் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பதன் மூலமே அறியலாம்.  எந்தப் பகுதி  பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்து, சிகிச்சையும் மாறுபடும்.

அதே போல, மேலே இருக்கும் பற்களின் மேலும், கீழே இருக்கும் பற்களின் கீழும், பற்களும் எலும்பும் இணையும் இடத்திலும், நெகிழ்வுத்தன்மை கொண்ட ‘பெரிடாண்டல் லிகமென்ட்’ இருக்கிறது. இந்த லிகமென்ட் இல்லை எனில், எந்தவொரு உணவுப்பொருளையும் நன்றாகக் கடித்து சாப்பிட முடியாது. லிகமென்ட் அடிபட்டு இருந்தால், அதற்குத் தனியாக சிகிச்சை உண்டு. பல்லின் வேர்ப் பகுதியில் சிமென்டம் (Cementum), டென்டின், ரூட் கேனால் ஆகியவை இருக்கின்றன. பல் உடைந்து, வேர்ப் பகுதியில் பாதிப்பு இருந்தால், தனி சிகிச்சை உண்டு.

பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பொறுத்து பல்லின் மேல் கேப் போடுவதா, பல் சிமென்ட் மூலம், பல்லின் உடைந்த பகுதியை அடைப்பதா, பல் முழுவதையும் எடுத்துவிட்டு, செயற்கை பல்லைப் பொருத்தும் ‘இம்பிளான்ட் சிகிச்சை’ செய்வதா, முழுவதுமாகப் பெயர்ந்து விழுந்த பல்லை, மீண்டும் சிகிச்சை மூலம் பொருத்துவதா, பல்லின் வேர் பகுதியில் செய்யப்படும் ரூட் கேனல் சிகிச்சையா என்பதை, பல் மருத்துவர் முடிவு செய்வார்.

யார் யாருக்கு பல் உடைய வாய்ப்பு இருக்கிறது?

குழந்தைகளுக்கு விளையாடும்போது பற்கள் பாதியாக உடைய வாய்ப்பு இருக்கிறது, இருட்டில் எங்காவது இடித்துகொள்ளும்போது, பற்களில் விரிசல் ஏற்படலாம். எத்துப்பல் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு, சிறு சிறு விபத்துகளில் பல் பாதியாக உடையலாம். சண்டை போடும்போது பற்களைத் தாக்குவதால் உடையும். கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு, பந்து பட்டு பற்கள் உடைந்து காயம் ஏற்படலாம். பற்கள் உடைவதற்கு பெரும்பாலும் கவனக்குறைவே காரணம்.

பல் உடைந்தவர்கள் என்ன செய்யவேண்டும்?

பல் உடைந்தவர்கள், பல்லில் கீறல் ஏற்பட்டவர்கள் உடனடியாக பல் மருத்துவரை சந்தித்து, பல்லின் நிலையைப் பொருத்து, என்ன சிகிச்சை எடுத்துக்கொள்வது என, முடிவு செய்ய வேண்டும். பல் வலி, பல்லின் தன்மை, பல் காயம் போன்றவற்றைப் பொறுத்து, சில காயங்களுக்கு சாதாரண சிகிச்சையே போதுமானது. அடிபடும் சமயங்களில் முன்வரிசைப் பற்களில் முழுப் பல்லும் பெயர்ந்து விழுந்தால், உதாசீனப்படுத்தாமல் அந்தப் பல்லை எடுத்து, உடனடியாக  ஒரு டம்ளர் பாலில் போட்டு மூடி வைத்துவிடவும். உடனடியாக, பல் மருத்துவரிடம் சென்று, உடைந்த பல்லை மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். பல் உடையும்பட்சத்தில், அந்த இடத்தில் ஐஸ்கட்டிகள் ஒத்தடம் கொடுப்பது  நல்லது.  உடைந்த பற்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, குறிப்பிட்ட அந்தப் பல்லுக்கு அதிக அழுத்தம் தரும் உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பல் உடைந்தவர்கள் சுயமாக வலிநிவாரணி மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.  சிலருக்குப் பல்லில் அடிபட்டிருக்கும். ஆனால், வலி இருக்காது. பல்லில் கீறலும் இருக்காது, பல் உடைந்திருக்காது. ஆனால், பல் சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். பிறகு, பல் முழுவதும் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். ஏதேனும், ஒரு பல் மட்டும் பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கிறது எனில், உடனடியாக மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம்.

 - பு.விவேக் ஆனந்த்

பல் உடைவதைத் தடுக்க எளிய டிப்ஸ்

• சண்டைகளில் ஈடுபடுவதைக் கட்டாயம் தவிருங்கள்.

• இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்.

• கிரிக்கெட் விளையாடும்போது, ஃபீல்டிங் செய்கையில், முகத்துக்கு நேராக வரும் பந்தை கேட்ச் செய்கையில், மிகவும் கவனமாக இருங்கள். 

• பற்களுக்கு மேல் செயற்கைக் கவசம், மவுத் கார்டு அணிவது விளையாட்டுக்களில் ஈடுபடுவது, பற்கள் உடையாமல் இருக்க உதவும்.

• படிக்கட்டுகளில் இறங்கும்போதும் ஏறும்போதும், செல்போன் பேசுவதைத் தவிருங்கள். தண்ணீர் இருக்கும் பகுதியில் கவனமாக நடந்து செல்லுங்கள்.