ஹெல்த்
Published:Updated:

ஸ்டெம்செல் கார்டிலேஜ் சிகிச்சை

ஸ்டெம்செல் கார்டிலேஜ் சிகிச்சை

கிளமென்ட் ஜோசப்
எலும்பு மூட்டு மற்றும் ஆர்த்ரோஸ்கோப்பி நிபுணர்

ஸ்டெம்செல் கார்டிலேஜ் சிகிச்சை

ற்போது, இளம் வயதினரையும் பாதிக்கும், கால் எலும்பு மூட்டுத் தேய்மானப் பிரச்னைக்கு, மூட்டு மாற்று அறுவைசிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது. இன்னும் 20-30 ஆண்டுகளில், மூட்டு மாற்று சிகிச்சைமுறை இல்லாமலே போய்விடலாம். நம் உடலில் உள்ள ஸ்டெம்செல்களைப் பயன்படுத்தி, மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யும் மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதன் முதல் கட்டமாக, ஸ்டெம்செல்லைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட மூட்டு கார்டிலேஜ் சரி செய்யும் அறுவைசிகிச்சை தென் இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னையில் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெம்செல் கார்டிலேஜ் சிகிச்சை

36 வயதான ராதிகாவுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நடனம் ஆடும்போது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார்.  டாக்டர்கள் பரிசோதித்து, அவரது காலில் குருத்தெலும்பை வெட்டி சரிசெய்யும் அறுவைசிகிச்சை செய்தனர். அதன் பிறகும் வலி மட்டும் விட்டபாடில்லை. சென்னை வந்த அவரது கால் மூட்டை எக்ஸ்ரே செய்ததில், மூட்டு கார்டிலேஜ் ஜவ்வு பாதிக்கப்பட, அவருக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இந்த நிலையில், இரண்டாவது கருத்தைப் பெறுவதற்காக டாக்டர் கிளமென்ட் ஜோசப்பைச் சந்தித்திருக்கிறார் ராதிகா. மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக, மூட்டு எலும்பைப் பாதுகாக்கும் புதிய அறுவைசிகிச்சை ஒன்றுக்கு டாக்டர் பரிந்துரைத்தார். இது குறித்து டாக்டர் கிளமென்ட் ஜோசப் விளக்கினார்.

“நம்முடைய கால் எலும்பு மூட்டு முடியும் இடத்தில் கார்டிலேஜ் என்கிற ஜவ்வு போன்ற அமைப்பு இருக்கும்.  இது, மூட்டு அசைவின்போது அதிர்வுகளைத் தாங்கவும், உயவுப் பொருளாகவும் இருக்கிறது. கார்டிலேஜ் காரணமாகத்தான் எலும்புகள் உராய்வு இன்றி, நம்மால் நடக்க முடிகிறது. இது விபத்து, மூட்டுக் காயங்கள், வயது அதிகரிப்பு காரணமாகப் பாதிக்கப்படுகிறது. கார்டிலேஜில் பாதிப்பு ஏற்பட்டால், எலும்புப் பகுதி தெரிய ஆரம்பிக்கும். இதைச் சரிசெய்ய, முன்பு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஆனால், மூட்டு மாற்று அறுவைசிகிச்சையின் செலவு அதிகம். மேலும், அதன் பயன்பாடு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் இருக்கும். 60-65 வயதினருக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்தால், அது அவரது 70-75 வயதுக்கு மேல் வரைகூட பலன் தரும். ஆனால், 30-35 வயதில் இதை செய்துகொண்டால், 40-45 வயதில் மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தும்.

ராதிகாவுக்கு 36 வயது, அதுவும் அவர் நடனம் ஆடுபவர் என்பதால், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை அவருக்குத் தற்காலிக பலனை மட்டும்தான் தரும். அதனால், புதிதாக வந்துள்ள ஸ்டெம்செல் அறுவைசிகிச்சை பற்றி அவருக்குத் தெரிவித்தேன். நம்முடைய உடலின் மூல செல்களான ஸ்டெம்செல்கள், எலும்பு, கல்லீரல், இதயம் என உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாறும் தன்மைகொண்டது. ராதிகாவின் இடுப்பு எலும்புப் பகுதியில் ஊசி மூலம் ரத்தம் எடுத்து, அதை ‘ஹார்வஸ்ட்’ என்ற கருவியில் வைத்து, ஸ்டெம்செல்லைப் பிரித்தோம்.

ஸ்டெம்செல் கார்டிலேஜ் சிகிச்சை

ஸ்டெம்செல் பிரிக்கும் நேரத்தில், ராதிகாவின் மூட்டுப் பகுதியில் இரண்டு மிகச்சிறிய துளைகள் இடப்பட்டு, ஆர்த்ரோஸ்கோப்பி கருவி செலுத்தப்பட்டது. கார்டிலேஜ் பாதிக்கப்பட்ட பகுதியில் சுத்தம் செய்யப்பட்டு, அந்தப் பகுதி எலும்பில் சிறு துளைகள் இடப்பட்டன. இது, ஸ்டெம்செல் செலுத்தும்போது அந்தப் பகுதியில் நன்கு பொருந்திக்கொள்வதற்காகச் செய்யப்படுகிறது. பிறகு, ஸ்டெம்செல் மற்றும் ரத்தம் உறைய உதவும் ரசாயனம் சேர்த்து, கார்டிலேஜ் குறைபாடு உள்ள எலும்பில் துளையிடப்பட்ட பகுதியில் செலுத்தப்பட்டது. இந்த கலவை வெளியே வந்ததுமே, உறையத் தொடங்கிவிடும். இதனால், கார்டிலேஜ் பகுதியில் புதிய படிவம் உருவாக்கப்படும். இந்தப் படிவம் கொஞ்சம் கொஞ்சமாக கார்டிலேஜ் திசுவாக உருவாகும். ஓர் ஆண்டுக்குப் பிறகு, பரிசோதனை செய்து பார்க்கும்போது இந்தப் பகுதி முழுவதும் கார்டிலேஜ் திசுவாக மாறியிருக்கும்.

இரண்டரை மணி நேரத்தில் அறுவைசிகிச்சை முடிந்து, இரண்டே நாட்களில் ராதிகா நடக்க ஆரம்பித்துவிட்டார்.   இப்போது, மூட்டில் எந்த வலியும் இன்றி மாடிப்படிகூட ஏறுகிறார்” என்றார்.

- பா.பிரவீன் குமார்