Published:Updated:

மனஅழுத்தம் குறைக்க இமான் அண்ணாச்சியின் ‘ஐந்தெழுத்து’ மந்திரம்! #LetsRelieveStress

மனஅழுத்தம் குறைக்க இமான் அண்ணாச்சியின் ‘ஐந்தெழுத்து’ மந்திரம்! #LetsRelieveStress
மனஅழுத்தம் குறைக்க இமான் அண்ணாச்சியின் ‘ஐந்தெழுத்து’ மந்திரம்! #LetsRelieveStress

மான் அண்ணாச்சி... வயது வேறுபாடின்றி, எல்லோர் மனதிலும் இடம்பிடித்த மனிதர். எப்படியான எடக்கு மடக்குக் கேள்விகள் கேட்டாலும், துடுக்கான பதில்களால் மடக்கும் ஆளுமை மிக்கவர். யதார்த்தமான நகைச்சுவைப் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர்... எனப் பன்முகம் கொண்ட கலைஞர். "எல்லோரையும் சிரிக்கவைத்து மனஅழுத்தம் போக்கும் நீங்கள், உங்கள் மனஅழுத்தத்தைப் போக்க யாரை நாடுவீர்கள்?" - கேட்டால், கலகலவென்று சிரித்தபடி பேசத் தொடங்குகிறார் இமான் அண்ணாச்சி. 


'

'சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிச்சு பெரிய ஆளா ஆகணும்கிறதுதான் என் ஆசை. ஆனா, எல்லாருமே 'கண்ணாடியில உன்னைப் பார்த்ததே இல்லையா? உன் மூஞ்சியெல்லாம் சினிமாவுல வந்தா அவ்வளவுதான்' என்பார்கள். “நான் என்ன ஹீரோவாக நடிக்கப்போறேன்னா சொல்லுதேன். காமெடியனா, கோமாளியா நடிக்கப்போறேன்னுதானே சொல்லுதேன்”னு பதில் சொல்லுவேன். 

எங்க பெரிய அண்ணன் கோயம்புத்தூர்ல நல்ல வேலையில இருந்தார். அவர், “என்னடா பண்ணப்போறே?”ன்னு கேட்டப்பவும் இதைத்தான் சொன்னேன். “எலே, இங்க பாருலே... சினிமா, நாடகம், கூத்தெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது பார்த்துக்கோ. நான் நல்லமுறையில சொல்லுதேன், பேசாம கோயமுத்தூர்ல ஒரு மளிகைக்கடை வெச்சுத்தாறேன், ஒழுங்கா அதைப் பார்க்குற வழியைப் பாரு”னு அட்வைஸ் பண்ணி கடையும் வெச்சுக் கொடுத்தாரு.

கடைத்திறப்பு விழா அன்னிக்கு, கடையைத் திறக்கலாம்னு போய்ப் பார்த்தா, எல்லாப் பொருளையும் எவனோ ஒரு திருட்டுப்பய திருடிக்கிட்டுப் போயிட்டான். பயங்கர டென்ஷனாயிட்டேன். அண்ணன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னே தெரியலை. கல்லாப்பெட்டியைத் திறந்துப் பார்த்தா, நல்ல வேளையா நூறு ரூபாயை வெச்சிட்டுப் போயிருந்தான். டிபன் சாப்பிடட்டும்னு வெச்சிட்டுப் போயிருப்பான் போலிருக்கு. என்னச் செய்ய? அண்ணன்கிட்ட சொல்லி கண்ணைக் கசக்கிக்கிட்டு நின்னேன். 

“ஊருக்காவது போய் தொலை”னு சொல்லி அனுப்பிவெச்சாரு. 

கொஞ்ச நாள் அப்படி இப்படினு ஓடுச்சு. அப்புறம், மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு. 'எப்படா காசு கிடைக்கும்'னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒரு நண்பர் மூலமா 100 ரூபா கிடைச்சுது. அதை எடுத்துக்கிட்டு மெட்ராஸ் கிளம்பிட்டேன். அப்போல்லாம், திருநெல்வேலியிலேருந்து சென்னைக்கு 33 ரூபாதான். இங்கே வந்து ரெண்டு மூணுபேரைப் போய் பார்த்தேன். எல்லோருமே கையை விரிச்சாங்க. அன்னிக்கு நைட்டு பனகல் பார்க்குல வந்து படுத்துத் தூங்கினேன். 

அடுத்தநாள் எங்க போய் தூங்குறதுனு யோசிச்சேன். நந்தனத்துல ஹோண்டா ஷோ ரூம் ஒண்ணு இருந்துச்சு. நைட்ல அங்க போய் உட்கார்ந்து இருந்தேன். அந்த வாட்ச்மேன் நாகர்கோவில்காரர். “ஏ... தம்பி என்ன விஷயம்? நம்ம ஊர்ப் பய மாதிரி இருக்கீங்க?”னு விசாரிச்சார். சொன்னேன்.  

“தம்பி இங்க நீங்க ரெண்டு நாளைக்குத் தங்கிக்கலாம். அதுக்கு அப்புறம் நீங்கதான் வேற இடம் தேடிக்கணும்”னார். அப்புறம் அவரே அங்கேயிருந்த மொட்டைமாடியில போய் தூங்கச் சொன்னார். அங்கேயே படுத்துத் தூங்கினேன்

கையில கொண்டுவந்த காசெல்லாம் செலவாகிடுச்சு. என்ன பண்றதுனு தெரியலை. அண்ணனுக்கு போன் பண்ணினேன். அவர் அவருடைய நண்பர்க்கிட்ட சொல்லி 1,000 ரூபாய் கிடைக்க ஏற்பாடு பண்ணினார். ரெண்டு நாளா சரியாச் சாப்பிடலை. அதுவே எனக்கு செம டென்ஷனாக இருந்துச்சு. மொத வேலையா ஓட்டலுக்குப்போய்... நான் சொல்றது 1993 -ம் வருஷமா இருக்கலாம்... பூரி, தோசை. கறிக்குழம்பு, சுக்கா வறுவல்னு நல்லா சாப்பிட்டேன். அப்பவே பில்லு 90 ரூபாய் ஆச்சு. மீதிப் பணத்தை பத்திரமா நான் கொண்டுவந்திருந்த மஞ்சப்பையில வெச்சுட்டுத் தூங்கினேன். 

காலையில எழுந்து பார்த்தா பையில இருந்த பணத்தையே காணோம். பத்து ரூபாயை மட்டும் வெச்சிட்டுப் போயிருக்கான்... திருடன் காலை டிபனுக்குக் கஷ்டப்பட வேண்டாம்னு நெனைச்சிருப்பான் போலிருக்குனு நான் நினைச்சுக்கிட்டேன். 

அன்னிக்கு ரொம்பவே மனசு உடைஞ்சுபோயி டென்ஷனாயிட்டேன். அப்போதான் என்னோட நண்பர் ராஜா ஞாபகம் வந்துச்சு. அவர் அப்போ ஆவின்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் “என் ரூம்ல தங்கிக்கலாம். ஆனா, தொழில்னு ஏதாவது செஞ்சாத்தான் நல்லா இருக்கும்”னார். செகண்ட் ஹேண்ட்ல பழைய ட்ரை சைக்கிள் ஒண்ணை வாங்கிக் கொடுத்தார். அந்தத் தள்ளுவண்டியில காய்கறி வியாபாரம் பண்ண ஆரம்பிச்சேன். 

தள்ளுவண்டியை நாம ஒரு பக்கம் இழுத்தோம்னா, அதுபாட்டுல அது ஒரு பக்கம் போகும். அதுல கிடைக்கிற லாபக் காசை வெச்சுக்கிட்டு வண்டியோட சக்கரம், ட்யூப், டயரையெல்லாம் ஒண்ணு ஒண்ணா மாத்தி, கிட்டத்தட்ட புது வண்டியாக மாத்திட்டேன். ஆனா, ஒருநாள் அந்த வண்டியை யாரோ தள்ளிக்கிட்டுப் போயிட்டான். 

என் ஃப்ரெண்ட் ராஜாவுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். அப்போல்லாம் ஒரு ரூபாய் காயின் போட்டுத்தான் போன் பேச முடியும். `நமக்கு வாழ்வாதாரமா இருக்கிற ஒரு பொருளை ஒருத்தன் திருடிக்கிட்டு போறான்னா அவன் கஷ்டம் என்னவோ?’னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். 

‘1,600 ரூபா ட்ரைசைக்கிள் காணாமல் போனதைச் சிரிச்சிக்கிட்ட சொல்ற ஆள் நீதான்”னு சொன்னான்.  

என்ன செய்ய... நடந்து முடிஞ்சதை நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டே இருந்தா, அடுத்தகட்டத்துக்குப் போக முடியாது. 15 வருஷமா காய்கறி வியாபாரம் செஞ்சதுல இந்த மாதிரி மூணுமுறை ட்ரைசைக்கிள் காணாமப் போச்சு. ரோட்டுல நிறுத்திவெச்சிருக்கிற தள்ளுவண்டியைத் தள்ளிக்கிட்டே போயிட்டாங்க. இதுக்கிடையில எனக்கும் பொண்ணு தர்றேன்னு ஒரு குடும்பத்துல சொன்னாங்க. வீட்லயோ ரொம்பத் தொல்லை பண்ணினாங்க. 

நான் நேரா பொண்ணு வீட்டுக்குப்போயி, 'இங்க பாருங்க... நான் பெருசால்லாம் ஒண்ணும் சம்பாதிக்கலை. இன்னும் வீடு வாசல்லாம் எதுவும் வாங்கலை. உங்கப் பொண்ணைக் கொடுத்தீங்கன்னா கண்ணு கலங்காம காலத்துக்கும் பார்த்துக்குவேன். அது ஒண்ணுதான் என்னால முடியும். வேற எதிர்பார்ப்புகள் இருந்துச்சுனா நீங்களே வேற இடம் பார்த்துக்கங்க’னு சொல்லிட்டு வந்துட்டேன். நான் எப்பவுமே வெளிப்படையா எதையும் சொல்லிடுற டைப். அந்த குணமே அவங்களுக்குப் பிடிச்சுப்போச்சு. அப்புறம் கல்யாணம் ஆகி வாழ்க்கை ஓடிக்கிட்டே இருந்துச்சு. 

மக்கள் டி.வி-யில வாய்ப்புக் கிடைச்சுது அதுக்கப்புறம் 'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' நிகழ்ச்சி மூலமா சன் டி.வி-க்கு வந்தேன். இப்போ உலகம் முழுக்கப் பேர் கிடைச்சு, இன்னிக்கு ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். பழசை மறக்காம இருக்கணும்ங்கிறதுக்காக, இப்பவும் சிறு வியாபாரம் செய்ய 10  ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுற ஏழைகளுக்கு, கஷ்டப்படுறவங்களுக்கு எங்களோட http://annachiikt.com/ வெப்சைட் மூலமா உதவி பண்றேன்’’ என்றவரிடம், 

“இப்போ வசதியான வாழ்க்கை வாழ்றீங்க. உங்களுக்கு டென்ஷன், ஸ்ட்ரெஸ்னு ஏற்பட்டா என்ன பண்ணுவீங்க?’’ என்று கேட்டோம். 

“மனசுக்குப் பிடிக்காத விஷயம் எது நடந்தாலும், எரிச்சல் கோபமெல்லாம் வர்றது இயல்புதான். ஆனா, அந்தக் கோபத்தை ரொம்ப நேரத்துக்குப் பத்திரப்படுத்த மாட்டேன். விஷயத்தைக் கொஞ்ச நேரத்துக்கு ஆறப்போடுவேன். உதாரணமா ஒரு நண்பர் மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுனார்னா அவரோடு மகிழ்ச்சியா இருந்த பழைய நாள்களை நெனைச்சு அதை மறந்துடுவேன். சில விஷயங்கள்ல நாம நெனைச்சது நெனைச்சபடி நடந்தா சரி. நடக்கலைனா, கடவுள் நமக்கு விதிச்சது அவ்வளவுதான்னுட்டு போயிக்கிட்டே இருப்பேன். 

பொதுவா சொந்த விஷயங்கள்ல பெருசா டென்ஷன் ஆகிறதில்ல. ஆனா, சினிமாத்துறை அப்படியில்லை... நம்மை எப்பவும் டென்ஷனோடவே வைத்திருக்கும் ஒரு துறை. இதே மாதிரி நம்மை டென்ஷனாக்கும் எத்தனையோ விஷயங்கள் உண்டு... பொது இடங்களில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லை. தெருவுக்கு தெரு ஒயின்ஷாப் இருக்கு. ஓடுற ஆறு, வாய்க்காலை எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள்தான் போயி அடைச்சிக்குது. அரசாங்கம் பிளாஸ்டிக்கைத் தடை பண்ணினாலே போதும். ஆனா, அதைச் செய்ய மாட்டேங்குது. இப்படி எவ்வளவோ இருக்கு. நம்மளால என்ன செய்ய முடியுமோ அதை செய்யணும். முடியலையா..? என் மனப்பான்மையை ஃபாலோ பண்ணணும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், கொஞ்ச நேரத்துக்கு இல்லைன்னா கொஞ்ச நாளைக்கு ‘ஆறப்போடு’ டெக்னிக். அதுதான் என்னை ஸ்ட்ரெஸ்ஸுலயிருந்து தள்ளியேவெச்சிருக்கு” என்கிறார் அண்ணாச்சி புன்னகை மாறாமல்.

அடுத்த கட்டுரைக்கு