Published:Updated:

குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம் சரி... அவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டோமா? #ChildMentalHealth

குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம் சரி... அவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டோமா? #ChildMentalHealth
குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம் சரி... அவர்களின் உளவியலைப் புரிந்துகொண்டோமா? #ChildMentalHealth

ப்பா, அம்மா, வீடு, பள்ளி என்று இருந்த குழந்தைகளின் உலகம், இன்றைக்குப் பரந்து விரிந்துவிட்டது. 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த சூழல் இப்போது இல்லை. ஐந்து வயது குழந்தைகூட கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்போன்களை லாகவமாகப் பயன்படுத்துகிறது. அவர்களுக்குச் சமூகத் தொடர்பு என்பது வெறும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மட்டும்தான். பெற்றோர்களுடன்கூட வாட்ஸ்அப்பில் பேசுவதே அதிகம்.

இது நாகரிக மாற்றம் என்று நம்மில் சிலர் மார்த்தட்டிக்கொள்கிறோம். விளைவோ, விபரீதமாக இருக்கிறது. முப்பது வயதில் வரவேண்டிய மன உளைச்சல், மனஅழுத்தம் எல்லாம் குழந்தை பருவத்திலேயே தொற்றிக்கொள்கின்றன. காலையில் எழுந்ததும் பாட்டு கிளாஸ் அல்லது கராத்தே கிளாஸ், பள்ளி முடிந்ததும் ட்யூஷன், விடுமுறை நாள்களில் இதரப் பயிற்சி வகுப்புகள்... இப்படி ஒவ்வொரு குழந்தையையும், எதிர்காலத்தில் வருமானம் ஈட்டித்தரும் எந்திரங்களாகவே உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலால் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன, அவற்றை எப்படித் தீர்க்கலாம் என்பது குறித்து மனநல மருத்துவர் அசோகன்

 விவரிக்கிறார்...

"இலக்கை நோக்கி ஓடும் இயந்திர வாழ்க்கை குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிட்டதுதான் இந்த மன பலகீனங்களுக்கும், மனஅழுத்தம், வன்முறைப் போக்கு, சுயநல எண்ணம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. எதிர்காலப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு வழிகாட்டுவதையும், மனதளவில் தைரியம் கொடுத்து அவர்களை உருவாக்குவதையும் குழந்தை பருவத்திலேயே தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்க்கை சிறக்கும்.   

குழந்தை பருவத்தில் முக்கியமான மூன்று நிலைகள் உள்ளன. ஒன்று, எதை எப்படிப் பார்க்கிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை. அதன் பிறகு அந்த விஷயத்தைப் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்க்கும் நிலை. மூன்றாவது, அந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கும் நிலை. 

முதலாவது நிலை மனப்பான்மையில், அவர்கள் அதிக நேரத்தைச் செலவிடுவது பெற்றோர்களுடன் மட்டும்தான். குழந்தை, அவர்களையே ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு, அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுகொள்ளும். அவர்கள் நடவடிக்கைகளில் இருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ளும். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தை, அந்தப் பருவத்தில் பார்க்கிற, கேட்கிற விஷயத்தை அப்படியே நம்பி உள்வாங்கிவிடும்.  உதாரணமாக, இருட்டில் பேய் இருக்கும் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால், அதை அப்படியே நம்பி, இருட்டைப் பார்க்கும்பொதெல்லாம் குழந்தைக்குப் பேய் நினைவு மட்டும்தான் வரும். எனவே, குழந்தைகளுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய தேவையான விஷயங்களைத்தான் கற்றுத்தர வேண்டும். 

இரண்டாவது நிலையில், பள்ளி செல்வதில் ஆரம்பித்து குழந்தைகளுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைத்துவிடும். அந்தக் காலங்களில் ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் வழிகாட்டியாகிறார்கள். பள்ளியில்தான் மற்ற விஷயங்களைக் கற்றுக்கொள்கிறது குழந்தை. இன்றைய கல்விக்கூடங்களும் கல்வி முறையும் ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்து, அதை அப்படியே தேர்வில் ஒப்புவிப்பதை மட்டுமே கற்றுத்தருகின்றன. `பள்ளிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில், நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மட்டும் பாராட்டி, சீராட்டப்படுவார்கள். மற்ற குழந்தைகளிடம் பல்வேறு திறன்கள் இருந்தாலும், அதை வெளிக்கொண்டுவர முடியாமல் ஒதுக்கப்படுவார்கள். இதனால், நன்றாகப் படிக்கும் குழந்தையின் பார்வையில், மற்ற குழந்தை குறைத்து மதிப்பிடப்படும். குறைந்த கற்றல் திறன் உள்ள குழந்தைகளுக்கு மனதில் மனஅழுத்தமும், தாழ்வு மனப்பான்மையும் குடிகொள்ளும். இதனால், தனக்குள்ளே இருக்கும் திறமைகள் இனம் காணப்படாமல் மழுங்கடிக்கப்படும். இதனால் சமூகத்தின் மீது கோபமும் வெறுப்பும் உண்டாகும். சில நேரங்களில் அதிக மனஉளைச்சலால் மாணவர்களுக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்படுவதற்கும் இவையெல்லாம் காரணமாகின்றன. 
ஆசிரியர்கள் மட்டுமல்ல... பெற்றோர்களும் குழந்தைகளுக்கு வெற்றி, தோல்வி என்பது மட்டுமே வாழ்க்கை அல்ல. அவை நாம் வாழ்க்கையில் படிக்கும் பாடங்கள் என்பதை அழுத்தமாக உணர்த்த வேண்டும். வெற்றியைவிடத் தோல்வி தரும் அனுபவம்தான் எதிர்கால வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். பள்ளிகள் வெறும் பாடப்புத்தகங்களைக் கற்கும் கல்விக்கூடங்களாக மட்டுமல்லாமல், விளையாட்டு, பாலியல் கல்வி, வாழ்க்கைக் கல்வி... என வாழ்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளைக் கூண்டுக்கிளியாக வளர்க்கக் கூடாது. அனைத்து சுக, துக்க நிகழ்வுகளுக்கும் அவர்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். சின்னச் சந்தோஷங்களை அனுபவிக்கவும், சோக நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்கவும் கற்றுத்தர வேண்டும். ஒரு துக்க நிகழ்வுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லும்போதுதான் இறந்தவரின் குடும்பத்தினரின் பெரும் இழப்பையும், அதை அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதையும் குழந்தைக்குப் புரியவைக்க முடியும். இதன் மூலம் குழந்தைக்குச் சமூகத்தின் மீதுள்ள பற்றும் தொடர்பும் அதிகரிக்கும். சமூகம், வெளியாட்களுடன் ஓர் உறவு ஏற்படும். இல்லையென்றால், அவர்கள் சுயநலக்காரர்களாக உருவாக வழிவகுத்துவிடும். குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவது, சமூக வலைதளங்களை முறையாகவும், தேவையானபோதும் பயன்படுத்துவது... எனக் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். அது, பெற்றோர்களின் மேற்பார்வையுடன்கூடிய சுந்திரமாக இருக்க வேண்டும்.  

இந்த இரண்டு மனநிலையும் சரியாக இருந்தால், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான முடிவுகளை, தாங்களே எடுக்கும் அளவுக்கு உருமாறிவிடுவார்கள். நம் எதிர்காலச் சந்ததியினருக்கு பணம், சொத்து சேர்த்துவைப்பதைவிட, சரியாக வாழக் கற்றுக்கொடுப்பதுதான் முக்கியமானது. அதுதான் குழந்தைகளின் மனோபலத்தை அதிகரிக்கும்; அவர்களின் வாழ்க்கை சிறக்க உதவும்.  குழந்தைகள் தினமான இன்று எதிர்காலச் சந்தியினர் எப்படி வாழக் கூடாது என்பதைக் கற்று தராமல், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்று தருவோம்’’ என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.