Published:Updated:

நலம் வாழ 4 வழிகள்

நலம் வாழ 4 வழிகள்

கடி மணக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். இவரது எழுத்துக்கள், தாய் மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து, பல்வேறு நாடுகள், கலாசாரங்களில் வாழ நேர்ந்த தமிழ் மனதின் உலகக் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவை. சிறுகதையோ கட்டுரையோ, அ.முத்துலிங்கத்தின் எழுத்தை சிறு புன்னகைகூட இல்லாமல் கடப்பது கடினம். தன்னுடைய அபாரமான நகைச்சுவை உணர்வாலும் சுவாரஸ்யமான எழுத்து நடையாலும் வாசகர்களை வசீகரிப்பவர்.

நலம் வாழ 4 வழிகள்

சூழலுக்கு ஏற்ற பயிற்சி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உலகத்திலேயே இரண்டாவது பெரிய தேசம் கனடா. வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்தாலும் கனடா முழுவதையும் சுற்றிப் பார்க்க முடியாது. அபூர்வமான இயற்கைக் காட்சிகள். நான்கு பருவங்கள் இருக்கிறபடியால், நான்கு விதமான நிலக்காட்சிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு. இப்படி இயற்கை சூழ்ந்த பகுதியில் தினமும் காலையும் மாலையும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகவைத்திருக்கிறேன். என் வீட்டுக்கு முன்பு பெரிய பூங்கா இருப்பதால், வசதியாக இருக்கிறது. கனடாவில் எல்லா மாதமும் நடைப்பயிற்சி செய்ய முடியாது. ஐந்து மாதங்கள் செய்யலாம். பிறகு, குளிர் காலம் தொடங்கிவிடும். இதனால், நடைப்பயிற்சியையும் வீட்டுக்குள் இயந்திரத்தில் செய்யவேண்டி இருக்கிறது. என்னுடன் நடைப்பயிற்சிக்கு வரும் ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு கைகளில் நான்கு விரல்களும் வெட்டப்பட்டிருக்கும். பனிக்காலத்தில் கையுறை அணியாமல் வெளியே போய், விரல்களில் அதிவிறைப்பு ஏற்பட்டு செயலிழந்ததால், அறுவைசிகிச்சை செய்யநேர்ந்தது. நாட்டின் காலநிலைக்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யப் பழக வேண்டியது முக்கியம். இதை கனடா வந்த சில மாதங்களிலேயே நான் தெரிந்துகொண்டேன்.

உற்சாகம் உங்கள் கையில்!

ஏதோ ஒரு வகையில் நம் மனதை அமைதியிழக்கச் செய்யும் சம்பவம் ஒன்று தினமும் நடந்தபடியே இருக்கும். அதைத் தாண்டிப் போவதற்கு அவரவர் வழிகளை அவரவரே கண்டுபிடிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா வழிமுறைகளும் பொருந்தாது. சிலர் தியானம் செய்வார்கள். சிலருக்கு உடற்பயிற்சி. வேறு சிலருக்கு இசை கேட்டால், அமைதி வந்துவிடும். நான் அமைதி இழக்க நேரிடும்போது, மும்முரமாக எழுதத் தொடங்கிவிடுவேன். இதன் மூலம் மன உளைச்சலில் இருந்து மீண்டுவிடுவேன். தவிர, நல்ல நாடகங்கள், நல்ல சினிமா, நண்பர்கள், உறவினர்கள் என இனிமையான தருணங்களை உருவாக்கிக்கொள்வேன். இன்று உலக எழுத்தாளர்களில் அதிசெல்வந்தர் ஜே.கே.ரோலிங்க்ஸ். இவருடைய சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் மேல் இருக்கும். ஒரு காலத்தில் அவருக்கு சாப்பிட உணவுகூட இல்லை. தட்டச்சு நாடா வாங்கினால், உணவுக்குக் காசு இருக்காது. அந்தக் காசில் சாப்பிட்டால், நாடா வாங்க முடியாமல் எழுத்து தடைபடும். அப்படியான வறுமை சூழ்நிலையிலும் அவர் எழுதிக் குவித்தார். மன அமைதிக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்தாலே மன அழுத்தம் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. 

நலம் வாழ 4 வழிகள்

ஆறு வேளை அளவான உணவு!

சிறுவயதில் பழகியது வயிறு நிறையும் மட்டும் சாப்பிடுவது. நிறைந்ததும் நிறுத்துவது. எந்த உணவு உடம்புக்கு நல்லது, எதைத் தவிர்க்க வேண்டும், என்ன அளவு, எந்த நேரம் உண்ண வேண்டும் என்றெல்லாம் தெரியாது. உணவு ருசியாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமாக இருந்தது. 20 வருடங்களுக்கு முன்பு உணவியல் நிபுணர் ஒருவரைச் சந்தித்ததிலிருந்து அவர் சொன்ன அறிவுரையைக் கடைப்பிடிக்கிறேன்.

• வயிறு பாதி நிரம்பும்போதே நிறுத்திவிட வேண்டும்.

• மாவுச்சத்து, புரதச்சத்து, மரக்கறி மூன்றும் அளவோடு இருக்க வேண்டும்.

• அளவான உணவை, ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்

இந்த உணவுப் பழக்கத்தால் எடையையும் சீராகப் பராமரிக்க முடிகிறது. சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது.

உடலை அறிவோம்!

இளம்வயதில் சின்னச்சின்னப் பிரச்னைகள் கைவைத்தியத்திலேயே குணமானது உண்மை. ஆனால், கனடா போன்ற அயல் நாடுகளில் வீட்டு வைத்தியம் செய்யும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஒருமுறை எனக்குத் தொண்டையில் பிரச்னை வந்தபோது, கைவைத்தியம் செய்யப்போய், பேச்சு வராமல் நின்றுவிட்டது. டாக்டரிடம் போனபோது, அவர் என்ன மூலிகை சாப்பிட்டீர்கள் என்று கேட்க, எனக்கு அதன் ஆங்கிலப் பெயர் தெரியவில்லை. இதனால், அவரால் உடனடியாகத் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் போனது. எப்படியோ இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு டாக்டர் குணமாக்கிவிட்டார். சில நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கு சில மூலிகைகள் ஒத்துக்கொள்ளாது என நினைக்கிறேன். நோய் வந்தால் செய்யவேண்டிய மருத்துவக் குறிப்புகளைத் தெரிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதைவிட, சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல் இப்படி உடலின் வெவ்வேறு உறுப்புகள் என்ன வேலை செய்கின்றன, உடல் இயங்குவது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டால், மருத்துவர் உடலில் உள்ள குறைபாடு பற்றி விளக்கும்போது புரிந்துகொள்ளவும் அதற்கேற்ப உடலைப் பராமரிக்கவும் உதவும். ஐபோனை கண்டுபிடித்து, உலகத்துத் தகவல்களை விரல்நுனியில் கிடைக்கவைத்த ஸ்டீவ் ஜாப்ஸிடம் மருத்துவர் `உங்கள் கணையம் பழுதாகிவிட்டது’ என்று சொன்னபோது, அவர் ‘கணையம் என்றால் என்ன?’ என்று கேட்டாராம். உடல் குறித்து எவ்வளவு அறிவோடு, விழிப்புஉணர்வோடு இருக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆரோக்கியத் தோடும் நீண்ட ஆயுளோடும் இருப்போம்.  

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

- இளங்கோ கிருஷ்ணன்