Published:Updated:

'டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி! - `கிரேஸி’ மோகன் கூறும் ஸ்ட்ரெஸ் ரிலீஃப் டெக்னிக்! #LetsRelieveStress

'டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி! - `கிரேஸி’ மோகன் கூறும் ஸ்ட்ரெஸ் ரிலீஃப் டெக்னிக்! #LetsRelieveStress
'டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி! - `கிரேஸி’ மோகன் கூறும் ஸ்ட்ரெஸ் ரிலீஃப் டெக்னிக்! #LetsRelieveStress

கிரேஸி மோகன் தமிழ் நாடக உலகில் தவிர்க்க முடியாத பெயர்.  அவரது 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகம் மட்டுமே தொள்ளாயிரத்துக்கும் அதிகமான மேடைகளைக் கண்டு ஆயிரமாவது முறையை நெருங்கவிருக்கிறது. 'டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி! நத்திங் இஸ் ஸ்ட்ரெஸ்ஃபுல் எக்செப்ட் டெத் அண்ட் டேக்ஸ்! எதுவுமே சீரியஸ் கிடையாது. ஸ்ட்ரெஸ் இல்லாம நாம இருக்கணும்னா, நாம அகந்தை இல்லாம இருக்கணும். எந்த விஷயம் செய்தாலும், அதுல நமக்குத் திருப்தி கிடைக்கும் வரை அதைச் சரியா செய்யணும். அடுத்தவங்களுக்காக எதையும் செய்யக் கூடாது. 

எத்தனை சாதனை பண்ணினாலும், சிம்ப்ளி சூப்பர்பா இருக்கணும். அதாவது சிம்பிளா இருக்கணும். அப்படி இருக்கும்போது நமக்கு மேலும் புகழ் கிடைக்கும்.'சிம்பிளி சூப்பர்ப்'னுதான் சொல்றோம். 'காம்ப்ளிக்கேட்டட்லி சூப்பர்பு'னு யாரையும் சொல்றதில்லை. அந்த மாதிரி சிம்பிளா, சூப்பர்பா இருந்தவர் மகா சுவாமிகள் பரமாச்சார்யார். அவர் கிணற்றங்கரையிலேயே சாதாரணமா உட்கார்ந்து இருப்பார். அரியக்குடிராமானுஜம் மாதிரி பெரிய ஆட்களையெல்லாம் அங்குதான் சந்திச்சார். அவர் நினைச்சிருந்தா ஏ.சி அறையில இருந்திருக்கலாம். அதனாலதான் அவரைப்பத்தி இப்பவும் பேசுறோம். நிறைய தகவல்கள் வந்துக்கிட்டு இருக்கு.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், எனக்கு அகந்தையும் பிடிக்காது; `கார’மும் பிடிக்காது. அகங்`காரம்’ மம`காரம்’னு எந்தக் காரமும் எனக்குப் பிடிக்காது. சாப்பிடுறதுலயே எனக்கு ஸ்வீட்தான் பிடிக்கும். காரம் பிடிக்காது. அதனால எந்தப் பரி`காரமும்’ நான் செய்யவேண்டியதில்லை. ஸ்வீட்ஸ்தான் பிடிக்கும். அம்மா எனக்கு ஸ்வீட்ஸ் கொடுத்தே பழக்கிட்டாங்க. 

'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.'லகூட ஒரு டயாலாக் வரும். 'தயிர்ல சர்க்கரை போட்டு சாப்பிடு. பரீட்சை நல்லா எழுதுவே'னு ஒரு டயலாக் வரும். இது எங்க அம்மாகிட்ட இருந்து வந்தது. இப்பவும் தயிர் சாதம், மோர் சாதத்துக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இல்லைனா ரவா கேசரி தொட்டுக்கிட்டுத்தான் சாப்பிடுவேன். எதிர்ல உட்கார்ந்து சாப்பிடுறவங்க இதைப் பார்த்தா, சாப்பிடவே முடியாது. 

சுகர் டெஸ்ட் எடுத்துப் பார்த்து அதுல மயக்கம்போட்டு விழுறதைவிட, மயக்கம்போட்டு விழுந்ததுக்கப்புறம் டெஸ்ட் எடுத்துக்கலாமேனு சொல்லுவேன். இப்போ வரைக்கும் எனக்கு சுகர் இல்லை என்றவரிடம், 'இதுக்காக எக்சர்சைஸ் எதுவும் பண்றீங்களா'எனக் கேட்டோம். ``பெருசா இதுக்காக எதுவும் பண்றதில்லை. ஆரோக்கியமா இருக்கிறதுக்கு பதில் அதிலேயே இருக்கு. 'யோக்கியமா இருந்தாலே ஆரோக்கியமா' இருக்கலாம்.

முன்னல்லாம் பீச்சுக்கு வாக்கிங் போவேன். சுனாமி வந்ததுக்கப்புறம் அங்கே போறது இல்லை. ஸ்ட்ரீட்ல வாக்கிங் போலாம்னா நாய்கள் தொந்தரவு. சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயம். அதுங்களைப் பார்த்தாலே எனக்கு ஸ்ட்ரெஸ் வந்துடும். அதுக்கப்புறம் மொட்டை மாடியில வாக்கிங் போனேன். காக்கா வந்து கொத்த ஆரம்பிச்சுடுச்சு. ஹெல்மெட் போட்டுக்கிட்டு வாக்கிங் போன ஒரே ஆள் நான்தான். இப்போ வீட்டுக்குள்ளயே வாக்கிங் போறேன். 

வயித்துல தொப்பை விழுந்துச்சுனு வெச்சுக்கங்க ஜிம்ல போய் குறைச்சுடலாம். ஆனா, மனசுல தொப்பை விழுந்துச்சுனு வெச்சுக்கங்க... அதை எங்கே போயும் குறைக்க முடியாது. இதைச் சொன்னது கமல்ஹாசன். மனசுல தொப்பை விழக் கூடாது.

நான் எதுக்குமே ரொம்ப டென்ஷனாக மாட்டேன். எதையுமே ஸ்போர்ட்டிவாக எடுத்துக்குவேன். வேலைதான் ஸ்ட்ரெஸ்ஸுக்குச் சிறந்த மருந்து. ஒர்க் நெவர் கில்ஸ் யூ. 

ஒரு சமயம் கமல் சார் டயலாக் எழுதச் சொல்லியிருந்தார். அன்னிக்குப் பார்த்து நல்லா தூக்கம் வந்துடுச்சு. நல்லா தூங்கிட்டேன். காலையில என்ன சொல்லப் போறாரோனு நினைச்சேன். ஆனா, அவர் காலையில அந்த சீன் வேண்டாம். நான் வேறொரு வேலையா இப்போ போறேன். அப்புறம் வெச்சிக்கலாம்னுட்டார். 

அதைவெச்சுதான் பாண்டியராஜன் நடிச்ச 'கதாநாயகன்'  படத்துல  நான் ஒரு டயலாக் எழுதியிருப்பேன். கதைப்படி 'பசி' நாராயணன் துபாய் அனுப்புறதா சொல்லி பாண்டியராஜனை ஏமாத்தி, கேரளாவுக்கு அனுப்பிவெச்சிடுவார். 'இப்போ தூங்கு. தூங்கி எழுந்தா துபாய்'னு சொல்லுவார். எங்க நாடகக்குழு நண்பர்கள் மத்தியில, இந்த டயலாக் ரொம்ப ஹிட். எதுனா பிரச்னைனா 'தூங்கி எழுந்தா துபாய்' னு சொல்லுவோம். ஆனா, அப்படித் தூங்கும்போது பிரச்னையை நினைக்காமத் தூங்கணும். அதனால எந்தப் பிரச்னையா இருந்தாலும், ஒரு தூக்கத்தைப் போட்டா சரியாயிடும். 

இன்னொரு முக்கியமான விஷயம் நான் என் வீட்டுலதான் அதிகமான நேரம் ஸ்பெண்ட் பண்ணுவேன். வீட்டைவிட்டு வெளியிலயே போறதில்லை. கடனும் வாங்க மாட்டேன். யாருக்கும் கடனும் கொடுக்க மாட்டேன். என் வாழ்க்கையில் நான் பட்ட கடன், 'விகடன்'  மட்டும்தான்.

எந்த செக், எந்தப் பணம் கிடைச்சாலும், அதை நான் எங்க அப்பாகிட்டேயே கொடுத்துடுவேன். அவர் அதைவெச்சு என்ன நிர்வாகம் பண்ணணுமோ பண்ணுவார். என்கிட்ட எந்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்டும் கிடையாது. ஒன்லி அம்பிளிக்கல் கார்டு (தொப்புள் கொடி) மட்டும்தான். வீட்டுச் சாப்பாடு, வீட்டுச் சூழல் இதெல்லாம் நம்மை ஸ்ட்ரெஸ் இல்லாம வெச்சிக்கும்.’’  
``சரி சார்,  ஒரு நாளை நீங்க எப்படி சிஸ்டம் பண்ணிவெச்சிருக்கீங்க. காலையில எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க’’ என்று கேட்டோம்.  

'சார், நான் ஒரு ராப்பிசாசு. டயலாக்  எழுதுறதெல்லாம் பெரும்பாலும் நைட்லதான். ராத்திரி ரெண்டரை மூணு மணி வரைக்கும் எழுதுவேன். காலையில 9 மணிக்குதான் எழுந்திருப்பேன். ராத்திரி எத்தனை மணிக்குப் படுத்தாலும், காலையில் 9 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். என்னைப் பொறுத்தவரை காலைக்கடன் எல்லாம் கிடையாது; மாலைக் கடன்தான்.  

லேட்டா எழுந்திருக்கிறதால குளிச்சு முடிச்சுட்டு, நேரா மார்னிங் சாப்பாடுதான். அப்புறம் வெளியில கதை விவாதம் அல்லது வேற வேலை இருந்தா போயிட்டு வந்தா, மதியம் எப்பவும் டிபன்தான். ராத்திரி மோர் சாதம் இப்படி ஏதாவது சாப்பிடுவேன்... அவ்வளவுதான். இடையில தேவைபட்டா பிளாக் காபி. அப்புறம் இருக்கவே இருக்கு வெற்றிலை, வறுத்த சீவல்... இதுவும் ஸ்வீட்டாதான் இருக்கும். இதை மட்டும் அப்பப்போ போட்டுக்குவேன். 

என்னைப் பொறுத்தவரை போனை பேசுறதுக்கு மட்டும்தான் பயன்படுத்துவேன். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கமெல்லாம் தலைவெச்சுக்கூட படுக்க மாட்டேன். என் ஃபிரெண்ட் காந்தன்தான் அப்டேட் பண்ணுவார். அதான் டென்ஷன் இல்லாம இருக்கேன்.   

'டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி! "என்று சொல்லிக்கொண்டே வெற்றிலை சீவல் போட ஆரம்பித்துவிட்டார்.