Published:Updated:

5 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை வதைக்கும் மன இறுக்கம்! - மீள்வது எப்படி? #Datastory

5 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை வதைக்கும் மன இறுக்கம்! - மீள்வது எப்படி?  #Datastory
5 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை வதைக்கும் மன இறுக்கம்! - மீள்வது எப்படி? #Datastory

ன்றைய இளம் தலைமுறையை வதைக்கும் பிரச்னைகளில், பிரதானமானது, மனஅழுத்தம். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பதற்றமான பணிச்சூழல் காரணமாக பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். மன அழுத்தம் ஒரு நோய் என்ற விழிப்புஉணர்வே மக்கள் மத்தியில் இல்லை. 'தொடர்ச்சியான மன அழுத்தமானது, ஒரு கட்டத்தில் மன இறுக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்' என்று அச்சமூட்டுகிறார்கள் மருத்துவர்கள். 

மன அழுத்தம் ஏற்படுவதன் பின்னணியில், அழுத்தமான ஓர் ஏமாற்றமோ, வலியோ, கவலையோ இருக்கக்கூடும். கால ஓட்டத்தில் இந்த மன அழுத்தம் தாமாகவே சரியாகிவிடும். ஆனால், சில நேரங்களில் மனம் இறுக்கமாக இருக்கும்; இதுதான் காரணம் எனச் சரியாக சுட்டிக்காட்ட முடியாது. சம்பந்தமே இல்லாமல், பழைய விஷயங்களை ஆராய்ந்து, அதுவா இதுவா என்று காரணத்தைத் தேடி குழம்புவார்கள்.  சந்திக்கும் ஒவ்வொரு சூழலும், மேலும் மனதை இறுக்கமாக்கும். இதுதான் மன இறுக்கத்தின் அறிகுறிகள்.  

மன இறுக்கம் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல ஆலோசகர் குறிஞ்சி.

"இன்றைய வாழ்க்கைமுறை மிகவும் பரபரப்பாக இருக்கிறது. காரணமே இல்லாமல் பதற்றம் மனதைச் சூழ்ந்து கொள்கிறது. அதனால் பெரும்பாலானோர் மன இறுக்கத்துக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தத்துக்குக் காரணம் தெரியும். மன இறுக்கத்துக்குக் காரணத்தைக் கண்டறிய முடியாது. எப்போதோ இழந்த விஷயங்கள், பிரிந்த உறவுகள், விட்டுப்போன வேலைவாய்ப்பு என ஏதேதோ ஓட்டங்கள் மனதைப் பீடித்திருக்கும். மன இறுக்கத்திலிருந்து மீள்வது என்பது ஒவ்வொருவரின் மன வலிமையைப் பொறுத்தது. 

ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் சில காலங்களுக்குப் பிறகு அதிலிருந்து எப்படி மீள்வது எனத் தேடத்தொடங்குவர். 'புதிதாக ஒரு வாழ்வை முன்னெடுக்க வேண்டும்' என்பது போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு உதிக்கும். அப்போது கிடைக்கும் உறவுகள் மற்றும் தோழமைகளின் துணையுடன் அழுத்தத்திலிருந்து எளிதில் வெளியே வந்துவிடுவர். ஆனால், மன இறுக்கத்துக்கு ஆளானோர் பலநாள்களுக்கு அந்தப் பிரச்னையோடு போராடுவர். அன்றாடச் செயல்களை ஈடுபாடின்றி, மேலோட்டமாகச் செய்வார்கள். பலர் சூழ இருந்தாலும், தனிமையை உணர்வர். 

மன இறுக்க அறிகுறிகள்

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களால் யாரோடும் சகஜமாகப் பேச முடியாது. எந்த விஷயமும் மகிழ்ச்சி தராது. மனநிலை குறுகிவிடும். எதையும் நேசிக்க மாட்டார்கள். எல்லா வேலைகளும் பாரமாகத் தோன்றும். சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள். தன்னம்பிக்கை குறைந்துவிடும். வெறுப்பு அதிகரிக்கும். சட்டென்று கோபமடைவார்கள். அதே வேகத்தில் மனமுடைந்து போய்விடுவார்கள். தூக்கமின்மை அல்லது அதிக நேரம் தூங்குவது, உடல் எடை குறைவது, யோசிக்காமல் அல்லது கவனக்குறைவாக இருப்பது, முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவது போன்றவையும் மன இறுக்கத்தின் அறிகுறிகளாகும். இவை அனைத்தும் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடரும்பட்சத்தில், மனநல ஆலோசகரை உடனடியாக அணுக வேண்டும்.

எப்படித் தப்பிப்பது?

நண்பர்களிடம் பிரச்னையை ஷேர் செய்வது, வீட்டில் உள்ளவர்களிடம் நிலையை எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவைப் பெறுவது,  ஆரோக்கியமான விஷயங்களை விவாதிப்பது, வேறு வேலைகளில் கவனம் செலுத்துவது, போதுமான தூக்கம், சரியான நேரத்தில் சரியான உணவு உட்கொள்வது போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகளுக்குப் பிறகும், வெறுப்பான மனநிலை தொடரும் பட்சத்தில், தாமதிக்காமல் மனநல ஆலோசகரை அணுக வேண்டும். 

மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு மருத்துவர்களை நாடுவது பற்றி போதிய விழிப்புஉணர்வு இல்லை. அதனால்தான் மன இறுக்க நோயாளிகள் அதிகரிக்கிறார்கள். மன இறுக்கம் என்பது சமூகம் தொடர்பான நோய். அதனால் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பொறுப்பு மொத்த சமூகத்துக்கும் இருக்கிறது" என்கிறார் குறிஞ்சி. 

உலக சுகாதார அமைப்பு 2015-ல் நடத்திய ஆய்வில், 5 கோடியே 66 லட்சம் இந்தியர்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. தனி மனிதனின் மன நலமே உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் பிரதானமானது. அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!