Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், பூப்பெய்தும் காலம் மிக முக்கியமான பருவம். பூப்பெய்துவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பே, பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, அந்தரங்க உறுப்புகளில் முடி வளர்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும். அப்போதே பூப்பெய்துதலை எதிர்கொள்ள பெண் குழந்தைகளைத் தயார்ப்படுத்த வேண்டியது, பெற்றோரின் மிக முக்கியக் கடமை. பாலியல் கல்வி, ஊட்டச்சத்தான உணவுகளை உண்பது தேவையற்ற உணவுகளைத் தவிர்ப்பது என விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மாதவிலக்கு என்பது, பெண் உடலின் இயல்பான செயல்பாடு. இதைப் பார்த்துப் பயப்படக் கூடாது. அந்த நாட்களில் ஏற்படும் வலி, அதை எதிர்கொள்ள வேண்டிய விதம் போன்றவற்றைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதன் மூலம், பயம் மற்றும் குழப்பம் ஏதும் இன்றி இந்தப் பருவத்தை எளிமையாகக் கடக்கலாம்” என்கிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ரஷிதா பானு.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடிய பிரச்னை வெள்ளைப்படுதல். கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பைவாயில் இருந்து வரும் சுரப்புதான், வெள்ளைப்படுதலாக வெளிப்படுகிறது. மாதவிலக்கு முடிந்த ஏழு நாட்களுக்குப் பிறகு, நிறமற்ற திரவமாக வெள்ளைப்பட ஆரம்பிக்கும். அடுத்த மாதவிலக்கு வரும் முன், இந்த நிறமற்ற திரவம் கொஞ்சம் கெட்டியாகி, வெள்ளையாக வெளிவரத் தொடங்கும்.  இது இயற்கையாகவே நடைபெறும் உடல் மாற்றம். ஆனால், அரிப்பு, எரிச்சல், துர்நாற்றம், வீக்கம், சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றுக்கான காரணத்தைக் கண்டறிந்து, சிகிச்சை பெறுவது மிக முக்கியம். ஒரு சிலர் வெள்ளைப்பட்டாலே நமக்கு ஏதோ நோய் வந்துவிட்டது எனப் பயந்துவிடுகின்றனர். இது தேவையற்ற பயம்” என்கிறார் டாக்டர்.

• பெண்கள் பூப்பெய்தும் வயது என்ன?

• வலியுடன்கூடிய மாதவிலக்குக்கு என்ன தீர்வு?

• வெள்ளைப்படுதல் பிரச்னை ஏன் வருகிறது? தீர்வு என்ன?

• கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்துக்குப் பிறகு செய்ய வேண்டிய பயிற்சிகள் என்னென்ன?

• ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம் என்றால் என்ன?

• மெனோபாஸ் எப்படி எந்த வயதில் வரும்? எது சரியான மெனோபாஸ்?

அன்பு வாசகர்களே! ஆகஸ்ட் 16 முதல் 23-ம் தேதி வரை தினமும், 044-66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், பெண் பூப்பெய்துவது முதல் மெனோபாஸ் வரை ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள், தீர்வுகள் என்னென்ன என்பன பற்றி விரிவாகப் பேசுகிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ரஷிதா பானு.

“கட்டடத்துக்கு செங்கல் போல உடலுக்கு எலும்புகள். இன்றையச் சூழ்நிலையில் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மூட்டு வலியை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், வலி தீவிரமாவதைக் கட்டுப்படுத்த முடியும். மூட்டு வலிக்கு நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. எலும்புகளை இணைக்கும் பகுதியில் உள்ள லிகமென்ட் பலருக்குப் பிரச்னையை ஏற்படுத்திவிடும். ஓடியாடி விளையாடுபவர்களுக்கு மட்டுமின்றி, திடீரென நடப்பவர்களுக்குக்கூட லிகமென்ட் கிழிந்துவிடும். லிகமென்ட் சிறிதாகக் கிழிந்தாலும் பெரும் பிரச்னை பின்னால் வரலாம். எனவே, லிகமென்ட் பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் (Joint replacement surgeon) ஏ.பி.கோவிந்தராஜ்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை எலும்புகளுக்கு மிக முக்கியமானவை. கால்சியம் சத்து குறைவதால், ஆஸ்டியோபொரோசிஸ் மற்றும் ஆஸ்டியோமலேசியா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. கீழ் முதுகு வலி வருவதற்கு மூலக் காரணமே தவறான கோணத்தில் எடையைத் தூக்குவதுதான். கீழ் முதுகு வலி அனைவருக்கும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்னைதான். கீழ் முதுகு  வலி வந்தாலே, எலும்பு வளைந்திருக்குமோ எனப் பீதி அடைய வேண்டாம். வலி இருக்கும் தருணங்களில் கொஞ்சம் ஓய்வு எடுப்பதும், வெந்நீர் வைத்து ஒத்தடம் கொடுப்பதும், தைலம் தேய்ப்பதுமே நல்ல பலன் தரும். தொடர்ந்து வலி இருந்தால், சுய வைத்தியம் செய்வதைத் தவிர்த்து மருத்துவமனையை நாடுவது நல்லது.

கீழ் முதுகில் ஏற்பட்ட வலி காலுக்குப் பரவுகிறது. பாதங்களுக்குப் பரவி, விரல்கள் கறுப்பாக மாறுகிறது எனில், முதுகெலும்புத் தட்டு (டிஸ்க்) நழுவி இருக்கக்கூடும். இதற்கு, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை நோய்கள் கிடையாது. அந்தப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்ந்துபோகும்போது வலி வருவது இயல்பு. முதுகு வலி, கழுத்து வலி வராமல் இருக்க, தவறான கோணத்தில் உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார் டாக்டர்.

• ஆர்த்ரைடிஸ் பிரச்னைக்கு என்ன தீர்வு?

• லிகமென்ட் கிழிந்தால் என்ன செய்வது?

• வயதானவர்கள் தடுக்கி விழாமல் இருக்க என்ன வழி ?

• ஆஸ்டியோபொரோசிஸ், ஆஸ்டியோ மலேசியா என்றால் என்ன?

• கீழ் முதுகுவலியை எப்படித் தடுப்பது?

• எலும்பில் ஏன் காசநோய் வருகிறது?

அன்பு வாசகர்களே!  ஆகஸ்ட் 24-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை 044-66802904 என்ற எண்ணுக்கு போன் செய்தால், எலும்புகளில் ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான சிகிச்சைமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்
ஏ.பி.கோவிந்தராஜ்

- பு.விவேக் ஆனந்த், மினு  படம்: தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு