Published:Updated:

``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்!’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி? #SaveStudents

``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்!’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி? #SaveStudents
``பள்ளி நிர்வாக அழுத்தம், பேரன்டிங் இரண்டிலும் தேவை மாற்றம்!’’ - மாணவர்கள் தற்கொலை தடுப்பது எப்படி? #SaveStudents

`ங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் பிடித்த பருவம் எது?’ இப்படி ஒரு கேள்வி கேட்டால், என்ன சொல்வீர்கள்? நம்மில் பெரும்பாலானோர் பள்ளிப் பருவத்தையும், கல்லூரிக் காலத்தையும்தான் பிடிக்கும் என்று சொல்வோம். பால்ய காலத்தை, அதன் நினைவுகளைப் பற்றி எழுதாத கவிஞர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாணவப் பருவம் இறுக்கமும் மனஅழுத்தமும் நிறைந்ததாக இன்றைக்கு மாறிப்போனதுதான் பரிதாபம். இன்றைய தேதியில் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறவர்கள் மாணவர்கள்தான். அது அதிகமாகும்போது, அவர்கள் தற்கொலை முடிவை கையில் எடுத்துவிடுகிறார்கள் என்பது நாம் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய, கவலைப்படவேண்டிய செய்தி. 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, அதிக தற்கொலை நடக்கும் இந்திய மாநிலங்கள் பட்டியலில், தமிழகத்துக்கு இரண்டாவது இடம். அவர்களில் கோவையில் அருள்செல்வன், வேலூர் மாணவிகள், ஓவியக் கல்லூரி மாணவர் பிரகாஷ், ராகமோனிகா... எனத் தற்கொலையில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாவது அச்சமூட்டுகிறது. `ஆசிரியர் திட்டினார், அடித்தார்’, `அம்மா அப்பாவை அழைத்து வரச் சொல்கிறார்கள்’ என்று ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கும் குறைகள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அவை மட்டுமே ஒரு மாணவனின் தற்கொலையை முடிவு செய்வதில்லை. இவையெல்லாம் பதின்பருவத்தில், பள்ளி வாழ்க்கையில் ஏற்படும் இயல்பான சூழல்கள்தான். அப்படியென்றால், மாணவர்களின் தற்கொலை முடிவுக்கான காரணம்தான் என்ன? இந்தக் கேள்வியைக் கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் சிலரிடம் அப்படியே முன்வைத்தோம். அதற்கு அவர்கள் கூறிய பதில்களும் விளக்கங்களும் இங்கே...

மனித உரிமை ஆர்வலரும் 'தோழமை' அமைப்பைச் சேர்ந்தவருமான தேவநேயனிடம் பேசினோம். ``12 முதல் 19 வயது என்பது, ஒரு குழந்தை வளரிளம் பருவத்துக்குள் நுழையும் காலகட்டம். உடல் மற்றும் மனம் சார்ந்த பல மாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ளும்

பருவம். எது தவறு, எது சரி எனப் புரிந்துகொள்ள அதிகம் சிரமப்படுவார்கள். தன் பக்கம் உள்ள நியாயத்தை மட்டுமே பார்க்கும் மனோபாவம் அதிகரித்து, 'தான்' என்ற அகந்தை இவர்களிடம் அதிகரித்துக் காணப்படும். இதுபோன்ற சூழலில் பெற்றோர் அவர்களோடு அமர்ந்து, நேரம் ஒதுக்கிப் பேச வேண்டும். சூழலை, யதார்த்தத்தை எடுத்துக்கூற வேண்டும். இங்கே சில ஆசிரியர்களும்கூட இயந்திரம்போலத்தான் செயல்படுகிறார்கள். அதற்காக அவர்கள் பக்கம் மட்டும் தவறிருக்கிறது என நினைத்துவிடக் கூடாது. எல்லா தரப்பினரிடமுமே மாற்றம் தேவைப்படுகிறது. இன்றைய தேதியில் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் அமைப்புகள் இது குறித்தெல்லாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். வெறும் பாடத்திட்ட மாற்றங்கள் மட்டும் நல்ல மாணவர்களை உருவாக்கிவிடாது. அதேபோல பாடம் நடத்துவது மட்டுமே ஆசிரியப் பணி அல்ல. ஒரு நல்ல ஆசிரியரை அவருடைய சான்றிதழ்கள் மட்டும் அடையாளம் காட்டுவதில்லை. மாணவர்களிடம் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டியது முக்கியம். மனித வளத்தையும், அடுத்த தலைமுறையையும் உருவாக்கும் பணி அவர்களுடையது. அலட்சியத்தையும் அழுத்தத்தையும் கடந்து செயல்பட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. அதேபோல, ஆகச்சிறந்த மாணவர்களை உருவாக்கும், வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் பல ஆசிரியர்களுக்கு அரசிடமிருந்து சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆசிரியர்களைப் பணிச்சுமையிலிருந்து காப்பாற்றினால் மட்டுமே ஆசிரியர்-மாணவர்கள் உறவு பலம் பெறும். மாணவர்களின் தனித்திறமை, குடும்பச்சூழல், பெற்றோர் பற்றியெல்லாம் ஆசிரியர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் உளவியல் சிக்கல்கள் முடிவுக்கு வரும்’’ என எச்சரிக்கிறார் தேவநேயன்.

`பள்ளிகளில் கவுன்சலிங்குக்கான தேவை அதிகரித்திருக்கிறதா?’ மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவ அரங்கு தலைவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் சற்குணத்திடம் கேட்டோம். ``'பிட் அடிச்சு மாட்டிக்கிட்டேன்’, `மிஸ் அம்மா-அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னாங்க', 'பரீட்சையில ஃபெயில் ஆகிட்டேன்', 'யாருக்குமே என்மேல அக்கறை இல்லை', 'நான் இருக்குறதால எல்லாருக்குமே

கஷ்டம்'... என நீள்கிற மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களைக் கேட்கும்போதே வருத்தமாக இருக்கிறது. மாணவர்களின் மன வலிமை மீதே சந்தேகம் எழுகிறது. அடலசன்ட் வயதுக்குள் நுழையும்போது, மனதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவது இயல்பு. அந்தக் குழப்பங்களைத் தீர்க்காதபட்சத்தில், பயம், கோபம், வன்மம் முதலியவை அவர்களுக்குள் எழும். அதையெல்லாம் வளரவிட்டதன் பலன்தான் தற்கொலை அதிகரித்ததற்கான புள்ளிவிவரம் காட்டும் சோகங்கள். இந்தக் கல்விக்கூடங்கள், பரீட்சையை எதிர்கொள்ளக் கற்றுத்தருகின்றனவே தவிர, பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருவதில்லை. தனியே கவுன்சலிங் வகுப்புக்கு ஏற்பாடு செய்வதைக்காட்டிலும், பாடங்களுக்கிடையே ஆசிரியர்கள்-மாணவர்கள் கலந்துரையாடலை ஏற்படுத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். வாரத்துக்கு ஓரிரு வகுப்பு கவுன்சலிங் செய்வதைவிட, அன்றாடம் பாடம் எடுக்கும்போதே பாடத்தோடு பாடமாக மாணவர்களுக்கு வாழ்க்கையைக் கற்பிக்கும் வித்தையை ஆசிரியர்கள் பயில வேண்டும். அடுத்த தலைமுறையை உருவாக்கப்போகிறோம் என்ற பொறுப்பு உணர்வோடு செயல்பட்டு, மாணவர்கள் வழியிலேயே சென்று, நன்மை தீமைகளை அறிவுறுத்த வேண்டும்" என்கிறார் ரெக்ஸ் சற்குணம்.

அடுத்து பேராசிரியரும் கல்வியாளருமான ரத்தினசபாபதியிடம் பேசினோம். "பேரன்டிங், நிர்வாக அழுத்தம் இரண்டிலும் மாற்றம் வர வேண்டும். பேரன்டிங் மாற்றம் குழந்தைகளையும், நிர்வாக மாற்றம் ஆசிரியர்களையும் இறுக்கத்திலிருந்து விடுவிக்கும். இதற்கான அடித்தளத்தை அரசுதான் ஏற்படுத்த வேண்டும்" என்று உறுதியாகச் சொல்கிறார் ரத்தினசபாபதி.

``பேரன்டிங்கைப் பொறுத்தவரை அத்தை-மாமா, சித்தி-சித்தப்பா, பாட்டி-தாத்தா எனப் பல சொந்தங்களுக்கு மத்தியில் வாழும் குழந்தைகள், யாரிடமாவது தங்கள் நிலைபாட்டைக் கூறி அறிவுரை கேட்பார்கள். சாப்பாடு முதல் உடை வரை அனைத்தையும் ஷேர் செய்வார்கள். ஆனால், இன்று அபார்ட்மென்ட்டுக்குள் சுவருக்கும் ட்யூஷனுக்கும் மத்தியில் வாழும் குழந்தைகள் அப்படியில்லை. அம்மா-அப்பாவின் அன்புக்கு ஏங்குகிறார்கள். சரியான நண்பர்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். பல வீடுகளில் இன்று `நாமிருவர்’, `நமக்கொருவர்’ ஃபார்முலாதான். ஒற்றைப் பிள்ளையாக வளரும் இவர்களுக்கு உறவுகள், பாசம், ஷேரிங் போன்ற எதையுமே சொல்லித்தராமல் அடைபட்ட கிளியைப்போல வளர்ப்பது, பின்னாளில் ஏற்படும் ஏராளமான சிக்கல்களுக்கு பிள்ளையார்சுழியாக அமைகிறது. மிகவும் மென்மையாக வளரும் இவர்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களுக்கெல்லாம் தயாராக இருப்பதில்லை. குறிப்பாக, ஒற்றைக் குழந்தையாக வளரும் குழந்தை, அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறது.

எதிரே நிற்பவர் யார், என்ன சொல்கிறார், எதற்காகத் திட்டுகிறார், அது சரியா தவறா, அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியெல்லாம் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர், பிள்ளைகள் தரப்புப் பற்றி கேட்பதேயில்லை. உதாரணமாக, ஒரு

குழந்தை காப்பி அடித்ததற்காக ஆசிரியர் திட்டினார் என்றால், பெற்றோர் தரப்பிலிருந்து க்ளீஷேவாக சில விஷயங்களைச் செய்கிறார்கள். ஒன்று, பிள்ளைகளை அடித்து உதைப்பது நடக்கும் அல்லது, `என் பிள்ளை அப்படியெல்லாம் பண்ண மாட்டான், அவனை எனக்கு நல்லாத் தெரியும்’ எனக் கூறுவது. இன்னும் சிலர், வாழ்க்கையே முடிந்துபோனதுபோல வருவோர், போவோரிடமெல்லாம் பிள்ளையைக் குறை கூறுவார்கள். இவை எல்லாமே தவறுதான். இத்தனை மென்மையாக, கரடுமுரடாக, அவமானங்களோடு வளரும் குழந்தைகள், பின்னாளில் அதீத மனச்சிக்கல்களுக்கு ஆளாகி, சூழலை எதிர்கொள்ளும் திறனை இழந்து தவறான முடிவுகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பு உண்டு.

பள்ளி நிர்வாகங்கள் பல்வேறு கோச்சிங் சென்டர்களைத் தொடங்கி, எல்லா நுழைவுத்தேர்வுக்கும் மாணவர்களைத் தயார் செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றன. தனித்திறமை என்ற பேச்சுக்கே பள்ளிகளில் இடமில்லை. இவர்கள் ஏற்படுத்தும் மனஅழுத்தங்கள், ஆசியர்களையும் மாணவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. இதுபோன்ற செயல்களை நிர்வாகத்தரப்பில் தவிர்க்க வேண்டும்’’ என்கிறார் ரத்தினசபாபதி.

அடுத்த கட்டுரைக்கு