Published:Updated:

மற்றவர்கள் மனஅழுத்தம் குறைக்கும் பாரதிபாஸ்கரின் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பது எது? #LetsRelieveStress

மற்றவர்கள் மனஅழுத்தம் குறைக்கும் பாரதிபாஸ்கரின் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பது எது? #LetsRelieveStress
மற்றவர்கள் மனஅழுத்தம் குறைக்கும் பாரதிபாஸ்கரின் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைப்பது எது? #LetsRelieveStress

பாரதிபாஸ்கர்... குடும்ப உறவுகள் தொடங்கி உலகளாவிய பிரச்னைகள் வரை எல்லாவற்றைப் பற்றியும் அழகாக விவரிக்கும் ஆற்றல்பெற்றவர். பட்டிமன்றப் பேச்சாளர், முன்னணி வங்கி ஒன்றின் துணைத் தலைவர், குடும்ப நிர்வாகி என மூன்று குதிரைகளில் செம்மையாகப் பயணம் செய்பவர். ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்காக அவர் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து அவர் இங்கே விவரிக்கிறார்... 

''ஸ்ட்ரெஸ், இன்னைக்கு எல்லாருக்கும் இருக்கு, எல்லாத் துறைகள்லயும் இருக்கு. `டென் டு ஃபைவ் ஜாப்’னு சொல்றோம். ஆனா, எல்லாராலயும் 5 மணிக்குக் கிளம்ப முடியுதா? நிச்சயம் முடியாது. இருக்கிற வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு கிளம்பும்போது மணி ஆறு அல்லது ஆறரை ஆகியிருக்கும். 

ஆபீஸைவிட்டு வெளியில வந்து பார்த்தா, ரோட்டுல ஒரே டிராஃபிக் ஜாம். என்ன பண்ண முடியும்? வீடு வந்து சேர ஏழு மணி, ஏழரை மணி ஆகலாம். அதுவும் வேலைக்குப் போகிற பெண்களாக இருந்தா, அதன் பிறகுதான் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரணும். இரவு டிபன் செய்யணும். அதுவரைக்கும் சேர்ந்த பாத்திரங்களையெல்லாம் துலக்கிவைக்கணும்.

திரும்பக் காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும். றெக்கைக்கட்டிப் பறக்கணும். குறிப்பா பெண்களுக்கு இரண்டு மடங்கு ஸ்ட்ரெஸ். `தினமும் யோகா பண்ணுங்க, தியானம் பண்ணுங்க’னு சொல்றோம். அது எல்லாருக்கும் சாத்தியமா என்ன? 'அவ்வைசண்முகி' மாதிரி வேலை வேலைனு இருக்கிற நிலைமையில இதை நம்மால எப்படி யோசிக்க முடியும்? ஆனா இந்தச் சூழலிலிருந்து ஒருநாளின் சில மணித்துளிகள் விலகி இருந்து, நமக்கே நமக்குனு பிடிச்ச செயல்களைச் செய்யலாம். 

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்கும். பாடுறது, பாட்டுக் கேட்பது, வாக்கிங் போவது, ஓவியம் வரையறது, பள்ளித் தோழிகளைச் சந்தித்து மனம்விட்டு உரையாடுவது, ஷாப்பிங் செய்வது, கோயில்களுக்குப் போய் வருவதுனு அவரவருக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்தால் மனம் லேசாகிடும். 

என்னைப் பொறுத்தவரை பட்டிமன்றம், மேடைப்பேச்சு, கலந்துரையாடல்,  விழா நிகழ்ச்சிகளுக்குப் போய் பேசுவது ரொம்பப் பிடிக்கும். எந்தத் தலைப்பு கொடுத்தாலும் சின்ன வயசுலேர்ந்தே பேசி வந்ததால், என்னால் பேச முடியும். நிறைய நூல்களை வாசிப்பேன். எந்த அளவுக்கு வாசிப்பு இருக்கிறதோ, அதைவைத்துதான் அழகாகவும் ஆழமாகவும் பேச முடியும். வித்தியாசமான சம்பவங்கள், கதைகள், சாகசங்கள், வாழ்க்கை நிகழ்வுகள் இவற்றையெல்லாம் நாம் கவனிப்பதுகூட நமக்கு ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீஃப்தான்.

அதுக்குத் தகுந்த மாதிரி ஆபீஸ் வேலைகளை நேரம் ஒதுக்கி அட்வான்ஸாகவே செய்துவிடுவேன். வீடு, ஆபீஸ், பட்டிமன்றம் மூன்றையும் தனித்தனியாக கம்பார்ட்டைஸ் பண்ணி வெச்சிடுவேன்.

எவ்வளவு கடினமான நாளாக இருந்தாலும், இரவில் ஒரு அரை மணி நேரமாவது 80-களில் இளையராஜா இசையமைத்த பாடல்களைக் கேட்காமல் தூங்க மாட்டேன். அப்படிக் கேட்கும்போது நமது மனம் நாம் மகிழ்ச்சியாக இருந்த பள்ளி நாள்கள், கல்லூரி நாள்கள் என நம்மைக் கொண்டுபோய் அங்கே சேர்த்துவிடும். அந்த நினைவுகள் நம் மனதை லேசாக்கிவிடும்; நம்மை இளமையாகவும் ஆக்கிவிடும்'' என்றவரிடம் உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் பற்றிக் கேட்டோம்.

``உடற்பயிற்சி யோகா என்றெல்லாம் கிடையாது. தினமும் ரெகுலராக வாக்கிங் போய்விடுவேன். சாப்பாட்டைப் பொறுத்தவரை `பசித்து புசி’ங்கிறதுதான். எப்பேர்ப்பட்ட விருந்தாக இருந்தாலும், பசி எடுக்காமல் சாப்பிட மாட்டேன். வீட்டுச் சமையல் என்றால், நம் பாரம்பர்ய சமையல்தான் பிடிக்கும். குறிப்பாக அவியல் கண்டிப்பாக அதில் இடம்பிடிக்கும். இப்போதுதான் மெள்ள சிறுதானிய உணவு வகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க ஆரம்பித்திருக்கிறேன்’’ என்கிறார் பாரதி பாஸ்கர்.