Published:Updated:

பிளே ஸ்கூல், மொபைல்போன், ஹாஸ்டல்... குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமல் என்ன செய்யும்?

பிளே ஸ்கூல், மொபைல்போன், ஹாஸ்டல்... குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமல் என்ன செய்யும்?
பிளே ஸ்கூல், மொபைல்போன், ஹாஸ்டல்... குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமல் என்ன செய்யும்?

‘குழந்தையென மீண்டும் மாறும் ஆசை, எல்லோர்க்கும் இருக்கிறதே...’ என்பது கவிஞர்களின் கற்பனை வரிகள் மட்டும் அல்ல... நம் அனைவரின் ஆசை வரிகளும்கூட. வாழ்கையில் இனிமையான பருவம் எது என்று `நீயா? நானா?’ மாதிரி ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் சரி அல்லது மிகப்பெரிய கருத்துக்கணிப்பு வைத்தாலும் சரி... முடிவு குதூகலிக்கும் குழந்தைப் பருவமாகத்தான் இருக்கும். 
குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுமா?


‘மீண்டும் குழந்தையாக மாறிவிடலாமா?’ என்று அனைவரும் வளர்ந்த பிறகு ஒரு முறையாவது நினைத்துப் பார்த்திருப்போம். எந்தவிதக் கவலையுமின்றி, நண்பர்களுடன் ஏற்படும் சின்னச் சின்ன பேனா, பென்சில் சண்டைகள், விரும்பிய பொருள் கிடைக்காமல் போகும் சிறு ஏமாற்றங்கள்... என நகரும் குழந்தைப்பருவ வாழ்க்கை மிகவும் சுவையானது. ஆனால், அந்தச் சுவையின் இனிமை மறையும்விதமாக தற்காலத்தில் சிறுவர், சிறுமிகளுக்கும் மனஅழுத்தம் பலமடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் `ட்ரெண்டிங் டாபிக்’. 

பள்ளிக்கூடம்

கவலையின்றி ஆனந்தமாக இருந்த குழந்தைகளுக்கு, பள்ளி என்ற புதிய சூழல், சுமார் மூன்று வயதளவில் அறிமுகமாகிறது. பெரும்பாலான குழந்தைகள் புதிய சூழ்நிலையினை ஏற்றுக்கொண்டாலும், சில குழந்தைகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஒன்றரை வயது முடிந்தவுடனேயே குழந்தைகளை, `பிளே ஸ்கூலுக்கு’ அனுப்பும் ’ஹைடெக்’ பெற்றோர்களின் திறமைக்காக, குழந்தைகளுக்குப் பரிசு கிடைக்கிறது, மன உளைச்சல் வடிவில்! மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவருக்கும், மனஅழுத்தம் முதலில் அறிமுகமாவது நிர்பந்திக்கப்படும் கல்வி முறையில்தான் எனக் கூறலாம்.

பிளே - ஸ்கூல்:

பிளே ஸ்கூலில் சேர்ப்பதற்கு ஐம்பதாயிரம், அறுபதாயிரம் ரூபாய் எனச் செலவு செய்து தகுதியற்ற வயதில் குழந்தைகளைப் பள்ளிகளுக்குள் தள்ளிவிடுவது அழுத்தத்தையும் சேர்த்து அனுப்புவதற்குச் சமம். பணிக்குச் செல்லும் பெற்றோர்கள், பார்த்துக்கொள்ள ஆளில்லாமல் குழந்தைகளை ‘கிரீச்களில்’ சேர்த்துவிடுவது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. ‘தாய்மை உணர்வோடு பார்த்துக்கொள்கிறோம்’ என்று அந்தப் பள்ளிகள் தற்பெருமை பேசினாலும், தாய்மைக்கு என்றுமே மாற்றுக் கிடையாது. வாழ்வில் தங்களை நிலை நிறுத்தவேண்டிய போராட்டத்தில், வேறு வழியின்றி இந்த நிலைக்குப் பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். 

அதிகரிக்கும் கல்வி விடுதிகள்:

பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக, ஆறாம் வகுப்பிலிருந்தே விடுதியில் தங்கவைத்துப் படிக்கவைக்கப்படும் பிள்ளைகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். உறவுகளின் வலிமையையும் பாசத்தின் பலத்தையும் அறியாமல் தவிக்கும் அவர்களின் மனதில் எவ்வளவு பாரம் அழுத்திக்கொண்டிருக்கும். ‘வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்றால், சில தியாகங்களைச் செய்துதான் ஆக வேண்டும்’ என்று வீர வசனம் பேசுபவர்களின் கவனத்துக்கு… வீட்டில் பெற்றோர்களோடு இருந்துகொண்டே, சில தியாகங்களைச் செய்து, கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்.  

பாரம்பர்ய விளையாட்டுகள்!

ஒன்றாம் வகுப்பில் இருந்தே அஃறிணைகளான செல்போன்களின் துணையோடும், கணினிகளின் ஆதரவோடும் தனிமையில் வளரும் சிறுவர்கள், இறுதியில் புளூ-வேல்களிடம் இரையாவதும் அரங்கேறத் தொடங்கிவிட்டன. திறந்தவெளியில் குழுவோடு சேர்ந்து குதூகலிக்கும் பாரம்பர்ய விளையாட்டுகளைப் பெற்றோர்கள்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால், பாரம்பர்ய விளையாட்டுகளை மறந்த தலைமுறையாக இன்றைய இளம் பெற்றோர்கள் இருப்பதுதான் வருத்தமான செய்தி. 

‘அ’ முதல் ‘அகிலம்’ வரை:

முதல் மூன்றாண்டுகளில் தாயோடும் தந்தையோடும் மற்ற நெருங்கிய உறவுகளோடும் செலவிடும் நாள்களை, ஒருவரின் கல்விக்கான அடிப்படையாகச் சொல்லலாம். முதல் நான்கு அல்லது ஐந்து வயதுக்குள், பள்ளிக்குச் செல்லாமலேயே ’அ’ முதல் ‘அகிலம்’ வரை பிறரின் செயல்பாடுகளைப் பார்த்தே ’அனுபவக் கல்வியாக’ மனதில் பதிக்கும் திறன் குழந்தைகளுக்கு அதிகளவில் உண்டு. `அ’ என்ற எழுத்துக்கு ‘அணில்’ என்று நேரடியாகக் களப் பயிற்சியில் அன்னை சொல்லிக்கொடுக்கும் ஆழமான கல்வியை, காகிதங்களில் இருக்கும் உயிரற்ற அணில் சொல்லிக் கொடுக்காது. பிளே-ஸ்கூல் செல்லாமலேயே குழந்தைகளால் சிறந்து விளங்க முடியும். என்ன செய்ய, ’பிளே-ஸ்கூலில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ சீட்’ என்று எதிர்காலத்தில் சட்டம் வந்தாலும் வரலாம். 

குழந்தைகளுக்கான பட்டயப் படிப்புகள்:

நல்ல கல்வித் திட்டங்களை வகுத்து, கல்வித் துறையில் சிறந்து விளங்கும் சில மேலைநாடுகளில், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான ஆரம்ப வயது, ஐந்துக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் நம்மிடமும் இந்த முறை இருந்ததாகச் சொல்லலாம். நேரடியாக ஒன்றாம் வகுப்பில் காலடிவைத்து, உலகத்தையே மெய்சிலிர்க்கவைத்த மாணவர்கள் இருக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் அப்படித்தானே. ‘எல்.கே.ஜி… யூ.கே.ஜி’ போன்ற சிறுவர்களுக்கான பட்டயப் படிப்புகள் எல்லாம் அன்று இல்லை. இடையில் புகுத்தப்பட்ட கல்விமுறைக்கு கட்டாயத்தினால் அனைவரும் நிர்பந்திக்கப்படுகிறோம். 

வலிதரும் நிலையற்ற தன்மை:

நிறையப் புத்தகங்களை சுமந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு ’ஸ்கூல்-பேக் சிண்ட்ரோம்’ எனும் தொந்தரவு வருவது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரசித்தம். பள்ளிப் பருவத்திலேயே தோள்பட்டை வலி, முதுகுவலி போன்ற குறிகுணங்கள் உண்டாவது இதில் அடக்கம். இன்றோ எவ்வளவு புத்தகங்களைச் சுமந்து படித்து வெற்றிப் பெற்றாலும், தோள்பட்டை, முதுகுவலியோடு சேர்த்து, விரும்பிய கல்வியைப் படிக்க முடியாத மனவலியும் உருவாகிவிட்டது. இந்த வலிக்கு என்ன பெயர் வைப்பது? ’அனிதா சிண்ட்ரோம்!’ என்று வைத்துக்கொள்ளலாமா! கனவுகளும் ஆசைகளும் ஏதோ ஒரு வகையில் சிதைந்து, மனஅழுத்தங்கள் ஆட்டிப்படைக்கின்றன. 

விவாகரத்தால் பள்ளி மாற்றம்:

பெற்றோர்களின் பணி மாற்றம் (Job transfer) காரணமாக குழந்தைகளின் பள்ளியை மாற்றவேண்டிய நிலைமை மாறி, பெருகிவரும் “விவாகரத்து” கலாசாரத்தால், பெற்றோர்களின் வாழ்க்கை மாற்றம் (Life transfer) காரணமாக, பள்ளியினைப் புதுப்பிக்கவேண்டிய சூழல் இன்று. ஒரே பள்ளியில் சில ஆண்டுகள் பயின்று, தனக்கென்று நட்பு வட்டத்தை அமைத்துக்கொண்டு, தனக்கு இதமான சுழலை மனதுக்குள் உருவகப்படுத்தியிருக்கும் குழந்தைகளின் பள்ளியை திடீரென மாற்றுவதால், அவர்களுக்கு கடுமையான மனத் துயரம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விவாகரத்துகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவிட்டது என்பதற்கு கருத்துக் கணிப்புகள் எல்லாம் தேவையில்லை. ஆங்காங்கே நாமே நேரடியாகப் பார்க்கும் நிலை இன்று அதிகம். 

நேர்முகத் தேர்வு:

பெற்றோர்களுக்கு இன்டர்வியூ வைத்து குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கும் காட்சிகள் திரைப்படங்களில் வந்தாலும், இப்போது உண்மையில் பெரும்பாலான பள்ளிகளில் நடக்கத் தொடங்கிவிட்டன. படித்தவர்களின் பிள்ளைகளுக்குத்தான் கல்வி என்றால், பின் முதல் தலைமுறை பட்டதாரியை உருவாக்க ஆசைப்படும் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? பணமிருந்தால்தான் கல்வி என்ற நிலை, எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கும். 

குழந்தைகளுக்கு கல்வி முக்கியம்தான். ஆனால் நிர்பந்திக்கப்படும் கல்வி முக்கியமல்ல. மனஅழுத்தம் உண்டாக்கும் பேரழுத்தமான கல்வி தேவையில்லை. இயற்கையோடு இசைந்து, தேவையான வயதில் தகுந்த கல்வியுடன் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றாலே போதுமானது. எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பாடத்திட்டத்தில் சில சீர்திருத்தங்கள்… பறவைகள் கல்வியைப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தலாம்; காடு சார்ந்த களப்பயிற்சியைக் கட்டாயமாக்கலாம்; கூடவே சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டம்... அடுத்த தலைமுறை நிறைய சாதிக்கும், மன அழுத்தமின்றி!