Published:Updated:

`இதைவிடச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறு எதுவுமில்லை!’ - சித்ராலட்சுமணன் #LetsRelieveStress

`இதைவிடச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறு எதுவுமில்லை!’ - சித்ராலட்சுமணன் #LetsRelieveStress

`இதைவிடச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறு எதுவுமில்லை!’ - சித்ராலட்சுமணன் #LetsRelieveStress

`இதைவிடச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறு எதுவுமில்லை!’ - சித்ராலட்சுமணன் #LetsRelieveStress

`இதைவிடச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறு எதுவுமில்லை!’ - சித்ராலட்சுமணன் #LetsRelieveStress

Published:Updated:
`இதைவிடச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறு எதுவுமில்லை!’ - சித்ராலட்சுமணன் #LetsRelieveStress

சித்ராலட்சுமணன் பத்திரிகையாளர், படத்தயாரிப்பளர், இயக்குநர், நடிகர்... எனப் பன்முகத்தன்மை கொண்டவர். அவர் தனக்கு மிகவும்   டென்ஷனை ஏற்படுத்திய தருணங்கள்... அதிலிருந்து அவர் வெளிவந்த விதம், தனக்கு ஸ்ட்ரெஸ் ரிலீஃப் தருபவை எல்லாவற்றையும் இங்கே விளக்குகிறார்.

''ஸ்ட்ரெஸ்ஸை  யாரும் விரும்பிப் போய் வாங்குறதில்லை. ஆனா, நாம் வாழும் வாழ்க்கைமுறையில் ஸ்ட்ரெஸ் தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கு. இப்போ எனக்கு, என் வயது மற்றும் அனுபவத்துக்கேற்ப மனப்பக்குவம் வந்துட்டதால ஓரளவுக்கு மேனேஜ் பண்ண முடியுது. 

வெற்றிகள், தோல்விகள்னு பலவிதமான நிகழ்வுகள் நம்மைப் பண்பட்ட மனிதராக மாற்றுகின்றன. ஆனாலும் யாரும் நூத்துக்கு நூறு சதவிகிதம் `ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா இருக்கேன்’னு சொல்ல முடியாது. எவ்வளவு நேரம் தியானம் பண்ணினாலும், பலவிதமான கோயில்களுக்குப் போனாலும், பெரிய பெரிய ஆன்மிக மகான்களின் உரையைக் கேட்டாலும், ஏதோ ஒரு விஷயம் நம்மை டென்ஷனாக்காமல் இருக்காது. பிளட்ல சுகர், பிரஷர், இருக்கிற மாதிரி ஸ்ட்ரெஸ்ஸும் இருக்கத்தான் செய்யும். எனக்கு ரொம்பவும் ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தின மூன்று சம்பவங்களைச் சொல்றேன். 

பாரதிராஜா சார் இயக்கத்துல 'மண்வாசனை'தான்  நான் தயாரிச்ச முதல் படம். படப்பிடிப்புக்குத் தேவையான பணம் ரெடியாகிடுச்சு. ஹீரோயின் ரேவதி உள்பட ஆர்டிஸ்ட்டுகள் எல்லாம் முடிவாகி, மொத்த யூனிட்டும் தேனிக்கு ஷூட்டிங்குக்குப் போயிடுச்சு. ஆனா, ஹீரோ மட்டும் முடிவாகலை. 


இங்கே சென்னையில பல கல்லூரிகளுக்குப் போய்த் தேடியும், ஹீரோ கிடைக்காமல்தான் இருந்தார். அந்த நிலைமையிலதான் யூனிட் கிளம்பிப் போயிருந்துச்சு. டைரக்டர் சார், 'வாய்யா... நம்ம ஊர்ப்பக்கம் ஒரு பையனைப் பார்த்துப் புடிச்சிடலாம்'னு சொல்லிட்டார். அதனால, நான், பாரதிராஜா சார்னு வேறு சிலர் மதுரையிலேயே தங்கிட்டோம். 

எனக்கோ முதன்முதலா படம் எடுக்கிறோம், ஹீரோ யார்னு தெரியாம இருக்கேனு ஒரே கவலை. 'வாங்க சார்... மீனாட்சி அம்மன் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு ரமேஷ் மெஸ்ல சாப்பிட்டு வருவோம்'னு சாரைக் கூப்பிட்டேன். எல்லா வேலையும் முடிஞ்சு, சார் கார்ல போய் உட்கார்ந்தார். ஆனா, ரசிகர்கள் வந்து சூழ்ந்துக்கிட்டாங்க. அதுல  ஒரு பையன், `சார்... சார்...’னு கையை அசைத்துக்கொண்டே இருந்தான். 

டைரக்டர் சார் கார் கண்ணாடியைத் திறந்து அவனைக் காரில் ஏறச்சொன்னார். `சரி, ஏதோ அவங்க ஊர்க்காரப் பையன் போலிருக்கு’னு நினைச்சிக்கிட்டேன். ஆனா, ஹோட்டலுக்கு வந்து அவனிடம்  'சிரி'னு சொன்னார். 'முறைத்துக் காட்டு'ன்னார். அவன் செஞ்சு காட்டினதும், 'இந்தப் பையன்தான்யா நம்ம படத்து ஹீரோ'னு சொன்னார்.  அந்த ஹீரோதான் பாண்டியன்.

பிறகு, 70 படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். 

எனக்கு சுத்தமா பிடிக்கலை. ஏன்னா நான் நடிகர் சிவகுமார், ராதா ஆகிய இரண்டு பேர் கால்ஷீட்டையும்  வாங்கிவெச்சிருந்தேன். ஆனா, எல்லாமே உல்டாவா மாறிப்போச்சு. எனக்கு ஏகப்பட்ட டென்ஷன்.

டைரக்டர் சார்கிட்ட வாக்குவாதம் பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா அவர் அது எதையும் காதுலயே வாங்கிக்கலை. அவர் தன் இஷ்டத்துக்கு ஷூட் பண்ணிக்கிட்டே இருந்தார். படம் ரிலீஸாகி சக்ஸஸ் ஆன பிறகுதான் என்னோட ஸ்ட்ரெஸ் என்னைவிட்டுப் போச்சு. அந்தப் படம் மதுரையில 321 நாள்கள் ஓடுச்சு. 

இதற்கு நேர் எதிரான ஒரு அனுபவமும் எனக்கு உண்டு. நான் கிட்டத்தட்ட, 'மண்வாசனை', 'சூரசம்ஹாரம்', 'வாழ்க்கை', 'ஜல்லிக்கட்டு'னு 15 படங்களைத் தயாரிச்சு இருக்கிறேன் . 'சின்னராஜா'னு ஒரு படம் தயாரிச்சேன். ஹீரோ கார்த்திக். அவர்கிட்ட மொத்தமா கால்ஷீட் வாங்கிவெச்சிருந்தேன். 

எல்லா ஏற்பாடும் பண்ணி முடிச்சதும், அவருடைய மேனேஜர் வேறு படங்கள் சில தள்ளித் தள்ளிப் போறதால ஷூட்டிங்கை 60 நாள் தள்ளிவெச்சுக்கச் சொன்னார். அதன் பிறகு அந்தப் படம் முடிஞ்சு வெளியில வரும் வரை ஏகப்பட்ட குழப்பம்.  அதுல எனக்கு ஏற்பட்ட நஷ்டம் சொல்லி முடியாது, அவ்வளவு நஷ்டம். அதுக்கப்புறம் நான் படம் தயாரிக்கிறதையே விட்டுட்டேன்னா பார்த்துக்கங்க. அந்த வீழ்ச்சி தந்தது அளவுகடந்த  மனக்கஷ்டம், பணக்கஷ்டம். அதிலிருந்து நான் மீண்டு வந்ததெல்லாம் ரொம்பவே பெரிய விஷயம். `பீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டுவந்தார்’னு சொல்வாங்க. அது ஒரு கற்பனைப் பறவைதான் என்றாலும், அந்த மாதிரிதான் நான் சினிமாவில் இப்போ நடிகராக இருக்கேன்.

இதே மாதிரி இன்னுமொரு டென்ஷனாக்கிய விஷயமும் உண்டு. `ஜல்லிக்கட்டு’ப் படத்தின் 100-வது நாள் விழாவுக்கு `எம்.ஜி.ஆரைக் கூப்பிடுவோம்’னு சத்யராஜ் சொன்னார். ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கினபோது, அந்தக் குழுவுல நான், ஜேப்பியார் எல்லாம் இருந்ததால எம்.ஜி.ஆரை அடிக்கடி போய்ப் பார்ப்போம். `ஜல்லிக்கட்டு’ப் பட விழாவுக்கு, 'அண்ணன் வரணும்’னு போய்க் கேட்டோம். உடனே, `வர்றேன்’னு சொல்லிட்டார். 

வள்ளுவர் கோட்டத்தில் விழா  நடத்த கோலாகலமாக ஏற்பாடானது. சிவாஜி சார் படம். எம்.ஜி.ஆர் விருது கேடயம் வழங்குகிறார். சினிமா உலகமே பெரும் பரப்பானது. 1987-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி விழா.

டிசம்பர்  4-ம் தேதி இரவு 11 மணிக்கு, அண்ணன் விழாவைத் தள்ளிவைக்க சொல்லிட்டார்னு தோட்டத்தில் இருந்து போன் வந்தது. நாங்களோ பெரிய அளவில் செலவு செஞ்சுட்டோம். `வர முடியலை’னு சொல்லி இருந்தால்கூட பரவாயில்லை. கமல்ஹாசன், சாலமன் பாப்பையானு ஒரு மாதிரி ஏற்பாடு பண்ணிவெச்சிருந்தோம். விழாவை நடத்தி இருப்போம். `தள்ளிவைங்க’னு சொன்னதும் எங்களுக்கு ஒண்ணும் புரியலை. 

இப்போ மாதிரி செல்போனெல்லாம் கிடையாது. போன்தான். அதனால விடியற்காலை 3:30 மணிக்கு ராமாவரம் தோட்டத்துக்குப் போயிட்டோம். காலை 6 மணி இருக்கும் எம்.ஜி.ஆர் கூப்பிட்டு அனுப்பினார். மேலே இருந்த அவரது அறைக்குப்போய் பார்த்தோம். மூன்று நாள் தாடியுடன் மிகவும் உடல் நலமில்லாமல் இருந்தார். 

எங்களைப் பார்த்ததும் என்ன நினைத்தரோ 'சரி வர்றேன்'னு சொல்லிட்டார். அதே மாதிரி  மாலை 5:30 மணிக்கு தலைவர் காரில் கிளம்பிவிட்டார்னு போன் வந்தது. மனசுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. காலையில் பார்த்த எம்.ஜி.ஆருக்கும், மாலையில் பார்த்த எம்.ஜி.ஆருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அந்த விழாதான் எம்.ஜி.ஆர் கலந்துக்கிட்ட கடைசி சினிமா விழா. சிவாஜி நடிச்ச படத்தின் 100-வது நாள் விழா ஒன்றில், எம்.ஜி.ஆர் கலந்துக்கிட்டு பரிசு வழங்கியது அதுதான் முதன்முறை.

இந்த மூன்றுவிதமான நிகழ்ச்சிகளையும் ஏன் சொன்னேன்னா, மூணுமே எனக்கு ஏகப்பட்ட டென்ஷனைத் தந்தவை. இத்தனைக்கும் நான் ரொம்ப ரொம்ப ஸ்போர்ட்டிவான ஆள். எதையுமே ஜஸ்ட் லைக் தட்னு எடுத்துக்குவேன். சின்ன ஜோக்னாக்கூட மனம்விட்டுச் சிரிப்பேன். `வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப்போகும்’னு சொல்லுவங்க இல்லையா, அது சின்ன வயசுலேருந்தே பழக்கம். 

இவை எல்லாவற்றையும்விட, 'நம்மால் எதையும் மாற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரை நமது வாழ்க்கைங்கிறது ப்ரீ ரெக்கார்டட் வீடியோனு நான் உறுதியா நம்புறேன். எது எது எப்பப்போ நடக்குமோ, அப்படித்தான் அது அது அப்பப்போ நடக்கும். இதை நாம் நம்ப ஆரம்பிச்சிட்டோம்னாலே நமக்கு வாழ்க்கையில பாதி டென்ஷன் போயிடும். கூடுமான வரைக்கும் ஒரு ஜென் மனநிலையை வளர்த்துக்கொள்வதுதான் நாமும் நம் மனமும் ஆரோக்கியமா இருக்கிறதுக்கு வழி. 

அதை மீறியும் நமக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தா பாடல்கள் கேட்கலாம். நாம் இருந்த இடத்தில் இருக்கும்போதே நம்மை வேறு ஓர் உலகத்துக்கு எடுத்துச் செல்லும் வலிமை பாடல்களுக்கு உண்டு. நான் நிறையப் பழையப் பாடல்களைக் கேட்பேன். இசையைவிடச் சிறந்த 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' வேறு எதுவும் இல்லை. நான் பழைய பாடல்களைத்தான் விரும்பிக் கேட்கிறேன்'' சிரித்தபடி சொல்கிறார் சித்ரா லட்சுமணன்.