Published:Updated:

“அந்த 2 விஷயம்... என்னை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கிருச்சு!” - மனோபாலா #LetsRelieveStress

“அந்த 2 விஷயம்... என்னை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கிருச்சு!” - மனோபாலா #LetsRelieveStress
“அந்த 2 விஷயம்... என்னை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கிருச்சு!” - மனோபாலா #LetsRelieveStress

மனோபாலா... 'ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மஸி' என்பதற்குச் சிறந்த உதாரணம். உடல், மனம் இரண்டையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்திருக்கிறார். ஓசைப்படாமல் 36 படங்களை இயக்கியவர். இப்போதும் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர். தனக்கு ஏற்படும் டென்ஷனைக் குறைக்கக் கையாளும் வழிமுறைகளைச் சொல்கிறார்...

“ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையையோ, சமூகத்தையோ நம்மால் நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத கட்டத்துக்கு நாம வந்துட்டோம். பத்திரிகை, டி.வி. ஊடகங்கள்ல நாம் கேட்கிற செய்திகள், சமூகத்துல நாம பார்க்கிற காட்சிகள் எல்லாமே நமக்கு டென்ஷனைத் தர்ற விதமாத்தான் அமைஞ்சிருக்கு. அதனால்தான் இன்னிக்கு யோகா, தியானம் போன்ற வகுப்புகளுக்குப் போறவங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கிட்டே போகுது.  

சமீபத்துல எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஏற்படுத்துன விஷயம், ‘ஒகி’ புயல்ல சிக்கிய மீனவர்களின் நிலை. அடிப்படையான வாழ்வாதாரத்துக்காகவே கடல்ல போராட வேண்டியிருக்கு. 'தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான், கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்' என எம்.ஜி.ஆர் பாடின மாதிரி அவங்க வாழ்க்கை ஆயிடுச்சு. 

இன்னொரு விஷயம். அனிதாவின் மரணம். தேவை இல்லாம ஒரு அப்பாவிப் பொண்ணின் வாழ்க்கையோட விளையாடிட்டாங்க. 'என்ன சார், அந்தப் பொண்ணு பண்ணிச்சு... நீங்க நீட் தேர்வையே கொண்டு வாங்க... அடுத்த வருஷத்துல கொண்டுவாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி அனிதா மாதிரி இருக்கிற பொண்ணுங்க தயாராகிட்டுப் போறாங்க. 

திடுதிப்புனு அறிவிச்சு, அதுக்கப்புறம் இந்த வருஷம் கிடையாது, அடுத்த வருஷம்னு சொல்லி, திரும்ப இந்த வருஷம்தான்னு சொல்லி தேவையே இல்லாம அலைக்கழிச்சிட்டாங்க. அது என்னை ரொம்பவே மன வருத்தத்துக்கு உள்ளாக்கிடுச்சு. 
பொதுவாக எனக்கு டென்ஷனாகவோ, மனசுக்குக் கஷ்டமாவோ, மன இறுக்கமாகவோ இருந்தால், கோயிலுக்குக் கிளம்பிப் போயிடுவேன். எனக்கு ஆன்மிகத்தில ஈடுபாடு அதிகம். 

சாய் பாபா மேல பக்தியும் நம்பிக்கையும் அதிகம். மயிலாப்பூர், பாபா கோயிலுக்குப் போவேன். ஏ.எம் ரத்னம் ஒரு 'பாபா கோயில்' கட்டி இருக்கார். அங்கேபோய் அமைதியா உட்கார்ந்துடுவேன். இல்லைனா வடபழனியில இருக்கிற, 'குபேர சாய்பாபா கோயிலு'க்குப் போவேன். 
ஷூட்டிங் இல்லாம இருந்துச்சுனா, ராமகிரியில இருக்கிற கால பைரவர் கோயிலுக்குப் போயிடுவேன். கார்ல ஏறி உட்கார்ந்து டிராவல் பண்ண ஆரம்பிச்சிட்டாலே, மனசு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ரிலாக்ஸ் ஆக ஆரம்பிச்சிடும். 

தவிர, நான் பழைய பாடல்களை விரும்பிக் கேட்க ஆரம்பிச்சிடுவேன். பழைய இந்திப் பாடல்கள், பழைய தமிழ்ப் பாடல்கள் விரும்பிக் கேட்பேன். குறிப்பாக, இந்திப் பாடல்கள்ல ராஜ்கபூர் நடித்த படங்களான, ஶ்ரீ 420, ஆவாரா, மேர நாம் ஜோக்கர், சங்கம்னு எல்லாப் பாடல்களும் கேட்பேன். என்னிடம்,  இந்தியாவின் முதல் படமான ஆலம் ஆரா தொடங்கி, இப்போ வரைக்கும் உள்ள சிறந்த திரை இசைப் பாடல்களின் தொகுப்பு இருக்கு. 

எஸ்.டி. பர்மன் கலெக்‌ஷன், நௌஷத் கலெக்‌ஷன், எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, இளையராஜா பாடல்கள் கலெக்‌ஷன் என 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல வெச்சிருக்கேன். 

மேலும், இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர்களான, சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், தமிழ்ல ஶ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜானு தனித்தனியே இயக்குநர்களின் படங்களில் இடம்பெற்ற பாடல்களின் தொகுப்பையும் வெச்சிருக்கேன். 50, 60 களில் வெளியான பாடல்கள் தொகுப்பில் 4 டி.வி.டி. கொள்ளும் அளவிலான பாடல்களைப் பதிவு செய்து, ஒரு முறை இளையராஜா சாருக்குக் கொடுத்தேன். அந்த அளவுக்கு நான் ஓர் இசைப்பிரியன்.

அப்போ உள்ளவங்க கொடுத்த பாடல்களெல்லாம் கதையின் போக்குக்கு ஏற்ப அமைந்த பாடல்கள் என்பதால், கேட்க மிகவும் இனிமையா இருக்கும். நம்முடைய டென்ஷனைக் குறைத்து மனதை மிக எளிதாக இலேசாக்கி விடும்.

இன்னொரு முக்கியமான விஷயம்,  ரொம்பப் பெரிய கசப்பான விஷயம் நடந்திருக்கும். அதுக்கு நான் பெருசா கோபப்படமாட்டேன். சின்ன விஷயமா இருக்கும் அதுக்குப் பெருசா கோபப்பட ஆரம்பிச்சிடுவேன். 

கார் ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கும். அமைதியா கொண்டுபோய் மெக்கானிக் செட்ல விட்டுட்டு வந்துடுவேன். ஆஃபீஸ்ல பாபா படத்துக்கு பூ வைக்காம இருப்பாங்க. சுல்லுனு கோபம் வந்துடும்.

டென்ஷனைக் குறைக்க இன்னொரு முக்கியமான ஒரு மேட்டரும் கைவசம் இருக்கு. ரொம்ப டென்ஷனா இருந்தா, சமையக்கட்டுல பூந்து சமைக்க ஆரம்பிச்சிடுவேன். சமையல் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். என்னுடைய சமையல் பிடிச்ச, என் நண்பர்களுக்குச் சமைச்சுக் கொடுப்பேன். லிவிங்ஸ்டன், ஊர்வசிக்கு நான் வைக்கிற வத்தக்குழம்பு அப்பளம் ரொம்பப் பிடிக்கும்.காலையில 6 மணிக்கு சமைச்சு ஹாட்பேக்குல எடுத்துக்கிட்டுப் போய் கொடுப்பேன். மதியம் அவங்க அதைச் சாப்பிடும்போது நமக்கு மனசுக்குள் ஒரு சந்தோஷம் எட்டிப்பார்க்கும். அதுக்கு விலையே கிடையாது.

நான் இருக்கும் இடத்தை எப்பவும் கலகலப்பா வெச்சிக்கணும்னு நினைப்பேன். நம்மைப் பார்த்தா, 'ஐயோ  வந்துட்டான் பாரு'னு நினைக்கக் கூடாது. நம்மைப்பார்த்தா மத்தவங்களுக்கு ஒரு சந்தோஷம் ஏற்படணும் அப்படி இருந்தாலே நமக்கும் டென்ஷன் வராது. நம்மால மத்தவங்களுக்கும் டென்ஷன் வராது" என்று கூறி விடைகொடுத்தார்.