Published:Updated:

பிரசவத்துக்குப் பிறகான மனஅழுத்தம்... கடப்பது எப்படி?

பிரசவத்துக்குப் பிறகான மனஅழுத்தம்... கடப்பது எப்படி?
பிரசவத்துக்குப் பிறகான மனஅழுத்தம்... கடப்பது எப்படி?

போன தலைமுறை வரை, ‘பிரசவத்துக்குப் பிறகு மனஅழுத்தம் வரும்’ என்று சொன்னால், ‘அப்படின்னா என்ன?’ என்று கேட்பார்கள். ஆனால், இந்தத் தலைமுறை பெண்களிடம் இந்தப் பிரச்னை அதிகரித்துவருகிறது. பிரசவத்துக்குப் பிறகு மனஅழுத்தம் ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? தீர்வுகள் என்னென்ன? இதுகுறித்து விளக்கமாகப் பேசுகிறார், மகப்பேறு மருத்துவர், ரஜினி சிவலிங்கம். 

''பிரசவத்துக்குப் பிறகு வருகிற மனஅழுத்தம் என்பது காலங்காலமாக பல பெண்கள் சந்தித்து வந்த விஷயமே. ஆனால், ஒரு தலைமுறைக்கு முன்னால் இந்தப் பிரச்னை எங்கோ ஒரு பெண்ணுக்குத்தான் வரும். அதனால், அது பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தது. சமீபமாக, இந்தப் பிரச்னையைப் பல பெண்கள் சந்திக்கிறார்கள். 

இந்த மனஅழுத்தம் போன தலைமுறை பெண்களுக்கு ஏன் வரவில்லை? பிறந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மா, சித்தி, பெரியம்மா, பாட்டி, சில இடங்களில் கொள்ளுப் பாட்டி வரை உதவியாக இருந்தார்கள். கூட்டுக் குடும்பத்தின் வலிமை அது. அந்தக் குட்டிப் பாப்பாவை குளிக்கவைப்பது, தூங்கவைப்பது, அழுதால் தோளில் சாய்த்துத் தாலாட்டுப் பாடுவது, குழந்தையின் துணியைத் துவைத்துப்போடுவது என வீடு முழுக்க அனுபவமிக்க பெண்மணிகள் இருப்பார்கள். அதனால், பிள்ளை பெற்ற பெண் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டு, பிள்ளைக்குப் பசிக்கும்போது பாலூட்டி, பிள்ளை தூங்கும்போது தானும் தூங்கி நிம்மதியாக இருப்பார்கள். இதற்காகவே, பெண்ணுக்குப் பிரசவம் அவள் பிறந்த வீட்டில் நடக்க வேண்டும் என்று பெரியவர்கள் ஏற்படுத்திவைத்தார்கள். 

இந்தக் காலத்தில் வேலை நிமித்தமாகவும் உறவுகளுடன் சேர்ந்திருக்க விருப்பமின்றியும் எல்லாக் குடும்பங்களும் தனித்தனி தீவுகளாகிவிட்டன. அக்கம்பக்கமும் உதவி கேட்க முடியாத பரபரப்பு வாழ்க்கை. மெட்டனிர்ட்டி லீவு முடிந்ததும் வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது ஒர்க் அட் ஹோம் செய்ய வேண்டும். சிலர் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துகொள்கிறார்கள், பொருளாதார ரீதியாக முடியாத இளம் தாய்க்கு வீட்டு வேலையும் சேர்ந்துகொள்ளும். குழந்தை வளர்ப்பில் கணவன் சற்று உதவி செய்தால் நல்லது. உதவி செய்ய மனமோ, நேரமோ இல்லாத கணவன் என்றால், நிலைமை இன்னும் மோசம். அம்மாவோ, மாமியாரோ கிராமத்திலிருந்து வந்தாலும், சில மாதங்கள் உதவி செய்துவிட்டு சொந்த ஊருக்குக் கிளம்பிவிடுவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் கிராமத்தில்தான் என்பதால், எதுவும் சொல்ல முடியாது. இத்தனை சவால்களுடனே இன்றைய பெண்கள் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் விளைவு... தூக்கமின்மை. அடுத்து மனஅழுத்தம். 

இதன் அறிகுறிகள் என்னவென்று பார்த்தால், பிரசவத்துக்குப் பிந்தைய மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், எதிலும் விருப்பமின்றி விட்டேத்தியாக இருப்பார்கள். பிறந்த பச்சிளம் குழந்தையையும் பெரிதாகக் கவனிக்க மாட்டார்கள். வேறு ஓர் உலகத்தில் சஞ்சரிப்பதுபோலவே இருப்பார்கள். இதை மருத்துவத்தில், ஹை மூடு சேஞ்ச் (High mood change) என்போம். மைல்டு டைப், மேஜர் டைப் என்று இதில் இரண்டு வகை உள்ளன. முதல் வகை பிரச்னை இருந்தால், 2 வாரங்களுக்குப் பிள்ளை தூங்கும் நேரத்தில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்மாவையும் தூங்கவிட்டாலே சரியாகிவிடுவார்கள். இரண்டாம் வகை பிரச்னைக்கு, மகப்பேறு மருத்துவர்கள் கவுன்சலிங் கொடுத்துச் சரிசெய்துவிடுவோம். பிரச்னை அதிகமாக இருந்தால், உளவியல் ஆலோசகரிடம் அனுப்பிவைப்போம். 

டெலிவரிக்குப் பிறகு மனஅழுத்தத்தை வராமல் தடுக்கவும் வழியிருக்கிறது. குழந்தைப் பிறப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பெண்களிடம், ‘குழந்தைக்காக நிறையக் கண்விழிக்க வேண்டிவரும். அது சுமையல்ல சுகம். வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லப்போகிறீர்கள். அதை என்ஜாய் பண்ணுங்கள்' என்று சொல்லிச் சொல்லி அவர்கள் மனதில் பதியவைப்போம். இதை, ப்ரீநேட்டல்  கவுன்சலிங் (prenatel counseling) என்போம். இந்த கவுன்சலிங் கொடுத்தாலே, பெரும்பாலும் டெலிவரிக்குப் பிறகான மனஅழுத்தம் வராது. இதையெல்லாம் தாண்டி, பிராக்டிகலாக இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதையும் சொல்கிறேன். 

புதிதாக பிள்ளைப் பெற்ற பெண்களுடன், அம்மாவோ, மாமியாரோ, வேறு பெண் உறவுகளில் ஒருவரோ அவசியம் உடனிருக்க வேண்டும். மறுஜென்மம் எடுத்து வந்திருக்கும் தன் மனைவிக்கு அன்பை வார்த்தைகளிலும் செயல்களிலும் காட்டுபவராக கணவர் இருக்க வேண்டும். அவள் தூங்கும் நேரத்தில் பிள்ளையைக் கவனித்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், நம்பகமான வேலைக்காரப் பெண்ணை துணைக்கு வைக்கலாம். இதுபோன்ற ஆதரவான சூழ்நிலையை பிரசவித்த பெண்களுக்குத் தந்தால், அவர்களுக்கு எந்த மனஅழுத்தமும் வராது. 

தாய்மையைப் போற்ற, அந்தத் தாய்க்கு மன உறுதியை அளிக்கவேண்டியது சுற்றியுள்ள ஒவ்வொருவரின் கடமை!