Published:Updated:

`மனஅழுத்தத்தைத் தரும் மூன்று விஷயங்கள் எவை தெரியுமா?’ - கு.ஞானசம்பந்தன் #LetsRelieveStress

`மனஅழுத்தத்தைத் தரும் மூன்று விஷயங்கள் எவை தெரியுமா?’ - கு.ஞானசம்பந்தன் #LetsRelieveStress
`மனஅழுத்தத்தைத் தரும் மூன்று விஷயங்கள் எவை தெரியுமா?’ - கு.ஞானசம்பந்தன் #LetsRelieveStress

கு.ஞானசம்பந்தன், மதுரை மண்வாசனை மாறாமல், நகைச்சுவை மிளிரப் பேசும் சிறந்த பேச்சாளர். பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், நடிகர்... என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழகத்தின் 17 மாவட்டங்களில் 'ஹ்யூமர் கிளப்' அமையக் காரணமானவர். பேச ஆரம்பித்தால், நீர்ப்பெருக்கமுள்ள வைகை ஆறுபோல தங்குதடையில்லாமல் நீள்கிறது பேச்சு. டென்ஷனைக் குறைக்க நல்ல நல்ல வழிகளைக் கூறுகிறார் இங்கே ... 

''மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், டென்ஷன்... இதைப் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சோம்னா அது டாக்டர் பேசுற மாதிரி ஆகிடும். இன்னிக்கு சின்னக் குழந்தைகூட, 'நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்'னு சொல்லுது. உண்மையைச் சொல்லப்போனா அந்தக் குழந்தைக்கு `டென்ஷன்’கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கூட சொல்லத் தெரியாது. 

டென்ஷன் பயம், கவலை இந்த இரண்டு விஷயங்களாலதான் நமக்கு ஏற்படுது. பயத்தையும் கவலையையும் போக்க ஒரு வழியை நம் வள்ளுவப் பெருந்தகை சொல்லிவெச்சிருக்கார். 

''தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்  
மனக்கவலை மாற்றல் அரிது''.   

'மனத்தின்பால் கவலை இருக்குமானால், அதை மாற்றிக்கொள்வதற்கு ஒரே வழி, ஒப்புமை சொல்ல முடியாத இறைவனின் திருவடியை அடைவதுதான்' என்று சொல்கிறார். கடவுள் வாழ்த்தின் 10 திருக்குறள்களிலும் இதைத்தான் அவர் சொல்கிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இறைவன் பிள்ளையாரா, முருகனா, சிவனா, விஷ்ணுவா, இயேசுவா, அல்லாவா, புத்தரா, மகாவீரரா... எதையும் அவர் சொல்லவில்லை. 

கவலை என்பது மனத்தின்பால் ஏற்படுவது. மனசு என்றால் என்ன?   இதயமா, மூளையா, கணையமா, கல்லீரலா... இவை எதுவும் இல்லை. `என் மனசை அவகிட்ட கொடுத்திட்டேன்’கிறான். 'மைண்ட்'னு ஆங்கிலத்துல மனசைச் சொல்றோம். இந்த மனசுலதான் எல்லாக் கவலையும் வந்து சேருது.

'கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு, காரியம் நடக்கட்டும் தொடர்ந்துவிடு' னு மாயவநாதன்கிற திரைப்படப் பாடலாசிரியர் அந்தக் காலத்துல  ஒரு பாட்டுல எழுதி இருப்பார். 'கற்றவன் கலங்குதல் அழகாகுமோ ?' என்று ஓர் அற்புதமான வரி வரும். படிச்சவன் கவலைகளுக்கு நடுவே இருக்கக் கூடாது.

நேரமின்மையாலும் மனஅழுத்தம் வரும். ரயிலைப் பிடிக்க அவசரமாப் போகும்போது, போன் வரும் இல்லையா... அதைவிட வேற எது நமக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தப் போகுது? சின்னக் குழந்தையா இருக்கும்போது சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படுவோம். 

ஒரு மலையாளப் படத்துல ஒரு காட்சி... ஒரு பையன் குடுகுடுனு ஓடிப்போய் கடிகாரத்தோட பெண்டுலத்தைக் கெட்டியாப் புடிச்சிக்குவான்.  காலையில மணி 5:58 ஆகியிருக்கும். மணி ஆறு அடிச்சிடக் கூடாதுனு நினைப்பான். ஏன்னா, அன்னிக்கு திங்கள்கிழமை. 'ஹோம்வொர்க்' பண்ணி இருக்க மாட்டான். அதைப் பண்ணணுமேனு கவலை. 

நான்கூட சின்ன வயசுல  பம்பரம் காணாம போனதுக்காக ரொம்பக் கவலைப்பட்டிருக்கேன். என்னோட கோலி குண்டுகள் காணாமப் போனதுக்காக, இனி நாம எப்படி வாழப்போறோம்னு நினைச்சிருக்கேன்.  பேனா காணாமப் போனா, இனி, எப்படி பரீட்சையைப் பாஸ் பண்ண போறோம்னு நினைப்பேன். ஏன்னா அந்தப் பேனா நல்லா எழுதும். அதனால புதுப் பேனாவுல எப்படி பரீட்சை எழுதப்போறேனு பயந்திருக்கேன். 

இப்போ என்னை டென்ஷனாக்குற விஷயம் என்னன்னா, `நிகழ்ச்சிக்கு வர்றேன்’னு தேதி கொடுத்திருப்பேன். நிகழ்ச்சிக்கு முதல் நாள் போன் பண்ணி, `எப்படி சார் ஏற்பாடுகள் இருக்கு?’னு கேட்பேன். 

'எந்த நிகழ்ச்சி சார்?'னு கேட்பாங்க. 'என்ன சார் அந்த நிகழ்ச்சி கேன்சல் ஆனதை உங்களுக்கு யாரும் சொல்லல்லையா? சரியான கூத்து சார் உங்ககூட’னு ஜோக்கடிப்பாங்க. அந்த நிகழ்ச்சிக்காக நான் வெளிநாட்டுக்குப் போறதைக்கூட தள்ளிவெச்சிருப்பேன்.  இப்படிச் சில நேரங்கள்ல நான் படும்பாடு சொல்ல முடியாது. 

சில நேரங்கள்ல இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி இருக்கும். நான் சாயங்காலம் 5 மணிக்கு கல்லூரியில வகுப்பு எடுத்து முடிச்சிட்டு, அவசர அவசரமாப் போவேன். கார்லயே டிரெஸ் சேஞ்ச் பண்ணவேண்டியிருக்கும். கிடுகிடுனு ஓடி மேடைக்குப் போவேன். `ஹூம்... வாத்யாரே லேட்டா வர்றார். இவர்கிட்ட படிக்கிற பசங்களைப் பத்திக் கேட்கவா வேணும்?’பாங்க. எனக்கு ஒரு மாதிரி ஆகிடும். நேரம் நமக்கு ஸ்ட்ரெஸ் தர்ற முக்கியமான விஷயம்கிறதால, அதுல நான் ரொம்ப கவனமா இருப்பேன். 

`காலம் கண் போன்றது’னு சொல்வாங்க. கண் போன்றதுனா இப்போ வேற கண் வெச்சுக்கலாம். பொன் போன்றதுனா அதுக்கு பதிலா, இப்போ பிளாட்டினம் வந்துடுச்சு. என்னைக் கேட்டால், `காலம் உயிர் போன்றது’னு சொல்வேன். ரெண்டுமே போனா வராது.
நேரம், அச்சம், கவலை இது மூணும் மனஅழுத்தத்தைத் தரும். இது தவிர இப்போ நோய்கள் பற்றி புதுசு புதுசா நிறையப் பேசுறோம். அதுவேற நமக்கு மனஅழுத்தத்தைத் தருது. 

மனஅழுத்தத்தை எப்படிச் சரி செய்றதுனு பார்ப்போம். நான் எப்படி சரிசெய்வேன்னா, நிறையப் புத்தகங்கள் படிப்பேன். புத்தகங்களைப் போன்ற சிறந்த நண்பன் கிடையாது.  பத்தாண்டுகளுக்கு முன்பு பழகிய நண்பன் மாறியிருப்பான். ஆனால், அப்போ படிச்ச அந்தப் புத்தகம் இப்பவும் என்கூட நட்பாகத்தான் இருக்கும். 

அப்போல்லாம் பட்டிமன்றத்துல பேசிட்டு வரும்போது மதுரைக்குக் கடைசி பஸ்ஸாக அது இருக்கும். எப்படியோ அதில் தொத்தி, தாவி ஏறி, நின்னுக்கிட்டே மதுரைக்கு வருவேன். ஒரு கையில கம்பியைப் பிடிச்சிருப்பேன். இன்னொரு கையில 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தையோ, `பொன்னியின் செல்வன்’ புத்தகத்தையோ வாசிச்சிக்கிட்டே வருவேன். வந்தியத் தேவனோட குதிரையில பயணம் செஞ்சுக்கிட்டிருப்பேன். என்னோட கஷ்டமெல்லாம் இல்லாமல் போகும். 

இதை என் நண்பர்கள் கமலஹாசனிடமும் கவிஞர் வைரமுத்துவிடமும் இப்போகூடச் சொன்னேன்.  ரெண்டாயிரம் பேர் குழுமியிருக்கும் பட்டிமன்றத்துல பேசிட்டு, ராத்திரி ரெண்டு மணிக்குமேல கார்ல புறப்பட்டு வருவேன். அப்போ கேட்கும் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதின திரை இசைப் பாடல்கள் ரொம்ப மகிழ்ச்சியைத் தரும். 

அருமையான நிலவொளி... பட்டிமன்றத்துல பலரையும் மகிழ்விச்சு, அவங்க சிரிச்சதை அசைபோட்டுக்கிட்டே மன நிறைவோட பாடலைக் கேட்டுக்கிட்டே வந்து சேரும்போது விடியற்காலை மணி 5:30 ஆகியிருக்கும். மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை மணி ஒலிக்கும். மனம் அப்போ ஒரு பரவசமான நிலைக்குப் போகும். அதுக்கு ஈடு இணையே கிடையாது. 

இசையால், கவிதையால், ஓவியங்களால், நகைச்சுவையால் நம் கவலைகளைப் போக்கிக்கொள்ள முடியும். இதையெல்லாம் கூடவெச்சுக்கிட்டு எப்போவும்  பிஸியாகவே இருந்தா, நமக்கு எந்த மனஅழுத்தமும் வராது. சும்மா இருப்பவர்களுக்குத்தான், எதையாவது நினைத்துக்கொண்டு, மனஅழுத்தம் உருவாகும்.

குழந்தைகள் தொடங்கி, பெரியவங்க வரைக்கும் எல்லோருடைய மனசையும் லேசாக்குவது, சிரிப்புதான். பூவுக்கு ஐந்து குணங்கள் உள்ளன. பூவுக்கு மென்மை, குளிர்ச்சி, அழகு, வாசனை, தேன் ஆகிய குணங்கள் உள்ளன. 

சிரிப்புக்கும் ஐந்து குணங்கள் உல்லன. சிரிப்பு, டென்ஷனைப் போக்கும். நண்பர்களை உருவாக்கும், எதையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றும், சோகமாக இருந்தால், சோகத்தைக் குறைக்கும். மகிழ்ச்சியாக இருந்ததால், அதை அதிகமாக்கும்.
மகிழ்ச்சியால், இறை வழிபட்டால், நூல்களை  வாசிப்பதால், அற்புதமான பயணங்களால்  நம் மனஅழுத்தத்தைப் போக்கிக்கொள்ளலாம். 

முயற்சி, பயிற்சி  இரண்டும் றெக்கைகளாக இருந்தால் எந்த வானத்தையும் நோக்கிப் பறக்கலாம். இரண்டையும் துடுப்புகளாக்கி எந்த ஆழ்கடலையும் கடக்கலாம். மனக்கடலில் அழுத்தம் ஏற்படும்போது அதன் அலைகள் நம்மை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், வாசியுங்கள், நேசியுங்கள், சிரியுங்கள், சிரிக்கவையுங்கள், மகிழுங்கள், மகிழவையுங்கள்... நோ டென்ஷன்கு.ஞானசம்பந்தனின் மன அழுத்தம் போக்கும் வழிகள் பற்றி அவரது குரலிலேயே கேட்டு மகிழுங்கள்.