Published:Updated:

"புற்றுநோய் விழிப்புஉணர்வு ஆண்களுக்குத்தான் அதிகம் தேவை’’ புற்றுநோயிலிருந்து மீண்டெழுந்த ராதிகா சந்தானகிருஷ்ணன் #CancerAlert

"புற்றுநோய் விழிப்புஉணர்வு ஆண்களுக்குத்தான் அதிகம் தேவை’’ புற்றுநோயிலிருந்து மீண்டெழுந்த ராதிகா சந்தானகிருஷ்ணன் #CancerAlert
"புற்றுநோய் விழிப்புஉணர்வு ஆண்களுக்குத்தான் அதிகம் தேவை’’ புற்றுநோயிலிருந்து மீண்டெழுந்த ராதிகா சந்தானகிருஷ்ணன் #CancerAlert

`புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதன் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும்..?’ - இந்தக் கேள்வியை நம்மில் சிலரிடம் கேட்டுப் பார்த்ததில், வந்த பதில்கள்... 'கீமோதெரபி சிகிச்சை, ரேடியோதெரபி சிகிச்சை செய்வாங்க’, `புற்றுநோய்க்கான சிகிச்சைகள் ரொம்பக் கஷ்டமானதா இருக்கும்', `சிலர் பிழைக்கறதும் உண்டு, பலர் பிழைக்கிறதில்லை...', `புற்றுநோய்க்கான அறிகுறிகள்னா ரத்த வாந்தி எடுப்பாங்க, ரொம்ப மோசமா இருமுவாங்க’, `வயிற்றுப் பகுதியில வலி அதிகமா இருக்கும்'... இப்படி எல்லாமே மேலோட்டமான பதில்கள்! திரைப்படங்களும் புற்றுநோய் குறித்து இதுபோன்ற பிம்பத்தைதான் சித்திரித்துவருகின்றன.

ஆக, புற்றுநோய் குறித்த சரியான புரிதல் நம்மிடையே இல்லை என்பதே உண்மை. இன்றைக்குப் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்கள் பலர். ஆனால், புற்றுநோய் குறித்த சரியான புரிதலின்றி, தாமதமான சிகிச்சையால் இறந்தவர்களே அதிகம். புற்றுநோய் விழிப்புஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி 'உலக புற்றுநோய் தினம்' அனுசரிக்கப்பட்டுவருகிறது.

`புற்றுநோய் குறித்த புரிதல் இல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களே’ என்கிறார்கள் மருத்துவர்கள். வீடு, குடும்பம்... என சுற்றத்துக்காகவே உழைக்கும் பெண்கள், தங்களை கவனித்துக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. பெண்கள் மத்தியில் இது குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்த பல தன்னார்வு அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. அப்படிப்பட்ட அமைப்புகளில் ஒன்று, 'பெண் நலம்.' அரசு சாரா அமைப்பு. அதன் நிறுவனர் ராதிகா சந்தானகிருஷ்ணன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டவர்.

அழகான குடும்பம்... பிஸியான தொழிலதிபர்... அன்பான சுற்றம்... என மகிழ்ச்சியை மட்டுமே சுமந்து, சுழன்றுகொண்டிருந்தார் ராதிகா. அப்போதுதான் ஒருநாள் இடி ஒன்று இறங்கியது. ஏதோ ஒரு பிரச்னைக்காக மருத்துவமனைக்குப் போனார். பரிசோதனை செய்யச் சொன்னார்கள். பரிசோதனைக்குப் பிறகு 'உங்களுக்கு மார்பகப் புற்றுநோய்' என்று மருத்துவர்கள் சொல்ல, ஆடிப்போனார் ராதிகா. இப்படி ஒரு பிரச்னை என்று தெரிந்ததும், சராசரிப் பெண்ணுக்கான அத்தனை பயங்களும் பதற்றங்களும் அவருக்குள் எழுந்தன. 'இத்தனை திருப்தியான, மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுத்த கடவுள், இவ்வளவு சீக்கிரம் நம்மை அழைத்துக்கொள்ளப் போகிறானா? இதற்காகவா நாம் பிறந்தோம்...’ மனதுக்குள் குமைந்து போனார். ஆரம்பத்தில், `புற்றுநோய் வந்துவிட்டதா, நாம் இறந்துவிடுவோம்’ என்றுதான் அவரும் நினைத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் மார்பக அறுவைசிகிச்சை நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது. அதோடு, மகளிர் நல மருத்துவர் சுஜாதா ரஜினிகாந்த், கதிரியக்க நிபுணர் சரோஜினி பிரஹலாத், கீதா மோகன் எனப் புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வை தொடர்ந்து ஏற்படுத்திவரும் பல நல்லவர்களும் அவருக்கு அறிமுகமானார்கள். அவர்கள் எல்லோருமே ராதிகாவுக்கு முதலில் கொடுத்தது தைரியம்... புற்றுநோயை எதிர்கொள்ளும் துணிச்சல். மெள்ள மெள்ள மார்பகப் புற்றுநோய் குறித்த விளக்கங்களையும், அறிவுரைகளையும் சொன்னார்கள். தனக்கு வந்த அந்தப் பிசாசை எதிர்த்துப் போராடத் தயாரானார் ராதிகா. விதவிதமான சிகிச்சைகள், அவை ஏற்படுத்திய வலிகள், அந்தச் சமயத்திலும் அன்பையும் பரிவையும் வாரி வழங்கிய அன்பு உள்ளங்கள், மருத்துவ ஆலோசனைகள்.. எனக் காலம் உருண்டோடியது. 2009-ம் ஆண்டு, புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுதலை பெற்று, பூரண நலத்துடன் மீண்டுவந்தார் ராதிகா. அதே ஆண்டில் `பெண் நலம்’ அமைப்பைத் தொடங்கினார். `எந்தப் பெண்ணும் புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வில்லாமல் இருக்கக் கூடாது’ என்று களத்தில் இறங்கியவர், இதுவரை இரண்டு லட்சம் பெண்களைச் சந்தித்திருக்கிறார்.

``புற்றுநோயைக் கடந்து வருவது ரொம்பக் கடினமான ஒன்றுதான். ஆனால், முடியாதது அல்ல’’ என்கிறார் இந்த நம்பிக்கை மனுஷி. "பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், முக்கியமானவை மார்பகப் புற்றுநோயும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயும்தான். எங்களுடைய எல்லா விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளும் இவை தொடர்பானதாகவே இருக்கும்." என்றார். ராதிகா சந்தானக்கிருஷ்ணனின் `பெண் நலம்’ பல சேவைகளைச் செய்து வருகிறது. 'ஶ்ரீ தன்வந்திரி அறக்கட்டளை' (Sri Dhanvantri Trust) என்ற பெயரில், அரசு சாரா அமைப்பு ஒன்றை நடத்திவருகின்றனர். "மார்பகப்புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு. ஆரம்பநிலையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடித்துவிட்டால் முற்றிலுமாக குணப்படுத்திவிட முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க, தடுப்பூசிகள் இருக்கின்றன. இவை குறித்து அறியாமல் இருப்பதுதான், நம் பெண்களின் பலவீனம். `பெண் நலம்’ சார்பில், இதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்துகிறோம். அதோடு, இலவச ஆரம்பக்கட்ட கண்டறிவு பரிசோதனைகள், மேமோகிராம், பாப் ஸ்மியர் (Pap Smears), கால்போஸ்கோபி (Colposcopy) போன்ற பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் செய்துவருகிறோம். புற்றுநோய் பாதிப்பு உறுதியாகிவிட்டால், அதற்கான சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் அளிக்கிறோம்; புற்றுநோய் சிகிச்சையின்போது கவுன்சலிங்கும் (Post Treatment Care) தருவோம்" என்கிற ராதிகாவிடம், ``உங்களால் மறக்க முடியாத அல்லது நெகிழ்வான சம்பவம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்...’’ என்று கேட்டோம்.

``நிறைய நிகழ்வுகள் இருக்கு. ஒரு பள்ளிக்கு ஆசிரியர்களுக்குப் புற்றுநோய் விழிப்புஉணர்வு கொடுக்குறதுக்காகப் போயிருந்தோம். போகும்போதே புற்றுநோய் கண்டறியும் சாதனங்களையும் எடுத்துட்டுப் போயிருந்தோம். எங்க நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு, ஒரு எட்டாம் வகுப்புப் படிக்கிற பொண்ணு அவங்க அம்மாவை எங்ககிட்ட கூட்டிட்டு வந்தா. `அம்மா உனக்கு ஏதோ கட்டி இருக்குனு அன்னைக்கு பாட்டிக்கிட்ட சொன்னியே... இவங்ககிட்ட சொல்லும்மா' என்றாள். ஒரு நிமிஷம் எங்களுக்கு எதுவுமே புரியலை. சுதாரிச்சுட்டு அவங்க அம்மாகிட்ட விசாரிச்சோம். அப்போ அவங்களோட மார்பகத்துல இருக்குற மாற்றத்தை எங்ககிட்ட சொன்னாங்க. பரிசோதிச்சு பார்த்ததுல, அவங்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆரம்பநிலையில இருக்குறது தெரிஞ்சுது. அவங்க குடும்பத்துல இருக்குற மற்ற பெண்களையும் செக் பண்றோம், கூட்டிட்டு வாங்கனு சொன்னோம். பரிசோதிச்சுப் பார்த்ததுல அவங்க அம்மாவுக்கும் இந்தப் பிரச்னை இருக்கறது தெரிஞ்சுது. இரண்டுபேருக்குமே ஆரம்பநிலைதான் அப்படிங்கிறாதால, சிகிச்சை கொடுத்து சில மாதங்களிலேயே அவங்களை குணப்படுத்திட்டோம். இப்போ ரெண்டு பேரும் ஃபைன் அண்ட் குட். புற்றுநோய்கான அறிகுறிகளை அறிந்துகொண்டு, முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டால் எளிதாகக் குணப்படுத்திடலாம்.

9 - 19 வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து இருக்கு. மூணு வருஷத்துக்கு ஒருமுறை அது கொடுக்கப்படணும். நவீனமாகி வரும் மருத்துவத் துறையில, புற்றுநோயைக் கண்டுபிடிக்கறதுக்கான சாதனங்களும் அதிகமாகியிருக்கு. `மேமோகிராம்’ (Mamogram) கருவி மூலம், முதல்கட்டத்துலேயே புற்றுநோயைக் கண்டுபிடிச்சுடலாம். புற்றுநோய் இருக்குன்னு சந்தேகம் வந்தா, அருகிலுள்ள மருத்துவரிடம் முதலில் இந்த டெஸ்ட்டை எடுத்துக்கணும். குறைந்தபட்சம் இரண்டு வருஷத்துக்கு ஒருமுறையாவது, பெண்கள் தங்களின் உடலை முழுசாப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பல ஆண்களின் வெற்றிக் கதைகளுக்குப் பின்னாலிருந்த பெண்கள், தங்களுடைய சொந்தக் கதையில் இரண்டாம் கட்ட கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள். இது மாற வேண்டும். இதில், பெண்களைவிட ஆண்களே அதிக அக்கறை கொள்ள வேண்டும்" என்கிறார் ராதிகா. ஆக, ஆண்களுக்குத் தங்கள் வீட்டுப் பெண்கள் குறித்த அக்கறை அவசியம். பிரச்னை என்றால் மட்டும் மருத்துவமனையைத் தேடி ஓடாமல், அவ்வப்போது அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டியதும் அவசியம். `புற்றுநோய் வந்துவிட்டதே...’ என்று மிரண்டு, சுருங்கிப்போவதில் அர்த்தமில்லை. அதையும் எதிர்த்து நின்று போராடுவதில்தான் வாழ்க்கைக்கான அர்த்தம் இருக்கிறது. `எழுந்து போராடுங்கள். உங்கள் கரத்தை பற்றிக்கொள்ள இங்கு ஏராளமான நல் உள்ளங்கள் இருக்கின்றன’ என்பதே ராதிகா சந்தானகிருஷ்ணன் நமக்கு உணர்த்தும் செய்தி!

மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்...

மார்புப் பகுதியில் கட்டி ஏற்படும்.

மார்பில் உள்ள தோல்களில் மாற்றம் தெரியும்.

மார்பின் காம்புப் பகுதியிலிருந்து இயல்புக்கு மீறி ஏதாவது சுரப்பது.

அக்குள் பகுதியில் வியர்த்துக்கொண்டே இருப்பது.

மார்பின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்கான அறிகுறிகள்...

மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்படுவது.

மெனோபாஸுக்குப் பிறகும், அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது.