Published:Updated:

சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!

சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!
சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!

ண்ணீரை விலைகொடுத்து வாங்குவோம்’ என்று அதை ருசித்து, சிலாகித்த கடந்த தலைமுறையினர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ’என்னது… தண்ணீர் இலவசமாகக் கிடைத்ததா?’ என்று வருங்கால தலைமுறையினர் ஆச்சர்யப்படுவதற்கான வாய்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. அவசர நிலையில், `தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க’ நீங்கள் பிரயத்தனப்பட்டாலும், விலைகொடுத்துதான் தண்ணீரை வாங்க வேண்டும். 

சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!

அடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், விலைகொடுத்தால்கூட தண்ணீரை வாங்க முடியாத சூழல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. தண்ணீரே இல்லாத உலகின் முதல் பெருநகரமாக தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) மாறவிருக்கும் செய்தி மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கையைச் சீரழிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், கேப் டவுனின் நிலைமை நம் நாட்டு பெரிய டவுன்களிலும் ஏற்படலாம். ’மூன்றாம் உலகப் போருக்கான காரணம் தண்ணீராகத்தான் இருக்கும்’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூக்குரலிடுவதும் விரைவில் நடந்துவிடுமோ என்ற எண்ணம் ஏற்படத்தான் செய்கிறது.

என்ன ஆனது கங்கைக்கு?

ஒரு காலத்தில் நோய்களைப் போக்கும் மருத்துவக்கூறுகளைக் கொண்டிருந்தது கங்கை நதிநீர். ஆனால் இப்போது, கங்கையைத் தூய்மைப்படுத்த, பல்லாயிரம் கோடி ரூபாயை வருடா வருடம் பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டிய நிலைமை. ’இந்த ஆண்டுக்குள் கங்கை தூய்மையாகிவிடும்’ என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்! முறையாகத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத சூழலில், இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மலக்கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளும் தொடர்ந்து கங்கையை கலங்கடித்துக்கொண்டேதான் இருக்கின்றன. 

`கங்கையில் தலைமுழுகினால் பல்வேறு பாவங்கள் (நோய்கள்) நீங்கிவிடும்’, `கங்கை நீரைப் பருகுவது நோய்களுக்கான மருந்து’… என்றெல்லாம் இனிமேல் சொல்ல முடியாது. சில பகுதிகளில் பாயும் கங்கை நீர், `குளிப்பதற்குக்கூட உகந்ததல்ல’ என எச்சரிக்கிறது ‘Central Water Commission.’ கங்கை நதியிலிருக்கும் பாக்டீரியாக்களின் அளவு, நிர்ணயிக்கப்பட்டதைவிட ’ஆறிலிருந்து அறுபதல்ல,’ ஆறிலிருந்து முன்னூற்று அறுபது வரை அதிகமாக இருக்கிறதாம். எங்கே போனது கங்கையின் புனிதம்?

சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!

நுரை கக்கிய நொய்யல்!

தென் மாநில ஆறுகளை எடுத்துக்கொள்வோம். `வெண்ணுரையாய்ப் பொங்கியது ஆறு’ என்று தண்ணீரின் இயற்கைப் பிரவாகத்தைக் குறிக்க, பழங்காலப் புலவர்கள் அழகாகப் பாடினார்கள். ஆனால் இன்றோ, தொழிற்சாலைக் கழிவுகளால் நொய்யல் ஆறு, ’வெண்ணுரையாய்ப் பொங்கி வழிந்தது’ அனைவருக்கும் நினைவிருக்கலாம். ’நுரைக்கான காரணம் ரசாயனக் கழிவுகள் அல்ல, சோப்பு மட்டும்தான்’ என்று அதிகாரிகள் மக்களை சமாதானம் செய்தது, அவ்வளவு சீக்கிரம் மனதைவிட்டு அகலாத காமெடி. 

பாலாற்றிலும் காவிரியிலும் மணல் கொள்ளை, தாமிரபரணியில் பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளை... என தண்ணீர் சார்ந்த இயல்புகள் சுரண்டப்படுகின்றன. ஆற்றுநீர்ப் பாசனம் தாண்டி, ஊற்று நீரையும் விவசாயத்துக்கு உபயோகித்து பலனடைந்தவர்கள் நாம். ஆனால் மணல் கொள்ளையால், மணலுக்கு அடியில் ஊற்று நீர் பெருக்கெடுப்பதற்கு வழியே இல்லாமல் போய்விட்டது. ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதால், மக்களுக்கு மட்டுமன்றி சுற்றுச்சூழல் எனும் ஆன்மாவுக்கும் எவ்வளவு நோய்கள் உண்டாகின்றன? மாசடைந்த வண்ணக் குடிநீரால் தோல் நோய்கள், சுவாசப் பிரச்னைகள், புற்றுநோய்கள் மனிதர்களை பீடிக்கின்றன. நீர் ஆதாரம் அனைத்தும் விஷமாவதால், சூழல் சமநிலை பாதிக்கப்பட்டு, நீர் சார்ந்த மேலும் புது நோய்கள் பிறப்பெடுக்கலாம். 

சில மாதங்களுக்கு ஒரு முறை `கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது’ என்று தலைப்புச் செய்தி வந்துக்கொண்டேதான் இருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழித்ததற்கும் நாம்தான் காரணம், சுற்றி நடக்கும் அரசியல் சூழல் மோசமானதற்கும் மக்களாகிய நாம்தான் காரணம். குளங்களைக் காணவில்லை… ஆறுகளின் எல்லைப்பரப்பும் குறைந்துக்கொண்டே வருகின்றன… கிணறுகளுக்கு வாய்ப்பில்லை… கிடைக்கும் நீராதாரத்தைச் சேமிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிட்டன… அடுத்த தலைமுறைக்கு எதைக் கொடுக்கப் போகிறோம்?! 

தண்ணீர் சார்ந்து இரண்டு முக்கியமான வேலைகளைச் செய்வதற்கான கட்டாயத்தில் இருக்கிறோம். ஒன்று, இயற்கையின் வரமான தண்ணீரைப் பாதுகாப்பது. இரண்டு, கிடைக்கும் நீராதாரத்தை இயற்கையான முறையில் சுத்திகரித்துப் பயன்படுத்துவது! தண்ணீர் வளங்களைப் பாதுகாக்க மேற்சொன்ன அரசியல் ஆட்டங்கள் மாற வேண்டும், புவியின் மேல் அக்கறைகொண்ட அனைவரும் கைகோர்த்து இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்துக் குரல்கொடுக்க வேண்டும். 

சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!

தண்ணீரை சுத்திகரிக்க...

இயற்கையான ஆறுகளிலும் குளங்களிலும் குப்பைகளையும் கழிவுகளையும் அதிகளவில் கலக்கச் செய்து, நீர்நிலைகளை அசுத்தப்படுத்திவிட்டோம். நீரைச் சுத்திகரிக்காமல் நேரடியாகப் பயன்படுத்தும் வழக்கம் இப்போது பழங்கதை. வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை. இன்றையச் சூழலில்

அப்படி செய்ய முடியுமா? 

கேன் தண்ணீரை எவ்வளவு நாள்கள் வைத்திருந்து அருந்தலாம் என்பதை யார் கண்காணிப்பது? `மினரல் வாட்டர்’ என்ற பொதுப் பெயரால் வழங்கப்படும் பாட்டில் தண்ணீரில், இயற்கையான கனிமப் பொருள்கள் இருக்கின்றனவா... மினரல்களின் அளவுகள் முறைப்படுத்தப்படுகின்றனவா... இல்லையெனில், நமது உடலில் மினரல்களின் அளவு அதிகரித்து பாதகங்களை உண்டாக்காதா? கவலைப்பட வேண்டாம். உயிரற்றச் சக்கைதான் வணிக நிறுவனங்களால் முன்னிலைப்படுத்தப்படும் மினரல்வாட்டர். மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். `மினரல் வாட்டர்’ என்று சொல்லப்படுவது சுத்திகரிக்கப்பட்ட நீர். இயற்கையான கனிமங்கள் நீக்கப்பட்ட நீர். கடைகளுக்கு முன்னர் வெயிலில் தவம்கிடக்கின்றன பிளாஸ்டிக் கேன்கள். வெப்பம் காரணமாக அவற்றிலிருக்கும் நெகிழிப் பொருள்கள் தண்ணீரில் கலப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எப்படி காபி, தேநீரை பிளாஸ்டிக் டம்ளர்களில் சூடாகத் தொடர்ந்து குடிக்கும்போது பாதிப்புகள் ஏற்படுமோ, அப்படித்தான் சூரிய ஒளியில் காயும் கேன் தண்ணீரும் ஏற்படுத்தும். ஒரு கேள்வி அனைவரது மனதிலும் இனி உதிக்க வேண்டும்… `இயற்கை வழங்கிய நீர் ஆதாரத்தை கூவிக்கூவி விற்பதற்கு இவர்கள் யார்?’

சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!

வெந்நீர் செய்யும் மாயம்!

மிகப் பெரிய புட்டிகளில் கிடைக்கும் தண்ணீர் அல்லது வீட்டிலேயே இயந்திரம்வைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான் இப்போதைக்கு தண்ணீருக்கான மூலதனமாகப் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. எது எப்படியோ நோய்களிலிருந்து தப்பிக்க தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவேண்டியது மிக அவசியம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல்வலி போன்றவை நீங்கி, நீண்ட ஆயுள் உண்டாகும் என்பதை ”மீண்டுசுரம்வாதம்… மந்தம்… பொருமலும் போம்… ஆயுளுண்டாகும்” என்ற பதார்த்த குண சிந்தாமணி பாடல் உணர்த்துகிறது. எக்காரணத்தைக் கொண்டும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த தண்ணீரை அருந்த வேண்டாம். குளிர்ச்சியாகத் தண்ணீர் பருக ஆசைப்படுபவர்கள் மண்பானையில் தண்ணீரைச் சேமித்துவைத்துப் பருகலாம். குளிர்ச்சி தருவதோடு சேர்த்து, நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு. 

சுத்தமான தண்ணீர் வேண்டுமா..? சில இயற்கை `மினரல் வாட்டர்’ வழிமுறைகள்!

தண்ணீரைப் பயன்படுத்த சில ஆரோக்கிய வழிமுறைகள்!

* பிளாஸ்டிக் குடங்களைத் தூக்கி வீசிவிட்டு, பழங்காலத்தில் நீரைச் சேமிக்கப் பயன்படுத்திய செம்புக் குடங்களின் ஆதரவு தேடுவோம். நீரிலிருக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் திறன் செம்புக்கு உண்டு. 

* நீரைக் கொதிக்கவைத்த பின்னர், நெல்லிக்கனிகளையும் சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊறவைத்துப் பருகலாம் அல்லது தண்ணீரைக் காய்ச்சும்போதே சீரகத்தைப் போட்டுக் கொதிக்கவைக்கலாம். நெல்லி ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண்சத்துக்கள் தண்ணீரின் நோய் போக்கும் தன்மையைப் பன்மடங்கு அதிகரிக்கும். உணவைச் செரிப்பதற்கும் சீரகநீர் உதவும். 

* தேற்றான் கொட்டைகளை நீரில் போட்டுவைக்கலாம். தேற்றான் ஊறிய நீர், உடலுக்கு மிகுந்த பலமளிக்கும். 

* கருங்காலி வேர்ப்பட்டை, பதிமுகம் எனப்படும் சாயமரப்பட்டைகள் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு, கொதிக்கவைத்துப் பயன்படுத்தலாம். கேரள மாநிலத்தில், பல இடங்களில் குடிநீர் இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்படுவதைப் பார்த்திருக்கலாம். அதற்குக் காரணம் பதிமுகம்தான். பதிமுகத்துக்கு தோல் நோய்களைப் போக்கும் தன்மையும், கிருமிகளை அழிக்கும் குணமும் இருக்கின்றன. 

* வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக்கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும்; நீருக்குச் சுவையும் கூடும். 

ஒருவாரத்துக்கு மேற்சொன்ன முறைகளை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். அதற்குப் பிறகு தண்ணீரின் சுவைக்கும் வாசனைக்கும் அடிமையாகிவிடுவீர்கள்! மேற்சொன்ன மூலிகைகளில் உள்ள நுண்சத்துக்கள் சேர்ந்து உயிரூட்டம் கொடுக்கப்பட்ட நீர்தான் உண்மையான ’மினரல் வாட்டர்.’ தண்ணீரைச் சுத்தப்படுத்த எந்த நிறுவனத்தையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. உண்மையான ‘நமக்கு நாமே’ திட்டம் இதுவாகத்தான் இருக்கும்!