Published:Updated:

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?
பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

கம்ப்ளீட் அலசல்

பிரீமியம் ஸ்டோரி

“நான் டெய்லி நான்வெஜ் அயிட்டங்களா சாப்பிடுறேன். அரிசி, கோதுமையைத் தொடுறதே இல்லை. வெயிட் குறைஞ்சிருக்கேன்” என்றார் ஒருவர். “நான் ஏழு நாள் டயட் ஃபாலோ செய்தேன்... நல்ல வெயிட்லாஸ் ஆச்சு” என்றார் மற்றொரு நண்பர். இன்னொருவரோ “நான் பால்கூட எடுத்துக்கிறது இல்லை. நனி சைவத்துக்கு மாறிட்டேன். ஹெல்த்தியா ஃபீல் பண்றேன்” என்றார். இன்றைக்கு நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் பேசும் விஷயங்களில் டயட்டும் ஒன்றாகிவிட்டது. “நான் இப்போ டயட்ல இருக்கேன்” என்று சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. உடல் எடையைக் குறைக்க டயட், எடையை அதிகரிக்க டயட், கொழுப்பு அளவைக் குறைக்க டயட்... என நூற்றுக்கணக்கான டயட் உள்ளன. இப்படி எல்லோரும் எல்லா டயட்டையும் பின்பற்றலாமா... உண்மையில் எத்தனைவிதமான டயட்டுகள் உள்ளன... எந்தெந்த டயட் யார் யாருக்கு நல்லது? விரிவாகப் பார்க்கலாம்.

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

பேலியோ டயட்

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

சங்கர் ஜி, பேலியோ ஆர்வலர்

இது கார்போஹைட்ரேட் குறைவான அதிக நல்ல கொழுப்பைக்கொண்ட டயட். விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது, உண்டதைப் போன்று அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது வாழ்நாள் முழுமைக்குமான ஓர் ஆரோக்கியம் தரும் உணவு முறை.  எடைக்குறைப்புக்கான பிரத்தியேக டயட் அல்ல; இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும்.

பின்பற்றுவது எப்படி?


கலோரி அளவுக் கணக்கு எதுவும் இல்லை. முட்டை, இறைச்சி போன்றவற்றை வயிறு நிரம்பும்வரை சாப்பிடலாம். வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். பேலியோவில், கொழுப்பே நமது எரிபொருள். எனவே, கொழுப்பு நிறைந்த இறைச்சியே நல்லது. கொழுப்புக் குறைவான தோல் நீக்கப்பட்ட சிக்கன், லீன் கட் என்று சொல்லக்கூடிய உணவுகளைத் தவிர்த்து கொழுப்புடன் சேர்ந்த உணவுகளையே உண்ணவேண்டும். 

உணவுகளை எண்ணெயில் பொறிப்பதை அறவே தவிர்த்து, வேகவைத்தோ, கிரில் செய்தோ, அவன், வாணலியில் சமைத்தோ சாப்பிடலாம். சமையலில் நெய், வெண்ணெய், ஹைட்ரஜனேட் செய்யாத செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்,  நல்லெண்ணெய், எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், வெண்ணெய், நெய்,  சேர்த்துக்கொள்ளலாம். கடலை எண்ணெய், சூரியகாந்தி, ரைஸ்பிரான், கடுகு எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லியான டயட் என்றாலும் இதைப் பின்பற்றி, பலர் உடல் எடை குறைப்பு  செய்திருக்கிறார்கள். ரத்த சர்க்கரையை ஏற்றும் உணவுகள் அறவே தவிர்க்கப்படுவதால், டைப் 2 டயாபடிக் இருப்பவர்கள் ரத்த சர்க்கரை அளவுகள் நார்மல் அளவுக்குக் குறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஜி.எம் டயட்!


ஜெனரல் மோட்டார் நிறுவனம், தன் ஊழியர்கள் விரைவில் உடல் எடையைக் குறைப்பதற்காக ஏற்படுத்திய ஒரு டயட் முறை. அதிரடியாக எடை குறைக்க இது ஏற்ற முறை என்பதால், ஹாலிவுட் செலிபிரிட்டிகள் முதல் பலரும் இந்த டயட்டைப் பின்பற்றவே, தற்போது உலக வைரலாகி இருக்கிறது. இதை ஒரு கோர்ஸில் ஏழு நாட்களுக்குப் பின்பற்ற வேண்டும். மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். இந்த டயட் மூலம் 5-10 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும். மேலும், சருமம் பொலிவு பெறும்; உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கும்.

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

முதல் நாள்

பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாம். வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது. 

இரண்டாம் நாள்

காலையில் வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பின் காய்கறிகளைப் பச்சையாகவோ அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்தோ சாப்பிடலாம். முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து அதிகமாகச் சாப்பிடலாம்.

மூன்றாம் நாள்

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்க்கக் கூடாது.

நான்காம் நாள்

நான்கு டம்ளர் பால் மற்றும் ஆறு வாழைப்பழங்களைச் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்தான். இருப்பினும் ஜி.எம் டயட்டின்போது உடலில் சோடியத்தின் அளவு குறைவதால், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப் செய்து குடிக்கலாம்.

ஐந்தாம் நாள்


முளைகட்டிய பயறு, தக்காளி, பனீர் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். மேலும், சிக்கன் அல்லது மீல் மேக்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நாளில் ஒரு பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம்.

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

ஆறாம் நாள்

ஐந்தாம் நாள் பின்பற்றியதைப்போல முளைகட்டிய பயறு, காட்டேஜ் சீஸ், சிக்கன், மீல் மேக்கர் மற்றும் இதர காய்கறிகளைச் சாப்பிடலாம். தக்காளியைச் சேர்க்கக் கூடாது. வேண்டுமானால் சூப் குடிக்கலாம்.

ஏழாம் நாள்


பழச்சாறுகளையும், ஒரு பவுல் சாதம் அல்லது பாதி ரொட்டி மற்றும் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். முக்கியமாக, தண்ணீர் குடிப்பதை மறக்க வேண்டாம்.

ஏழு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

ஏழாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபி  குடிக்கக் கூடாது. பிளாக் டீ, பிளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

வீகன் டயட்

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

சரவணன், வீகன் நிபுணர்,
ஷரன் அமைப்பு.


இறைச்சியை மட்டும் இல்லாமல், விலங்கிலிருந்து கிடைக்கும் பால், முட்டை போன்ற பொருட்களையும் அறவே ஒதுக்கி வெறும் தாவர உணவுகளை உட்கொள்வதுதான் வீகன் டயட். `நனி சைவம்’ என்றும் `சுத்த சைவம்’ என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். இதுவும் வாழ்நாள் முழுமைக்குமான டயட் முறைதான்.

தாவர உணவுகளில் கொழுப்பு உண்டு. ஆனால், தேவையற்ற கொலஸ்ட்ரால் கிடையாது. இறைச்சி, முட்டை, பால் சாப்பிடும் போது நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. உடல் பருமன், இதயநோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதைத் தவிர்த்து, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் வீகனைப் பின்பற்றலாம்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இந்த டயட்டைப் பின்பற்றலாம். தாவர உணவுகளில்  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவுகளைச் சாப்பிடும்போதுதான் செரிமானப் பிரச்னை ஆரம்பிக்கிறது.

செரிமானக் கோளாறு களைத் தவிர்க்கவும், செரிமானக் கோளாறு இருப்பவர்களுக்கும் வீகன் டயட் ஏற்றது.

பின்பற்றுவது எப்படி?

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைககள், விதை வகைகள், உலர் பழங்கள், எண்ணெய் வித்துக்களைச் சாப்பிடலாம்.

வீகனில் பால்,  தயிர், மோர், வெண்ணெய் என அத்தனைக்கும் மாற்று உண்டு. பசும்பாலுக்குப் பதில் தேங்காய்ப்பால், பாதாம் பால், சோயா பால், வேர்க்கடலைப் பால் பயன்படுத்தலாம். பனீருக்குப் பதில் சோயா பனீர், முந்திரி சீஸ் பயன்படுத்தலாம். சோயா மற்றும் வேர்க்கடலைப் பாலில் இருந்து மோர் தயாரிக்க முடியும். காபி, டீக்குப் பதில் மூலிகை டீ, கிரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்தலாம். பாலில் இருந்து கிடைக்கும் கால்சியத்தைவிட எள்ளில் கிடைக்கும் கால்சியம் அதிகம். எனவே, தினமும் ஓர் எள்ளுருண்டை சாப்பிடலாம். இறைச்சிக்குப் பதிலாக காளான், சோயா டோஃபு சாப்பிடலாம்.

சமச்சீர் உணவு

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

குந்தளா ரவி, மருத்துவ உணவியல் நிபுணர்

உலகம் முழுவதும் மருத்துவர்களாலும், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன்களாலும் பரிந்துரைக்கப்படுவது, பேலன்ஸ்டு டயட் எனப்படும் சமச்சீர் உணவு. ஆரோக்கியமான மனிதர் ஒருவர் சைவம், அசைவம் என எந்தவொரு உணவு வகையையும் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். ஆனால், சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து என மூன்று சத்துக்களுமே நமக்கு மிகவும் முக்கியம். சமச்சீர் உணவுமுறைப்படி ஒருவர் அன்றாட உணவில் 60 - 65 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும், 15 - 20 சதவிகிதம் புரதச்சத்தும், 20 சதவிகிதம் வரை கொழுப்புச்சத்தும் இருக்க வேண்டும்.  தவிர, வைட்டமின்கள்,  ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுஉப்புகள், நுண்ணூட்டச் சத்துக்களும் உணவில் நிறைந்திருக்க வேண்டும். உடல்பருமன் உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள், அதிக உடலுழைப்பு அல்லது தீவிரமாக வொர்க்அவுட் செய்பவர்கள், இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் போன்றோருக்கு எந்தச் சத்து, எவ்வளவு சதவிகிதம் இருக்க வேண்டும் என்பது, அவரவரது உடல் எடை, உயரம் மற்றும் அவருக்கு இருக்கும் நோயை அடிப்படையாகக்கொண்டு சிறிதளவு மாறும். சமச்சீர் உணவின் சிறப்பே ஒருவருக்கு அனைத்துவிதமான சத்துக்களும் கிடைக்கும் என்பதுதான். உடலுக்குத் தேவையான சத்துக்கள் முழு அளவில் கிடைக்கும்போதுதான் உடலில் இருக்கும் எல்லாவிதமான உறுப்புகளும் நன்றாக வேலை செய்யும்.

சமச்சீர் டயட்டைப் பின்பற்றுவது எப்படி?

சமச்சீர் டயட்டைப் பொறுத்தவரையில் ஒரே வகை உணவை மட்டுமே தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கார்போஹைட்ரேட்டுக்கு அரிசி, கோதுமை என  எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

மாவுச்சத்தை மட்டும்கொண்ட பொருட்களை விழுங்கும்போதுதான் உடலில் சர்க்கரை அளவு ஏறும். சமச்சீரான உணவு எடுக்கும்போது, மாவுச்சத்தோடு புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் கிடைக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிறந்த டயட் இது.

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?

சில பிரபலமான டயட்கள்!

ஃப்ரூட்டேரியன் டயட்

பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். தானியங்கள், அசைவம், சமைத்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இந்த டயட்டைக் கடைப்பிடிப்பவர்கள் சிலர் உள்ளனர். நடைமுறையில் உடல் எடையைக் குறைப்பதற்காக, ஒரு நாள், மூன்று நாள், ஐந்து நாள் ஃப்ரூட்டேரியன் டயட்களை இயற்கை மருத்துவர்களின் அனுமதியோடு பலரும் கடைப்பிடிக்கிறார்கள்.

லாக்டோ-வெஜிடேரியன் டயட்  

தாவர உணவுகளையும், விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பால் பொருட்களையும் மட்டும் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். முட்டை, மீன், அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவார்கள்.

லாக்டோ-ஓவோ வெஜிடேரியன் டயட்

தாவர உணவுகள், பால், முட்டை ஆகியவற்றைச் சாப்பிடுவார்கள். ஆனால், மீன் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்ப்பார்கள்.

பெஸிடேரியன் டயட் 

தாவர உணவுகள், பால், முட்டை, மீனைச் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், இறைச்சி மற்றும் மீன் தவிர்த்த கடல்வாழ் உயிரினங்களைச் தவிர்த்துவிடுவார்கள்.

ஃபிளக்ஸிடேரியன் டயட்

நம்மில் பலர் கடைப்பிடிக்கும் டயட் இது. பால், முட்டை மற்றும் சைவ உணவு வகைகளைப் பிரதானமாகச் சாப்பிடுவார்கள். சீரான இடைவெளி விட்டு அல்லது எப்போதாவது முக்கிய நிகழ்வுகளில் மட்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது இந்த டயட் முறையின் ஸ்பெஷல்.

- இளங்கோ கிருஷ்ணன், பு.விவேக் ஆனந்த்

என்.எஸ்.முத்தையா, மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்

பேலியோ...ஜி.எம்...பேலன்ஸ்டு... எது பெஸ்ட் டயட்?ஆதி கால மனிதனுக்கு இருந்ததைப் போன்ற உடல் அமைப்போ, காட்டிலும் மேட்டிலும் ஓட வேண்டிய கடினமான வாழ்வியல் சூழலோ நமக்கு இல்லை. எனவே, பேலியோ டயட் பின்பற்றும்போது அதற்கேற்ப உடற்பயிற்சி செய்வது அவசியம். பேலியோவில்  கொழுப்புதான் எரிக்கப்படுகிறது. இது நீண்டகால அளவில் எவ்வளவு நல்லது என்பதற்கான ஆய்வுகள் இல்லை. எனவே, இதுபோன்ற புரட்சிகரமான டயட்முறைகள் சரி என்றோ தவறு என்றோ உடனடியாகச் சொல்ல முடியாது. சில ஆண்டுகள் பொறுத்திருந்து அதைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுபவர்களை ஆராய்ந்துதான் முழுமையாகச் சொல்ல முடியும். ஜி.எம் டயட் போன்றவற்றை அடிக்கடி செய்வதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றபடி சைவம்தான் சிறந்தது என்றோ அசைவம்தான் சிறந்தது என்றோ சொல்ல முடியாது. அசைவத்திலிருந்து கிடைக்கும் அமினோ அமிலங்களின் தரம் சைவ உணவுகளிலிருந்து கிடைப்பதைவிடவும் அதிகம். எனவே, அவரவர் உடல்வாகுக்கு, ஆரோக்கியத்துக்கு ஏற்ற அளவு உண்பதே சரி. நீங்கள் ஒல்லியாக, குண்டா என்பது அல்ல ஆரோக்கியமாக இருக்கறீர்களா என்பதே முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு