
முஷ்டி முத்திரை

கோபம் கட்டுக்கு அடங்காமல் வந்தால், இயல்பாக முஷ்டியை மடக்கிக் குத்திக்கொள்வோம். இதுவே, முஷ்டி முத்திரை. பஞ்சபூதங்களில் கட்டைவிரல் அக்னியைக் குறிக்கிறது. எனவே, தீ எனும் சக்தியால் மற்ற நான்கு சக்திகளை அடக்க முடிவதால் மனம் நிதானமாகி, உணர்வுகள் கட்டுப்படுகின்றன.
எப்படிச் செய்வது?
ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல்களை மடக்கி, உள்ளங்கைப் பகுதியில் வைத்து, கட்டைவிரலை நடுவிரலின் மேல் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும்படி அமர்ந்து, இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். நாற்காலியில் கால்கள் தரையில் பதியும்படி அமர்ந்தும் செய்யலாம். இருவேளையும் 15-30 நிமிடங்கள் வரை, வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

பலன்கள்
வயோதிகர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். அதனால் உண்டாகும் கோபம், எரிச்சலைப் போக்கும்.
கல்லீரலின் இயக்கத்தைத் தூண்டி, சீராகச் செயல்படவைக்கும்.
மனச்சோர்வு, களைப்பு, கோபம், டென்ஷன், கவலை, மனஉளைச்சல், பயத்தைப் போக்க உதவும்.
மனஅழுத்தம் இருப்பவர்களுக்குப் பசியின்மை மற்றும் அஜீரணப் பிரச்னைகள் ஏற்படும். இந்த முத்திரையைச் செய்துவர, அஜீரணம் சரியாகிப் பசி எடுக்கும்.
உணர்வுகளைக் கட்டுக்குள் அடக்கிவைத்து, எடுத்த காரியத்தைச் சிறப்புடன் செய்ய உதவிபுரியும்.
கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் செய்துவர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும், இதயக் கோளாறு கட்டுப்படும்.
பித்தப்பை, கணையம் ஆகியவற்றின் இயக்கத்தைச் சீர்செய்து, குடல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரிசெய்கிறது.
கோபம் வருகையில் இந்த முத்திரையைச்செய்தால், சுவாசம் வெளியே சீறிப் பாயாமல் படிப்படியாகக் கோபம் குறையும்.
- ப்ரீத்தி, படம்: எம்.உசேன்