Published:Updated:

கருணைக்கொலை... அதென்ன, ஆக்டிவ் எத்னேஸியா, பாஸிவ் எத்னேஸியா? #Euthanasia

கருணைக்கொலை... அதென்ன, ஆக்டிவ் எத்னேஸியா, பாஸிவ் எத்னேஸியா?  #Euthanasia
கருணைக்கொலை... அதென்ன, ஆக்டிவ் எத்னேஸியா, பாஸிவ் எத்னேஸியா? #Euthanasia

தீராத நோய் அல்லது முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர், தொடர் சிகிச்சைக்குப் பிறகும்  குணமடையாமல்  கடுமையான துன்பங்களை அனுபவித்தார்  என்றால் அவர் படும் துயரிலிரிந்து விடுவிப்பதற்காக செய்யப்படுவதே கருணைக்கொலை  (Euthanasia). கருணைக்கொலை தொடர்பாக இந்தியாவில் நெடுங்காலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. தீராத நோய்வாய்ப்பட்டு கடும் வலியை அனுபவித்து ஒருவரை கருணைக்கொலை செய்வது விடுதலையே என்று ஒரு தரப்பும், ஒரு உயிரை எடுக்க எவருக்கும் உரிமையில்லை... கருணைக்கொலை என்ற பெயரில் அப்படிச் செய்வது கொலைக்குச் சமமானது என்று இன்னொரு தரப்பும் குரல் கொடுத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

'தன்மானத்துடன் இறப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை, கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும். தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். அதே நேரத்தில் கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுக்க வேண்டும். கருணைக்கொலையை நோயாளியின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிர் பிரிய வைப்பதன் மூலம் செய்யலாம் என்கிறது அந்தத் தீர்ப்பு. 

தமிழகத்தில் முற்காலங்களில் கருணைக்கொலைகள் நடந்ததாக தகவல்கள் உண்டு. முதியவர்கள் வெகு நாள்களாக நோய்வாய்ப்பட்டு அவதியுற்றால்,  அதிகாலையில் அவர்களை எழுப்பி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, இளநீர் போன்ற குளிர்ந்த பானங்களைக் கொடுத்து மரணிக்கச் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் இருந்துள்ளது. இவை பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வந்ததில்லை. 

 முதன்முதலில் கருணைக்கொலையை அங்கீகரித்த நாடு நெதர்லாந்து.  பெல்ஜியம், கொலம்பியா, அமெரிக்கா, பின்லாந்து ஆகிய நாடுகளிலும் கருணைக் கொலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் கடுமையாக மறுக்கப்பட்டு வந்த கருணைக்கொலைக்கு தற்போது நீதிபதிகள் அனுமதியளித்திருக்கிறார்கள். 2005 -ம் ஆண்டு 'காமன் காஸ்' என்ற தொண்டு நிறுவனம் கருணைக் கொலையை அனுமதிக்கக் கோரி உச்சந்தீமன்றத்தில் மனு செய்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மனு, 2014 -ம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அடங்கிய சட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. 

மீண்டும் சில ஆண்டுகள் மரணித்துக் கிடந்த இந்த மனு, 2017 - ம் ஆண்டு அக்டோபர் 10 -ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சட்ட அமர்வு முன்பாக உயிர்பெற்றது. 

"கருணைக்கொலை அங்கீகரிக்கப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், ஒருவருக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சையை முடித்துக்கொள்ளவேண்டும் என்பதை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. மருத்துவ வாரியம் தான் தீர்மானிக்கவேண்டும் " என்று  மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா வாதிட்டார்.  தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் நேற்று இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. 

"இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது" என்கிறார் முதியோர் நல மருத்துவர் நடராஜன். அதேநேரம் கருணைக்கொலை செய்வதில் உள்ள பிரச்னைகளையும் அலசுகிறார்.  

" கருணைக்கொலை இன்னும் சட்டமாக்கப்படவில்லை. சட்டமானால், தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.  அதேசமயம், குணப்படுத்தமுடியாத புற்றுநோயாளிகள்,  கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள்   உடலளவில்

மிகவும் துயருகிறார்கள். அதனால் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம். சிலர் தாங்களாகவே விரும்பி இறக்கிறார்கள். இதற்காக, தனிப்பட்ட முறையில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று சிலர்  செய்துவருகிறார்கள். 

கருணைக் கொலையில், இரண்டு வகைகள் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, அதுவரை அளித்துவந்த சிகிச்சைகளை நிறுத்தி அவர்களை இறக்கச் செய்வது  'பேசிவ் எத்னேஸியா' (Passive Euthanasia). ஊசி அல்லது வேறு ஏதேனும் முயற்சியால் அவர்களை இறக்கச்செய்வது  'ஆக்டிவ் எத்னேஸியா'  (Active Euthanasia). 'பேசிவ் எத்னேஸியா'  பெரும்பாலான இடங்களில் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

முன்பைவிட, கருணைக்கொலைக்கான  தேவை  தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த சட்டம் உருவாக்கப்பட வேண்டும், கடுமையாகக் கண்காணிக்கப்படவேண்டும்.  ஒரு மருத்துவக் குழு ஏற்படுத்தி அவர்களின் அனுமதி பெற்றபிறகே கருணைக்கொலை செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும். " என்கிறார் மருத்துவர் நடராஜன்.

" ஒரு மனிதனுக்கு,  கௌரவமாக வாழ்வதற்கு எப்படி உரிமை இருக்கிறதோ  அதேபோல், கௌரவமாக இறப்பதற்கும் உரிமை உள்ளது. அதனால் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்க்கத்தக்கது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருப்பது பேசிவ் எத்னேஸியாவுக்குத் தான். இதை செயல்படுத்தும்போது, மருத்துவக் குழுவின் பரிந்துரை வேண்டும் என்றும்,  விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது  நீதிமன்றம்.  முடிந்தால், ஒவ்வொரு கருணைக்கொலைக்கும் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற ஓப்புதல் பெறவேண்டும் என்பதை அவசியமாக்கலாம். " என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர்  ரவீந்திரநாத்.