Published:Updated:

நோய்களை குணப்படுத்துமா 12 வகை காய்கறி வைத்தியம்? - வைரலான யூட்யூப் வீடியோ, உண்மை என்ன?

நோய்களை குணப்படுத்துமா 12 வகை காய்கறி வைத்தியம்? - வைரலான யூட்யூப் வீடியோ, உண்மை என்ன?
நோய்களை குணப்படுத்துமா 12 வகை காய்கறி வைத்தியம்? - வைரலான யூட்யூப் வீடியோ, உண்மை என்ன?

`காய்கறி வைத்தியம்' என்ற பெயரில் சமீபகாலமாக `யூட்யூப்' செய்தி ஒன்று உலவுகிறது. `12 வகையான நாட்டுக் காய்களைக்கொண்டு பல நோய்களைக் குணப்படுத்த முடியும்’ என்ற தகவலைச் சொல்லும் அந்த வீடியோவைப் பார்த்தோம்.   

`காய்கறி வைத்தியம்' என்ற தலைப்போடு தொடங்குகிறது வீடியோ. அதில் இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள். சென்னைப் புழுதிவாக்கத்தைச் சேர்ந்த அந்த மூதாட்டி சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர். காலில் ஏற்பட்ட புண்ணுக்காக அலோபதி மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார். மூதாட்டியைப் பரிசோதித்த டாக்டர், காலை அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். இந்தச் சூழலில் வாட்ஸ்அப் நண்பரான பெங்களூரைச் சேர்ந்த ஒருவர், `பச்சைக் காய்கறிகளைக் கொண்டு சர்க்கரைநோயைக் குணப்படுத்தலாம்’ என்று சொன்னதைக் கேட்டு, அதை முயற்சி செய்து பார்த்திருக்கிறார். 

பீர்க்கன்காய், புடலங்காயைத் தோலுடன் அரைத்து ஜூஸாக்கி, துணியில் வடிகட்டி உப்பு, மிளகு எதுவும் சேர்க்காமல் குடித்தாராம். இந்த ஜூஸை குடித்த 15-வது நாளிலேயே புண் ஆறிவிட்டதாம். இப்போது 10 மாதங்களாக அந்த ஜூஸைக் குடித்துவருகிறாராம். இப்படித் தொடர்ந்து குடித்ததால், சர்க்கரைநோய் கட்டுக்குள் வந்துவிட்டதாம். வயதான சூழலிலும் சமையல் வேலைக்குச் செல்கிறாராம் அந்த மூதாட்டி. இதேபோல் முருங்கை விதையின் உள்ளேயிருக்கும் பருப்பை எடுத்து, இரவு நேரத்தில் மாத்திரை சாப்பிடுவதுபோல் சாப்பிட்டதில் உடல் சோர்வு நீங்கிவிட்டதாம்.

அந்தப் பெங்களூர் நண்பர் சொன்னபடியே வெள்ளைக் கத்திரிக்காயைக் காம்பு நீக்கி, எலுமிச்சைப்பழத்தைத் தோலுடன் சேர்த்து அரைத்து ஜூஸாக்கி ஒரு வாரம் குடித்தாராம். இதில் சிறுநீரகக் கல்லும் கரைந்து போனதாம். 

கொத்தவரங்காயை கோவைக்காயுடன் சேர்த்து அரைத்து ஜூஸ் ஆக்கிக் குடித்துவந்தால் பக்கவாதம் சரியாகும் என்று கூறினாராம் அந்த நண்பர்.

பொதுவாகப் பீர்க்கன்காய், புடலங்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், கோவைக்காய், வெள்ளை கத்திரிக்காய், பாகற்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ போன்ற 12 காய்கறிகளைப் பச்சையாக ஜூஸாக்கிக் குடித்துவந்தால் நோய்கள் வருவதை தடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார் அந்தப் பெங்களூர்காரர். 

`வெறும் 12 காய்கறிகளைச் சாப்பிடுவதால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றுவிடலாம்’ என்று முன்வைக்கப்படும் இந்தத் தகவல் உண்மைதானா? - சென்னை அரும்பாக்கத்திலுள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி முதல்வர் மணவாளனிடம் கேட்டோம். 

``உணவு, சமச்சீராக இருக்க வேண்டும். அது சமைத்த, சமைக்காத உணவு என்று இருவேறாகப் பட்டியலிடப்படுகிறது. அப்படிச்

சாப்பிட்டால்தான் நம் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல அல்லாமல் குறிப்பிட்ட செய்திகளை, தான் கற்றுக்கொண்ட தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு அதைச் செய்யுமாறு சொல்வது சரியல்ல. 

இன்றைக்கு `காய்கறி வைத்தியம்’, `கீரை வைத்தியம்’, `பழ வைத்தியம்’, `தண்ணீர் வைத்தியம்’... என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். `ஒரு லிட்டர் நீர் குடித்தால் எல்லா நோய்களும் சரியாகிவிடும்’, `யோகா, அக்குபஞ்சர் செய்தால் நோய்கள் குணமாகிவிடும்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகள் சிலவற்றில் உண்மைத்தன்மை இல்லாமல் இல்லை. இவை எல்லாமே நோயைத் தீர்க்கவும், தடுக்கவும்கூடியவைதான். ஆனால் வெறும் காய்கறிகளையோ, முளைகட்டிய தானியங்களையோ, வெறும் பழங்களையோ சாப்பிடுவதால் மட்டுமே நோய்கள் குணமாகிவிடாது. 

முளைகட்டிய பயறுகளில் புரதச்சத்து இருக்கிறது. காய்கறிகளில் தேவையான வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. பழங்கள், காய்கறிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்து உண்டு. தேங்காயில் புரதம், கொழுப்புச்சத்துகள் இருக்கின்றன. எந்தக் காயையும் பழத்தையும் சரியான நேரத்தில், முறையாகச் சாப்பிடுவதால் தேவையான சத்துகள் கிடைக்கும்; நோய்கள் நீங்கும். மாறாக வெறும் பச்சைக் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது சரியல்ல. சில நாள்கள் மட்டும் சாப்பிடலாம். அதுவும் குறிப்பிட்ட அந்த 12 வகைக் காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது நல்லதல்ல; இது பரிந்துரைக்கத்தக்கதல்ல. இதனால் மற்ற காய்கறிகளில் உள்ள சத்துகள் நமக்குக் கிடைக்காமல் போகும். 


எடையைக் குறைப்பதற்காக 10 நாள்கள் தொடர்ந்து பழங்களைச் சாப்பிடுமாறு இயற்கை மருத்துவ அடிப்படையில் பரிந்துரைக்கிறோம். பழங்களில் மாவுச்சத்தும் காய்கறிகளில் தாதுச்சத்துகளும் நார்ச்சத்துகளும் இருக்கின்றன. சிலர் ஒருவகை சிகிச்சையில் வெறும் மண்ணை உடலில் பூசிக்கொள்ளும்படி சொல்வதுடன், மண்ணைச் சாப்பிடும்படியும் சொல்கிறார்கள். இதில் சில நன்மைகள் இருக்கின்றன என்றாலும் அது முழுமையாக எல்லோருக்கும் ஏற்ற சிகிச்சையாக இருக்காது.

ஒருவர் முட்டைக்கோஸ் சிகிச்சை செய்துகொள்கிறார் என வைத்துக்கொள்வோம். நாள்பட்ட வயிற்றுப்புண்களைக் குணப்படுத்த இந்தச் சிகிச்சை உதவும். மூன்று நாள்கள் முதல் ஒரு வாரம் வரை முட்டைக்கோஸைச் சாப்பிடலாம். ஆனால், இதே முட்டைக்கோஸ் மற்ற நோய்களைக் குணப்படுத்தாது. இதை எல்லாக் காலங்களில் சாப்பிடுவதும் சரியல்ல. இவையெல்லாம் இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில் இருக்கின்றன. என்றாலும், தகுதிவாய்ந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் இவற்றைச் சாப்பிடலாம். சிகிச்சையாகக் குறுகியகாலத்துக்கு மட்டுமே இவற்றை உட்கொள்ள வேண்டும்.’’ என்கிறார் மணவாளன்.