Published:Updated:

அம்மாவின் பிரேயர், பாபா கோயில், தியானம்... நடிகை தேவதர்ஷினி ஸ்ட்ரெஸ் குறைக்கும் வழிகள்! #LetsRelieveStress

தனது அபாரமான நகைச்சுவையாலும், முகபாவனையாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திறையில் நம்மைச் சிரிக்க வைக்கும் நடிகை தேவதர்ஷினி தனக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை எவ்வாறு போக்குகிறார் என்பது குறித்து விளக்குகிறார்.

அம்மாவின் பிரேயர், பாபா கோயில், தியானம்... நடிகை தேவதர்ஷினி ஸ்ட்ரெஸ் குறைக்கும் வழிகள்! #LetsRelieveStress
அம்மாவின் பிரேயர், பாபா கோயில், தியானம்... நடிகை தேவதர்ஷினி ஸ்ட்ரெஸ் குறைக்கும் வழிகள்! #LetsRelieveStress

'மர்ம தேசம்' தொடங்கி, டி.வி., சினிமா என எல்லாவற்றிலும் தன்  தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர் தேவதர்ஷினி. விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் நகைச்சுவை நடிகைகளில் மிக முக்கியமானவர். சைகாலஜியில் எம்.ஏ பட்டம் பெற்றவர், இப்போது கவுன்சலிங்கும் செய்துவருகிறார். தனக்கு ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் அனுபவங்களையும் அவற்றிலிருந்து விடுபட அவர் கையாண்ட வழிமுறைகளையும் விவரிக்கிறார்...


'`ஸ்ட்ரெஸ்ஸுங்கிறது ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு மாதிரி வரும்.  என் ஞாபகத்துல இருக்குற முதல் ஸ்ட்ரெஸ்ஃபுல் அனுபவத்தைச் சொல்றேன். அப்போ நான் ரெண்டாவது படிச்சிக்கிட்டு இருந்தேன்.
அன்னிக்கு என்னோட பிறந்தநாள். புது டிரெஸ் போட்டுக்கிட்டு, எல்லாருக்கும் கொடுக்கலாம்னு  சாக்லேட்டெல்லாம் எடுத்துக்கிட்டு ஸ்கூலுக்குக் கிளம்பிப்போனேன். அங்கே டீச்சர்ஸ்லாம் விஷ் பண்ணினாங்க. அவங்களுக்கு சாக்லேட் கொடுத்துட்டு என் கிளாஸுக்குப் போனேன். 

என்கூடப் படிக்கிற கிளாஸ்மேட்ஸ்ஸுக்கெல்லாம் சாக்லேட் கொடுக்கச்சொல்லி  மிஸ் சொன்னாங்க. முதல் வரிசைப் பசங்களுக்குக் கொடுக்கும்போதே, தட்டுல சாக்லேட் குறைய ஆரம்பிச்சிடுச்சு. எல்லாருக்கும் கொடுக்க முடியுமாங்கிற கேள்வி மனசுல தோணுச்சு. மனசுக்குள்ளேயே ஒவ்வொரு சாக்லேட்டாக எண்ணுறேன். குறைஞ்சுக்கிட்டே போகுது. ரெண்டாவது வரிசையிலிருந்தவங்களுக்குக் கொடுத்து முடிச்சேன். 

அடுத்து மூணாவது வரிசையில இருக்குறவங்களுக்குக் கொடுக்க சாக்லேட்டே இல்லை. எனக்கு ரொம்ப அவமானமாப் போயிடுச்சு. எப்பவும் கிளாஸ்  டீச்சர், கிளாஸ் ஸ்டூடன்ட்ஸுக்குக் கொடுத்து முடிச்சதுக்கு அப்புறம்தான் மத்த டீச்சர்ஸுக்குக் கொடுக்கிறது வழக்கம். ஆனால், அன்னிக்கி மத்த டீச்சர்ஸுக்கு முதல்லயே கைகொள்ளாத அளவுக்கு, நானே அள்ளி அள்ளிக் கொடுத்ததால வந்த வம்பு இது. 
எதுவும் பேசாம என் இடத்துல  போய் உட்கார்ந்துக்கிட்டேன். அன்னிக்கு ஸ்கூல்விட்டு வந்ததும், அம்மாகிட்டக்கூட சரியாப் பேசலை. ராத்திரியும் சரியாத் தூங்கலை. மறுநாள் ஸ்கூலுக்கே போகலை. வயித்துவலினு சொல்லிட்டேன். மறுநாளும் போகக் கூடாதுனு இருந்தேன். `வயிறு வலிக்குது’னு சொல்லவும், சூட்டுவலியா இருக்குமோனு அம்மா எண்ணெயையெல்லாம் எடுத்து தடவிவிட ஆரம்பிச்சிட்டாங்க. 

அப்புறம் அம்மா, மெதுவா கேட்டாங்க... ``உன் முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு. வயித்துவலி மட்டும் பிரச்னையாத் தெரியலையே... வேற என்ன காரணம்... சொல்லு.’’ ரெண்டு நாளாக மனசுக்குள்ளேயே போட்டு குமைஞ்சுக்கிட்டிருந்த விஷயத்தைச் சொல்லிட்டேன். அம்மா அவங்க ஆறுதல் சொன்னாங்க. ''இது ஒரு பெரிய விஷயமில்லை. இன்னிக்கும் சாக்லேட் வாங்கித் தர்றேன். கலர் டிரெஸ் இல்லைனா பரவாயில்லை. எல்லாருக்கும் கொடு''னு சொல்லி வாங்கிக் கொடுத்தாங்க. அப்போ ஏற்பட்ட அந்த அனுபவம் அப்படியே மனசுல தங்கிடுச்சு. 

இப்பவும் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு 20 பேர் சாப்பிடணும்னா 30 பேருக்கு ஆர்டர் பண்ணுவேன். கூடுதலா இருந்தால்கூடப் பரவாயில்லைனு சொல்லிடுவேன். 

படிக்கிற காலத்துல எக்ஸாம் டயத்துல ஸ்ட்ரெஸ் வரும். அது எல்லாருக்குமே வர்றதுதான். பெரிய அளவுல ஸ்ட்ரெஸ்னா எனக்கும் என் கணவர் சேத்தனுக்குமான லவ்தான். 'மர்ம தேசம்' டி.வி தொடர் ஷூட்டிங்கின்போதுதான் நாங்க நல்லா பழகக்கூடிய வாய்ப்பு கிடைச்சுது. ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டோம். 'மர்ம தேசம்' தொடர் ரெண்டு வருஷமாகி முடிவுக்கு வந்த நேரம் அது. 
லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம். ஆனா, ஒன்றரை மாசம் வரைக்கும் அதை அம்மாகிட்டே சொல்லவே இல்லை. அம்மாகிட்ட நான் எதையும் மறைச்சுவெச்சு பேசினதே இல்லை. இது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. பல முறை அம்மாகிட்ட சொல்லணும்னு சமையல்கட்டுக்குப் போயிட்டு சொல்லாமலே வந்துடுவேன். அப்போ எனக்கு வயசு 20தான் இருக்கும். அக்காவுக்கு 22 வயசு. அவ இருக்கும்போது எப்படி எங்க காதலைப் பத்திச் சொல்றது? மேலும் 'மர்ம தேசம்' தொடர்ல கிடைச்ச ஃப்ரெண்ட்ஸ் ஒவ்வொருத்தரையும் அம்மாவுக்கே நல்லா தெரியும். பலமுறை சேத்தன் வீட்டுக்கே லேண்ட் லைன்ல போன் பண்ணுவார். 
இப்போ மாதிரி செல்போன் எல்லாம் கிடையாது. அம்மாவே ரெண்டு நிமிஷம் பேசிட்டு என்கிட்ட கொடுப்பாங்க. அப்போ அவங்களை ஏமாத்துறோமேனு கவலையா இருக்கும். அந்த டயம் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லாக இருந்தது. 

சரி, இதை ரொம்ப நாளைக்கு இப்படியே விடக் கூடாது. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைப்பேன். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுல அம்மா இருக்கும்போது உண்மையைச் சொல்லிட்டேன். அம்மாவும் அக்காவுக்கு மேரேஜ் முடிச்சிட்டுத்தான் பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க. `அது எங்களுக்குப் பிரச்னை இல்லை. நாங்க பொறுமையாகவே பண்ணிக்கிறோம்’னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம்தான் மனசுலருந்து பாரம் குறைஞ்சுது. 'நானே அப்பாகிட்டயும் சொல்லி சம்மதம் வாங்கித் தர்றேன்'னாங்க அம்மா. அம்மா ஏத்துக்கிட்டதால நானே அப்பாகிட்ட தைரியமா விஷயத்தைச் சொல்லிட்டேன்.  

மத்தபடி வேலையில சில சமயம் ஸ்ட்ரெஸ் ஏற்படும். வெட்டியா உடகார்ந்திருப்போம். அப்போ யாரும் கால்ஷீட் கேட்க மாட்டாங்க. அப்போதான் ஏதோ ஒரு சீரியல்ல கமிட் ஆகியிருப்போம். உடனே வரிசையா படத்திலே  நடிக்கக் கூப்பிடுவாங்க. அந்த மாதிரிதான் 'காக்க காக்க' படத்துல நடிக்கறதுக்காக கௌதம் மேனன் ஆபிஸ்லருந்து அழைப்பு. எனக்கு எப்படியாவது மிஸ் பண்ணாம நடிக்கணும்னு ஆசை. என்ன பண்றதுனு தெரியலை. ரொம்பவும் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்.

பொதுவா ரொம்பவும் குழப்பமாவும் ஸ்ட்ரெஸ்ஸாவும் இருந்தா, என் அம்மாகிட்டே சொல்லுவேன். அது எனக்குப் பெரிய ரிலீஃபாக இருக்கும். அவங்களோட எண்ணம், பிரேயர் எல்லாமே எனக்கு சிறப்பாக வழி அமைச்சுக் கொடுத்திடும். குழந்தைகளுக்கு நல்ல வழி கிடைக்கணும்னா அம்மாதான் முதல் தெய்வம்.

ஸ்ட்ரெஸ் குறைய வேறு வழிகள்னா ஷெனாய் நகர்ல இருக்கிற பாபா கோயிலுக்குப் போவேன். அந்தக் கோயில் ரொம்பவும் அமைதியாக இருக்கும். அங்கிருக்கும் தியான மண்டபத்தில் போய் உட்கார்ந்து, கண்களை மூடி இருந்துட்டு எழுந்து வந்தாலே போதும். நல்ல ரிலீஃப் கிடைக்கும். அதை நீங்களே நிச்சயம் ஃபீல் பண்ண முடியும். 

நான் ஒரு சைக்காலஜி ஸ்டூடன்ட். இப்பவே என்னைத் தேடி வர்றவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்கிறேன். அதனால மனதை அமைதிப்படுத்தும் வழிகள் எனக்கு ஓரளவுக்குத் தெரியும். என் பொண்ணு நியதி பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அவ வீட்டுக்கு வந்துட்டா, அவளுடன் நான்  எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவேன். அவளும், என்னிடம் பல விஷயங்களை ஷேர் பண்ணிக்குவா. எப்பவுமே எதையுமே மனசுக்குள்ள போட்டு குமைஞ்சுக்கிட்டே இருக்கக் கூடாது.  நமக்கு மிகவும் நெருக்கமானவங்ககிட்ட சொன்னாலே பாதி சுமை குறைஞ்சுடும். ஸ்ட்ரெஸ் குறையணும்னா நம் பிரச்னைகளை வாஞ்சையுடன் கேட்கும் அன்பான காதுகள் தேவை.''