Published:Updated:

சூரியக் குளியல் அம்புட்டு நல்லது... வெயிலை வெறுக்க வேண்டாமே! #SunTanning

சூரியக் குளியல் அம்புட்டு நல்லது... வெயிலை வெறுக்க வேண்டாமே! #SunTanning

சூரியக் குளியல் ஒரு சிகிச்சையாகவே பல நாடுகளில் பார்க்கப்படுகிறது. இதன் பலன்களைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

சூரியக் குளியல் அம்புட்டு நல்லது... வெயிலை வெறுக்க வேண்டாமே! #SunTanning

சூரியக் குளியல் ஒரு சிகிச்சையாகவே பல நாடுகளில் பார்க்கப்படுகிறது. இதன் பலன்களைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

Published:Updated:
சூரியக் குளியல் அம்புட்டு நல்லது... வெயிலை வெறுக்க வேண்டாமே! #SunTanning

`ஏற்கெனவே வெயில் பொளந்து கட்டிக்கிட்டு இருக்கு... இதுல சூரியக் குளியலா? அட போங்கப்பா...’ என்பவர்களுக்கு ஒரு செய்தி! எக்கச்சக்கமான நன்மைகளை அள்ளித்தரக்கூடியது இந்தச் சிகிச்சை. அவை என்னென்ன தெரியுமா? வீக்கத்தைக் கரைக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; 16 வகையான புற்றுநோய்கள் வராமல் தடுப்பதுடன் அவற்றைக் குணப்படுத்தவும் உதவும். செலவே இல்லாத சூரியக் குளியல் தரும் பல்வேறு நன்மைகள் குறித்து விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஜெ.எம்.ஜெனிபர் டயானா... 

``நம் உடல் சூரிய ஒளியிலும் காற்றிலும் படுவதால் தோலின் நிறம் மாறும். இது இயல்பு. இதை அடிப்படையாகக் கொண்டு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அர்னால்டு ரிக்லி (Arnold Rikli) என்ற இயற்கை மருத்துவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மலைப்பகுதிக்குச் சென்று சூரிய ஒளி உடலில் படும்படி அமர்ந்து ஆராய்ச்சி செய்தார். அதற்காகப் பொதுமக்களின் உதவியையும் நாடினார். ஆராய்ச்சியில் நீர், காற்றைவிட சூரிய ஒளி சிறந்தது என்பதைக் கண்டறிந்தார். ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் எந்த உடல்நலக்குறைவும் இல்லாமலும் நோய் எதிர்ப்பாற்றலுடனும் வாழ சூரிய ஒளி ஒன்றே போதும் என்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து `ரிக்லி வில்லா' என்ற பெயரில் ஒரு மையத்தை ஆரம்பித்து, மரங்கள் சூழ நீச்சல் குளம் ஒன்றை உருவாக்கி, சூரியக் குளியல் சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். இதனாலேயே அவரை, `சன் டாக்டர்’, `சன் க்யூர் டாக்டர்’ என்றெல்லாம் அழைத்தார்கள்.
`சூரியக் குளியல் செய்வதால் நோய்களைத் தடுக்கலாம், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்’ என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் தெரியவந்திருக்கிறது. 1870- 75 காலகட்டங்களில்தான் சூரியக் குளியல் சிகிச்சை அளிப்பது குறித்த எழுத்துபூர்வமான தகவல் வெளியிடப்பட்டது. 

சூரியக் குளியல் (Sun Tanning) என்பது, அதிகச் சூரிய ஒளி படும்படி, குறைவான உடைகளை உடுத்திக்கொண்டு உடலைக் காட்டுவது.  இந்தக் குளியலால் `ஆன்டி-பாக்டீரியல்’ (Antibacterial) எனப்படும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடும் தன்மை, `ஆன்டிஃபங்கல் ப்ராப்பர்ட்டீஸ்’ (Antifungal properties) எனப்படும் பூஞ்சைகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மை கிடைக்கும். இதை உணர்ந்துதான் நம் முன்னோர் சூரிய வெளிச்சமும் காற்றும் வீட்டின் உள்ளே வரும்படி வீடு கட்டினார்கள். சூரிய ஒளியில் `விசிபிள் கதிர்கள்’ (Visibel rays), `இன்ஃப்ரா ரெட் கதிர்கள்’ (Infra red rays), `அல்ட்ரா வயலெட் கதிர்கள்’ (Ultra violet rays) என மூன்றுவிதமான கதிர்கள் உள்ளன. 
விசிபிள் கதிர்கள் கண்ணால் பார்க்கக் கூடியவை. இவற்றில் ஏழு நிறங்கள் (Rainbow) வெளிப்படும். பகல் நேரத்திலும் இது ஒளிரக்கூடியது. ஏழு நிறங்களில் நமது உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான நன்மைகள் உள்ளன. இதன் அடிப்படையில்தான் `நிற சிகிச்சை’ அளிக்கப்படுகிறது.

இன்ஃப்ரா ரெட் கதிர்கள் கண்ணுக்குப் புலப்படாதவை. அடர்ந்த சிவந்த நிறத்தில் காணப்படும். இவை நம் உடலில்பட்டு, உடலைத் தளர்ச்சியாக்கி, உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்களைக்  கரைக்கும்; வலியைக் குறைக்கும்.  

அல்ட்ரா வயலெட் கதிர்களும் கண்ணுக்குப் புலப்படாதவையே. இவை `வைட்டமின் டி'யை உற்பத்தி செய்யும். வைட்டமின் டி போதுமான அளவுக்குக் கிடைக்காததால் ஏற்படும் குறைபாட்டை `ரிக்கெட்ஸ்’ (Rickets) என்பார்கள். அதேபோல, அதிக நேரம் சூரியஒளியில் இருப்பவர்களுக்கு `மெலனோமா’ (Melanoma) என்ற நோய் வரும்.

இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சருமம் தொடர்பான மருத்துவ அழகுக்கலை நிபுணர்கள், `சூரிய ஒளியில் அதிக நேரம் இருக்காதீர்கள்’ என்று சொல்லி சன் ஃபோபியாவை (Sun phobia or helio phobia) உருவாக்கிவிட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளாக  இவர்கள் சொன்னதை நம்பிக்கொண்டு மக்கள் சன்ஸ்க்ரீன் லோஷன், சன் பிளாக்கர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். உண்மை என்னவென்றால், முன்பைவிட இந்த லோஷன்களைப் பயன்படுத்திய பிறகுதான் `மெலனோமா’ பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

சன்ஸ்க்ரீன்களில் அதன் சக்தி, `SPF' (Sun protection factor) என்ற அளவுகோலால் மதிப்பிடப்படுகிறது.  சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாதவர்களைவிட, SPF 15 அளவுள்ள சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தியவர்களுக்கே மூன்று மடங்கு அதிகமாகப் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் spf 30, spf 50. spf 100 என்ற அளவுகளில்கூட சன்ஸ்கிரீன் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. சன்ஸ்க்ரீன் லோஷன் பற்றி அதிக அளவில் விளம்பரம் செய்யப்படுவதால், மக்களும் அதை உண்மையென்று நம்பி வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

எய்ம்ஸ் தோல் மருத்துவத்துறை சார்பில்  மும்பை, ஹைதராபாத், கோவா, டெல்லி, புனே, கவுஹாத்தி. மதுரை ஆகிய 7 இடங்களில் வெயிலின் அளவு குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையுள்ள காலகட்டத்தில் வெயிலில்  290 - 320 நானோ மீட்டர் அளவு ஒளிக்கற்றையின் அளவு அதிகமாக இருப்பதும், வைட்டமின் டி அதிக அளவில் இருப்பதும் தெரியவந்தது. சுமார் 90 சதவிகித வைட்டமின் டி இந்த நேரத்திலடிக்கும் வெயிலில்தான் உற்பத்தியாகிறது. 
எய்ம்ஸ் நடத்திய மருத்துவ ஆராய்ச்சியில் பங்கேற்ற டாக்டர் உன்னிகிருஷ்ணன்  தனது ஆய்வறிக்கையில், `மழை மற்றும் குளிர் காலங்களில் வைட்டமின் டி கிடைப்பது கஷ்டம்’ என்று தெரிவித்திருக்கிறார். எனவே, கோடைக்காலத்தில் உடலை வெயிலில் காட்டி வைட்டமின் டி பெற்றுக்கொள்வது நல்லது என்றும் கூறியிருக்கிறார். 

11 மணி முதல் 1 மணி வரை  ஐந்து முதல் பத்து நிமிடங்கள் சூரியக் குளியல் செய்யலாம். வீடு திரும்பியதும், குளிர்ந்த நீரில் குளிக்கலாம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் எனக் குளியலை அதிகரித்துக்கொள்ளலாம். பொதுவாக காலை, மாலை நேரத்தில்தான் சூரியக் குளியல் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த நேரத்தில் சூரியக் குளியல் செய்வதால் தோலில் கருமை நிறம் படியாது என்றாலும், வைட்டமின் டி உள்ளிட்ட வேறு பயன்கள் எதுவும் கிடைக்காது.

சூரியக் குளியல் செய்யும்போது சில விஷயங்களில் கவனம் தேவை. உடலில் எரிச்சல், மயக்கம், சோர்வு ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். குளியல் முடித்ததும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். சூரியக் குளியலுக்கு  முன்னரும், பின்னரும் தலா இரண்டு கப் குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும். சன்ஸ்க்ரீன் லோஷன் பூசிக்கொண்டு சூரியக் குளியல் எடுக்கக் கூடாது. காருக்குள் இருந்துகொண்டே சூரியக் குளியல் எடுப்பதும் சரியான வழிமுறை அல்ல.

ஜன்னல் வழியாக உள்ளே சூரிய வெளிச்சம் வருகிறது என்று சொல்லிக்கொண்டு அதில் சூரியக் குளியல் எடுப்பதால் எந்தப் பயனும் கிடைக்காது.  சூரியக் குளியல் செய்யும்போது குறைந்த உடைகளையே அணிய வேண்டும். கை கால், மூட்டுகளில் வலி இருப்பவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். வியர்வை நன்றாக வெளியேறுவதன் மூலம் உடல் கழிவுகளும் வெளியேறும்.  

சூரியக் குளியல் பயன்கள்...

சூரியக் குளியல் செய்வதால்  கிடைக்கும் வைட்டமின் டி நமக்குப் பல்வேறு பயன்களைப் பெற்றுத்தரும். குறிப்பாக, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலில் ஏற்படும் வீக்கங்கள் குணமாக உதவும். எலும்பு மற்றும் சதைகள் வலுப்பெறும். கால்சியம் சத்தை உட்கிரகிக்க உதவும். தைராய்டு, எலும்புப் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும். பற்கள் வலுப்பெறுவதுடன் முடி வளரவும்  உதவும். உயர் ரத்த அழுத்தம் குறையும். சிறுநீரகம் செயல்பட உதவும். சரும நோய் உள்ளவர்கள் சூரியக் குளியல் எடுத்துக்கொண்டால் அது குணமாக உதவும். காயங்கள் விரைவாகக் குணமடையும்; உடலில் ஏற்படும் கொப்பளங்கள் கருகிவிடும். கர்ப்பிணிகளுக்குச் சோர்வு, அசதி, முதுகுவலி, வாந்தி போன்றவை ஏற்படாமல் தடுக்கும். குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்குக் கரு தங்க உதவும். பால் கொடுக்கும் தாய்மாருக்குப் பால் சுரக்க உதவும். மூட்டுகளின் உள்ளே ஏற்படும் வலியைக் குறைக்க உதவும். நுரையீரல், கணையம், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட 16 வகையான புற்றுநோயைத் தடுக்க உதவும். புற்றுநோய் வந்தாலும் அவற்றைக் குணப்படுத்த உதவும்’’ என்றார்.