Published:Updated:

``3, 4, 5 மூச்சுப் பயிற்சி... உடல், மனச்சோர்வைப் போக்கும்’’ அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் #LetsRelieveStress

மனது பாரமாக இருந்தால், என் பாட்டி சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்வேன் என்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அவை என்ன வார்த்தைகள் தெரியுமா?

``3, 4, 5 மூச்சுப் பயிற்சி... உடல், மனச்சோர்வைப் போக்கும்’’ அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் #LetsRelieveStress
``3, 4, 5 மூச்சுப் பயிற்சி... உடல், மனச்சோர்வைப் போக்கும்’’ அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் #LetsRelieveStress

க.பாண்டியராஜன்... தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு (ம) தொல்லியல் துறை அமைச்சராக இருப்பவர். 'மா ஃபாய்’ (Ma Foi Management Consultants) எனும் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர். மனிதவள மேம்பாட்டுத்துறையில் நீண்ட நெடிய அனுபவமிக்கவர். அவருக்கு மன அழுத்தம் தந்த தருணங்களையும், அவற்றை எப்படிக் கடந்து வந்தார் என்பதையும் இங்கே மாஃபா பாண்டியராஜன் விவரிக்கிறார்... 

``எனக்குச் சொந்த ஊர், சிவகாசி பக்கத்திலிருக்கிற விளாம்பட்டி கிராமம். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். அம்மாவுக்கு உதவியாக பாட்டி இருந்தாங்க. நான் முழுக்க முழுக்க பாட்டியோட அரவணைப்பில்தான் வளர்ந்தேன். அதனாலதான் எங்களோட டிரஸ்ட்டுக்குக்கூட `ஸ்வர்ணம்மாள் டிரஸ்ட்’னு அவங்க பேரைவெச்சிருக்கோம். 

மன அழுத்தம் தந்த வலி மிகுந்த தருணம்னா 1980-ம் வருஷம்தான். இப்போ மாதிரி 600 இன்ஜினீயரிங் காலேஜ் எல்லாம் அப்போ கிடையாது. தமிழ்நாடு முழுக்க வெறும் 16 காலேஜ்தான் இருந்தது. இன்ஜினீயரிங் சீட் கிடைக்கிறதெல்லாம் குதிரைக்கொம்பாக இருந்த காலம் அது. 

அப்போ நான் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி இன்ஜினீயரிங் காலேஜுல பி.இ  ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டு இருந்தேன். காலேஜ் ஜெனரல் செகரெட்டரியாகவும் இருந்தேன்.  விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து முதன்முதலாக நான் பி.இ படிக்க வந்ததால படிப்பிலும் கவனமாக இருப்பேன். காலேஜுல நல்ல மார்க் எடுக்கும் ரேங்க் ஹோல்டர் ஸ்டூடன்ட்டாகவும் இருந்தேன். 

கல்லூரி நாள்களிலேயே கதை, கவிதை எழுதுறது, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டினு கல்ச்சுரல் ஆக்டிவிட்டீஸுக்கும் எந்தக் குறையும் இருக்காது.

ஹாஸ்டல் ஃபிலிம் கிளப் மாணவர் தலைவராகவும் இருந்தேன். ஹாஸ்டல்ல வாரா வாரம்  சனிக்கிழமை படம் போடுவோம். இளையராஜாவின் பாடல்கள் எப்பவும் என் அறையின் டேப் ரிக்கார்டரில் ஒலிச்சுக்கிட்டே இருக்கும். எப்பவும் என்கூட பத்து பதினைஞ்சு ஃப்ரெண்ட்ஸ் இருந்துக்கிட்டே இருப்பாங்க. ரொம்பவும் சுவாரஸ்யமான நாள்கள் அவை.  

அப்படி இருந்த அந்த பொன்னான பொழுதுல திடீர்னு காலேஜுல ஸ்ட்ரைக் நடத்தவேண்டியதாகிடுச்சு. அப்போ ஹாஸ்டல்ல இருந்த அட்மின் முறையாக நிர்வாகம் பண்ணலைனு மாணவர்களுக்குள் ஒரே குமுறல். அது ஸ்ட்ரைக்காக உருவெடுத்தது. அதை நானே பொறுப்பேற்று நடத்தவேண்டியதாகிடுச்சு. ஒரு கட்டத்துல அதுல வன்முறையும் வெடிச்சுது. 

மாணவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஜன்னல்கள் எல்லாம் உடைந்தன. எங்க பேராசிரியர் ஒருவரின் குழந்தைக்கு கல்வீச்சில் காயம் ஏற்பட்டது. அந்தக் குழந்தையை நானே கையில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்குப் போனேன். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிஞ்சுடுச்சு. கல்லூரிக்குக் காலவரையற்ற விடுமுறைவிடப்பட்டது. 

என் நண்பர்களில் பலரை வேறு கல்லூரிக்கு மாற்றிவிட்டார்கள். நான் 'ரேங்க் ஹோல்டர்' என்பதால் என்னை மாற்றவில்லை. ஆனாலும், என்கொயரி கமிஷன் எல்லாம் வைத்தார்கள். என் மனதில் ஆயிரம் கவலைகள். `தேர்வெழுத அனுமதிப்பார்களா... ஹால் டிக்கெட் கொடுப்பார்களா... வித் ஹெல்டு செய்துவிடுவார்களா... எதிர்காலமே இருளாகிப்போகுமா... இனி நாம் அவ்வளவுதானா... வீட்டில் அம்மாவுக்கும் பாட்டிக்கும் என்ன பதில் சொல்வது?’ இதையெல்லாம் நினைத்தால், படுத்தால் தூக்கம் வரவில்லை.   

அப்போ தமிழகமெங்கும் 'சங்கராபரணம்' தெலுங்குப் படம் பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. கோவையிலும் அந்தப் படம் ஓடியது. குரு-சிஷ்யை அன்புக்கும் இசைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்த படம். சோமயாஜுலுவும் மஞ்சு பார்கவியும் மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்கள். எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. ஆனால், அந்தப் படத்தின் பாடல்கள் மீது அப்படி ஒரு மயக்கம்.  'சங்கராபரணம்' படத்தை நான் 12 முறை பார்த்தேன். அந்தப் படத்தின் பாடல் கேசட்டுகளைப் போட்டுப் போட்டுக் கேட்பேன். கேட்கும்போதே கண்களில் கண்ணீர் பெருகிடும். கிளைமாக்ஸ் பாடலான `தொரகுனா இட்டுவண்டி சேவா...’ பாடலை எப்போதும் பாடிக்கொண்டிருப்பேன். நண்பர்கள்கூட 'சங்கராபரணம் பாண்டி' என்றே என்னை அழைத்தார்கள். 

என் மனதில் காலேஜ் ஸ்ட்ரைக் சம்பவம், கலிங்கப் போருக்குப் பிந்தைய அசோகரின் மனநிலையை எனக்குத் தந்தது. `ஏன், இந்த வன்முறை... மாஸ் சைகாலஜி என்பதில் தனி மனிதன் எப்படி மாறிப்போகிறான்?’என்று மனிதனின் உளவியலை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. 

1982 -ம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுப் படிப்பை யாரும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. நான் இதற்காகவே ஜாம்ஷெட்பூர் சென்று படித்தேன். அதன் பிறகு மேற்கு வங்காளத்தில் ஆறு ஆண்டுகள் மனிதவள மேம்பாட்டாளராகப் பணியாற்றினேன். அப்போதுகூட  ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவை நடத்தினேன். அதில்  ஆப்ரிக்க மொழிகள் உள்பட 12 நாட்டு மொழிகள் அடங்கிய பாடல்களைப் பாடச் செய்தேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இசைக்கு மன அழுத்தத்தைப் போக்கும் அபார ஆற்றல் உண்டு'' என்றவர், மன அழுத்தம் போக்க தான் மேற்கொள்ளும் சில வழிமுறைகளையும் சொன்னார். 

தினமும் 15 முதல் அரை மணி நேரம் யோகா செய்வேன். 3, 4, 5... என்று மூச்சுப் பயிற்சியில் சொல்வார்கள். அதாவது 3 விநாடிகள் மூச்சை உள்ளிழுத்து 4 விநாடிகள் வைத்திருந்து 5 விநாடிகளில் விட வேண்டும். இந்தப் பயிற்சி நம் உடல், மனச் சோர்வை நீக்கும். 
இல்லாவிட்டால், 15 ஆயிரம் அடிகள் தினமும் நடக்க வேண்டும். 1,000 அடிகளுக்கு ஒருமுறை ஓய்வெடுத்து ஓய்வெடுத்து நடக்க வேண்டும்.  இதை `ஹிட்’ என்று HIIT (High-Intensity Interval Training) அழைக்கிறார்கள்.  நம் மன அழுத்தம் முழுவதும் வியர்வையாக வெளியேறும். இவையெல்லாம் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மைகள். 

சோர்வற்ற உடலிருந்தால்தான் மனம் சிறப்பாகச் செயல்படும். ``எப்பேர்ப்பட்ட பிரச்னைக்கும் முதலில் நாம் மனதுடன் நேருக்கு நேராகப் பேச வேண்டும்'' என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. திட்டமிட வேண்டும். பின்னர் அதை எதிர்கொள்ள வேண்டும். 

தினமும் குளித்து முடித்ததும் நெற்றிக்கு திருநீறு பூசும்போது என் பாட்டி சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்வேன். `மலை போல் வரும் துன்பம் எல்லாம் பனி போல் விலகட்டும் இறைவா!’ என்று சொல்லியே திருநீறு பூசுவார். இன்றளவும் அதை நான் கடைப்பிடிக்கிறேன்'' என்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.