Published:Updated:

''கோபத்தைவிட இரண்டு பிளேட் பிரியாணி பெஸ்ட்!''- தமிழிசை சௌந்தரராஜன் #LetsRelieveStress

''கோபத்தைவிட இரண்டு பிளேட் பிரியாணி பெஸ்ட்!''- தமிழிசை சௌந்தரராஜன் #LetsRelieveStress
''கோபத்தைவிட இரண்டு பிளேட் பிரியாணி பெஸ்ட்!''- தமிழிசை சௌந்தரராஜன் #LetsRelieveStress

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் 1999-ம் ஆண்டு பாரதிய ஜனதாவில் சாதாரண உறுப்பினராக இணைந்தவர். இத்தனைக்கும் அவரின் தந்தை குமரி அனந்தன் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். ஆனால், தமிழிசை சௌந்தரராஜனோ மருத்துவர் அணிச் செயலாளர், அகில இந்தியச் செயலாளர்... எனப் பல நிலைகளைக் கடந்து முன்னேறி, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருப்பவர். `அவரிடம் மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள், அவற்றிலிருந்து எப்படி மீண்டு வெளி வருகிறீர்கள்?’ எனக் கேட்டோம்.

``வாழ்க்கையில் பலவித அழுத்தங்களைத் தாங்கக்கூடிய மனிதர்கள்கூட, மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் சிரமப்படுவதை பார்க்கலாம். மன அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இது மனரீதியாக மட்டுமல்ல, உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம், டென்ஷனாகி, டென்ஷன் ஹைபர் டென்ஷனாகி, ரத்த அழுத்தத்தைக் கொடுத்து உடலைப் பாதித்துவிடும். 

நாம் இரண்டு பிளேட் பிரியாணியைச் சாப்பிடும்போது நமது உடலில் அதிகரிக்கும் கொழுப்பைவிட, அதிகமாக நாம் கோபப்படும்போது ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.  

நாம் கோபப்படும்போதும், மன அழுத்தத்தின்போதும் நம் தசைகள், நரம்புகள், ஹார்மோன்களில் சுரக்கும் சுரப்பிகள் தடைப்படுகின்றன. இதனால், உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் சிறுகச் சிறுக பலவித ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் நமது நரம்பு மண்டலம் தளர்ச்சியடையத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக நமக்குத் தெரியாமலேயே பழுதடையத் தொடங்குகின்றன. 

டென்ஷன் இரண்டு வகைகளில் ஏற்படும் ஒன்று,  மற்றவர்களால் ஒருவருக்கு ஏற்படும் டென்ஷன். இன்னொன்று, ஒருவர் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் டென்ஷன். 

சிலர், எதையோ நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. நாம வேற ஒருத்தரோட வேற ஒரு விஷயத்தைப் பேசி சிரிச்சிக்கிட்டு இருப்போம். உடனே அவங்க நம்மகிட்ட `என்னைப் பார்த்து ஏன் சிரிச்சீங்க... என்னைப் பார்த்தா உங்களுக்கு அவ்வளவு கிண்டலா இருக்கா?’னு கேட்பாங்க. இந்தமாதிரி பிரச்னைக்கெல்லாம் அவங்க முறையாக கவுன்சலிங் போய், தங்களைத் தாங்களே சரிசெய்துகொள்றதுதான் நல்லது.

எனக்கு ஏற்படும் அரசியல் பிரச்னைகள், அவற்றில் எடுக்கவேண்டிய முடிவுகள் மற்றும் தீர்வுகளுக்கு அரசியல்ரீதியாக இருக்கும் உள்வட்ட நண்பர்களிடம் விவாதிப்பேன். குடும்பப் பிரச்னைகள், உறவுகளின் பராமரிப்பு, அரசியல் பிரச்னைகள் போன்றவற்றுக்கு என் கணவரிடம் பேசுவேன். 

அதிகமாக மன அழுத்தத்தில் நான் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், கூடுமானவரை அன்றன்றைக்கு உள்ள பிரச்னைகளுக்கு அன்றைக்கே தீர்வைத் தேடிவிடுவேன். தினம்தோறும் இரவு ஒரு மணி நேரம் புத்தகங்கள் வாசித்த பிறகுதான் தூங்குவேன். 

'அல்கொய்தா', 'உடையும் இந்தியா' போன்ற சீரியஸான புத்தகங்கள் படிப்பேன். அதனால எனக்கு பிரஷர் அதிகமாகிவிடும். உடனே நா.முத்துக்குமார், பா.விஜய் கவிதைகளை எடுத்துப் படிப்பேன். இது தவிர, ஜோக்குகள், ஜென் குட்டிக் கதைகள்னு கலந்து வாசிப்பேன். காரணம், சில புத்தகங்களை வாசிக்கும்போது மனம் லேசாகும். அதனால் எல்லா வகையான நூல்களையும் வாசிப்பேன். 

சிறு வயதிலிருந்தே அப்பா குமரி அனந்தன் அவர்களுடன் பொதுக் கூட்டங்களுக்குச் செல்வது, அப்பாவுக்கு பத்திரிகைச் செய்திகளை வாசித்துக் காண்பிப்பது போன்றவற்றைச் செய்ததால் வாசிக்கும் பழக்கம் இன்றும் என்னைத் தொடர்ந்துவருகிறது. ஆனால், இப்போ அரசியல் ரீதியாக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அரசியல் குறித்து பேசிக்கொள்ள மாட்டோம். அது எங்களுக்குள் இருக்கும் ஜென்டில்மேன் அக்ரிமென்ட். அவர் உண்மையான காங்கிரஸ்காரராக இருக்கிறார். நான் உண்மையான பா.ஜ.க-வாக இருக்கிறேன்.  

அப்பா சிவாஜி சாருக்கு நல்ல நண்பராக இருந்ததால, சின்ன வயசுல சிவாஜி சார் படத்தையெல்லாம் ப்ரீவியூ ஷோவுலேயே பார்த்துவிடுவோம். எம்.ஜி.ஆர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை.  ஆனால், அவரின் கொள்கைப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். இப்போ இருக்கும் பாடல்கள்ல, 'ஆளப் போறான் தமிழன்' பாடல் ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி கேட்பேன். 
டென்ஷன் இல்லாம நான் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம், தினமும் காலையில ஒரு கோயிலுக்குப்போய் சுவாமி கும்பிட்டுட்டுத்தான் என் வேலைகளைத் தொடங்குவேன். 

திங்கள்கிழமை சிவன் கோயில், செவ்வாய்கிழமை முருகன் கோயில், புதன்கிழமை எந்தக் கோயிலும் கிடையாது. வியாழக்கிழமை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாலையில் மயிலாப்பூர் சாய்பாபா கோயில், வெள்ளிக்கிழமை தி.நகர் முப்பாத்தம்மன் கோயில், சனிக்கிழமை அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயில், ஞாயிற்றுக்கிழமை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் போய் சாமி கும்பிடுவேன். சுவாமியை அலங்காரத்துடன் வணங்கப் பிடிக்கும். இந்தப் பிரார்த்தனைகள்தான் எனக்கு காப்புக் கவசமாக நின்று என்னைக் காக்கின்றன.

எதையும் கேஷுவலாக எடுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே இருப்பவர்களிடம் ஒரு மலர்ச்சி இருக்கும். அவர்கள் இளமையான தோற்றத்துடன் இருப்பார்கள். 

சிரிக்கும்போது அவர்களின் முகத்தில் ஏற்படும் சுருக்கம், அவர்களின் உடல் சுருக்கத்தைத் தள்ளிப்போட உதவும். இதற்குச் சிறந்த உதாரணமே நான்தான்'' என்றவரிடம், 'உங்களைப் பற்றி போடப்படும் மீம்ஸ்களைப் பற்றியெல்லாம் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?'' என்று கேட்டோம். 

''நான் எதையும் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என் இதயத்தைச் சுற்றிலும் இரண்டு அறைகள் வைத்திருக்கிறேன். இரண்டாவது அறையில்தான் நான் முக்கியமெனக் கருதும் விஷயங்களை வைத்திருப்பேன். மற்றவையெல்லாம் முதல் அறையோடு திரும்பிப் போய்விடும். இவர்கள் போடும் மீம்ஸ்களெல்லாம் முதல் அறையின் வாசலுக்கே வராது. 

விவாத மேடைகளில் கலந்துகொள்ளும்போதுகூட நான் பேசுவதுதான் பரபரப்பாக இருக்குமேயொழிய, நான் என் உள் மனதை அமைதியாகத்தான் வைத்திருப்பேன். நான் 'சத்ய சாய்பாபா' கூறிய கதைகள், பொன்மொழிகள் இவற்றையெல்லாம் விரும்பிப் படிப்பேன். அப்படிப் படிக்கும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். 

''உங்களுக்கு ஒரு கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தை நீங்கள் வாங்கி பிரித்துப் படித்தால் அந்தக் கடிதம் உங்களுடையது. அந்தக் கடிதத்தை வாங்காமல் அப்படியே திருப்பி அனுப்பினால் அது யார் அனுப்பினார்களோ அவர்களுடையது'' என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவார். 

என்னைப் பற்றி மீம்ஸ்கள், கமென்ட்டுகள் போன்றவற்றை  என் மனதின்  முதல் அறை, போடுபவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடும். என்னைப் பற்றி எப்போதும் ஓர் அபிப்பிராயம் ஒன்று எனக்கு உண்டு. 'ஐ யம் லிட்டில் மோர் தென் எனிபடி' என்பதுதான் அந்த அபிப்பிராயம். 

கடல்போல மேல் மனம் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும். ஆனால், எனது ஆழ்மனம் அமைதியாக இருக்கும். இப்படி பேலன்சிங்குடன் இருப்பதால்தான் டாக்டர் தொழில், அரசியல், குடும்பம், சமூகம், பொதுமேடை என என்னால் சிக்கலின்றி பயணிக்க முடிகிறது.’’ என்று கூறி விடைகொடுத்தார்.