Published:Updated:

புற்றுநோயைத் தடுக்கும், எதிர்ப்பு சக்தி தரும், பார்வைத்திறனை மேம்படுத்தும்... கொய்யா! #Guava

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புற்றுநோய் தடுக்கும், எதிர்ப்புச் சக்தி தரும்,
புற்றுநோய் தடுக்கும், எதிர்ப்புச் சக்தி தரும்,

கொய்யா... வருடம் முழுக்க கிடைக்கும் கனி, விலையும் குறைவு. அதனால், பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், கொய்யாவால் கிடைக்கும் பலன்கள் தெரிந்தால், நிச்சயம் அதைச் சாதாரணமாக நினைக்க மாட்டீர்கள்!

ந்தைக்குப் போனால், செக்கச்செவேலென வெட்டிவைத்திருக்கும் நாட்டுக் கொய்யாவைப் பார்த்தால் யாருக்குத்தான் நாக்கில் எச்சில் ஊறாது? வீட்டில் ஒரு நான்கு கொய்யாப் பழத்தை வெட்டி, லேசாக உப்பு தடவி வைத்துவிட்டால், நம்மைச் சுண்டி இழுக்கும் வாசனையில், அது நம் வயிற்றுக்குள் எப்படிப் போனது என்பதே தெரியாது. சர்வ சாதாரணமாக, வருடம் முழுக்க, அதிலும் குறைந்த விலையில் கிடைப்பது கொய்யா. அதனாலேயே நம்மில் பலர் கொய்யாவை முக்கியமானதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் காட்டுகிற அக்கறையில், கடைக்கண் பார்வைகூட கொய்யாவின் மேல் விழுவதில்லை. உண்மையில், `கொய்யா ஒரு சூப்பர் ஃப்ரூட்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துக் களஞ்சியம்’ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இந்தப் பழம் நம் ஆரோக்கியத்துக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பது குறித்து விவரிக்கிறார், டயட்டீஷியன் மேனகா... ``கொய்யாவிலிருக்கும் வைட்டமின் சி, லைகோபீன் (Lycopene), ஆன்டிஆக்ஸிடன்டுகள், கரோட்டின் (Carotene), நீர்ச்சத்து ஆகியவை நம் சருமத்துக்கு எண்ணற்ற நல்ல பலன்களைத் தரக்கூடியவை. கொய்யாவில் அதிகமிருக்கும் மாங்கனீஸ், உடலில் ஊட்டச்சத்தைச் சேமிக்க உதவும். இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். 

நான்கு ஆரஞ்சுப் பழத்தில் கிடைக்கும் ‘வைட்டமின் சி’, ஒரே கொய்யாவில் கிடைத்துவிடும். இது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நம்மை வழக்கமாகத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து காக்கும். வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் `ஸ்கர்வி’ (Scurvy) என்ற நோயின் தீவிரத்தைக் குறைக்க கொய்யாப்பழ ஜூஸ் உதவும்.

இதிலுள்ள லைகோபீன் (Lycopene), க்யூர்செட்டின் (Quercetin), வைட்டமின் சி, பாலிபீனால்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளாகச் செயல்படுபவை. உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸை (Free Radicals) குறைக்கச் செய்யும். கேன்ஸர் செல்கள் வளராமல் தடுக்கும். புராஸ்டேட்டை கேன்சர் தாக்கும் அபாயத்தைக் குறைக்கும். கொய்யாவிலிருக்கும் லைகோபீன் மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியது. இதில், அதிகமாக உள்ள நார்ச்சத்து, ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதில், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (Low Glycaemic Index) இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாவதையும் தடுக்கும். 

கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் தாக்கும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கலாம். உடலில் சோடியம், பொட்டாசியம் அளவுகளைச் சமநிலைப்படுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். 

ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 12 சதவிகிதம் ஒரேயொரு கொய்யாவில் கிடைப்பதால், செரிமானம் துரிதமாக நடக்கும். கொய்யாவின் விதைகளை முழுதாக விழுங்கினாலோ, மென்று சாப்பிட்டாலோ குடலின் செயல்திறன் அதிகரிக்கும். இதன் விதைகள் சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கலிலிருந்து காக்கும். இதிலுள்ள வைட்டமின் ஏ, பார்வைக் குறைபாட்டைத் தடுக்கும்; பார்வைத்திறனை மேம்படுத்தும். கண்புரை வளர்ச்சி, மாக்யூலர் சிதைவு (Macular Degeneration) ஆகிய கண் தொடர்பான நோய்களின் தாக்குதலையும்  தடுக்கும். 

கொய்யாவில் அதிக அளவில் வைட்டமின் கே இருப்பதால், தோல் நிறம் மாறாமலிருக்கும். முகப்பருவால் ஏற்படும் அரிப்பு, தோல் சிவந்துபோவதைத் தடுக்கும். இதிலுள்ள வைட்டமின் பி9 எனும் ஃபோலிக் ஆசிட் (Folic acid) கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. இது, கருவில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நரம்பு தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கும். கடினமான உடற்பயிற்சியால் ஏற்படும் உடல் இறுக்கம் போக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும்.

கொய்யாவிலிருக்கும் வைட்டமின் பி 3, பி 6 ஆகியவை மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நரம்புகளைத் தளர்த்தி, அறிவாற்றலை அதிகரிக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தை நிலைப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும். இதிலுள்ள சர்க்கரையின் அளவு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களைவிட மிகக் குறைவு. 

கருவளையத்தைப் போக்குவதில் தொடங்கி, கருவிலிருக்கும் குழந்தை வரை நன்மை தரும் கொய்யாவைப் பழமாகவோ பழச் சாறாகவோ சாப்பிடுவது மிக நல்லது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு