Published:Updated:

காவலர்கள் தற்கொலைகளுக்குப் பணிச்சுமை மட்டும்தான் காரணமா?

காவலர்கள் மன நெருக்கடிக்கு உள்ளாவது ஏன்?

காவலர்கள் தற்கொலைகளுக்குப் பணிச்சுமை மட்டும்தான் காரணமா?
காவலர்கள் தற்கொலைகளுக்குப் பணிச்சுமை மட்டும்தான் காரணமா?

* நேற்று... அரியலூர் கர்ப்பிணி பெண் காவலர் வைஷ்ணவி தூக்குப் போட்டுத் தற்கொலை முயற்சி.

* இரண்டு நாள்களுக்கு முன்னர்... சென்னை நீலாங்கரையில் காவலர் பாலமுருகன் தூக்கிட்டுத் தற்கொலை.

* கடந்த மார்ச் மாதம்... ஆயுதப்படைக் காவலர் அருண்ராஜ், அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகிய இருவரும் சுப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை.

* கடந்த மார்ச் 21-ம் தேதி... ஆயுதப்படைக் காவலர்கள் ரகு, கணேஷ்  டி.ஜி.பி அலுவலத்துக்கு எதிரிலேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி... 

நம்மைக் கவலைக்குள்ளாக்கியிருக்கின்றன, தொடரும் உறுதியும் வைராக்கியமும் தைரியமும் தேவைப்படும் காவல்துறை பணியிலிருக்கும் காவலர்கள் செய்துகொள்ளும் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும்!

கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 16 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்குச் சராசரியாக 27 காவலர்கள் தற்கொலைசெய்துகொள்வதாக தேசியக் குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதுதவிர கடந்த ஆண்டில் 1,039 பேரும், கடந்த பத்து ஆண்டுகளில் 8,158 பேரும் `இந்த வேலையே வேண்டாம்’ என்று பணியிலிருந்து விலகியிருக்கிறார்கள்.    

ஸ்காட்லாண்டு யார்டு போலீஸுக்கு அடுத்ததாகச் சொல்லப்படுவது தமிழகக் காவல்துறை. மக்கள் எந்தக் கஷ்டமுமில்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிக அவசியம். ஆனால், காவலர்களே மனநிம்மதியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது நம்மைக் கலங்கவைக்கும் செய்தியாக இருக்கிறது. இதற்குப் பணிச்சுமையும், உயரதிகாரிகளின் நெருக்கடிகளும்தாம்  காரணம் என்று ஒவ்வொரு முறையும் சொல்லப்படுகிறது. காவல்துறை வட்டாரமோ, தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று மறுப்புத் தெரிவிக்கிறது.

உண்மை நிலவரம்தான் என்ன? காவலர்களின் இந்த நிலைக்கு என்ன காரணம்?

``காவலர்களுக்கு வழங்கும் பயிற்சிகள் சரியாக இல்லாமல் இருப்பதே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முதன்மைக் காரணம். இப்போதுள்ள நடைமுறைச் சிக்கல்களையும் அவற்றை எப்படி மன தைரியத்துடன் எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சிக் காலங்களில் சரியாகச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஆங்கிலேயர் காலத்திலிருந்த பயிற்சிகளும் நடைமுறைகளும்தாம் இப்போதும் பின்பற்றப்படுகின்றன. ஆனால், அப்போதிருந்த நிலைமை இப்போது இல்லை. இன்றைக்குக் காவலர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் பிரச்னைகள் வேறு மாதிரியானவை. 

காவலர்களின் நல்ல செயல்பாடுகளுக்கு, உயரதிகாரிகளிடமிருந்து ஒரு பாராட்டோ, மரியாதையோ கிடைப்பதில்லை. யாரும் உற்சாகப்படுத்துவதுமில்லை. மக்களிடமும் காவலர்களுக்கு நல்ல பெயரில்லை, மரியாதை இல்லை. சிலர் காவலர்களையே எதிர்த்து அடிக்க வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை. காவலர்கள் சிறிய தவறுகள் செய்தாலும், அவை பூதாகரமாகக் காட்டப்படுகின்றன. இது போன்ற பல்வேறு காரணங்களால்தாம் காவலர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 
காவலர்களுக்குப் பயிற்சிக்காலம் குறைக்கப்பட்டது தவறு.

முதலில் ஒரு வருடமாக இருந்த பயிற்சிக்காலம், பின்னர் ஒன்பது மாதங்களானது. இப்போது வெறும் நான்கு மாதங்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்கிறார்கள். இந்தக் காலம் போதுமானதல்ல. ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில்தாம் பயிற்சிக் கல்லூரிகள் இருந்தன, சிறப்பாகவும் செயல்பட்டன. திறமையான காவல்துறை அதிகாரிகள் பயிற்சியளித்தார்கள். ஆனால், இப்போது ஆயிரக்கணக்கானோரை காவல்துறைப் பணிக்குத் தேர்வுசெய்கிறார்கள். அத்தனை பேருக்குப் பயிற்சியளிப்பதற்கு போதிய இடங்கள் இல்லை. அதனால் கல்யாண மண்டபம் போன்ற ஏதாவது ஓரிடத்தில் தங்கவைத்து கடமைக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சியளிக்கும் அதிகாரிகளும் திறமை குறைவானவர்களாக இருக்கிறார்கள். பயிற்சிக் காலம் முடிந்து, திறமையான காவலர்களாக வெளிவருவதற்கான வாய்ப்புள்ள பயிற்சிகள் அமைவதில்லை.

சில இடங்களில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளும் இருக்கின்றன. இரவு, பகல் பார்க்காமல் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். வீட்டில் விசேஷம் நடக்கும் நாள்களில்கூட விடுமுறை கொடுக்க மாட்டார்கள். இதனாலும் அவர்களுக்கு மனச்சுமை அதிகரிக்கும். இப்போது கான்ஸ்டபிள் பணிக்குக்கூட பி.ஹெச்டி படித்தவர்கள், இன்ஜினீயரிங் படித்தவர்கள்... என நன்றாகப் படித்தவர்கள் பலரும் வருகிறார்கள். இங்கே வேலை கடுமையாக இருப்பதைப் பார்த்து, `இவ்வளவு படித்தும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே’ என்று வருந்துகிறார்கள். அவர்களைவிடக் குறைவாகப் படித்தவர்கள் மேலதிகாரிகளாக இருப்பதும் அவர்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதற்காக அவர்கள் இந்த வேலைக்கு வரக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது. குறைந்தபட்ச கல்வித்தகுதியைத்தான் நம் அரசு காவல் பணிக்கு நிர்ணயித்திருக்கிறது.

தேவையற்ற விஷயங்களுக்காகவும், பாதுகாப்புக்காகவுமே ஏராளமான காவலர்கள் சென்றுவிடுகிறார்கள். காவலர் பற்றாக்குறை இருப்பதும் பணிச்சுமைக்கான ஒரு முக்கியமான காரணம். மூன்று கோடி மக்கள்தொகை இருக்கும்போது ஒன்றரை லட்சம் காவலர்கள் இருந்தார்கள். அதுவே மிகக்குறைவு. ஆனால், இப்போது எட்டுக் கோடி மக்கள்தொகை இருக்கும்போதும் அதே அளவு காவலர்கள்தாம்  இருக்கிறார்கள். அதனால், மக்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். இந்தப் பணியில் எட்டு மணி நேர வேலைதான் என்று இல்லை. எப்போது கூப்பிட்டாலும் போய்த்தான் ஆக வேண்டும். இதெல்லாம்தான் காவலர்களின் மன உளைச்சலுக்குக் காரணம்’’ என்கிறார் தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ்ஸும் முன்னாள் காவல்துறை தலைவருமான திலகவதி.

``யாரும் திடீரென்று தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். நீண்டகாலம் மனச்சோர்வால் ( Dipressive disorder) பாதிக்கப்பட்டு, அது முற்றும்போது, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டால்தான் ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் வரும். இதில்

காவல்துறையினரும் விதிவிலக்கல்ல. சரியான தூக்கம் இல்லாதது, சாப்பிட முடியாமல் போவது, விடுமுறை கிடைக்காதது, விடுமுறை கிடைத்தாலும் அதிகாரிகள் அழைத்தால் விடுமுறையை கேன்சல் செய்துவிட்டு வர வேண்டும்...போன்ற நெருக்கடிகளால் காவலர்கள் மனத்தளர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அதனால்  உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மிகுந்த மனச்சோர்வு காவலர்களுக்கு ஏற்படுகிறது.
மனநோய்கள் பெரும்பாலும் பாரம்பர்யமாக, மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுகின்றன.

மனநோயாளிகள், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்குத்தாம் இது போன்ற எண்ணங்கள் வரும். காவல்துறையிலும் மனதளவில் மென்மையானவர்களாக, சிறிய விஷயங்களுக்கே உடைந்து போகக்கூடியவர்களும் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உளவியல் பயிற்சி அளித்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும். மனநல மருத்துவர்களைக் கொண்டு மனநல மேம்பாட்டுக்கான கேம்ப் நடத்தி, சில அறிகுறிகள் மூலமாக நாம் அவர்களைக் கண்டறியலாம். காவல்துறையில் உள்ள ராணுவக் கட்டுப்பாடுதான் அவர்களை மனத்தளர்ச்சிக்கு ஆளாக்குகிறது. அவர்களை தாயுள்ளத்தோடு அணுகி, நாம் அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிய வேண்டும்.

காவல்துறையில் இருப்பவர்களும் மனிதர்கள்தாம். அவர்களுக்கும் மன நெருக்கடிகள் இருக்கும். அவர்களின் கம்பீரமான, மிடுக்கான தோற்றத்துக்குள்ளிருக்கும் மென்மையான மனித உள்ளத்தை நாம் கண்டுகொள்ளத் தவறிவிடுகிறோம். மனதளவில் தளந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சரியான ஆலோசனைகள், சிகிச்சைகள் அளிப்பதன் மூலமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடியும். அதற்கு, இ.எஸ்.ஐ போன்ற மருத்துவமனைகளில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்" என்கிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி.