Published:Updated:

``நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது வியாழக்கிழமை பாபா தரிசனம்!’’ - ஏவி.எம்.சரவணன் #LetsRelieveStress

எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமில்லாமல் வாழ்க்கையை அணுகும் வித்தியாசமான மனிதர் ஏவி.எம்.சரவணன்

``நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது வியாழக்கிழமை பாபா தரிசனம்!’’ - ஏவி.எம்.சரவணன் #LetsRelieveStress
``நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது வியாழக்கிழமை பாபா தரிசனம்!’’ - ஏவி.எம்.சரவணன் #LetsRelieveStress

ஏவி.எம்.சரவணன்... தமிழ்த் திரைப்பட உலகில் நீண்ட நெடிய பாரம்பர்யம் மிக்கவர். தந்தைக்கேற்றத் தனயனாக நின்று அந்த நிறுவனத்தைக் கட்டிக் காப்பதோடு,  ஏவி.எம் நிறுவனத்தின் மறு பிரவேசமான `முரட்டுக்காளை' தொடங்கி, `சிவாஜி' திரைப்படம் வரை பல சாதனைகளை நிகழ்த்தியவர். அமைதியின் திருவுருவம். எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமில்லாமல் வாழ்க்கையை அணுகும் வித்தியாசமான மனிதர். அவருக்கும் வாழ்க்கையில் டென்ஷன், மன அழுத்தம், மன இறுக்கம் ஏற்படுத்திய தருணங்கள் இருந்திருக்கும்தானே!... அவற்றை அவர் எப்படிக் கடந்து வந்தார் என்பது குறித்து கேட்டோம்.


``பொதுவாக நான் எந்த விஷயத்துக்கும் டென்ஷன் ஆக மாட்டேன். அதற்குக் காரணம் என் தந்தையார்  மெய்யப்பச் செட்டியாரின் அணுகுமுறைகளை, செயல்பாடுகளை அவரின் அருகில் இருந்து கவனித்ததுதான். அவரது திட்டங்கள், செயல்கள், எனக்கு அத்துப்படியானவை. 

நாங்கள், `களத்தூர் கண்ணம்மா’ படத்தைத் தயாரிக்கும்போது `கடவுளின் குழந்தை’ என்ற படமும் தயாராகிக்கொண்டிருந்தது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கதைதான். அதாவது, இரண்டுமே `நோபடீஸ் சைல்டு’ எனும் ஆங்கிலப் படத்தின் கதைதான். அதனால், முதலில் எந்தப் படம் வெளியாகிறதோ அதற்கே வெற்றி வாய்ப்பு என்னும் சூழல். 

இந்த நிலையிலும் நாங்கள் தயாரித்திருந்த `களத்தூர் கண்ணம்மா’வில் சில காட்சிகளை மறுபடியும் படமாக்க வேண்டுமென அப்பா விரும்பினார். ஆனால், அப்படிச் செய்தால் படத்தின் வெளியீட்டில் காலதாமதமாகும் என்ற நிலை. இதை மெள்ள அப்பச்சியிடம் (அப்பாவிடம்) சொன்னேன். 

அவர் என்னை அழைத்து, `சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வாரியார் கூறும் ராமாயணக் கதையைக் கேட்டுவிட்டு வந்தாய் அல்லவா’ என்று கேட்டார். `ஆமாம், கேட்டேன்’ என்றேன். `அதற்கு முன்பாக ராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறாய்தானே... பிறகு எதற்காக அவர் சொல்வதை மறுபடியும் கேட்கப் போனாய்’ எனத் திருப்பிக் கேட்டார். `வாரியார் கதை சொல்லும் முறை அழகாக இருக்கும்’ என்றேன்.
`அப்படித்தான் சினிமாவும். கதையைவிட, சொல்லுகிறவிதம்தான் முக்கியம். நம் படம் நமக்கே திருப்தியில்லாமல் வெளியே வரக் கூடாது. எத்தனை பேர் சொன்னாலும் நாம் சொல்கிற விதம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தால், நமது படமே வெற்றியடையும்' என்றார். 

அவரது நம்பிக்கை வென்றது. `களத்தூர் கண்ணம்மா' திரையிட்ட இடமெல்லாம் பெருவெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி விழாவை தியேட்டர்காரர்களெல்லாம் கொண்டாடினார்கள். அப்படிக் கொண்டாடப்பட்ட விழாவில் பங்கேற்க கமல்ஹாசன், குலதெய்வம் ராஜகோபால், எல்.விஜயலட்சுமி, ஏ.எல்.நாராயணன் ஆகியோரை அழைத்துச்செல்ல முடிவு செய்தோம். ஆனால், `பையனுக்குப் பாராட்டுவிழா... அதில் நாங்கள் வந்து என்ன செய்யப்போகிறோம்’ எனக் கூறி குலதெய்வம் ராஜகோபால், ஏ.எல்.நாராயணன் இருவரும் வரவில்லை. 

திண்டுக்கல், தூத்துக்குடி எனத் தென் மாவட்டங்களின் பல ஊர்களில் விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. அப்போது எனக்கு மிகவும் டென்ஷனாகவும் மன இறுக்கமாகவும் இருந்தது. `இனி, இவர்கள் இருவரையும் எமது நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்திலும் சேர்ப்பதில்லை' என முடிவு செய்தோம். அதன் பிறகு, அவர்களை எங்கள் நிறுவனத் தயாரிப்புகளில் ஈடுபடுத்தவே இல்லை.
இதைத் தவிர, டென்ஷன் தந்த வேறு எந்த நிகழ்ச்சியும் எனக்குத் திரைத்துறையில் நடக்கவில்லை.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ரஜினி, கமல் வரை எவருடனும் எந்தப் பிணக்கும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே வேலைகள் நடந்திருக்கின்றன. மேலும், சின்ன வயதிலிருந்தே எனக்கு இறைபக்தி அதிகம். என்றாலும், கடந்த 14 ஆண்டுகளாக ஷீரடி சாய்பாபாவின் அடியவராக இருக்கிறேன். மகாபலிபுரம் அருகிலிருக்கும் பாபா கோயிலுக்குக் குடும்பத்துடன் ஒவ்வொரு வியாழக்கிழமையும் போய் வருவேன். அது எனக்கு பலவிதத்திலும் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கிறது. 

தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்திருப்பேன். அப்போது `பாபா தர்ஷன்' என்று ஷீரடியில் பாபாவுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைப் பார்ப்பேன். அதன் பிறகு அப்படியே கடற்கரைக்கு ஒரு வாக்கிங் போய்விட்டு பணியைத் தொடங்குவேன். மனதுக்கு மிகவும் அமைதியும் சாந்தமும் தரும் வல்லமை பாபாவுக்கு உண்டு என்பதை நான் நம்புகிறேன்'' என்றவரிடம், ``கைகளைக் கட்டிக்கொண்டு அடக்கமாக இருக்கும் இந்த வழக்கம் எப்படி வந்தது?’’ எனக் கேட்டோம்.

``ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்தே கைகட்டும் வழக்கம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. 78 வயதாகிறது. இன்றுவரை நான் ஒரு கெட்டவார்த்தைகூடப் பேசியதில்லை. நான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஃபெயிலானபோது அப்பச்சி, `டுடோரியல் காலேஜில் சேர்ந்து படி’ என்றார். 

அப்போதெல்லாம் அங்கு படிக்கும் மாணவர்களிடம், கெட்டவார்த்தைகள் பேசும் பழக்கம் இருந்தது. அது எனக்கும் பழகிவிடும் என்று கோபாலபுரம் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து மீண்டும் படித்தேன். வெள்ளைச்சட்டை, வெள்ளைப் பேன்ட், குங்குமப்பொட்டு, கைகட்டுதல் எல்லாமே அப்போதிருந்தே  எனக்கு வழக்கமாகிவிட்டது. அதிகபட்சமாகக் கோபம் வந்தால், `மட சாம்பிராணி' எனச் சொல்லித் திட்டுவேன். இதுவும் அப்பச்சியிடமிருந்து கற்றுக்கொண்டதுதான். அதனால் எந்த விஷயத்துக்கும் டென்ஷன் ஆவதில்லை’’ கைகட்டிக்கொண்டு அடக்கமாகச் சொல்கிறார் ஏவி.எம்.சரவணன்.