Published:Updated:

``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress

``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress
``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress

மிழருவி மணியன் ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி... எனப் பல தனித்துவமான அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். `காந்திய மக்கள் இயக்க’த் தலைவராக இருப்பவர். தமிழருவி மணியன் தனக்கு மன அழுத்தம் தந்தத் தருணங்களையும் அதிலிருந்து தான் மீண்ட விதத்தையும் குறித்து இங்கே விவரிக்கிறார்...   

``மனிதனைப் பொறுத்தவரை சிறு வயதில், பள்ளி நாள்களில் மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால், அதன் பிறகு, இரண்டுவிதமான சூழ்நிலைகளில் மன இறுக்கம், மன அழுத்தம் வரும் வாய்ப்பிருக்கிறது. அவன் வாலிபப் பருவம் அடைந்து, காதல் வயப்படும்போது, மன அழுத்தம் ஏற்படும்.
அதேபோல் கல்லூரி நாள்களில் எனக்கும் காதலால், மன அழுத்தம் மன இறுக்கம் ஏற்பட்டிருப்பது உண்மை. என்னுடன் படித்த சக மாணவியின்பால் ஏற்பட்ட காதல் அது. 
இப்போது இருப்பதைப்போல அப்போதெல்லாம் காதலில் சுயநலம் பிரதானமாக இல்லை. இப்போதெல்லாம் தனக்குக் கிடைக்காத காதலி வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மன ஆளுமைப் பிறழ்வுமிக்க சைக்கோத்தனமாக சிலர் நடந்துகொள்கிறார்கள். 
உண்மையில், அன்பும் தியாகமும் காதலின் இரண்டு பக்கங்கள். மேலும், காதலிப்பதற்கு இரண்டு மனங்கள் போதும். ஆனால், கல்யாணத்துக்கு இரண்டு குடும்பங்களின் சங்கமம் தேவைப்படுகிறது. அந்தப் பெண் வசதிமிக்கக் குடும்பம் என்பதால், அவர்கள் நலம் கருதி விலகினேன்.

தியாக உணர்வு பெருக்கெடுக்கும்போது ஆசை நெருப்பு தானாகவே அணைந்துவிடும். இந்தக் காதல் தோல்வியை, 'அடிமனத்தின் சுவடுகள்' என்ற புத்தகத்தில் உருகி உருகி எழுதியிருக்கிறேன். அதிலிருந்து நான் விடுபட்டு வந்துவிட்டேன். இதைப் பற்றியெல்லாம் இப்போது பேசுவதுகூட ஏற்புடையதல்ல.

அடுத்து வேலை... இறையருளால் அது நான் பி.டி படித்துக் கொண்டிருக்கும்போதே ஆசிரியர் பணி கிடைத்துவிட்டது. சூளைப்பகுதியில் இந்து ஒற்றுமைக் கழகப் பள்ளியில் பணி கிடைத்தது. அது முதல் தலைமுறை பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். புளியந்தோப்பு, வியாசர்பாடி போன்ற வடசென்னைப் பகுதி மாணவர்களுக்கே உரிய பள்ளிக்கூடம். அந்த மாணவர்களைப் படிக்கவைப்பது, படிப்பில் ஈடுபடவைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. 

'ஒரு பத்துவரிகளைப் படித்துவிட்டு வாருங்கள்' என்றால்கூட ஆர்வப்பட்டுப் படிக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பல உதாரணங்களின் மூலமாகக் கல்வியின் மேன்மையைப் பற்றி விளக்குவேன். நாற்பது பேர் படிக்கும் வகுப்பில் 30 பேர் நன்றாகவே படிக்க மாட்டார்கள். அந்த நாள்கள் மிகவும் மன அழுத்தம் தந்தவை. 

அந்த மன அழுத்தம் காரணமாக ஆசிரியர் அறைக்கு வந்து கண்ணீர்விட்டுக் கதறுவேன். ``அவர்கள் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? விட்டுத்தள்ளுங்கள்’’என்று சக ஆசிரியர்கள்கூடச் சொல்வார்கள். அங்கு 20 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு விருப்ப ஓய்வில் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டேன்.   

பொதுவாக ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்குக் காரணம், அவன் சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருப்பதுதான். சுயநலம் சார்ந்து இருப்பவர்களுக்கு  அது அதிகமாகிக்கொண்டேபோகும்.  

தன்னைத் தாண்டி மற்றவர்களின் நலனில் அக்கறைகொள்ளும் மனிதனுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. இதற்கடுத்து மன அழுத்தம் ஏற்படுவதும் ஏற்படாமல் போவதும் மனைவி அமைவதைப் பொறுத்தது. 

`மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...’ என்று கண்ணதாசன் சொன்னது அத்தனைச் சாதாரண வரிகள் அல்ல. என்னைப் பொறுத்தவரை என் மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய கருத்துகளுக்கு ஏற்றவர்களாக இருந்ததால், குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை எனக்கு மனக் குழப்பங்கள் ஏற்படுவதில்லை. அவர்களுக்கென்று பெரிதாக நான் எதுவும் செய்யவில்லை. 

என் பிள்ளைகள் அரசுப் பள்ளியில், அரசுக் கல்லூரியில்தான் படித்தார்கள். என் மனைவியின் மனம் மகிழும் வண்ணம் எதையும் நான் பெரிதாகச் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும் நான் சொத்துகள் என எதையும் சேர்க்கவும் இல்லை. அரசு வாடகை வீட்டில்தான் இப்போதும் வசிக்கிறேன்.

குறைந்த ஆசைகளையும் குறைந்த தேவைகளையும் கொண்டு வாழ்வைப் பற்றிய சரியான புரிதலோடு வாழத் தொடங்கினால், நமக்கு எந்தச் சூழலிலும் மன அழுத்தம் வராது.  

பொதுவாழ்க்கையை காமராஜரின் காலடியிலிருந்துதான் நான் தொடங்கினேன்.  1966-ம் ஆண்டு நான் அரசியலுக்கு வந்தேன். கால ஓட்டத்தில் அரசியல் வேள்வியாக இருந்து தொழிலாக மாறி, கேவலமான வியாபாரமாகிவிட்ட காலகட்டத்தில் இருக்கிறோம்.
மருந்துக்கடை வைத்து நடத்துவதும், மதுபானக்கடை வைத்து நடத்துவதும் வியாபாரம்தான். ஆனால், அரசு மருந்துக்கடை நடத்துவதற்கு பதில் சாராயக்கடை நடத்தத் தொடங்கிவிட்டது. 

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி, இறுதியில் நான் ரணப்பட்டதுதான் மிச்சம். 

ஒவ்வொருவரும் என்னுடைய ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள, என்னை நெருக்கமாக வைத்துக்கொள்ள நினைப்பார்கள். ஆனால், நெருப்பு போன்ற என்னுடைய வாழ்க்கை அவர்களைச் சுட்டுவிடும். அதனால் ஏற்பட்ட மனத் துயரங்களை எழுதுவதென்றால், கண்ணதாசன் எழுதிய தன் வரலாறு கூறும் 'வனவாசம்' போல் நானும் எழுதவேண்டியிருக்கும்.

பொது வாழ்க்கையைப் பொறுத்தவரை வாய்மை, நேர்மை, தூய்மை என வந்துவிட்டாலே, எந்த ஒரு தலைவனுடனும் உங்களுக்கு கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் வந்தே தீரும், என்பதுதான் நான் வாழ்வில் கண்டறிந்த உண்மை. 

அதனால்தான் `காந்திய மக்கள் இயக்கம்’ என்ற ஓர் இயக்கத்தை நடத்திவருகிறேன். இந்த இயக்கத்தில் 80 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

காந்தியம் எடுத்துவைக்கும் மூன்று குணங்கள், எளிமை, அடக்கம், பணிவு. இந்த குணங்களோடு என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால்தான், என்னால் நிம்மதியாக இருக்க முடிகிறது. 

இறுதியாக, பெர்னாட்ஷா வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறி முடிக்கிறேன். ஒரு முறை வெளிநாட்டில் ஒரு 'ஷாப்பிங் மால்'  ஒன்றைத் திறக்க அவரை அழைத்தார்கள். அவரும் அந்த ஷாப்பிங் மாலை திறந்து வைத்துவிட்டு, முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார். அவரிடம் அந்த மால் குறித்துக் கேட்டார்கள். `வாழ்க்கைக்கு எவையெல்லாம் தேவை இல்லை என்பதை இங்கு நான் அறிந்துகொண்டேன்’ என்று கூறினார்.  நமக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலே போதும்... மன அழுத்தம் ஒரு போதும் நம்மை அணுகாது.’’