Published:Updated:

சிறுநீரகக் கல் நீக்கும், உடல் சூடு தணிக்கும்... தர்ப்பைப் புல் பாய்!

தர்ப்பைப் புல் பாய்... பலே, பலே!

சிறுநீரகக் கல் நீக்கும், உடல் சூடு தணிக்கும்... தர்ப்பைப் புல் பாய்!
சிறுநீரகக் கல் நீக்கும், உடல் சூடு தணிக்கும்... தர்ப்பைப் புல் பாய்!

ழகழகான, விதவிதமான கட்டில்களும் மெத்தைகளும் விற்பனையாகிக்கொண்டிருக்கும் காலம் இது. ஆனாலும் நம்மில் பலருக்கு பாயில் படுத்தால்தான் தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனஓலைப் பாயைத்தான் விரித்துப் படுக்கிறோம். அவற்றிலும் கோரைப் பாய் விலை குறைவாக இருப்பதால் அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.  உண்மையில், மிகச் சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் வழக்கொழிந்துபோன அருமையான பாய்.  தர்ப்பைப் புல் பாய் எவ்வளவு நன்மைகளைத் தருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது ஆச்சர்யம் மேலெழுகிறது.  

தர்ப்பைப் புல் தொன்மையான ஒருவகைத் தாவரம். இது வளருமிடங்களில் மிதமான குளிச்சியையும் மன அமைதியையும் உணர முடியும். `தர்ப்பை, புண்ணிய பூமியைத் தவிர வேறெங்கும் வளராது’ என்பது ஐதீகம். தர்ப்பைப் புல் வளருமிடங்களில் எண்ணற்ற ஜீவராசிகள் அடைக்கலமாகியிருப்பதைப் பார்க்கலாம். இந்தப் புல் வகை, பல்லுயிர்ப் பெருக்கத்தை ஊக்குவிக்கக்கூடியது. மழைக் காலத்தில் தண்ணீரில் மூழ்கியிருந்தாலும் தர்ப்பை அழுகிப்போவதில்லை என்பது இதன் சிறப்பு. கடும் கோடையிலும் காய்ந்து போகாது. தர்ப்பைப் புல்லின் மகிமையைப் பற்றி யஜூர், அதர்வண வேதங்களிலும், சம்ருதி சிந்தாமணி, சம்ருதி பாஸ்கரம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும், நிகண்டு ரத்தினாகரம், ராஜ நிகண்டு போன்ற ஆயுர்வேத நூல்களிலும் குறிப்புகள் உள்ளன. இது பச்சையாக இருக்கும்போது அதன் மேல் தண்ணீர் ஒட்டாது. `தர்ப்பையை அணிந்தவர்களிடம் பாவங்கள் ஒட்டாது’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் முதல் இறப்பு வரை இந்து மதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. `யாகங்கள் செய்யும்போது இதைப் பயன்படுத்தவில்லை என்றால், அந்த யாகமே பயனற்றது’ என்று யஜூர் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது, `அக்னி கர்ப்பம்’, `புசம்’, `பவித்ரம்’, `தர்ப்பம்’, `அம்ருத வீரியம்’... எனப் பலப் பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் சாம்பலைப் பயன்படுத்தி கோயில்களிலிருக்கும் உலோக விக்ரகங்களும், பாத்திரங்களும் துலக்கப்படுகின்றன. காரணம், இந்தச் சாம்பலிலிருக்கும் தாமிர உலோகத்தின் தன்மை, அவற்றின் பளபளப்பை நீடிக்கச் செய்யும்.  

தர்ப்பைப் புல்லில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்ப்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தர்ப்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்ப்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்ப்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும். சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்ப்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்ப்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும். பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோயிலின் தல விருட்சம் தர்ப்பைப் புல். அதனாலேயே இங்குள்ள பகவான் `தர்பாரண்யேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.  

தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட தர்ப்பைப் புல் இப்போது அருகிவரும் தாவரமாக இருக்கிறது. மலைக் குன்றுகளின் ஓரங்களிலும், அடர்ந்த காடுகளின் உட்புறத்திலும், சில நதிக்கரை ஓரங்களிலும் தர்ப்பைப் புல்லைக் குறைவாகத்தான் பார்க்க முடிகிறது.  

இத்தனைச் சிறப்புகள் கொண்ட தர்ப்பைப் புல்லால் ஆன பாய் மற்றும் சிறிய விரிப்புகளைத் தயாரிக்கிறார் பக்கீர் முகமது. நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியிலிருக்கும் துலசேந்திரபுரம் கிராமத்தில் பல தலைமுறைகளாக பக்கீர் முகமதுவின் குடும்பத்தினர் தயாரித்துவருகிறார்கள்.  

பக்கீர் முகமதுவிடம் பேசினோம்... ``70 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை தர்ப்பைப் புல் தயாரிப்புகளை விற்றுவருகிறோம்.  இந்தப் பாயில் படுத்து உறங்கினால் சர்க்கரைநோய் கட்டுக்குள்ளிருக்கும். தர்ப்பைப் புல்லையும் வெட்டி வேரையும் கலந்து தண்ணீரில் போட்டு அதை குடித்து வந்தால் கிட்னியில் இருக்கும் கல் கரையும், உடல்சூடு குறையும். தர்ப்பைப் புல்லைக் கொண்டு கயிறு, தலையணை, பாய்,  அமர்கிற தடுக்கு ஆகியவற்றைச் செய்கிறோம். பூஜைக்கும் மருத்துவத் தேவைகளுக்கும் இலவசமாகத் தருகிறோம்.  பாரம்பர்ய முறையைக் கைவிட்டு நவீன காலத்துக்கு மாறியதால்தான் மக்களுக்கு இவ்வளவு துன்பமும் துயரமும். குறைந்த விலையில் கிடைக்கும் கோரைப் பாய்க்கு மட்டும்தான் மக்கள் ஆசைப்படுகிறார்கள். மருத்துவ குணம்மிக்க தர்ப்பைப் புல் பாய், அது தொடர்பான அனைத்துப் பொருள்களையும் நாங்கள் செய்துவருகிறோம். பாரம்பர்யத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தொழிலைத் தொடர்ந்து செய்கிறோம். இவற்றைத் தேடிவந்து வாங்கும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பல நன்மைகள் தரும் தர்ப்பைப் புல் பாயை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம்’’ என்கிறார் பக்கீர் முகமது.  

தர்ப்பைப் புல்லின் மருத்துவக் குணம் குறித்து சித்த மருத்துவர் அர்ஜுனனிடம் கேட்டோம். ``தர்ப்பைப் புல் மருத்துவக் குணம் நிறைந்தது. முக்கியமாக இதில் மனிதன் சுவாசிக்கத் தேவையான பிராணவாயு அதிகமாக இருக்கிறது. தர்ப்பையில் ஆசனம் அமைத்து அதன்மேல் உட்கார்ந்து தலையில் நீர் ஊற்றினால் என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்து விடலாம். இதனால் போதிய அளவு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். எல்லாவிதமான நோய்களும் விலகிச் சென்றுவிடும். ரத்தத்தில் தேங்கியிருக்கும் கழிவுப்பொருள்கள் அகல்வதுடன் மின்காந்தப் பாதையில் உள்ள தடைகள் நீங்கும். வாதம், பித்தம், கபம் சுத்திகரிக்கப்படும்.

 தானாக வளரும் தர்ப்பையில் பாய் செய்து அதன்மீது உட்கார்ந்து வருவதால் பல்வேறு நோய்கள் குணமாகும். குறிப்பாக சிறுநீரக்கற்கள் கரைவதுடன் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சிறுநீரகக் கோளாறுக்காக டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழலில் இருப்பவர்கள் தர்ப்பையில் அமர்வதன்மூலம் டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.'' என்றார்.

தர்ப்பை, சித்த மருத்துவத்தில் மட்டுமல்லாமல் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.