Published:Updated:

மோடியின் பஞ்சபூத உடற்பயிற்சியின் பலன்கள் என்ன? #FitnessChallenge

மோடியின் பஞ்சபூத உடற்பயிற்சியின் பலன்கள் என்ன? #FitnessChallenge
மோடியின் பஞ்சபூத உடற்பயிற்சியின் பலன்கள் என்ன? #FitnessChallenge

டந்த மாதம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து, `சமூக வலைதளங்களில் நீங்கள் உங்கள் உடலை எப்படி ஃபிட் ஆக வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஃபிட்னெஸ் சேலஞ்சை அனுப்புங்கள்’ என்று தெரிவித்தார். நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், விராட் கோலி மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கும் அவர்களின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். அவர் கேட்டபடி, அடுத்த இரண்டு நாள்களில் விராட் கோலி இந்த சேலஞ்சை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அப்போது தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, பிரதமர் மோடி, முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யச் சொல்லி கேட்டுக்கொள்ளவும் செய்தார்.

இந்தத் தொடர் உடற்பயிற்சி வீடியோ சவாலில் பிரதமர் மோடி இன்று காலை, தான் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் `எனது காலை உடற்பயிற்சி தருணங்களை பகிர்ந்திருக்கிறேன். யோகாவைத் தவிர, இயற்கையின் ஐந்து கூறுகள் அடங்கிய ஒரு பாதையில் நான் நடக்கிறேன். இது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நான் மூச்சுப்பயிற்சியும் மேற்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோ `பஞ்சபூத உடற்பயிற்சி’ என்ற தலைப்பில் வைரலாகப் பரவிவருகிறது. `பஞ்ச பூதங்கள் நமக்குத் தெரியும். அது என்ன பஞ்சபூத உடற்பயிற்சி?’ என்ற கேள்வி எங்கும் கிளம்பி வருகிறது. இது குறித்து விளக்கமறிய யோகா இயற்கை மருத்துவர் மணவாளனைத் தொடர்புகொண்டோம். 

``பஞ்ச பூதங்களால் ஆனதே நமது உடல். நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை இருக்கிறது. இந்த ஐந்து அடிப்படை இயற்கைக் கூறுகளில் ஒன்று குறைந்து போனால்கூட உடலில் குறைபாடோ, நோயோ உருவாகிவிடும். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இயற்கையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டோம். அதனால் ஏகப்பட்ட நோய்களை ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டோம். சூரிய ஒளி படாமல் வாழ்கிறோம். கொஞ்சம் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குச் சொகுசு வாழ்க்கையை வாழ்கிறோம். காலில் மண்ணே படுவதில்லை. சரியாக மூச்சுவிடக்கூட நமக்குத் தெரிவதில்லை. உடலுக்குத் தேவையான நீரின் அளவு தெரியாமல் இருக்கிறோம். பிரபஞ்ச வெளியோடு நாம் தொடர்புகொள்வதே இல்லை. இப்படி நெருப்பு, பூமி, காற்று, நீர், ஆகாயம் என்ற ஐந்து இயற்கைச் சக்திகளைப் புறக்கணித்து வாழ்கிறோம். இதனால் உடலின் ஆரோக்கியம் கெட்டுப்போய், மருத்துவமனைகளைத் தஞ்சமடைய ஆரம்பித்துவிட்டோம். நல்லவேளையாக இப்போது இந்தப் பஞ்ச பூதங்களின் தேவையை உணர ஆரம்பித்திருக்கிறோம். அதனால்தான் `டச் வித் நேச்சர்' என்ற வாசகத்தோடு இப்போது இயற்கையின் தேவைகளை உணர்ந்து பஞ்சபூத உடற்பயிற்சி, பஞ்சபூதக் குளியல், பஞ்சபூத சிகிச்சை போன்ற முறைகளை செய்யத் தொடங்கியிருக்கிறோம். பிரதமர் மோடி மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோவில் அவர் மண்மீது நடக்கிறார். இது, `மட் தெரபி’ எனப்படும். கூழாங்கல்மீது நடக்கிறார். இது அக்குபஞ்சர் முறையிலான `ரெஃப்ளெக்ஸாலஜி’ (Reflexology) எனப்படும். நீரில் நடக்கிறார். இது, `வாட்டர் தெரபி.’ சூரிய ஒளியில் அவர் மேற்கொள்ளும் யோகா பயிற்சி, `ஹீலியோ தெரபி.’ இது, சூரியக் குளியலைப் போன்றது. அவர் ஆழ்ந்து செய்யும் மூச்சுப்பயிற்சி காற்றை முறையாக உடலுக்குள் செலுத்தும் முறை. பிரபஞ்ச சக்தியோடு அவர் தொடர்புகொள்வதைக் குறிப்பதுதான் அவர் பாறைமீது அமர்ந்து செய்யும் தியானம். இப்படி ஐந்து பூதங்களையும் நேரடியாகத் தொடர்புகொள்ளும் இந்த உடற்பயிற்சிகள் அனைவரும் மேற்கொள்ளவேண்டிய எளிய பயிற்சிகள். 

காலை 8 மணிக்குள் அல்லது மாலை 5 மணி தொடங்கி 6 மணிக்குள் இந்த உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது. ஐந்து இயற்கைக் கூறுகளை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் இந்தப் பயிற்சிகளால் உடலின் ஒவ்வொரு செல்லும் ரீசார்ஜ் ஆகி, புத்துணர்ச்சி கிடைக்கும். சுவாசக் கோளாறுகள், எலும்பு நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் தீரும். இயற்கையோடு இணைந்த இந்தப் பயிற்சிகள் மன இறுக்கத்தை விலக்கி, உற்சாகச் சூழலை உருவாக்கும். 20 நிமிடங்கள் வரை செய்யப்படும் இந்தப் பஞ்சபூத உடற்பயிற்சிகள் நாள் முழுக்க சுறுசுறுப்பைத் தரும். நாம் உண்ணும் உணவுகளால் நமக்குள் சேரும் ரசாயனங்கள், வேண்டாத கொழுப்புகள் போன்றவையும் இந்தப் பயிற்சிகளால் வெளியேறிவிடும். நீரில் நடப்பதால் உடல் குளிர்ச்சியடைந்து மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னைகள் நீங்கும். சூரியக் குளியலால் சருமநோய், கண்பார்வை பிரச்னைகள், பக்கவாதம், கீல்வாதம், எலும்புருக்கி நோய், பல் பிரச்னைகள் தீரும். மண்ணிலுள்ள இயற்கைச் சத்துகள் அதன்மீது நடப்பதால் நமக்குள் இறங்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். மூச்சுப் பயிற்சியால் தேவையான ஆக்சிஜன் நமக்குள் பரவி, உடலே உறுதியாகி, பல நன்மைகள் கிடைக்கும். ஆழ்ந்த தியானத்தில் நல்ல ஓய்வு கிடைத்து, உடலும் மனமும் தெளிவாகும். இத்தனை நன்மைகளும் கொண்ட இந்தப் பஞ்சபூத உடற்பயிற்சியை அனைவருமே மேற்கொள்ளலாம். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கு போதுமான இட வசதியும், சுற்றுச்சூழலும் தேவை. எனவே அதற்கேற்றபடி, அரசு பூங்காக்களை வீடியோவில் இருப்பதுபோல அமைக்கலாம்’’ என்கிறார் மருத்துவர் மணவாளன். 

உடலுக்கும் மனதுக்கும் எண்ணற்ற நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் இந்தப் பஞ்சபூத உடற்பயிற்சி எல்லோருக்குமே வரப்பிரசாதம். இயற்கையோடு தொடர்பில் இருக்கும் உடல் எந்நாளும் குறைபாடு அடைவதே இல்லை.