Published:Updated:

`ஒரு மாதத்தில் தடை!’ - அவ்வளவு ஆபத்தானதா இ-சிகரெட்? #Ecigarette

`ஒரு மாதத்தில் தடை!’ - அவ்வளவு ஆபத்தானதா இ-சிகரெட்? #Ecigarette
`ஒரு மாதத்தில் தடை!’ - அவ்வளவு ஆபத்தானதா இ-சிகரெட்? #Ecigarette

தமிழக அரசு இ-சிகரெட்டுக்குத் தடைவிதிக்க காரணம் என்ன?

மிழ்நாட்டில் இன்னும் ஒரு மாதத்தில் இ -சிகரெட்டுகளுக்குத் தடை. கடந்த 14-ம் தேதி சட்டமன்றத்தில் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் `மெல்லும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்ததுபோல், இ-சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் குழந்தைசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.

அது என்ன இ - சிகரெட் , அது எப்படி இருக்கும் ?

சாதாரண சிகரெட்டின் தோற்றத்தில் நீளமான குழாய். அதற்குள் திரவம் அடங்கிய கேட்ரிட்ஜ் ஒன்று இருக்கும். இந்த கேட்ரிட்ஜை தேவைப்படும்போது வெளியே எடுத்து, அதில் திரவத்தை நிரப்பிக்கொள்ளலாம். உள்ளே போட்டதும் ஆன் செய்வதற்கான பட்டன் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் போதும். இ-சிகரெட் கருவிக்குள் இருக்கிற மின் சாதனங்கள் அந்தத் திரவத்தை ஆவியாக்கிவிடும். அதை வாயில் வைத்து உறிஞ்சினால், கேட்ரிட்ஜிலிருந்து நீராவி வெளிவரும். வெளியில் புகை வராது; தீக்கங்கும் இருக்காது. நீல நிறத்தில் ஒரு எல்.இ.டி விளக்கு மட்டும் நுனியில் எரியும். பேனா, யுஎஸ்பி டிரைவ் போன்ற டிசைன்களிலும்கூட இந்த இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன.

இதைப் பற்ற வைக்கத் தேவையில்லை, கரிய புகையில்லை, குடலைப் புரட்டும் நாற்றமில்லை, உடல்நலப் பாதிப்புகளும் அதிகமில்லை... எனக் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப்பட்டு இது மார்க்கெட்டுக்கு வந்தது. 500-க்கும் மேற்பட்ட விதவிதமான ஃபிளேவர்களில், 300 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய்வரை இது விற்கப்படுகிறது. வந்த புதிதில் உலகெங்கும் அமோகமான வரவேற்பைப் பெற்றது. நாளடைவில் இதன் பாதிப்புகள் தெரியவர, உலகின் பல நாடுகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் சில மாநிலங்களிலும் இதற்குத் தடை இருக்கிறது.

``இவ்வளவு நாள்கள் கழித்து இப்போது திடீரென்று தடை விதிக்கக் காரணம் என்ன?’’

தமிழ்நாடு அரசு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்...

`` `இ-சிகரெட் பாதுகாப்பானது’ என்று தவறான நம்பிக்கை விதைக்கப்பட்டுவருகிறது. இ-சிகரெட்டில் நிக்கோடின்தான் திரவ வடிவத்தில் உள்ளே இருக்கிறது. அதுதான் ஆவியாகி, உடலுக்குள் செல்கிறது. சாதாரண சிகரெட் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே பாதிப்பை இ-சிகரெட்டும் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. புகை வெளியே தெரியாததால், இதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கூட பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. இதனால், மலட்டுத்தன்மை, மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. புகை வெளியே வராவிட்டாலும், இதிலிருந்து பரவும் ஏரோசெல்களால் அருகிலிருப்பவர்களுக்கும் பாதிப்புகள் உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். வளரிளம் பருவத்தினருக்கு, மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். அதனால், தமிழ்நாட்டில் இந்த இ-சிகரெட்டைத் தடை செய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.

`` சிகரெட்டில் ஏராளமான நச்சுப் பொருள்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது நிகோடின். இதுதான் மீண்டும் மீண்டும் புகைக்கத் தூண்டுவது. இதன் மூலமாகவும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிக்கோடினைவிட சிகரெட் புகையும்போது ஏற்படும் கரியில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூலப்பொருள்கள் அதிகமாக இருக்கின்றன. இ-சிகரெட்டில் நிக்கோடின் மட்டுமே திரவ வடிவில் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், இ-சிகரெட்டில், சாதாரண சிகரெட்டைவிட புற்றுநோய் அபாயம் குறைவுதான்.

அதே நேரத்தில் சாதாரண சிகரெட்டைப் புகைக்கும்போது உண்டாகும் எரிச்சல் இ-சிகரெட்டில் இருக்காது. அதனால், அதிகமான அளவு நிகோடினை உள்ளிழுக்கும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு அடிமையாகவும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. அதேபோல, நிக்கோடினை திரவ வடிவில் மாற்றுவதற்கு சில மூலப் பொருள்களைச் சேர்க்கவேண்டியிருக்கும். அதன் மூலம் பல்வேறு உடல்நலப்பாதிப்புகள், பக்கவிளைவுகள் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது’’ என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணன்.

``சாதாரண சிகரெட்டில் நிகோடின் தவிர 4,000 வேதிப் பொருள்கள் உள்ளன. அவை நச்சுத்தன்மை வாய்ந்தவை. இ-சிகரெட்டில் ஒருசில நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அவற்றை இ-சிகரெட்டில் இருக்கும் ஃபில்ட்டர்கள், ஃபில்ட்டர் செய்துவிடும். அப்படிச் செய்தாலும்கூட இ-சிகரெட்டாலும், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது தடை செய்யப்படுவது வரவேற்கக்கூடிய ஒன்றுதான்’’ என்கிறார் நுரையீரல் நோய் மருத்துவர் ஜெயராமன்.


 

அடுத்த கட்டுரைக்கு