Published:Updated:

வெற்றிலை, ஆடாதொடை, குப்பைமேனி, முசுமுசுக்கை... அயனாவர சிக்னலில் ஒரு மூலிகைத் தோட்டம்!

வெற்றிலை, ஆடாதொடை, குப்பைமேனி, முசுமுசுக்கை... அயனாவர சிக்னலில் ஒரு மூலிகைத் தோட்டம்!
வெற்றிலை, ஆடாதொடை, குப்பைமேனி, முசுமுசுக்கை... அயனாவர சிக்னலில் ஒரு மூலிகைத் தோட்டம்!

மாநகத்தின் பரபரப்பைச் சுமந்திருக்கும் அந்தச் சாலையில், அரிய மூலிகைத் தோட்டத்தைப் பார்ப்பதென்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 

சென்னை அயனாவரம் டிப்போ சிக்னலுக்கு அருகே இருக்கிறது `உழவும் உயிரும்' இயற்கை அங்காடி. அதன் உரிமையாளர் ராஜ்குமார் சிறுவயதிலிருந்தே இயற்கையின் மீது தீராத காதல்கொண்டவர். தற்போது, செடிகள், மரங்கள், மருத்துவ மூலிகைகள் பற்றிய தேடுதல்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். தன் வீட்டிலேயே, மூலிகைத்தோட்டம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். மாநகத்தின் பரபரப்பைச் சுமந்திருக்கும் அந்தச் சாலையில், அரிய மூலிகைத் தோட்டத்தைப் பார்ப்பதென்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 

அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் இன்னும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 

``முதலில் இயற்கை அங்காடிதான் தொடங்கினேன். அங்காடிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் நோயாளிகளாக இருந்தனர். பொதுவாக நம் மக்கள், நோய் வந்த பின்புதான் அதற்கான மருந்தைத் தேடுகின்றனர். நோய் வருவதற்கு முன்பே தடுப்பதுதான் நம் பாரம்பர்யம். அதற்காக, இயற்கை அளித்த கொடைதான் செடிகள், மூலிகைகள். நம்மை நோய்கள் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும் இயற்கை மருத்துவர்கள் அவைதாம். 

நம் மூதாதையர்கள் செடி, கொடிகள், மூலிகைகளோடே வாழ்ந்தனர். அதனால்தான், நோய்நொடியில்லாமல் நீண்ட ஆரோக்கியத்தோடு பல்லாண்டுகாலம் வாழமுடிந்தது. இப்போது நாம் செடி, கொடி, மரங்களை விட்டுவிலகி தூரமாக வந்துவிட்டோம். அதனால்தான், புதிய புதிய வியாதிகள் நம்மைத் துரத்துகின்றன. இதற்கு ஒரே தீர்வு மூலிகைகள்தாம் என்று தீர்மானித்தேன். அதற்காக வீட்டிலேயே ஒரு தோட்டம்  உருவாக்க முடிவெடுத்தேன். 

துளசி, தூதுவளை, கரிசலாங்கண்ணி, பிரண்டை, நிலவேம்பு, வெற்றிலை, ஆடாதொடை, குப்பைமேனி, முசுமுசுக்கை, ரணகள்ளி, திருநீற்றுப் பச்சை, கற்பூரவல்லி, ஓமவல்லி, வல்லாரை, திப்பிலி, நித்தியகல்யாணி, கேசவர்த்தினி, அய்யம்பனை, இன்சுலின் செடி, எலும்பொட்டி, பேய்விரட்டி, லெமன்கிராஸ் என ஏராளமான மூலிகைச் செடிகளை வளர்த்துவருகிறேன், துளசியிலேயே, கருந்துளசி, எலுமிச்சை துளசி, லவங்கத் துளசி, புதினா துளசி என ஏராளமான வகைகள் இருக்கின்றன. 

கீரைகளைப் பொறுத்தவரை புளிச்சக்கீரை, முழுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி... அதோடு நம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லிச் செடிகளையும் வளர்த்து வருகிறோம்.

பாரம்பர்ய பூக்களான, மல்லி, முல்லை, கனகாம்பரம், செம்பருத்தி, நாட்டு ரோஜா, சம்பங்கி, சங்குபுஷ்பம், நந்தியாவட்டை போன்ற பாரம்பர்ய பூக்கள் அனைத்தும் வைத்துள்ளேன். 

கற்றாழைச் செடியில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. அதோடு நமக்குத் தேவையான ஆக்சிஜனையும் வெளியிடக்கூடியது கற்றாழை. உடற்சூட்டைக் குறைப்பதில் கற்றாழைக்கு நிகரில்லை. 

முதலில் கடைக்கு வருபவர்களுக்கு இலவசமாகச் செடிகள் கொடுத்தேன். தற்போது செடிகளைக் காண வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. பராமரிப்புச் செலவுகளும் அதிகமாக இருக்கின்றன. அதனால், குறைவான விலைக்கு விற்றுவருகிறேன். செடி வளர்ப்பதற்குத் தேவையான மண்ணும், உரமும் கொடுக்கிறேன். 

செடிகள் எப்போதும் நல்ல ஆற்றலை மனிதர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கும். பிணிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நம் உயிவாழத் தேவையானவற்றைக் கொடுக்கும். செடிகளுக்கு இணையான செல்வம் இந்த உலகத்தில் ஏதுமில்லை. 

இருமல், சளி, வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல் முதல் அனைத்து வகையான உடல் பிரச்னைகளுக்கும் மூலிகையிலேயே தீர்விருக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் தற்போது இயற்கையின் பக்கம் திரும்பியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் விவசாயத்தில் காட்டும் அக்கறையைத் தோட்டக்கலைக்கும் காட்ட வேண்டும். வீட்டுக்கொரு தோட்டம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். இடமில்லை என்று பலர் காரணம் சொல்வார்கள். மனிதர்கள் வாழ இடமிருக்கும்போது, செடிகளுக்கு இடமில்லை என்பதை ஏற்கமுடியாது. இடமில்லாதவர்கள், வீட்டுக்குள்ளேயே, தொங்கும் செடிகளாகத் தொட்டியில் வளர்க்கலாம். 

மூலிகைச் செடிகளை அனைவருமே தங்களின் வீடுகளில் வளர்க்க வேண்டும். அதிகமாக முடியாவிட்டாலும், குறைந்தது பத்து மூலிகைகளையாவது வீட்டில் வளர்க்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மக்கள் அனைவரும் முயற்சி செய்தால் எதிர்காலத்தில் பசுமையான, ஆரோக்கியமான ஓர் உலகத்தைப் படைக்கலாம் " என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு