Published:Updated:

`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ - நிஜம் சொல்லும் ஆய்வு

`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ -  நிஜம் சொல்லும் ஆய்வு
`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ - நிஜம் சொல்லும் ஆய்வு

டாக்டர்களை மாற்றிக்கொண்டே இருக்காமல் ஒரே டாக்டரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் என்ன நன்மை?

ழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் இந்தக் காட்சி நிச்சயம் இடம்பெற்றிருக்கும்... வீட்டிலிருக்கும் யாருக்கோ உடம்பு சரியில்லையா? ஃபேமிலி டாக்டருக்கு போன் செய்வார்கள். அவர் வீட்டுக்கே வருவார். டாக்டர் கையில் வைத்திருக்கும் மருந்துப் பெட்டியை வீட்டிலிருக்கும் யாராவது வாங்கிக்கொள்வார்கள். அவர் சிகிச்சை கொடுத்துவிட்டுப் போகும்போது, திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் வாசல்வரை சென்று வழியனுப்பிவைத்துவிட்டு வருவார். அந்த அளவுக்கு முக்கியமான ஒருவராக இருந்தார் குடும்ப மருத்துவர். திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்கூட சில குடும்பத்தினருக்கு `ஃபேமிலி டாக்டர்’ என்று ஒருவர் நிச்சயம் இருந்திருக்கிறார்; இருக்கிறார். தாத்தாவிலிருந்து பேரன் வரை அவரிடம்தான் சிகிச்சை பெற்றிருப்பார்கள். காய்ச்சல், சளி... என்று ஏதோ ஒரு பிரச்னையோடு அவரிடம் சென்றால், உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்துவிட மாட்டார். பத்து நிமிடங்களாவது நலம் விசாரிப்பு, குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசுவார். சிறார்கள் என்றால், `என்ன படிக்கிறே... எந்த ஸ்கூல்?’ என விசாரிப்பின் நீளம் சற்று அதிகமாக இருக்கும்.

`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ -  நிஜம் சொல்லும் ஆய்வு

`எனக்கு அந்த டாக்டர்கிட்ட வைத்தியம் பார்த்தாதான் சரியாகும்’, `அந்த டாக்டர் கையைப் பிடிச்சுப் பார்த்தாலே போதும்... பிள்ளைக்கு காய்ச்சல் பறந்தோடிப் போயிடும்’... இப்படி வீட்டிலுள்ளவர்களோ, அண்டை வீட்டாரோ சொல்லி நிச்சயம் கேட்டிருப்போம். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இது போன்ற மருத்துவர்களுக்கு நம் உடல்நலனைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். பல வருடங்களாக நம் உடல் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பதால், எந்தப் பிரச்னை என்றாலும் அவர்களால் அதை எளிதாகச் சரிசெய்துவிட முடியும்.

`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ -  நிஜம் சொல்லும் ஆய்வு

வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தவர்கள், ஒரே மருத்துவரிடம் தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர்கள்... இரு பிரிவினரையும் வைத்து ஓர் ஆய்வு அண்மையில் நடந்திருக்கிறது. அதன்படி, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், அமெரிக்கா, கனடா, தென் கொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், ஒரே மருத்துவரிடம் சிகிச்சை பெற்றவர்களின் இறப்பு விகிதம், வெவ்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றவர்களைவிட மிகக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்த விவரங்கள் பி.எம்.ஜே ஓபன் (BMJ Open) இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவரும், மருத்துவத்துறைப் பேராசிரியருமான ரகுநந்தனன் விவரிக்கிறார்...

``ஒரு குடும்பம் தொடர்ச்சியாக ஒரே மருத்துவரிடம் சிகிச்சை பெறும் நடைமுறை நம் நாட்டில் ஏற்கெனவே இருந்ததுதான். அப்படி சிகிச்சை பெற்றுக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. ஒருவருக்கு சிறு வயதில் அடிபட்ட காயம்; எந்த மருந்து ஒப்புக்கொள்ளாது; எந்த உணவு அலர்ஜி; குடும்ப உறுப்பினர்களுக்கு வலிப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்பு இருந்தது... இப்படி ஒவ்வொரு விவரத்தையும் விரல்நுனியில் வைத்திருப்பார் குடும்ப மருத்துவர். அதையெல்லாம் கவனத்தில்கொண்டுதான் சிகிச்சையளிப்பார். இதனால், நோய்களும் விரைவாக குணமாகின. இப்போது அப்படி அல்ல... அவரவர் வசதிக்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். புதிதாக ஒரு மருத்துவரிடம் சிகிச்சையெடுத்துக்கொள்ளும்போது கவனிப்புத் தொடர்ச்சி (Continuty of Care) இருக்காது. அதனால் பாதிப்புகள் குறைவதற்குக் காலதாமதமாகும். தேவையில்லாத பணவிரயமும் ஏற்படும்.

`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ -  நிஜம் சொல்லும் ஆய்வு
`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ -  நிஜம் சொல்லும் ஆய்வு

அதேபோல, உடலில் ஏதோ ஓர் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால், பலரும் நேரடியாக அந்தத் துறையைச் சார்ந்த சிறப்பு நிபுணர்களிடம் சென்றுவிடுகிறார்கள். அது தவறு. குடும்ப மருத்துவரிடம் சென்று அவர் எப்போது பரிந்துரைக்கிறாரோ, அப்போதுதான் செல்ல வேண்டும். அவருக்குத்தான் நம் உடலின் தன்மை சரியாகத் தெரிந்திருக்கும். ஒவ்வோர் உறுப்பில் ஏற்படும் பிரச்னைக்கும், தனித்தனியாக மருத்துவர்களைத் தேடிக்கொண்டிருந்தால், ஒருவர் நாற்பது மருத்துவர்களைத் தேடவேண்டியிருக்கும். முழுமையான மருத்துவத் தீர்வுக்கு, `குடும்ப மருத்துவர் முறை’தான் சரி. எனவே, ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர் ஒருவரை வைத்துக்கொண்டு அவரிடம் சிகிச்சை பெறுவது சிறந்தது. அதுதான் சரியான, முறையான நடைமுறை’’ என்கிறார் மருத்துவர் ரகுநந்தனன்.

இதில் மருத்துவர்களின் பங்கு என்ன? - விவரிக்கிறார் பொதுநல மருத்துவர் சிவராமக் கண்ணன்...

``இது உளவியல்ரீதியான ஒரு நம்பிக்கை. எல்லா மருத்துவர்களும் ஒரே மாதிரியாகத்தான் சிகிச்சையளிக்கிறோம். இருந்தாலும், சிலர் ஒரு மருத்துவருக்காகப் பல நாள்கள் காத்திருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதற்குக் காரணம், `அவரிடம் சிகிச்சை பெற்றால் நமக்குச் சரியாகிவிடும்’ என்கிற நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒவ்வொரு மருத்துவரும் பெற முயற்சி செய்ய வேண்டும். `என் பேஷன்ட் என்னைத் தவிர வேறு யாரிடமும் செல்ல மாட்டார்கள்’ என்று சொல்கிற அளவுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். அந்த நம்பிக்கை எப்போது வருமென்றால், நோயாளிகள் கொடுக்கிற பணத்துக்கு அவர்களின் பிரச்னை தீர வேண்டும். `பணம் வீணாகிவிட்டதே!’ என்ற அவநம்பிக்கை அவர்களுக்கு வரக் கூடாது. நிறைய மாத்திரை, மருந்துகளை எழுதிக் கொடுப்பது, பல டெஸ்ட்டுகளை எடுக்கச் சொல்வது... என வருகிற நோயாளிகளின் மீது திணிக்கக் கூடாது.

`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ -  நிஜம் சொல்லும் ஆய்வு
`குடும்ப டாக்டரிடம் சிகிச்சை... நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம்!’ -  நிஜம் சொல்லும் ஆய்வு

அப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற்றால், `குடும்ப மருத்துவர் முறை’ பெருகும். மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே ஓர் இணக்கமான சூழல் உருவாகும். வெளிநாடுகளில் ஏற்கெனவே இது நடைமுறையில் இருக்கிறது. குடும்ப மருத்துவர் பரிந்துரை செய்தால்தான், சிறப்பு நிபுணர்களிடம் சிகிச்சை பெற முடியும் என்கிற நிலையும் அங்கே இருக்கிறது.’’

``ஒரே மருத்துவரிடம் சிகிச்சையெடுத்துக்கொண்டால் மருத்துவர்களுக்கு பொறுப்புஉணர்வு கூடும். அதனால், மிகவும் சிரத்தையோடு சிகிச்சையளிப்பார்கள். பல மருத்துவர்களிடம் சிகிச்சையெடுத்துக்கொண்டால் வெவ்வேறு மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும். அதனால் பக்கவிளைவுகள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம். முதியவர்கள் கண்டிப்பாக ஒரே மருத்துவரிடம் மட்டும்தான் சிகிச்சையெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே மருத்துவரால் மட்டுமே முழுமையான சிகிச்சையளிக்க முடியும்’’ என்கிறார் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.


 

அடுத்த கட்டுரைக்கு