Published:Updated:

சுண்டி இழுக்கும் சுவை... ஆனால், பக்கவிளைவுகள் பகீர்! சிப்ஸ் வேண்டாமே! #Chips

சுண்டி இழுக்கும் சுவை... ஆனால், பக்கவிளைவுகள் பகீர்! சிப்ஸ் வேண்டாமே! #Chips

பெட்டிக்கடை, மளிகைக்கடை, கார்ப்பரேட் உணவகம், ஆபீஸ் கேன்டீன் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிப்ஸ். இதில்தான் எத்தனை வெரைட்டீஸ்! சரி... இது உடலுக்கு நல்லதா என்றால், `இல்லை’ என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில்.

சுண்டி இழுக்கும் சுவை... ஆனால், பக்கவிளைவுகள் பகீர்! சிப்ஸ் வேண்டாமே! #Chips

பெட்டிக்கடை, மளிகைக்கடை, கார்ப்பரேட் உணவகம், ஆபீஸ் கேன்டீன் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிப்ஸ். இதில்தான் எத்தனை வெரைட்டீஸ்! சரி... இது உடலுக்கு நல்லதா என்றால், `இல்லை’ என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில்.

Published:Updated:
சுண்டி இழுக்கும் சுவை... ஆனால், பக்கவிளைவுகள் பகீர்! சிப்ஸ் வேண்டாமே! #Chips

சிப்ஸ்... எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இதன் மீது நமக்கிருக்கும் ஈர்ப்பு மட்டும் விலகாததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. காரணம் இதன் சுண்டியிழுக்கும் மொறுமொறு சுவை! சேனை, உருளை, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, நேந்திரங்காய், பாகற்காய், வாழைக்காய்... வகை வகையாக சிப்ஸ்கள் இருந்தாலும், உருளைக்கிழங்குதான் அன்றும் இன்றும் என்றும் மாஸ்! பெட்டிக்கடை, மளிகைக்கடை, கார்ப்பரேட் உணவகம், ஆபீஸ் கேன்டீன்... என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிப்ஸ். இதில்தான் எத்தனை வெரைட்டீஸ்! சரி... இது உடலுக்கு நல்லதா என்றால், `இல்லை’ என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில்.

சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லையா, 'ஒரு பாக்கெட் சிப்ஸ் வாங்கிக்கொள்ளலாம்' என பேச்சுலர் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது சிப்ஸ். சிலர் வீட்டிலேயே வகை வகையாக சிப்ஸ் செய்து சாப்பிடுவார்கள். குழந்தைகளின் ஃபேவரைட் ஸ்நாக்ஸ்...  இப்படி எல்லோருக்கும் பிடித்த சிப்ஸ் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கற்பகத்திடம் கேட்டோம்... 

``எண்ணெயில் தயாரிக்கப்படும் எல்லா உணவுகளுமே, உடலுக்குக் கேடு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தப் புரிதலை மீறி, ஒருவரை ஓர் உணவு ஈர்க்கிறது அல்லது கவர்கிறது என்றால், அதற்கு அதன் சுவைதான் முக்கியக் காரணம். இப்படி சுவைக்கு அடிமையாகவைக்கும் ஒரு ஸ்நாக்ஸில் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்புச்சத்து, சோடியம் என்ற மூன்று வகை சத்துகள் மட்டுமே இருக்கின்றன. இவையும்கூட, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உடல் உபாதைகளை ஏற்படுத்துபவை. ஆரோக்கியமான வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்கள், மிகக் குறைந்த அளவே இவற்றை உட்கொள்ள வேண்டும்.

எப்படி, எதைக் கொண்டு தயாராகிறது சிப்ஸ்... அதன் பக்கவிளைவுகள் என்னென்ன? 

குறிப்பிட்ட கிழங்கு மற்றும் காய்களைத் தேர்வு செய்வதிலிருந்து தொடங்குகிறது சிப்ஸின் தீமைகள். பல இடங்களில் அழுகிய அல்லது சேதமடைந்த காய், கிழங்கு வகைகளைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். மற்ற கிழங்குகளைவிட, உருளைக்கிழங்கு மோசமான உடல்

 உபாதைகளை ஏற்படுத்திவிடும். 

சின்னக் கடையிலிருந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பல இடங்களில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத்தான் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துகிறார்கள். இப்படிப் பயன்படுத்துவது, எண்ணெயிலுள்ள கொழுப்புச்சத்துகளை, ட்ரான்ஸ் ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பாக மாற்றிவிடும். ட்ரான்ஸ் ஃபேட், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய அடைப்பு, பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் சிப்ஸ் பாக்கெட்களில், ட்ரான்ஸ் ஃபேட் அளவு வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே என சிலர் நினைக்கலாம். அதன் உண்மைத் தன்மை, பல நேரங்களில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சிப்ஸ்களில் சேர்க்கப்படும் உப்பின் சுவை, சாப்பிடுபவரை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் தன்மை கொண்டது. அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தம், எலும்புப்புரை, சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும். 

சிப்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, மேலும் மேலும் அதைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். சிலர் ஸ்ட்ரெஸ் பஸ்டராகக்கூட இதை உட்கொள்வதுண்டு. இதிலிருக்கும் கார்போஹைட்ரேட்ஸ்தான், இந்தத் தூண்டுதலுக்குக் காரணம். மிக எளிதாகக் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸில்தான் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்ஸ் வகைகள், முழுக்க முழுக்க கலோரிகளால் ஆனவை. இரண்டு உள்ளங்கை நிறைய சிப்ஸ் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் கலோரிகளைக் கரைக்க, குறைந்தபட்சம் 10,000 அடிகளாவது நடக்கவேண்டியிருக்கும். அளவுக்கதிகமாக சிப்ஸ் சாப்பிடுபவர்கள், அவற்றில் எவ்வளவு கலோரிகள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் நடைப்பயிற்சியை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கு பஜ்ஜி, சிப்ஸ், போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை, சுத்தமான முறையில் வாரத்துக்கு ஒருமுறை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.  பல பெற்றோர், குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு சைடிஷ்ஷாக சிப்ஸை கொடுத்து அனுப்புவார்கள். 'குழந்தை இதைத்தான் விரும்பி சாப்பிடுறான்' என்று இதற்குக் காரணமும் சொல்வார்கள். உண்மையில், குழந்தைக்கு ஹெல்த்தி உணவுகளை அடிக்கடி கொடுத்து, அதில் எது குழந்தைக்குப் பிடிக்கிறது என்பதைக் கண்டறிந்தால், சிப்ஸ் போன்ற மோசமான ஸ்நாக்ஸைக் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. 

கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் ஒரு பாக்கெட் சிப்ஸில், கலோரி அளவு நூறுக்கு மேல் இருக்கும். இவ்வளவு கலோரிகளை ஒரே நேரத்தில் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களின் வளர் சிதை மாற்றத்தில் பாதிப்புகளும் பிரச்னைகளும் ஏற்படும். சர்க்கரைநோய், இதயப் பிரச்னை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள பெரியவர்களுக்கு, அந்த பாதிப்பு தீவிரமடையும். எனவே, குழந்தையோ, பெரியவரோ... சிப்ஸ் சாப்பிடுவதை முழுமையாகத் தவிர்க்கவும்.

இரவு உணவோடு சிப்ஸ் சாப்பிடுபவர்கள், அதற்குப் பிறகு கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். இல்லையென்றால், பல் மற்றும் ஈறு பிரச்னைகள் ஏற்படலாம்.

எந்தக் காய்கறி, கிழங்கையும் வறுத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுபவர்கள், அதற்குப் பதிலாக ஹெல்த்தி ஸ்நாக்ஸான நட்ஸ், ரவா லட்டு, எள்ளுருண்டை, உளுந்து லட்டு, பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.. தொடர்ந்து சிப்ஸ் சாப்பிடுவது, தூக்கமின்மைப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், தவிர்ப்பதே சிறப்பு. வேண்டுமென்றால், வீட்டிலேயே செய்து வாரம் ஒரு முறை, கொஞ்சமாகச் சாப்பிடலாம்’’ என்கிறார் கற்பகம்.