Published:Updated:

7 மாத கோமாவிலிருந்து கர்ப்பிணியை மீட்ட பிரசவம்! - மருத்துவ அதிசயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
7 மாத கோமாவிலிருந்து கர்ப்பிணியை மீட்ட பிரசவம்! - மருத்துவ அதிசயம்
7 மாத கோமாவிலிருந்து கர்ப்பிணியை மீட்ட பிரசவம்! - மருத்துவ அதிசயம்

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்த பெதினாவின் முகம், ஆல்வினைக் கண்டதும் சிலிர்க்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்தப் பெண்ணுக்கும் நிகழக் கூடாத துயரம் அது. ஆசை ஆசையாக வயிற்றில் தன் மூன்று மாதக் கருவைச் சுமந்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை குறித்த எண்ணற்ற கனவுகளோடு நடமாடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண். ஒருநாள், எதிர்பாராதவிதமாகக் கால் இடறிக் கீழே விழ, தான் கொண்டிருந்த எதிர்காலக் கனவுகளை மட்டுமல்ல, கடந்தகால நினைவுகளையும் சேர்த்தே மறந்து போனார். அந்தப் பெண்ணின் பெயர் பெதினா. கேரள மாநிலம்,கோட்டையம் மாவட்டம் வழுவூரைச் சேர்ந்தவர். மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது கோமாவுக்குச் சென்றவர், ஏழு மாதங்கள் படுத்த படுக்கையாகவே கிடந்தார். கணவனும் குடும்பத்தாரும் எவ்வளவோ அக்கறையோடு கவனித்துக்கொண்டாலும் பெதினாவின் முகத்தில் சிறிதளவு அசைவுகூட இல்லை. இந்தநிலையில், கடந்த 14-ம் தேதி பெதினாவுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தைக்கு `ஆல்வின்' எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள் பெதினாவின் குடும்பத்தினர்.

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்த பெதினாவின் முகம், ஆல்வினைக் கண்டதும் சிலிர்க்கிறது. ஆல்வினுக்குப் பால் கொடுக்கும் நேரங்களில் அவரின் முகத்தில் ஏராளமான உணர்வுகள் கரைபுரண்டோடுகின்றன. இந்தக் காட்சியைக் கண்டதும், அவரின் குடும்பத்தினருக்கு அளவில்லா மகிழ்ச்சி.

``குழந்தை அழும்போதும், பால் குடிக்கும்போதும் பெதினா முகத்தில் மாற்றம் தெரிகிறது. குழந்தையைப் பார்த்து அழகாகச் சிரிக்கிறாள். விரைவில் என் மனைவி குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. என் மனைவியின் இந்த மாற்றத்துக்கு என் மகன்தான் காரணம்’’ என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார் கணவர் அனூப்.

தாய்மை குறித்து உணர்வுரீதியான ஏராளமான கருத்துகள் நம் சமூகத்தில் நிலவுகின்றன. அவையெல்லாம் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகச் சில நேரங்களில் நமக்குத் தெரியலாம். ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்படி அதை நம்மால் கடந்து செல்ல முடியவில்லை.

பெதீனாவின் இந்த மாற்றம் இயல்பானதுதானா அல்லது அவரின் குழந்தையால் நிகழ்ந்ததா?

`` `தாய்மை' மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. பிரசவ நேரத்தில் பெண்களுக்குக் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிப்பதற்காகவே அவர்களுக்குக் கூடுதல் எனர்ஜி கிடைக்கும். இயற்கையின் படைப்பிலேயே அப்படித்தான் இருக்கிறது. மருத்துவரீதியாகவும் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனித மூளைகூட ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் வேறுபடும். சிந்தனைகள் இருவருக்கும் வெவ்வேறாக இருக்கும்.

குழந்தை பிறந்ததும், பெண்களுக்குக் கூடுதல் எனர்ஜி கிடைக்கும். குழந்தை இரவில் எத்தனை முறை அழுதாலும் எழுந்து கவனித்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். காலையில் எந்தச் சோர்வும் இல்லாமல் மீண்டும் தங்கள் அன்றாட வேலைகளைத் தொடங்கிவிடுவார்கள். சாதாரண நாள்களில் அவர்களால் இதுபோலச் செயல்பட முடியாது. இது தாய்மைக்கே உண்டான மரபணுக்களால் நிகழ்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த மரபணுக்கள் அவை. விஞ்ஞான ரீதியாகவே இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பிரசவ நேரத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலி மிகவும் கொடுமையானது. `நம் குழந்தைக்காக நாம் இருக்க வேண்டும், நல்லபடியாகக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்' என்ற நம்பிக்கைதான் அவர்களைக் காப்பாற்றுகிறது. சாதாரண நாளில் வேறொரு வகையில் இதுபோன்ற ஒரு பாதிப்பை அவர்கள் அனுபவித்தால் நிச்சயமாக உயிரோடிருக்க வாய்ப்பில்லை. அதேபோல, பெண்களின் கர்ப்பகாலத்தில் அவர்களை எந்தக் கொடுமையான நோயும் தாக்காது. அந்தளவுக்கு மிகவும் பாதுகாப்பானவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

தாய்மைக்கு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. தாய்மைக்கே உண்டான மரபணுக்களால் அது நிகழ்கிறது. பெதினாவின் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது’’ என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறைத்தலைவரும் பேராசிரியருமான லஷ்மி நரசிம்மன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு