பிரீமியம் ஸ்டோரி

ருத்துவர்களிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி... `இந்த மூட்டுவலிக்கு ஒரு மருந்து சொல்லுங்களேன்?’

மூட்டுவலி இல்லாத மூத்தகுடிமக்களைக்  காண்பதரிது. உலகளவில் இந்நோய் ஏறத்தாழ 24.2 கோடி பேரைப் பாதித்துள்ளது. இந்தியாவில் ஆறுகோடி பேரைப் பாதித்திருக்கும் இந்நோய், நம் நாட்டுக்கு ‘மூட்டுவலியின் தலைநகரம்’ என்கிற பெயரையும் வாங்கித் தரப்போகிறது.

மூட்டுவலி நீங்க பசலைக்கீரை சாப்பிடுங்க

எலும்புகள் சிதைவடைவதால் ஏற்படும் இந்நோய் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது. முதுமை, அதிக வேலை போன்றவற்றால் மூட்டுகளில் உள்ள எலும்புகள் சிதையலாம். பருமன், எலும்புகளில் அடிபடுதல் போன்றவற்றாலும் இப்பிரச்னை ஏற்படலாம். மூட்டுகளின் இயக்கத்தின்போது ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளை நமது உடலே சரிசெய்துவிடும். ஆனால், பெரியளவிலான பாதிப்புகள் அப்படிச் சரியாகாது. மூப்பின்போதும் இயல்பாகவே சரிசெய்யும் திறன் குறைந்துவிடும். இது மூட்டுகளில் உராய்வு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி மூட்டுவலி, வீக்கத்தை உண்டாக்கும்.

உண்மையில், மூட்டுவலியை முழுமையாகச் சரிப்படுத்த மருந்துகளே கிடையாது. இப்போது கொடுக்கப்படும் மருந்துகள் அனைத்தும் மூட்டுவலி இருப்பதை மறக்கச்செய்யும் வலிநிவாரணிகளே. இவை அறிகுறிகளை மறைக்க மட்டுமே செய்யும். தொடர்ந்து இந்த மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவது கல்லீரல் பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம். மாத்திரைகளைத்  தவிர்த்து, இப்பிரச்னையை சரிசெய்ய  லேப்ராஸ்கோபிக் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.  ஆனால், சிலருக்கு இதுவும் நிரந்தரத் தீர்வாக அமைவதில்லை. அதனால், மூட்டுவலி என்பது அச்சுறுத்தும் நோயாகவே மாற்றியுள்ளது.

தீர்வு என்ன?


கீரை சாப்பிடுவதால் தசைகள் வலுவாகும் என நீண்டகாலமாக நம்பப்படுகிறது. மற்ற பச்சைக் காய்கறிகள் தருவதைவிட அதிகமான இரும்புச்சத்தைக் கீரை தருகிறது. 1870-ம் ஆண்டில் ஜெர்மன் ஆய்வாளர் எர்விச் வான் வோல்ப் கீரையில் உள்ள இரும்புச்சத்தை அளவிட்டார். 100 கிராம் கீரையில் 35 மி.கிராம் இரும்புச்சத்து இருப்பதாக அவர் கூறினார். உண்மையில் 3.5 மி.கிராமே இருந்தது. இதில் உள்ள கணிதப்பிழை ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகே சரிசெய்யப்பட்டது.  பரவாயில்லை... தசைகளை வலுவாக்கும் அளவுக்கு இரும்புச்சத்து இல்லாவிடினும், எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கீரைகளுக்கு உண்டு!

லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த எலும்புமுறிவு ஆய்வுக்குழுவினர், மூட்டுவலியால் துன்பப்படுபவர்களுக்கு நம்பிக்கைச் செய்தி ஒன்றைக் கூறியுள்ளனர். நானோ விகிதத்தில் பசலைக்கீரை கலந்த கலவைக்கு மூட்டுவலியைச் சரிசெய்யும் திறன் உள்ளதாம். இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி1, ஃபோலிக் அமிலம் என ஏராளமான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கவல்லது பசலைக்கீரை.

“மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற மூட்டுப் பிரச்னைக்கு இக்கீரைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தோம். இக்கீரைகள் எலும்பின் தடிமனை அதிகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், பாதிப்படைந்த குருத்தெலும்புகளைச் சரிசெய்வதை ஆய்வில் அறிந்தோம். பசலைக்கீரையை வைத்துத் தயாரிக்கப்படுகிற மருந்து 2018 வாக்கில் சந்தைப்படுத்தப்படும்’’ என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவர் மருத்துவர் திரிவேதி.

வலி நீங்கட்டும்!

-ச.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு