பிரீமியம் ஸ்டோரி
இளமை இதோ... இதோ...

முதுமை தீண்டுவதை யாரும் விரும்புவதில்லை. முதுமையை  ஒரு சாபமாகவே பார்த்துப் பழகியிருக்கிறோம்.  முதுமையைத் தவிர்க்க இயலாது என்றாலும் தள்ளிப் போடலாம்.

‘ஏஜிங்’ எனப்படுகிற முதுமை, ஒற்றைக் காரணியால் ஏற்படுவது அல்ல. ஒரே நேரத்தில் ஹார்மோன் தாழ்நிலை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஃப்ரீ ரேடிக்கல் என்னும் நச்சு அதிகரித்தல் என்று பல காரணங்களால் ஏற்படுகிறது. இது ‘குரோனோலாஜிகல் ஏஜிங்’ மற்றும் ‘பயோலாஜிக்கல் ஏஜிங்’ என இரண்டு வகைப்படும். ‘குரோனோலாஜிகல் ஏஜிங்’ என்பது  நம்  வயதைக் குறிப்பது. ‘பயோலாஜிக்கல் ஏஜிங்’ என்பது உள்ளுறுப்புகளின் வயதைக் குறிப்பது. இது, ஹார்மோன், இதயம், ரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தது.

இளமை இதோ... இதோ...

‘குரோனோலாஜிகல் ஏஜிங்’-கை  நம்மால் தடுக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு வயது கூடிக்கொண்டேதான் செல்லும். ஆனால், ‘பயோலாஜிக்கல் ஏஜிங்’கைத் தடுக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம், உணர்வு நலம் மற்றும்  ஆன்மிக நலம்  ஆகிய நான்கு விஷயங்களை உள்ளடக்கியது. இவை நான்கையும் சரியாகப் பராமரித்தால் ஆரோக்கியமாக வாழலாம். அதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

இளமை இதோ... இதோ...

மூச்சுப்பயிற்சி (Breathing Exercise)

அன்றாட வாழ்வில் நாம் பலவிதமான மன நெருக்கடிகளுக்கு உள்ளாகிறோம். அதற்கு நம் குடும்பச் சூழல், பணிச்சுமை, பொருளாதாரச் சிக்கல், சுற்றுப்புறச்சூழல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் சரிசெய்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் ஆயுதமாக மூச்சுப்பயிற்சி இருக்கிறது.

தினமும் காலை எழுந்த பின்பும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் நாம் இதைச் செய்ய வேண்டும். மூச்சுப்பயிற்சி செய்வதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

* முகம் பொலிவடையும்.

* உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.

இளமை இதோ... இதோ...


* உடல், ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் பெறும்.

* இதயம் வலுவடையும்.

* நுரையீரலின் செயல்பாடுகள் அதிகரிக்கும்.

* தசைகள் வலுவடையும்.

* மன அழுத்தம் குறையும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* பதற்றம் குறைக்கும்.

இளமை இதோ... இதோ...

நேர்மறையான  எண்ணப்போக்கு (Positive Mental Attitude)

எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாகப் பார்க்கும் (Positive Mental Attitude) தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு ‘ரைட் மென்டல் ஆட்டிட்யூட்’ என்று பெயர். ‘நம்மைச் சுற்றி எல்லோரும் நிம்மதியாக வாழ்கின்றனர்; நமக்கு மட்டுமே பிரச்னைகள்’  என்று  நினைக்கக் கூடாது. அனைவருக்குமே ஏதாவது பிரச்னைகள் இருக்கும். அதைக் கடந்து வருவதுதான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் எதையுமே சந்தேகக் கண்ணுடனே பார்க்கத் தோன்றும். மனம் எப்போதும் நிதானமாக இருக்காது. ஏதாவது ஒன்றை யோசித்துக்கொண்டே இருக்க வைத்துவிடும். சிறிய விஷயங்கள்கூடப் பெரிதாகத் தெரியும். அதிகக்  கவலை  உடல், மனம் இரண்டையும் கெடுத்துவிடும். வெகு சீக்கிரமாக நமக்கு வயதான தோற்றத்தைக் கொடுத்துவிடும்.

நேர்மறையான எண்ணங்கள் நம்மை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.

ஆயுள்காலத்தை அதிகரிக்கச் செய்யும்.

இளமை இதோ... இதோ...

உடற்பயிற்சி

தினமும் காலையில் குறைந்தது ஒருமணி நேரமாவது வாக்கிங், ஜாகிங், ஸ்போர்ட்ஸ், ஸ்விம்மிங் என ஏதாவது ஓர் உடற்பயிற்சியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இது,  உடலையும் மனதையும் மிகவும் உற்சாகமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும். இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகியவை வராமல் தடுக்கும் முதல் மருந்தே உடற்பயிற்சிதான்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் விரிவடைவதோடு எலும்புகள் வலிமையடையும். உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யும்போது நுரையீரலின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.  தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்குச் சருமத்தில் சுருக்கங்கள் விழாது. புதிய ரத்த நாளங்கள் உருவாகும்.

இளமை இதோ... இதோ...

அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும்போது மூளையில் உள்ள நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் மூளையில்,  மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான  செரோடோனின் (Serotonin), நார்எபினெப்ரின் (Norepinephrine) எண்டார்பின் (Endorphin), டோபமைன் (Dopamine) ஆகியவை அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதன் மூலம் முதுமையைத் தள்ளிப்போடலாம். 

இளமை இதோ... இதோ...

தூக்கம்

ஒருநாள் இரவு தூங்கவில்லை என்றால்கூட அடுத்தநாள் எந்த வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. தொடர்ச்சியாகப் போதிய அளவு தூக்கம் இல்லாதவர்களுக்குக் கண்டிப்பாக உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். நாள் ஒன்றுக்குக் குறைந்தது எட்டுமணி நேரமாவது தூங்க வேண்டும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் கவனத்தைச் செலுத்தாமல் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன் சமூகவலைதளங்களைப் பார்க்கக் கூடாது. மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும்.

தூங்கும்போதுதான் நம் உடலைப் புதுப்பித்துக் கொள்வதற்கான பல்வேறு வேலைகள் நடைபெறுகின்றன. தூக்கத்தில் நம் மூளையில் எண்ணற்ற நரம்புகளின் பராமரிப்புப் பணிகள் நடைபெறும். சரியாகத் தூங்காவிட்டால் இந்தப் பணி பாதிக்கப்படும். நரம்பு செல்களுக்குத் தேவையான அளவு சக்தி கிடைக்காது. இதனால் உற்சாகமிழந்து சோர்வாக இருக்கும்.  தூங்காமல் இருந்தால் முகம் களையிழந்துவிடும். தொடர்ந்து சரியாகத் தூங்காமல் இருந்தால் முதுமைத் தோற்றம் உருவாகிவிடும்.

இளமை இதோ... இதோ...

டிஜிட்டல் டீடாக்ஸ்

தற்போதைய காலகட்டத்தில் உணவு இல்லாமல்கூட ஒருவரால் வாழ்ந்துவிட முடிகிறது. ஆனால் மொபைல் இல்லாமல், இன்டர்நெட் இல்லாமல் ஒருமணி நேரம்கூட இருக்க முடிவதில்லை. பெரும்பாலான இளைஞர்களுக்கு ஆறாவது விரலாக மொபைல் போனே இருக்கிறது. இது மிகப்பெரிய பாதிப்பு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போனுக்குள்ளேயே மூழ்கித் திளைக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மாதத்தில் ஒன்றிரண்டு நாள்களாவது டிஜிட்டல் உலகிலிருந்து விடுபட்டு வாழப் பழக வேண்டும். இதுவே டிஜிட்டல் டீடாக்ஸ். உடல் கழிவுகளை நீக்க டீடாக்ஸ் செய்வதைப்போலவே டிஜிட்டல் டீடாக்ஸ் என்பதும் முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

இளமை இதோ... இதோ...

தியானம்

தியானம் செய்யும்போது நம் உடலில் ‘மெலட்டோனின் மற்றும் ‘எண்டார்பின்’  போன்ற ஹார்மோன்கள் சுரக்கும். நம் உடலில் மெலட்டோனின் சுரக்கும்போது, மன அழுத்தம் குறையும். நச்சுகளின் உருவாக்கமும் குறைகிறது. இது நம்மை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இன்றைய அவசர யுகத்தில் அனைவருமே ஒருவித நெருக்கடியான சூழலில்தான் வாழ்கிறோம். இந்தச் சூழலைக் கையாள தியானம் மிக அவசியமாக இருக்கிறது. தொடர்ந்து தியானம் செய்து வந்தால், நம் சிந்தனைகள் சிதறாமல் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.

சிலருக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும் தூங்கிய உணர்வே இருக்காது. சிலர் சிறிய சத்தம் கேட்டாலும்கூட கண்விழித்து விடுவார்கள். இதற்குக் காரணம் ஆழ்ந்து உறங்காமல் மேலோட்டமாகத் தூங்குவதே. நம் உடலும் மனமும் ஒத்துழைத்தால்தான் ஆழ்ந்து உறங்க முடியும். தியானம் மனதுக்கு நல்ல அமைதியைக் கொடுத்து ஆழ்ந்த உறக்கத்துக்கு நம்மை உட்படுத்துகிறது.

இளமை இதோ... இதோ...

தற்போதைய சூழலில் மன நலம் சார்ந்த புதுப்புது நோய்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், எதற்கெடுத்தாலும் அச்சப்படுவது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற இந்த அச்சத்தைத் தியானம் போக்குகிறது. மேலும் எனர்ஜி வீணாகாமல் உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் தியானம்  அவசியமாகிறது. முதுமையைத் தள்ளிப் போடுவதில் தியானத்தின் பங்கு அளப்பரியது.

இளமை இதோ... இதோ...

ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்

மைதா, சர்க்கரை மற்றும் மேற்கத்திய உணவுகளை அடிக்கடி உட்கொண்டாலோ, தரமற்ற எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளைச்  சாப்பிட்டாலோ நம் உடலில் ‘ஃப்ரீ ரேடிக்கல் என்னும் நச்சுப்பொருள் அதிகமாக உற்பத்தியாகும். இதனால் உடல் சோர்வுற்று, முகம் பொலிவிழந்து வயதான தோற்றம் உண்டாகும். அதனால் உணவு விஷயத்தில் கவனத்தோடு  இருக்க வேண்டும். ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ள  வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளமை இதோ... இதோ...

நாம் உண்ணும் உணவுகளுக்கும் முதுமைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. 1935-ல் இருந்தே இது தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து ஆராய்ச்சிகளிலுமே, உணவின்  மூலமாக முதுமையாவதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. நம் உடலில் ஜீன்களைத் தீர்மானிக்கும் அளவுக்கு உணவு,  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.அதிலும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் ஆற்றல், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸுக்கு உண்டு. இது நார்ச்சத்து நிறைந்த மாதுளை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களில் அதிகமாகக் கிடைக்கிறது. கிரீன் டீயிலும் அதிகமாக உள்ளது.

இளமை இதோ... இதோ...

ஜூஸ்

காய்கறிகள், பழங்கள், கீரைகளை இயற்கையின் கொடைகள் எனலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை ஜூஸாக்கிக்  குடிப்பது மிகவும் நல்லது. தினமும்  ஒரு ஜூஸ் குடிப்பவர்கள் எப்போதும் இளமையாகக் காணப்படுவார்கள். பலரின் இளமை ரகசியம், ஜூஸில்தான் அடங்கியிருக்கிறது.

ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வந்தால், சருமம் தொடர்பான பாதிப்புகள் நம்மை நெருங்காது. சருமம் பளபளப்படையும். மேலும் இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதேபோல் ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் பி மற்றும் சி அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அன்னாசி ஜூஸ் செரிமானக் கோளாறையும் பப்பாளி ஜூஸ் ரத்தச் சோகையையும் போக்குகிறது. மாதுளை ஜூஸ், எலும்புத் தொடர்பான பிரச்னைகளைப் போக்குகிறது.

இளமை இதோ... இதோ...

பழங்களைப்போலவே காய்கறி ஜூஸ்களும் முதுமையைத் தள்ளிப்போட உதவுபவை. கேரட் ஜூஸ் கல்லீரல் செயல்பாட்டில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. பீட்ரூட் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைப் போக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸ் எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ளவும் உடல்சூட்டைப் போக்கவும் உதவுகிறது. தினமும் இளநீர் குடித்து வந்தால் உடல்சூடு தணிவதுடன் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வராது.

இளமை இதோ... இதோ...

சூரிய  நமஸ்காரம்

சூரிய நமஸ்காரத்தில் உள்ள  12 படிகளில்  12 ஆசனங்களைச் செய்த பலன்  நமக்குக் கிடைக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், நமக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் எப்போதும் புத்துணர்வுடன் இருக்க உதவும். மேலும் உடலில் உள்ள பல உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இன்றைய சூழலில் உடல் பருமன்தான் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது. சூரிய நமஸ்காரம் உடல் பருமனைத் தடுத்து இளமையாக வைத்துக்கொள்ளவும் சுருக்கம் மறைந்து முகம் பொலிவடையவும் உதவுகிறது. அது மட்டுமில்லாமல் சூரிய ஒளியில் வைட்டமின் ‘டி’ நிறைந்திருப்பதால், அது உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆயுளை அதிகரிக்கச் செய்வதுடன், இதயம் சம்பந்தமான நோய்களைத் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் முதுகுத் தண்டின் ஆரோக்கியம் முக்கியமானது. முதுகுத் தண்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எந்த மருத்துவரின் ஆலோசனையும் தேவையில்லை. சூரிய நமஸ்காரம் ஒன்றே போதும்.

இளமை இதோ... இதோ...

சருமப் பராமரிப்பு

கடுமையான வெயிலில் இருந்தும் காற்று மாசுபாடுகளில் இருந்தும் நம் சருமத்தைப் பாதுகாத்தால்தான் இளமையாகவும் அழகாகவும் இருக்க முடியும். பண்டைய காலங்களில் அழகு சாதனங்களை யாரும் பயன்படுத்தவில்லை. ஆனால், அப்போது இருந்த சீதோஷ்ண நிலை இப்போது இல்லை. முன்பைவிட சூழல் மாசு  இப்போது அதிகமாகி இருக்கிறது. எனவே, தற்போதைய சூழலில் நம் சருமத்தைப் பாதுகாக்க அழகு சாதனங்களின் பயன்பாடு அவசியமாகிறது. ஃபேஸ்வாஷ், சன் ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மிக அவசியமாகி விட்டது.

அகத்தின் அழகை மட்டும் அல்ல; வயதையும் முகம் காட்டிக் கொடுத்துவிடும். எனவே, முகத்தை எப்போதும் புத்துணர்வோடு வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் மூன்றையும் சருமப் பராமரிப்பில் அவசியம் பின்பற்ற வேண்டும்.

இளமை இதோ... இதோ...

சூரிய ஒளியால் நம் முகத்துக்கும் உடலுக்கும் ஏற்படும் பாதிப்புக்கு ‘ஃபோட்டோ ஏஜிங்’ என்று பெயர். இதனால் பாதிக்கப்படும்போது கண்களைச் சுற்றிக் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகும். மேலும் நம் கை, கால், மற்றும் கழுத்துப் பகுதிகளில்தான் சூரியக் கதிர்களின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதிலிருந்து காத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.

Sun Protection Factor (SPF) 30-க்கும் அதிகமாக உள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒருவருக்குச் சருமம், எண்ணெய்த் தன்மையோடு இருக்கும். சிலருக்கு உலர்ந்து காணப்படும். ஆகவே, தாமாக ஏதாவது ஒரு ஃபேஸ் கிரீமைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நம் சருமத்துக்கேற்ற கிரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். குறைந்த ஈரப்பதம்கொண்ட சருமத்தை உடையவர் கள் மாய்ஸ்சரைசர்  பயன்படுத்துவது அவசியம்.  இது சரும வறட்சியைப் போக்கி, கண்களைச் சுற்றி ஏற்படும் சுருக்கங்களையும் போக்கும்.

இளமை இதோ... இதோ...

பாக்டீரியா நல்லது

அளவுக்கதிமாக சோப் பயன்படுத்துவதோ கிரீம்களைப் பயன்படுத்துவதோ நல்லதல்ல. நம் சருமத்தின் மீதுள்ள நல்ல பாக்டீரியாக்களான மைக்ரோபயம்களை இவை அழித்துவிடும். இந்த பாக்டீரியாக்கள் சருமத்துக்குப் பாதுகாப்புத் தருவதோடு மட்டுமில்லாமல் நம் உடலுக்குத் தேவையான ஜீரண சக்தியையும் கொடுக்கின்றன.

இளமை இதோ... இதோ...

கண் பயிற்சி

அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துக்கொண்டே வேலை செய்வதாலும், தொலைக்காட்சியை அதிக வெளிச்சத்துடன் பார்ப்பதாலும், வெளிச்சம் இல்லாத சூழலில் மொபைல் போனைப் பயன்படுத்துவதாலும், சிறிய எழுத்துகளை உற்றுப் பார்ப்பதாலும் கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் அதிகமாகப் பாதிக்கப்படும். இதனால் கருவளையம், சுருக்கம் ஆகியவை உண்டாகும். இது வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இப்பிரச்னைகளை சரிசெய்ய கண் பயிற்சிகளை  மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கழுத்தை அசைக்காமல், கண்களை நன்றாக மேலும் கீழும் சுழற்ற வேண்டும். அடுத்ததாக இடமும் வலமுமாக அதேபோல் செய்ய வேண்டும். பின்னர் உள்ளங்கையை நன்றாகத் தேய்த்துக் கண்களின் மீது வைத்து மூடிக்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு ஐந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் கண் தசைகள் வலிமையடையும்.

இளமை இதோ... இதோ...

இசை

இசை, மனிதனுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். நல்ல இசை மன அமைதியைக் கொடுக்கவல்லது. நல்ல ராகம், நேர்மறையான வரிகள் உள்ள பாடல்களைத் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் கேட்க வேண்டும். வாக்கிங் போகும்போதோ உடற்பயிற்சி செய்யும்போதோ நமக்கு விருப்பமான பாடல்களைக் கேட்கலாம். இது நம் மன அழுத்தத்தைக் குறைத்து மனதுக்கு நிம்மதியைக் கொடுக்கும். மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய முதுமையைத் தள்ளிப்போடும்.

‘மியூஸிக் தெரபி’ என்றொரு சிகிச்சை முறை உள்ளது. இது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பிடித்த இசையைக் கேட்கும்போது மன இறுக்கம் குறைந்து மனம் நிம்மதி அடைகிறது. மனதை இளமையாக வைத்துக்கொள்வதற்கு இசை ஓர் அற்புத மருந்தாகும்.

இளமை இதோ... இதோ...

டீப் ஃப்ரை உணவுகளுக்கு `நோ'

மிக அதிக வெப்பநிலையில், எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் சருமச் சுருக்கம், மூட்டுவலி உண்டாகும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினாலும் இத்தகைய பாதிப்புகள் வரும். எனவே, எந்த ஓர் உணவையும் மிதமான வெப்பநிலையில், குறைவான எண்ணெயில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பதால் நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். உடலின் ஆரோக்கியமே இளமையின் அடித்தளம்.

இளமை இதோ... இதோ...

எண்ணெய்க் குளியல்

வாரத்தில் ஒருநாள், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம். இதனால் சருமத்துக்குத் தேவையான எண்ணெய் கிடைக்கும். அது நம் தசைகளை வலுவடையச் செய்வதுடன், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். எண்ணெய்க் குளியல் செய்வதன்மூலம் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படுவதால், உடல் பளபளப்படையும். பாதத்தில் எண்ணெய் தேய்த்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். கை, கால்களுக்கு எண்ணெய் தடவி உருவி விடுவதால் வலி குறையும். எண்ணெய்க் குளியல் ஒரு சர்வரோக நிவாரணியாகச் செயல்படுகிறது.

இளமை இதோ... இதோ...

நட்ஸ்

தினமும் காலை வெறும் வயிற்றில் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளைக் கண்டிப்பாக உண்ண வேண்டும். அவற்றில் புரோட்டீன், வைட்டமின், நார்ச்சத்துகள் நிரம்பியிருக்கின்றன.

பாதாம் பருப்பில் உள்ள புரோட்டீன்  முகப்பொலிவு மற்றும் சருமப் பொலிவுக்கு உத்தரவாதம் தருகிறது. பிஸ்தா பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகமாக உள்ளது. இது உடலை மினுமினுப்பாக வைத்துக்கொள்ள உதவுவதுடன் கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

முந்திரியில் நார்ச்சத்து அதிகம். வால்நட்டில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலம், இதயத்தைப் பாதுகாக்கிறது. இதிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. தினமும் காலையில் குறைந்தது  எட்டிலிருந்து ஒன்பது நட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள நல்ல  கொழுப்பு நம் தோற்றத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.

இளமை இதோ... இதோ...

ஆலிவ் ஆயில்

ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த ஆயில் அதிகமாகக் கெட்டியாகாது. இதில் நல்ல கொழுப்பு உள்ளது. சாலட், தோசைப் பொடி, குழிப்பணியாரம் செய்யும்போதும் காய்கறிகளைச் சமைக்கும்போதும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆலிவ் ஆயிலால் தயாரிக்கப்படும் உணவுகள் நமக்கு இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் மார்பகப்புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. எலும்பு முறிவு நோய்க்கும் ஆகச் சிறந்த மருந்தாக இருக்கிறது.

ஆலிவ்  ஆயில் அதிகமான மருத்துவத்தன்மை கொண்டது. இது மூளைச் சீர்குலைவு நோயைச் சரிசெய்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக் கூடியது. இதனால் ரத்தக்கொதிப்பும் மாரடைப்பு வருவதும் தடுக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, இ ஆகியவை நிறைந்திருப்பதால் நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இளமை இதோ... இதோ...

செயற்கை நிறமூட்டிகள் - கெமிக்கல் பயன்பாடுகளைத் தவிர்த்தல்

முகத்துக்கும் உடலுக்கும் பயன்படுத்தும் விதவிதமான கிரீம்கள், கெமிக்கல் அதிகம் உள்ள  ஷாம்பூகள், சோப்புகள் போன்றவை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கெமிக்கல்கள் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை முழுவதுமாக நீக்கிவிடும். சருமம் மிகவும் வறண்டு உடல் முழுவதும் அரிப்பு உண்டாகும். இதனால் கெமிக்கல் பயன்பாடுகளை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.

செயற்கையாக நிறமூட்டப்பட்ட குளிர்பானங்களை, உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அதில் பயன்படுத்தப்படும்  கலரிங் ஏஜன்ட் உடலில் அமிலத்தன்மையை ஏற்படுத்தி, முதுமைத் தோற்றத்தைத் துரிதப்படுத்தும்.

இளமை இதோ... இதோ...

உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் சில கெமிக்கல்களைப் பார்ப்போம்.

புரொபைலேன் க்ளைகால் என்பது (Propylene Glycol) குளிர்பானங்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும் உறைந்துவிடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வானிலின் என்னும் கெமிக்கல் யோகர்ட் மற்றும் பேக்கரி தயாரிப்புகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மாடுகள் அதிகமாகப் பால் சுரப்பதற்காக  ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இது ஹார்மோன் பிரச்னைகளை உண்டாக்கும். அது வேகமான வளர்ச்சி என்ற பெயரில் மிக விரைவாக நமக்கு முதுமையைக் கொடுத்துவிடும். எனவே முடிந்தவரை கெமிக்கல் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.

இளமை இதோ... இதோ...

புகை - இளமைக்கும் பகை

சிகரெட் புகையானது நுரையீரல் மற்றும் உள்ளுறுப்புகளுக்குச்  செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். இதனால் நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது. சிகரெட்டிலிருந்து வெளிப்படும் 60-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் புற்றுநோயை வரவழைப்பதற்கான வேலையை எளிதாகச் செய்பவை. சிகரெட்டில் அம்மோனியா, நிக்கோடின், மீத்தேன், ஆர்செனிக், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட பல  கெமிக்கல்கள் உள்ளன.

நிக்கோடின், நுரையீரலில் கலந்து ரத்தத்தை அசுத்தமாக்குகிறது. இதனால் ரத்தப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஆஸ்துமா, மூச்சுக்குழல் பாதிப்புகளும் உண்டாகும். நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்.  உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கேடுகள் நிறைந்த பல்வேறு கெமிக்கல்கள் இருப்பதால் நீண்ட நாள்கள் இளமையுடன் ஆரோக்கியத்துடன் வாழப் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது நலம்.

இளமை இதோ... இதோ...

மது - அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு

நீண்ட நாள்கள் ஆரோக்கியமாக வாழ நினைத்த  அடுத்த கணமே நாம் கைவிட  வேண்டிய பழக்கம் மது. மதுப்பழக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. தொடர்ந்து மது அருந்தினால் கல்லீரல் பாதிப்புகள் உண்டாகும்; கல்லீரல் பாதிக்கப்பட்டால் கல்லீரல் சுருக்க நோய்   (Liver Cirrhosis) உண்டாகும்;  நரம்புத் தளர்ச்சி ஏற்படும்; வாய், தொண்டை, உணவுக் குழாய் மற்றும் குடலில் புண்கள் உண்டாகும்; குடல் பாதிக்கப்பட்டால் இரைப்பை அழற்சிப்     (Gastritis)  புண்களும்  தசை நார் இழப்பும் உண்டாகும்; அடிக்கடி மறதி உண்டாகும்; உடல் எப்போதுமே ஒருவிதச் சோர்வுடன் இருக்கும்; வயிறு சம்பந்தமான பல்வேறு தொந்தரவுகள் உண்டாகும்; உடல் நலப் பாதிப்புகள் மட்டுமின்றி மனம் சம்பந்தமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்; சிறு வயதிலேயே முகம் கறுத்துப்போய் வயது முதிர்ந்த தோற்றத்தை உண்டாக்கும்; எனவே, மது அருந்துதலை முற்றிலுமாகத் தவிர்த்துவிட வேண்டும்.

இளமை இதோ... இதோ...

வெள்ளைச் சர்க்கரை வேண்டாம்

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒருவித ரசாயனப் பொருளே சர்க்கரை. அதனால்தான் இதை ‘வெள்ளை விஷம்’ என்று அழைக்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தினமும் குறைந்தது முப்பதிலிருந்து பத்து கிராம் வரை வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுகிறோம்.  வெள்ளைச் சர்க்கரை வயிற்றுக்குள் சென்றதும் குளுக்கோஸாகவும் ஃப்ரூக்டோஸாகவும் பிரியும். அதில் குளுக்கோஸால் எந்தப் பிரச்னையும் இல்லை. எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், ஃப்ரூக்டோஸ் எளிதில் ஜீரணம் ஆகாது. இது ஈரலில் மட்டுமே ஜீரணம் அடையும். அதனால் ஈரலில் அதிகமான வலி ஏற்படும். இது இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதனால் சர்க்கரை நோய் பாதிப்பு தீவிரமாகும் . எனவே வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். அவை நம் இளமையையும் ஆரோக்கியத்தையும் தக்க வைத்துக்கொள்ள உதவும்.

இளமை இதோ... இதோ...

கிரீன் டீ

கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவை இளமையைத் தக்கவைக்க உதவும். உடலில் உள்ள செல்களைச் சிதையாமல் பார்த்துக்கொள்வதால் சிறுவயதிலேயே வயதான தோற்றம் உண்டாவது தடுக்கப்படுகிறது. தவிர மார்பகப் புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது. அதேபோல் இதில் உள்ள அமினோ அமிலங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கவும்  உதவுகின்றன.

இளமை இதோ... இதோ...

வைட்டமின் சி

நம் அடிப்படை ஆரோக்கியத்துக்கு வைட்டமின் சி மிகவும் இன்றியமையாத ஒன்று. திசுக்களின் வளர்ச்சி, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின் சி மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலைக் கொண்டது. பாக்டீரியா, வைரஸ்களால் உண்டாகும் தொற்றுநோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இது நீரில் கரையக் கூடிய வைட்டமின். எனவே, இது உடலில் அதிகமானாலும் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. திராட்சை, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாகக் காணப்படுகிறது.

இளமை இதோ... இதோ...

வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால் ஸ்கர்வி என்கிற சருமப் பிரச்னை  ஏற்படும். எனவே,  தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இளமை இதோ... இதோ...

வைட்டமின் இ

நம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான  வைட்டமின் இது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளன. அதனால் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமித் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இது கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் ஆகிய காய்கறிகளிலும் பாதாமிலும் அதிகமாகக் கிடைக்கிறது. முதுமையைத் தள்ளிப்போட வைட்டமின் இ நிறைந்த உணவுப் பொருள்களை உண்பதுதான் சிறந்த வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

இளமை இதோ... இதோ...

தாம்பத்யம்

உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகளைத் தருவதில் தாம்பத்ய உறவுக்கும் பங்குண்டு.  உடலில் வைரஸ்களை அழிக்கும் ரசாயனங்களை உருவாக்குகிறது. இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதாகப் பல்வேறு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மன நிறைவைக் கொடுத்து மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. உடலுறவு கொள்ளும்போது மூளையில் எண்டார்பின் என்னும் ரசாயனம் சுரக்கும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும். உடலுறவின்போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இரண்டு மடங்காகச் சுரக்கும். இது கூந்தலுக்குப் பொலிவைத் தரும், சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ளவும் உதவும்.

- இரா.செந்தில்குமார்

இளமை இதோ... இதோ...

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு