Published:Updated:

குழந்தைகளுக்கு இறுக்கமான உடைகள் வேண்டாமே...!

குழந்தைகளுக்கு இறுக்கமான உடைகள் வேண்டாமே...!
குழந்தைகளுக்கு இறுக்கமான உடைகள் வேண்டாமே...!

வெப்ப மண்டலமான நமது நிலப்பகுதியில் ஜீன்ஸ் உடைகள் அணிவதால் பல்வேறு விபரீதங்கள் உண்டாகும்.

டை உடுத்தும் வழக்கம் எப்போது தோன்றியது என்று கேட்டால் அதன் வரலாறு நீண்டுகொண்டே போகும். தொடக்கக் காலங்களில் உடலை மறைக்க மட்டுமே உடைகள் பயன்பட்டன. போகப் போக கலாசாரம், வாழும் சூழலைப் பொறுத்து அவற்றின் பயன்பாடு மாறத் தொடங்கியது. நாகரிக மாற்றத்தின் விளைவாக, சூழலுக்கும் வயதுக்கும் பொருத்தமற்ற உடைகளை அணியத் தொடங்கிவிட்டோம். இதன் காரணமாக பலவித நோய்கள் நம்மை ஆட்கொள்ள தயாராக நிற்கின்றன.

மேலைநாடுகளில் அதீதக் குளிர்ச்சியைத் தாங்குவதற்காக ஜீன்ஸ் உடை உடுத்தினர். ஆனால், வெப்ப மண்டலமான நமது நிலப்பகுதியில் ஜீன்ஸ் உடைகள் அணிவதால் பல்வேறு விபரீதங்கள் உண்டாகும். தோல் நோயில் தொடங்கி விந்தணு குறைபாடு வரை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

பெருநகரங்களில் வாழும் இளைஞர்கள், தோலுடன் தோலாக ஒட்டும் அளவுக்கு ஜீன்ஸ் உடைகளை உடுத்துகிறார்கள். இப்படி எந்நேரமும் ஜீன்ஸ் உடை உடுத்துவதால் தோல் சிவந்து தடிப்புகள், அரிப்பு, எரிச்சல், படை போன்ற தோல் நோய்கள் உண்டாகும். தொடர்ந்து இறுக்கமான உடைகள் மற்றும் ஜீன்ஸ் உடைகளை அணிந்தால், கால்களில் உள்ள குறிப்பிட்ட நரம்புகளும் தசைகளும் பாதிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இறுக்க உடை நோய்: உடல் பருமனைக் குறைத்துக் காட்டுவதற்காக சிலர் இறுக்கமான உடைகளை அணிவார்கள். அதனால் வயிற்றுவலி, உணவு எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். இறுக்கமான உடைகள், தொடையின் வெளிப்பகுதிக்கு உணர்வைக் கொடுக்கும் ஃபீமோரல் நரம்பில் (Femoral cutaneous nerve) அழுத்தத்தை உண்டாக்கி, தொடைப் பகுதியை மரத்துப் போகச் செய்வதுடன் எரிச்சலை உண்டாக்கும். இதற்கு `மெரால்ஜியா பாரெஸ்திகா’ (Meralgia paresthica) என்று பெயர். இப்போது பயன்பாட்டில் உள்ள `பென்சில் ஃபிட்’, `ஜெக்கின்ஸ்’ வடிவமைப்புடைய உடைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் மேற்கூறிய பாதிப்புகள் ஏற்படாமல் இருந்தால் ஆச்சர்யமே. இறுக்கமான உடைகள் அணிவதால் ஏற்படும் குறிகுணங்களை மொத்தமாக `இறுக்க உடை நோய்’ (Tight pants syndrome) என மருத்துவச் சமூகம் அழைக்கிறது.

ஜீன்ஸ் மாதிரி உடைகளை நீண்டநாள் துவைக்காமல் பயன்படுத்தினால், சருமத்தின் துளைகளில் அழுக்குகள் சேர்ந்து, வியர்வை வெளியேறாமல் தடுக்கும். கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறாமல், ஒவ்வாமை சார்ந்த அறிகுறிகள் ஏற்படும். கோடைக் காலத்தில், இறுக்கமான உடைகளை உடுத்துவதால் எரிச்சல், சிறுசிறு கொப்புளங்கள் ஏற்படும்; தோல் நோய்களின் வீரியம் அதிகரிக்கும். 

விந்தணுக்களின் உற்பத்திக்கு, உடல் வெப்பநிலையைவிடக் குறைவான வெப்பநிலை அவசியம். இதனால்தான் உடலிலிருந்து விதைப்பையை வெளியே அமைத்திருக்கிறது இயற்கை. காற்று செல்லக்கூட வாய்ப்பில்லாத ஜீன்ஸ் உடைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், விதைப்பையின் வெப்பநிலை அதிகரித்து, விந்தணு உற்பத்தி பாதிக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல், இனப்பெருக்க உறுப்பில் வலி ஏற்படலாம்.

இளைஞர்கள் ஜீன்ஸ் வகைகளை எப்போதாவது பயன்படுத்தினால் தவறில்லை. மாறாகத் தூங்கும் போது ஜீன்ஸ் உடைகளை அணிகிறார்கள்; அது மிகப்பெரிய தவறு. முதியோரும் இத்தகைய உடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். முதுமையில் தோலின் நெகிழ்வுத் தன்மையும் நீர்ச்சத்தும் குறைவதால், நோய்கள் எளிதாகச் சருமத்தை தாக்கலாம். ஆகவே, நமது வெப்பநிலைக்கு ஏற்ற மென்மையான உடைகளை அணிவதே நோயில்லாமல் வாழத் தகுந்தது. 

இன்றைக்கு ஒரு வயது குழந்தைக்குக்கூட ஜீன்ஸ் உடை அணிவித்து மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள். மென்மையான குழந்தையின் சருமத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத கனமான உடைகளை அணிவிப்பதால் தோலில் அரிப்பு, ரத்தக்கட்டு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். குழந்தைகளுக்கு ஜீன்ஸ் உடைகளைப் பயன்படுத்துவது நாமே வலியச் சென்று நோய்களை விலைக்கு வாங்குவதற்குச் சமம். 

நாள் முழுவதும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ (Diaper) அணிவிப்பது சில பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறு. இது தொடை, பின்புறத்தில் அரிப்பு மற்றும் அலர்ஜியை உண்டாக்கி குழந்தைகளுக்கு அவதியை உண்டாக்கும். சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்படவும் வழிவகுக்கும். எனவே, குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பருத்தி ஆடைகளே நல்லது. 

`பாலாடை போல…’, `பாம்புச்சட்டை போல…’ எனச் சங்க காலத்தில் நாம் அணிந்த உடைகளுக்கு உவமை கூறும் நிலை இருந்தது. ஆனால் இப்போது உடுத்தும் உடைகளுக்கு `யானைத் தோல் போல…’ `சாக்குப்பைப் போல…’ என்றுதான் உவமை கூறமுடியும். நோயில்லாமல் வாழ, கோடைக் காலங்களில் மெல்லிய உடைகளையும் குளிர்காலங்களில் ஓரளவு கனமான உடைகளையும் உடுத்தி நலம் காப்போம்.

அடுத்த கட்டுரைக்கு